தாலி கட்டுவதெல்லாம் இடையில் திணிக்கப்பட்ட வழக்கம், வேத காலத்து இந்துத் திருமணங்களில் தாலி இல்லை!

தனது தாலி பாக்கியம் நிலைக்க 108 அம்மன் பெயர்களைச் சொல்லி குஷ்பு வீராவேஷமாகப் பாடல் எல்லாம் பாடி இருப்பார் ஒரு படத்தில். தாலி
தாலி கட்டுவதெல்லாம் இடையில் திணிக்கப்பட்ட வழக்கம், வேத காலத்து இந்துத் திருமணங்களில் தாலி இல்லை!

கடந்த 3000 ஆண்டுகளாக இந்துக்களின் திருமணச் சடங்கு முறைகள் வெகுவான மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. இந்து திருமண முறைகளில் பின்பற்றப்படும்  பாணிக்கிரஹனம், சப்தபதி, அஷ்மரோஹனா, லஜ்ஜ ஹோமா, க்ருஹப்பிரவேஷா உள்ளிட்ட சடங்குகள் எல்லாம் சற்றேறக் குறைய ஒரே மாதிரியாகவே இருந்தாலும் சில விசயங்கள் முற்றிலுமாக மாறி இருக்கின்றன. உதாரணமாக மணமகன், மணமகளுக்குத் தாலி அணிவிக்கும் வழக்கம். இதை மங்கல சூத்திரம் என்கிறது திருமணச் சடங்கு முறை. வேத காலத்தில் மங்கல சூத்திரம் அணிவிக்கும் முறையெதுவும் இல்லையாம். இந்த வழக்கம் பிற்காலத்தில் இணைக்கப்பட்டதற்கு பெண்ணடிமைத் தனம் தான் காரணம் என எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் தனது ‘காலம் தோறும் பெண்’ கட்டுரைத் தொகுப்பில் கூறி இருக்கிறார். அதாவது இந்து குடும்ப அமைப்பில் ஆணின் தலைமையை முன்னிறுத்தும் பிற்கால பிராமணிய சமூகம் பெண்களை வீட்டுக்குள் அடிமைப் படுத்துவதற்காகவே பூப்படையாத குழந்தைகளுக்கும் கூட திருமணம் என்ற பெயரில் மங்கல சூத்திரம் அணிவித்து அடக்குமுறையைத் தொடங்கி வைத்தது. தாலி என்பது அதை இழந்து விடும் சூழலில் ஒரு நூற்றாண்டு கால கைம்பெண்களின் அக்ரஹார இருட்டுப் புலம்பலுக்கு காரணமாகி விட்ட பெருமையைத் தவிர வேறெந்தப் புனிதத்தன்மையும் பெறத் தக்கதாக இல்லை என்பதாகச் செல்கிறது அவரது கட்டுரை. 

கேரள மாநிலத்தின் இந்து  நாயர் குடும்பங்களில் மணமகன் மணமகளுக்கு முண்டும், நேரியதும் கொடுத்தாலே போதுமாம். திருமணம் ஆகி விட்டது என்று அர்த்தமாம்.
அதே போல தமிழ்நாட்டுச் செட்டியார்கள் மற்றும் கோடவர்கள் எனும் பிரிவினர் தங்களது சமூக திருமணங்களில் ஐய்யர்கள் அழைக்கப்படுவதில்லை, மந்திரங்களும் ஓதப்படுவதில்லையாம்.
மலைவாழ் மக்களில் சில பிரிவினரிடையே திருமணம் என்றால் வயது வந்த ஆணையும் , பெண்ணையும் அடர்ந்த காட்டுக்குள் அனுப்பி விடுவார்களாம். அடர்ந்த காட்டிலிருந்து திரும்பி வரும் ஆணும், பெண்ணும் மணமானவர்களாக ஏற்றூக் கொள்ளப்படுவார்களாம்.

இப்படி பின்பற்றப் பட்ட இந்து திருமணச் சடங்குகளில் தாலி என்பது பிற்காலத்தில் தான் இணைக்கப்பட்டிருக்கிறது. பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைப்பது தொடங்கி சமூக, வரலாற்று மாறுதல்கள் என அதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். ஆனால் தாலி இன்று இந்து திருமணங்களில் தவிர்க்க முடியாத ஒரு அம்சம். அப்படிப்பட்ட தாலி என்ற ஒன்றே முன்னொரு காலத்தில் இல்லை என்பதை இன்றைய பெண்களில் சம்பிரதாயத்திற்கும், சடங்குகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் ஆச்சர்யத்துடன் மட்டுமல்ல அசூயையுடனும் கூட ஒப்புக்கொள்ள மறுக்கலாம்.

தமிழ் திரைப்படங்களில் தாலி செண்டிமெண்ட் வெகு விமரிசையாக கோலோச்சிய வருடம் என்றால் அது 80 க்கும் 90 க்குமிடைப்பட்ட காலம் எனலாம். தனது தாலி பாக்கியம் நிலைக்க 108 அம்மன் பெயர்களைச் சொல்லி குஷ்பு வீராவேஷமாகப் பாடல் எல்லாம் பாடி இருப்பார் ஒரு படத்தில். தாலி செண்டிமெண்டை வைத்து கலக்கல் படங்களை எடுத்து கல்லா கட்டியவர்களில் அப்போதைய இயக்குனர்களில் பாரதிராஜா தொடங்கி பாக்கியராஜ் வழியாக கே.எஸ்.ரவிக்குமார் தாண்டி மணிரத்னம் வரையிலும் யாரும் விதிவிலக்குகள் இல்லை. பி.வாசு இவர்களை விட ஒரு படி மேலே போய் சின்னத்தம்பி படத்தில் தாலியை வைத்துப் புதுக்கதை பண்ணி இருப்பார்.

தங்களது படத்தில் தாலியை புனிதமானதாகவோ, அல்லது ஒன்றுமில்லை அது அடையாளம் மட்டுமே என்பதாகவோ ஏதாவது ஒரு வகையில் தமிழ் சினிமா இயக்குனர்கள் கையாண்டிருப்பார்கள். தாலி செண்டிமெண்ட் இல்லாவிட்டால் குறிப்பிட்ட சில வருடங்களுக்கு தமிழ் சினிமாக்களில் உணர்வுப் பூர்வமான காட்சிகளே கூட இல்லாதொழிந்திருக்கும். அந்த அளவுக்கு தாலி செண்டிமெண்ட் ஒரு காலத்தில் தமிழ் சினிமாக்கள் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தது. 

அப்படிப்பட்ட புனிதமான தாலி என்றொரு விசயம் இந்துத் திருமணங்களில் வேத காலத்தில் இல்லை. அது பிற்காலத்தில் இந்து திருமணங்களில் திணிக்கப்பட்ட விசயம். இதை தமிழின் முற்போக்கு எழுத்தாளர்கள் பலர், பல்வேறு காலகட்டங்களில் பொருத்தமான சான்றுகளுடன் சொல்லியே வந்திருந்தாலும் இதை மையமாக வைத்து சமீபத்தில் ‘அன்வேஷனா’ என்றொரு நாவலை எழுதி வெளியிட்டிருக்கும் அனில்குமார் நம்மை ஆச்சர்யப் படுத்துகிறார். ஏனெனில் இந்து மங்கல சூத்திரம் அல்லது தாலி பற்றி தெரிந்து கொள்ள அவர் படித்து முனைவர் பட்டம் பெற்றிருப்பது தனது 73 வயதில். 

அனில்குமார் ஒரு எலெக்டிரிகல் எஞ்ஞினியர். தற்போது காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் கருவிகளை உருவாக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். 
இந்து மதத்தின் அடிப்படை எனக் கருதப்படும் நால்வகை வேதங்களையும், இந்து திருமண முறைகளையும் கற்றுக் கொண்டு இந்த வயதில் என்ன செய்யப்போகிறோம் என்று எண்ணாமல். இவர் தானே முன் வந்து தனது தனிப்பட்ட ஆர்வத்தில் இந்து திருமணங்களைப் பற்றியும் தொன்று தொட்டு அவை நடத்தப்பட்டு வந்த முறைகள், அதில் காலம் மாற மாற ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்டவற்றை தேடித் தேடிப் படித்திருக்கிறார். அதற்கும் ஒரு காரணம் இல்லாமல் இல்லை.
 
2002 ஆம் வருடம் அனில்குமாரின் மகன் பணி நிமித்தம் அமெரிக்காவில் வசித்து வந்தார். மகனுக்கு திருமணம் செய்யலாம் என அனில்குமார் முடிவு செய்த போது, அவரது மகன் தான் அமெரிக்காவிலேயே ஒரு கிறிஸ்தவப் பெண்ணை விரும்புவதாகக் கூறி இருக்கிறார். காதல் திருமணத்தை அங்கீகரித்த அனில்குமார் மணப் பெண்ணின் பெற்றோரிடத்தில் திருமண விவரங்களைப் பற்றி பேச அணுகும்போது மணப் பெண்ணின் பெற்றோர் வெளிநாட்டுக் கிறிஸ்தவர்களாக இருந்த போதும் மணமகன் இந்து, இந்தியர் என்பதால், திருமணத்தை இந்து மற்றும் கிறிஸ்தவ முறை என இரு முறைகளிலும் சம்பிரதாயங்கள், சடங்குகள் கெடாமல் முறையாக நடத்த வேண்டுமென அனில்குமாரிடம் கேட்டுக் கொண்டனர். கூடுதலாக திருமணப் பத்திரிகையில் அச்சிட சமஸ்கிருதத்தில் இருக்கும் இந்து திருமண சடங்குகளையும் அச்சிட்டுத் தருமாறு கேட்டுக்கொண்டனர். 

அயல்நாட்டுக்காரர்களான அவர்களுக்கு சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் முறையாகப் பின்பற்றுவதில் இருந்த ஆர்வத்தையும், அக்கறையையும் கண்டு வியந்த அனில்குமார் தானும் தான் சார்ந்த இந்து மதத்தின் பாரம்பரியம் மற்றும் மரபுகளைப் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கில் உடனடியாக சென்னைப் பல்கலைகழகத்தில் இணைந்து MA சமஸ்கிருதம் பயிலத் தொடங்கி இருக்கிறார். அப்போது அவருக்கு வயது 60. தொடர்ந்து 13 வருடங்களாக அவர் இந்துக்களின் கலாச்சாரம், பாரம்பரியம் என ஆய்வில் ஈடுபட்டு தற்போது அந்தத் துறையில் முனைவர் பட்டம் பெற்றதோடு ‘அன்வேஷனா’ என்றொரு நாவலும் கூட வெளியிட்டு விட்டார். ‘அன்வேஷனா’ மாடர்ன் உலகின் தர்மா, கர்மா, மற்றூம் துறவு நிலையைப் பற்றிப் பேசும் நாவலாம்.

வாய்ப்பிருப்பவர்கள் இந்த நாவலை வாங்கி வாசித்து விட்டு இந்து தொன்ம   சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களில் நிகழ்ந்துள்ள மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com