அரசியல்வாதிகளின் நாக்கு!

அதிமுகவில் அதிகாரமிக்க பதவி பொது செயலாளர் பதவி தான் என்பதை சாதாரண பாமரனும் அறிவான். அப்படி இருக்கையில் சசிகலாவைத் தேர்ந்தெடுத்து ஒரு மாத காலம் வரை ஜெ சமாதிப் பக்கம் சென்று பன்னீர் ஏன் அம்மாவிடம் 
அரசியல்வாதிகளின் நாக்கு!

முந்தைய காலங்களில் ஆடியோ கேசட்களில் தலைவர்கள் பேசிய பேச்சை கேட்பதற்கு ஊரெல்லாம் பொதுமக்கள் திரண்டு நின்று கூட்டமாகப் பேச்சைக் கேட்பார்கள். அப்போது அப்படிக் கேட்பதெல்லாம் வெகு அபூர்வமான நிகழ்வுகளாக இருந்தன. அமெரிக்க சிகிச்சை முடிந்து திரும்பிய எம்.ஜி.ஆர், சிகிச்சை முடிந்து திரும்பியதிலிருந்து எதுவும் பேசாமல் ஆட்சி செய்வதாக எதிர்கட்சிகள் குற்றம் சுமத்திய போது ஒரு பொதுக்கூட்டத்தில் ‘அதிமுகவினர் தற்காப்பிற்காக கத்தி வைத்துக் கொள்ளுங்கள்’ என்று எம்.ஜி.ஆர் பேசிய பேச்சை யாரும் லைவ் ஆகப் பார்க்கவில்லை, ஆடியோவாகவும் கேட்கவில்லை. காலை பத்திரிகை வாயிலாக தான் அந்தச் செய்தி மக்களை சென்றடைந்தது. ஆனால் இப்போது நொடிக்கு நொடி உலகம் முழுவதும் என்ன நடக்கின்றது என்பதை உடனுக்குடன் தொலைக்காட்சிகளிலும், இணையத்திலும் கண்டு வருகிறோம். இந்தக் காலகட்டத்தில் அரசியல்வாதிகள் கொஞ்சமும் கூச்ச, நாச்சமில்லாமல் நொடிக்கு நொடி எப்படி மாற்றி மாற்றிப் பேசி வருகிறார்கள் என்பதை நினைக்கும் போது வேதனை கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ‘ எந்தப் பதவிக்கும் என் குடும்ப உறுப்பினர்கள் வர மாட்டார்கள், அப்படி வரும் பட்சத்தில் கட்டி வைத்து அடியுங்கள் என்றார். அதன்பிறகு ஜெயலலிதாவுடன் எக்காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டேன் அதை உறுதியாகச் சொல்கிறேன், பத்திரப் பதிவு கூட செய்து தருகிறேன் என்று கூறி விட்டு அதன் பிறகு அன்புச் சகோதரி என்று கூட்டணி வைத்து தன் நிலையை மாற்றிக்கொண்டார். அது போல வைகோ அவர்களும் பொடாவில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது அதிமுக வை ஆட்சியிலிருந்து அகற்றாமல் ஓய மாட்டேன் என்று சபதம் போட்டார் பின்பு தன் நிலையை மாற்றிக் கொண்டார்.

திமுக தலைவர், எம்.ஜி.ஆர் மற்றூம் ஜெயலலிதாவை வீழ்த்துவதற்காக தன் நிலைப்பாடுகளை எப்படி எல்லாம் மாற்றிக் கொண்டார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவர். தற்போது ஸ்டாலின் தன் நிலையில் தினம் தடுமாறுவதை பார்க்கும் போது, இவர் அரசியலில் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பன்னீர்செல்வம் ஜெயலலிதா மறைவிற்உ பிறகு முதல்வராக பொறுப்பேற்ற போது இவரை ஆதரிப்போம் நான்கரை ஆண்டுகள் ஆட்சி தொடர ஒத்துழைப்போம் என்று சொன்னார். அதன்பிறகு அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட போது தமிழக மக்கள் ஜெயலலிதாவிற்கு தான் வாக்களித்தார்களே தவிர ஜெ வீட்டில் உள்ளவர்களுக்கோ பன்னீர் செல்வத்துக்கோ வாக்களிக்கவில்லை என்று ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறார். 2016 தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடி ஜெ வை வாழ்த்தியதின் பின்பும், தேர்தல் ஆணைய சதிகளாலும் தான் ஜெ வெற்றீ பெற்றார் என்று கூறிய ஸ்டாலின் தற்போது மக்கள் ஜெ முதல்வராக வர வேண்டும் என்று தான் வாக்களித்தார்கள் என்று சொல்கிறார். அப்படியென்றால் முந்தைய குற்றச்சாட்டுக்கு என்ன பதில் தரப் போகிறார்?

18 ஆம் தேதி சட்டமன்ற வாக்கெடுப்பு நடைபெற எடப்பாடி கோருகிறார். சட்டமன்றம் கூட்டப்படும் என்று தெரிந்தும் முன்பே தன் கருத்துக்களை முன்வைக்காத ஸ்டாலின் நம்பிக்கை வாக்கெடுப்பு சமயத்தில் ஏன் பிரச்சினையை கிலப்ப வேண்டும்? இவர் தான் கவர்னர் 15 நாட்கல் அவகாசம் கொடுத்த போது, இது குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும் என்று சொன்னவர். மேலும் அதிமுக வின் இரு அணியையும் ஆதரிக்க மாட்டோம் என்று சொன்னவர் திடீரென்று பன்னீர் செல்வம் அணிக்கு ஆதரவாகச் செயல்பட்டது ஏன்? சட்டமன்றத்தைப் பொறுத்தவரை பன்னீருக்கும் எடப்பாடிக்கும் தான் போட்டியே தவிர ஸ்டாலினுக்கும், எடப்பாடிக்கும் இல்லை என்பதை ஏன் மறந்து செயல்பட்டார்  திமுகவின் புதிய செயல்தலைவர்?!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எனக்கு தான் வாக்களிப்பார்கல் என்று கூறி வந்த பன்னீர்செல்வம் தன் நிலையை மாற்றிக் கொண்ட போது ஸ்டாலின் மாற்றிக் கொள்ளாதது ஏன்? எடப்பாடியார் பதவி ஏற்ற அன்று இரவு ஜெ சமாதியில் பன்னீர், 124 சட்டமன்ற உறூப்பினர்கள் தான் எடப்பாடிக்கு ஆதரவு, மக்கள் அனைவரும் என் பக்கம் தான் என்று பேட்டிகொடுத்த பிறகு பன்னீரும், ஸ்டாலினும் சட்டமன்றத்தில் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார்கள்?

சட்டமன்றத்தில் இவர்கள் கூறியபடி ரகசிய வாக்கெடுப்பு நடத்தி அதில் இவர்கலை சார்ந்தவர்கலே கூடுதலாக எடப்பாடிக்கு 4 வாக்குகள் போட்டு விட்டு வாக்கெடுப்பு நியாயமாக நடைபெறவில்லை, எவ்வாறு கூடுதலாக வாக்கு வந்தது  என்று கேள்வி எழுப்பினால் சபாநாயகர் என்ன செய்ய முடியும்? அவர்களது நோக்கம் பிரச்சினையைக் கிளப்ப வேண்டும் அவ்வளவு தான். அதை அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றி விட்டார்கள் அவ்வளவு தான்.

1988 ஆம் ஆண்டில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது போல் இப்போதும் ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டதை மக்கள் நன்கறிவார்கள். அதிமுக ஆட்சியை கவிழ்க்க திமுக வினருடன் பன்னீர் கூட்டுச்சதி செய்ததை அதிமுக தொண்டன் பார்த்துக் கொண்டு தான் இருந்தார். சசிகலா, பன்னீரை முதல்வராக தேர்ந்தெடுத்தால் பன்னீர், சசிகலா கூட்டாளி இல்லை என்பது போலவும், சசிகலா எடப்பாடியை தேர்ந்தெடுத்தால் அவர் சசிகலாவின் பினாமி என்றும் வாதிடுவது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் தாலி அறுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பன்னீர் செயல்பட்டது அதிமுக எனும் கோட்டைக்குள் குண்டு வைப்பதற்கு சமம்.

2006 ஆம் ஆண்டு திமுக பெரும்பான்மை இல்லாமல் காங்கிரஸ், பாமக தயவுடன் ஆட்சி அமைந்ததும், கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டுத்தான் காங்கிரஸ், பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தந்தார்கள். ஆதரவு தந்த சட்டமன்ற உறூப்பினர்களுக்கு அமைச்சரவையில் இடம் வேண்டும் என்ற ஆசை இருந்தும் தலைமைக்கு கட்டுப்பட்டு திமுக ஆட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.எதிர்கட்சிகளின் கொறடா உத்தரவுக்கு அவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு கட்டுப்பட வேண்டுமோ அதே விதி ஆளும்கட்சி கொறடாவுக்கும் பொருந்துமா? பொருந்தாதா? இதை அவர்கள் தான் தெளிவு படுத்த வேண்டும். ஜெ மறைந்தபிறகு கட்சி பிளவு பட வேண்டும் என்று காத்திருந்தவர்களுக்கு தூண்டில் போடாமல் கிடைத்த மீனாக பன்னீர் கிடைத்தால் அவர்கள் சும்மா விடுவார்களா?

மேலும் 2006 ல் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லி ஒரு தடவையாவது ஜெ பேசி இருப்பாரா? ஆட்சியில் உல்ள குறைகளையும், மின் தட்டுப்பாட்டையும் சொல்லி ஆட்சிக்கு வந்தவர் அடிப்படை மக்களுக்கான தேவைகளை செய்து கொடுத்ததால் 2016 ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தார். பலமுனை தாக்குதலை எதிர்கொண்டு பெற்ற வெற்றீயை தான் அனுபவிக்க முடியாமல் மறைந்து விட்டார். அப்படி கஷ்டப்பட்டு கிடைத்த ஆட்சியை 4 ஆண்டு காலத்திற்கு கொண்டு பன்னீர் போன்றவர்களுக்கு என்ன சங்கடம்? திமுகவினருடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க என்ன பாடுபட்டார் என்பதை மக்கள் கூர்ந்து கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

பிஜேபி, தேமுதிக பின்பு அதிமுக வந்த மாபா பாண்டியராஜன் சசிகலாவுடன் இருக்கும் போது பன்னீர் பற்றி கடைந்தெடுத்த சந்தர்பவாதம் என்று கூறினார். பின்பு அவரே பன்னீர் அணியில் இணையும் போது எது கடைந்தெடுத்த சந்தர்பவாதம் என்பது அவருக்குப் புரியவில்லையா? இதைக் குறித்து அவர் தான் விளக்க வேண்டும். பன்னீர்செல்வம் இரவில் முதல்வராக பதவியேற்று 2 மாத காலமாக கொறடா பற்றிப் பேசாதவர்; எடப்பாடியார் பதவி ஏற்றதும் கொறடா நியமனம் பற்றி பேசுகிறார். மேலும் தொகுதி மக்கள் கருத்தறிந்து பன்னீர் பக்கம் வந்ததாகக் கூறும் இவர், இவருக்கு வாக்களிக்காத நபர்களிடம் கருத்தைக் கேட்டுள்ளார் என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? தமீம் அன்சாரி போல் தொகுதி அலுவலகத்தில் கேட்டறிந்து சசிகலா அணிக்கு தான் பெரும்பான்மையோர் வாக்களிக்க சொன்னார்கள் என்று மீதமுள்ள எம் எல் ஏக்கள் எடப்பாடியாருக்கு வாக்களித்ததை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது?

அதிமுகவில் அதிகாரமிக்க பதவி பொது செயலாளர் பதவி தான் என்பதை சாதாரண பாமரனும் அறிவான். அப்படி இருக்கையில் சசிகலாவைத் தேர்ந்தெடுத்து ஒரு மாத காலம் வரை ஜெ சமாதிப் பக்கம் சென்று பன்னீர் ஏன் அம்மாவிடம் முறையிடவில்லை? அவருடன் தற்போதுள்ள அனைவரும் சசிகலாவை ஆதரித்து காலில் விழுந்தவர்கள் தானே? முதல்வராக சசிகலாவை தேர்ந்தெடுக்கும் வரை அவர் பக்கத்திலேயே அமர்ந்து விட்டு 48 மணி நேரம் கழித்து சமாதியிலும் விழிக்காமல், மீடியாக்கள் வந்ததும் விழித்துக் கொண்டு சசிகலா மீது குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல. தந்தி டி.வி யில் மிரட்டி கையெழுத்து வாங்கப் பட்டதா? என்ற கேள்விக்கு என்னை யாரும் மிரட்ட முடியாது என்று பதில் சொன்னால் எது உண்மை? 10 நாட்கள் அவகாசத்தில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் கூட உங்கள் பக்கம் வரவில்லையே?

எடப்பாடி பதவி ஏற்கும் வரை எதுவும் கூறாமல் இருந்த நட்ராஜ், சட்டமன்றம் கூடுகிற நேரத்தில் வாய்ஸ் கொடுத்தது ஏன்? பெரிய அதிகாரியாக இருந்தவர் வாய்ஸ் கொடுத்து விட்டால் பயம் கலைந்து மற்றவர்கள் பன்னீர் பக்கம் வந்து விடுவார்கள் என்று கற்பனை செய்து பார்த்தார்கள். அதுவும் சரிப்பட்டு வரவில்லை. அருண்குமார்  ‘ நான் எனது சொந்த தொகுதிக்குப் போகிறேன், மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் அதே போல தொகுதிக்கு சென்று விட்டு வாக்களிக்க வாருங்கள் என்று ஒரு நாடகம் அரங்கேற்றப் பட்டது அதுவும் எடுபடவில்லை.


இந்த அரசு பதவி ஏற்று விடக்கூடாது என்பதற்காக கடந்த 15 நாட்களாக மீடியாக்கள், சினிமா கலைஞர்கள் எப்படியெல்லாமோ முயற்சி செய்து பார்த்தார்கள். எதுவும் எடுபடவில்லை. ஜெயலலிதா ஆட்சி பற்றி எதிர்கட்சிகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக விமர்சித்த போது இந்த சினிமா கலைஞர்கள் வாய் பேசாத ஊமையாக இருந்தார்கள். ஏனென்றால் இவர்கள் கருணாநிதி வந்தால் அவர் பின்னால் புகழ் பாடுவதும், ஜெயலலிதா வந்தால் அவருக்கு தகுந்தார்போல் நடிப்பதும் நடிகர்களுக்கே உரித்தான கலை. தமிழ்நாட்டை எப்போதும் சினிமா நடிகர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தால்  எந்த வாய்ஸும் கொடுக்க மாட்டார்கள் ஏனென்றால் அவர்களை வைத்து இவர்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாமில்லையா?


சட்டமன்றத்தில் கலாட்டா செய்தால் ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் பிரச்சினை ஏற்பட்டு ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் எடப்பாடியாரும், செங்கோட்டையனும் அமைதி காத்த விதத்திலேயே இந்த அரசை நன்றாக வழிநடத்தி விடுவார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள் 4 ஆண்டுகள் அதற்கு மேலும் இந்த ஆட்சி தொடர்ந்து மக்கள் சேவை புரியட்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com