பெண் குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் அப்படி என்ன பாலியல் வறட்சி?! 

தொலைக்காட்சி சீரியல்களைப் பாருங்கள்...  ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு குழந்தைக் கடத்தல், இளம் பெண் கடத்தல், சொத்துக்காக கொலை செய்யத் திட்டமிடுதல், குழந்தைகளை நரபலி கொடுத்து அதை நூதனமாக மறைக்கும்
பெண் குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் அப்படி என்ன பாலியல் வறட்சி?! 

தமிழ்நாட்டில் அரியலூர் சிறுமி நந்தினி வன்கொலை சம்பவம் தொடங்கி ஹாசினி, ரித்திகா எனத் தொடர்ந்து நிலவி வரும் பெண்குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் மக்களிடையே விரும்பத் தகாத உணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நாட்டில் பெண் குழந்தைகள் மட்டுமல்ல இப்போது ஆண் குழந்தைகள் மற்றும் ஆண்களுக்கும் கூடப் பாதுகாப்பில்லாத சூழலே நிலவி வருகிறது. ஆனாலும் சமீப காலங்களில் பெண் குழந்தைகள் அடிக்கடி காணாமல் போவதும், அவர்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப் படுவதும், கொலை செய்யப்படுவதுமான செய்திகளை நாள்தோறும் கடக்க நேரிடும் பெற்றோரிடையே இச்செய்திகள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியாவில் மட்டுமல்ல சர்வ தேச அளவில் இந்தப் பிரச்சினை ஒரு தீராக் கவலையாக உருமாறிக் கொண்டிருக்கிறது. 

ஏன் சில மனநோயாளிகளால் பெண்ணை பெண்ணாகவும், சக உயிராகவும் பார்க்க முடிவதில்லை, எந்த ஊனக் கண்கள் அவர்களுக்கு பெண்களையும், பெண் குழந்தைகளையும் வெறும் பாலியல் பிண்டங்களாகக் காட்டுகிறது? என்று யோசித்துப் பார்த்தால் நமது சமூக அமைப்பின் மீதே கடும் கோபம் எழுகிறது. நமது சமூகம் எப்போதும் முன்னுரிமை தருவதும், தந்து கொண்டிருப்பதும் சினிமாக்களுக்குத் தான். நமது அன்றாட வாழ்வில் அரசியலைக் காட்டிலும் சினிமாக்களின் தாக்கமே அதிகம் எனில் அது மிகையில்லை. நமது சினிமாக்களில் காட்டப்படும் ஆண் பெண் உறவுகளைப் பற்றி எண்ணிப் பாருங்கள்! பெரும்பாலும் எல்லை தாண்டிய உறவுகளாகவே இருக்கின்றன. முன்பெல்லாம் தொலைக்காட்சி சீரியல்களில் ஆபாசத்தை ஒரு துளி கூட காண முடியாது. இன்றைய தொலைக்காட்சி சீரியல்களைப் பாருங்கள்... தொடர்ந்து பாரபட்சமே இல்லாமல் எல்லா சேனல்களிலும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு குழந்தைக் கடத்தல், இளம் பெண் கடத்தல், சொத்துக்காக கொலை செய்யத் திட்டமிடுதல், குழந்தைகளை நரபலி கொடுத்து அதை நூதனமாக மறைக்கும் ஆலோசனைகள், பிறன் மனை நோக்கக் கற்றுத் தரும் முறையற்ற உறவுகளை நியாயப்படுத்தும் திரைக்கதைகள். இப்படித் தானே சென்று கொண்டிருக்கின்றன தமிழர்களின் தொலைக்காட்சி நாட்கள். இதில் வட இந்திய இறக்குமதி சீரியல்களைத் தொடர்ந்து பார்ப்பவர்கள் கிட்டத்தட்ட தங்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் ஒத்துப் போகவில்லை என்றால் இன்னொரு உறவை ஏற்படுத்திக் கொள்வதில் தவறே இல்லை எனும் அளவுக்கு மனப்பிறழ்வு கொண்டவர்களாக மாறி விடும் துர்பாக்கியம் கூட சில குடும்பங்களில் நிகழ்ந்து விட வாய்ப்புகளுண்டு. 

போதாக்குறைக்கு யதார்த்தம் என்ற பெயரில் ஆபாசத்தை அளவற்றுக் கொட்டி இறைக்கவென்றே எடுக்கப் படும் சில திரைப்படங்கள். இவற்றிலெல்லாம் காதலுக்கும், காமத்துக்கும், ஆபாசத்துக்கும் வித்யாசங்களே இருப்பதில்லை. சில சமூக நல அமைப்புகள் இத்தகைய படமெடுக்கும் இயக்குநர்களை ஏன் இப்படிப்பட்ட படங்களை எடுத்து வெளியிடுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினால் சமூகத்தில் இல்லாததையா, நடக்காத ஒன்றையா நாங்கள் படமாக எடுத்து விட்டோம்? என்று நக்கலாகக் கேட்கிறார்கள். சமூகத்தில் நடக்கும் சில குற்றச்செயல்களை கண்டிப்பதற்கான கடமை உணர்வு இல்லாத அவர்கள் இவற்றையெல்லாம் தங்களுக்கான வியாபார வாய்ப்புகளாக்கி இந்தச் சமூகத்தை மேலும் சீரழித்துக் குட்டிச் சுவராக்கி விட முயல்வது நியாயமற்ற செயல். இங்கே நல்ல சினிமா எடுப்பவர்களைப் பற்றி எந்தச் குற்றசாட்டுகளும் இல்லை. ஆனால் எது நல்ல சினிமா என்பதில் தான் குழப்பமே! வர்த்தக உத்தி என்ற பெயரில் ஆபாசத்தை திணிப்பவர்கள் யார்? அவை எந்தெந்த திரைப்படங்கள் என்பதை அவரவர் யூகத்துக்கே விட்டு விடலாம்.

சினிமாவையும் தொலைக்காட்சி சீரியல்களையும் விட இன்னும் வெகு நெருக்கமாக மனித மனங்களை இரக்கமற்றுப் போகச் செய்வதற்கென்றே வந்து விடிந்திருக்கின்றன பல ஆபாச இணையதளங்கள். 
இன்றைய இளம் சமுதாயத்தினர் தடுக்கி விழுந்தால் ஒன்று சினிமா தியேட்டர்களில் விழுவார்கள் அல்லது இண்ட்டர்நெட் கஃபேக்களில், போதாக்குறைக்கு நமது அரசியல்  கட்சிகள்,  இலவச ஸ்மார்ட் ஃபோன் முதல் வை ஃபை,  இண்டர்நெட் வசதி வரை கடைக்கோடி கிராம மக்களுக்கும் எட்டும் வரை ஏற்படுத்தி தருவோம் என்று தேர்தல் காலத்து போனஸ் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கின்றனர்.
மக்கள் இந்த விசயத்தில் மட்டும் கடந்த காலங்களைப் போல ஏமாறத் தயாரில்லை என்பதால் இனி வரும் நாட்களில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இலவசமாக இண்டர்நெட் வசதியுடன் ஒரு ஸ்மார்ட் ஃபோனும் கிடைத்து விடும். ஆனால் அதனால் ஆகப் போவதென்ன? மக்களின் வேலை வாய்ப்பு உயரப் போவதில்லை. வேலையற்ற மனிதனுக்கு பொழுது போக்க கொட்டிக் கிடக்கின்றன எண்ணிக்கையிலடங்காத ஆபாச இணையதளங்கள். இவற்றைத் தடை செய்யவும், கண்காணிக்கவும் எத்தனை எத்தனை செயலிகள் வரட்டும். அத்தனையையும் விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டு பல்கிப் பெருகி வருகின்றன இந்த மோசமான இணையதளங்கள். இவற்றில் பல குழந்தைகளை பாலியல் ரீதியாகத் தவறாகப் பயன்படுத்துவதை சித்தரிக்கும் இணையதளங்களும் அடக்கம். இவை தவிர செக்ஸ் கார்ட்டூன்களுக்கான இணையதளங்கள் வேறு இண்டர்நெட்டில் இரைந்து கிடக்கின்றன. இவற்றை கூகுள் தேடுபொறி மூலம் யார் வேண்டுமானாலும், எந்த வயதுடையவர்கள் வேண்டுமானாலும் எளிதில் தேடிக் காணலாம் என்பது தான் மிகுந்த வேதனையான விசயம். பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் தனித்திருக்கும் குழந்தைகளின் மனநிலையை யோசித்துப் பாருங்கள். கம்ப்யூட்டர் திரை வரை ஏன் போக வேண்டும். இந்தா கையில் வைத்து எதை வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டு வீட்டுக்குள் பாதுகாப்பாக இரு என்று நாமே நமது வளரும் குழந்தைகளை கண்காணிப்பற்று கை விட்டு விட்டோமோ? என்று ஒரு புறம் மிகுந்த கவலையளிக்கிறது இந்த நிலை. அன்றாடம் செய்திகளில் குழந்தைகள் துன்புறுத்தப் பட்டு கொலை செய்யப்பட்ட துக்க கரமான செய்திகளைக் காணும் போதெல்லாம்  இப்படியான இணையதளங்களை எல்லாம் இந்தியாவில் ஏன் தடை செய்யக் கூடாது? என்ற கேள்வி எழுகிறது.

முன்பெல்லாம் கணவனுக்கு மனைவி துணை, தங்கைக்கு அண்ணன் துணை, குழந்தைகளுக்குப் பெற்றோர் துணை, வயது வந்த பிள்ளைகளுக்கு நண்பர்கள் துணை எனும் நிலை மாறி இப்போதெல்லாம் பாரபட்சமே இல்லாமல் எல்லோருக்குமே ஸ்மார்ட்ஃபோன் மட்டுமே துணை என்ற நிலையாகி விட்டது. எங்கே பார்த்தாலும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் வயது வித்யாசமின்றி கையில் ஸ்மார்ட்ஃபோன்களை வைத்து நோண்டிக் கொண்டு குனிந்த தலை நிமிராது அதில் ஆழ்ந்து விடுகின்றனர். பக்கத்தில் கொலையே நடந்தாலும் அதை இவர்களது மூளை உள்வாங்கிக் கொள்ள சில மணி நேரங்கள் தேவைப்படும் நிலை. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் கடந்த வருடத்தில் நிகழ்ந்த சுவாதி கொலை வழக்கு. பட்டப்பகலில் மனித நடமாட்டமுள்ள பரபரப்பான நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் நடந்த அந்தக் கொலைக்கு சாட்சிகளே இன்றி கொலை செய்தவனாக குற்றம்சாட்டப்பட்ட ராம்குமாரும் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லி வழக்கை முடித்து விட்டார்கள். ஆக மொத்தத்தில் தொழிநுட்பம் வளர வளர பெண்களுக்குப் பாதுகாப்பு அருகிக் கொண்டே வருகிறது என்பது தான் கவலைக்குரிய விசயம்.

சுவாதி கொலைக்குப் பின் மின்சார ரயிலில் செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கென புதிதாக சுவாதியின் பெயரிலேயே ஸ்மார்ட்ஃபோன் செயலிகள் எல்லாம் கண்டுபிடித்து புழக்கத்தில் விட்டார்கள். அதனால் ஆன பயன் என்ன ஆனதென்று தான் தெரியவில்லை. ஏனெனில் கால் டாக்ஸிகளிலும், மின்சார ரயில்களிலும் தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கான ஆபத்துகளின் சதவிகிதத்தில் இப்போதும் எந்த மாற்றமுமில்லை. சொல்லப்போனால் இப்போது இளம்பெண்களை விடவும் அறியாச்சிறுமிகளும், சின்னஞ்சிறு மழலைகளும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் அவலம் தான் கூடிக் கொண்டே போகிறது. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டும் திறன் யாரிடத்தில் இருக்கிறது. 

ஒவ்வொருவரும் அவரவர் வாழ்வை ஒருமுறை மறு ஆய்வு செய்வது நல்லது.

இந்தியாவின் குடும்ப அமைப்பானது மிக மிக பாதுகாப்பான ஒரு அம்சமாக உலக நாடுகளிடையே கொண்டாடப்படுகிறது. ஆனால் அந்தக் கட்டுப்பாடான குடும்ப அமைப்புகளிலும் கூட குழந்தைகளுக்கான பாலியல் கொடுமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகள் இல்லை. பெற்றோர் இருவரும் வேலைக்காக வெளியில் ஓடிக் கொண்டிருக்கும் சூழலில் குழந்தைகளின் பாதுகாப்புக் காரணிகள் சரியாக திட்டமிடப்பட வேண்டும் என்பது தான் அவர்களுக்கான பாதுகாப்பின் முதல் படி. பாதுகாப்பிலும், தொடர் கண்காணிப்பிலும் கோட்டை விட்டு விட்டு இழப்பைக் குறித்து காலத்திற்கும் வருந்திக் கொண்டிருப்பதில் பயனில்லை.

  • குழந்தைகளைப் பொறுத்தவரை எது நல்ல தொடுகை? எது கெட்ட தொடுகை எனும் புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு.
  • பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் தவிர பிறர் அவர் எத்தகைய நெருக்கமான நண்பர்களாக இருந்தாலுமே அவர்களுடன் குழந்தை வெகுநேரம் தனித்திருக்கும் சூழலை உருவாக்காமை.
  • பெற்றோர் எத்தகைய உயர்பதவிகளில் இருப்பவர்களானாலும் பெற்ற குழந்தைகளின் பொருட்டி அவர்களுடன் தினம் சில மணி நேரங்கள் செலவிட முடிவு செய்வது அவசியம்.
  • குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான உரையாடல்களில் லகுத் தன்மை இருக்க வேண்டும். தன் மனதில் இருப்பதை பெற்றோருடன் பகிர்ந்து கொள்வதில் குழந்தைக்கு தயக்கமோ, மனச் சங்கடங்களோ இருக்க கூடாது. அதற்கேற்ற வகையில் பெற்றோரது அணுகுமுறை இருக்க வேண்டும்.
  • அனாவஸியமான அச்ச உணர்வுகள் குழந்தைகளை அணுகாமல் காக்கும் அரணாக இருப்பதும் பெற்றோரது கடமையே.
  • நண்பர்கள் வட்டாரத்திலும் சரி, உறவுகள் வட்டத்திலும் சரி தனக்கு நேரும் சிறு மன உளைச்சல்களைக் கூட பெற்றோரிடம் குழந்தைகள் எளிதாகப் பகிர்ந்து கொண்டு தீர்வு காணும் நிலை நீடிக்க வேண்டும்.
  • மொத்தத்தில் குழந்தைகளுக்கு தாங்கள் தனித்திருக்கிறோம், தங்களது பிரச்சினைகளை செவி கொடுத்து கேட்கவோ, தீர்க்கவோ எவருமே இல்லை எனும்படியான மனநிலை வராதிருக்குமாறு பெற்றோரது அரவணைப்பு இறுகியிருக்க வேண்டும்.
  • தவிர இது எல்லாப் பெற்றோருக்குமான ஒரு வேண்டுகோள், சுயநலம் வலுத்து விட்ட இந்நாளில்  எல்லாக் குழந்தைகளையும் தன் குழந்தைகளாக கருதும் பெருந்தன்மையான மனம் எல்லாப் பெற்றோருக்கும்  அவசியம் வேண்டும். யாருக்கோ... எங்கோ... என்னவோ நிகழ்ந்து விட்டுப் போகிறது. அதனால் நமக்கென்ன? என்று  யாரும் சும்மா இருந்து விடக் கூடாது.

இந்தியக் குடும்ப அமைப்புகளின் பாதுகாப்பு வளையம் தாண்டி குழந்தைகளும், இளம்பெண்களும் தங்களுக்கான பாதுகாப்பை தாங்களே உறுதி செய்து கொள்ளும்படியான தைரியமான மனப்பாங்கை அவர்களுக்கு அளிப்போம் என ஒவ்வொரு பெற்றோரும் உறுதி ஏற்க வேண்டும். சில இடங்களில் குடும்பமே மோசமான படுகுழி ஆகி விடக்கூடிய துரதிருஷ்டமும் சிலருக்கு நேர்ந்து விடுவதுண்டு. சில மாதங்களுக்கு முன்பு நாளிதழ் செய்திகள், தொலைகாட்சி என அலைகழிக்கப் பட்ட சிவகங்கைச் சிறுமியின் சோகக் கதை அறிந்தவர்களுக்கு இது புரியக் கூடும். தாய் இறந்து விட்ட சூழலில் அந்தச் சிறுமியை சொந்தத் தகப்பனில் இருந்து அவளுக்கு அறிமுகமான அத்தனை ஆண்களுமே பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அவள் காவல்துறையில் புகார் அளித்திருந்தாள். மிகக் கொடுமையான அவலம் இது. இது போன்ற சம்பவங்களில்  குடும்பமே நரகமாக மாறி விடும் சூழலில் அச்சிறுமிகளை அரசு சிறுவர் காப்பகங்களில் அடைக்கலமாக்கி அவர்களது எதிர்கால நல்வாழ்வுக்கு ஆவண செய்வது அரசின் கடமை.

இந்த உலகில் எந்தக் குற்றைத்தை வேண்டுமானாலும் சமூகமும் அதன் மக்களும் போனால் போகிறது என்று யோசித்து விட்டு விடக் கூடும். ஆனால் அறியாச் சிறுமிகளையும், பச்சிளம் குழந்தைகளையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி சுகம் காண நினைக்கும் அற்ப பதர்களை சமூகம் மன்னிக்க விரும்புவதில்லை. 

அவர்களுக்கான தண்டனை அரபு நாடுகளைப் போல கல்லால் அடித்துக் கொல்லுதல் என்பதாக இருந்தால் சாலச் சிறந்தது. இனியொரு மழலையை சிதைக்கும் எண்ணம் எந்த மிருகத்துக்குள்ளாவது ஒளிந்திருந்தால் அவன் அச்சத்தின் பொருட்டேனும் தனது இழிவான நோக்கத்தை கை விடக் கடவானாக!

Image courtsy: google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com