நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்: தொடரும் துயரம்!    

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் பூமியில் இருந்து ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதை எதிர்த்து அப்பகுதி பொது மக்களின் போராட்டம் துவங்கியிருக்கிறது.
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்: தொடரும் துயரம்!    

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் பூமியில் இருந்து ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதை எதிர்த்து அப்பகுதி பொது மக்களின் போராட்டம் துவங்கியிருக்கிறது.அதன் ஒரு பகுதியாக வரும் 26-ஆம் தேதி அன்று புதுக்கோட்டையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருக்கிறது. இப்படி பொதுமக்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ள அந்த திட்டம் குறித்தும், அதன் பின்னணி பற்றியும் கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

ஹைட்ரோகார்பன் என்றால் என்ன?

இந்த கேள்விக்கு பதிலளிக்க நீங்கள் கொஞ்சம் உங்கள் பதினொன்றாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு வேதியியல் பாடங்களை இப்போது நினைவுக்கு கொண்டு வர வேண்டும்.

ஹைட்ரோகார்பன் என்பது ஹட்ரஜனும் ஆக்ஸிஜனும் சேர்ந்த ஒரு கனிம கலவையாகும். இந்த ஹைட்ரோகார்பன்களில் ஆல்கேன் (alkanes), ஆல்கீன் (alkenes), ஆல்கைன் (alkenes), சைக்ளோ ஆல்கைன் (cycloalkanes) என 14 வகைகள் உள்ளன.   . 

சுருக்கமாக சொலவதென்றால் மீத்தேன் வகை வாயுக்களின் பொதுப் பெயரே ஹைட்ரோ கார்பன் என்று அழைக்கப்படுகிறது. மேலே குறிப்பிட்டவற்றில் ஆல்கேன் என்பது ஒற்றை பிணைப்பு வகையாகும்.  இதன் சூத்திரம் CnH2n+2 .  நாம் குறிப்பிடும் மீத்தேன் இவ்வகையை சார்ந்தது தான். இதன் கெமிக்கல் பார்முலா  CH4    ஆகும். இது குரூட் ஆயில், இயற்கை எரிவாயு மற்றும் சாண எரிவாயுவில் காணப்படும். இதற்கு சதுப்பு நில வாயு என்ற பெயரும் உண்டு. எரியும் பொழுது மீதமின்றி முழுதாக எரிந்துவிடும் தன்மையும் இதற்குண்டு. இரவு நேரங்களில் சதுப்பு நிலப்பகுதிகளில் இந்த வாயு வெளிப்படுவது பார்ப்பதற்கு ‘திடீர்’ என்று ஒரு தீப்பந்தம் எரிவது போல் இருப்பதனால் இதனைக் ‘கொள்ளிவாய்ப் பிசாசு’ என்று அழைப்பது உண்டு.

எப்படி உருவாகிறது மீத்தேன்?

இது மீத்தேனின் வேதியியல் அமைப்பு. இது விஷத்தன்மை பொருந்தியதாகும். இலை, மரங்கள், உயிரின உடல்கள் மட்கி பாக்டீரியாவினால் அழிக்கப்பட்டு கார்பனாக மாறி, காற்று மாசிலுள்ள ஹைட்ரஜனுடன் சேர்ந்து மீத்தேனாக மாறுகிறது. பூமிக்குள் இருக்கும் இந்த மீத்தேன் வாயுவானது தொடர்ச்சியாக நகரும் பண்புள்ளது, இவ்வாறு நகரும் மீத்தேன் இறுதியில் பூமிக்கு அடியில் உள்ள   படிவுப்பாறைகளில் தங்கிவிடுகிறது.

இந்தியாவில் இது போன்ற வாயு படிவுப்பறைகள் கங்கை சமவெளியில் மிகுந்து காணப்படுகிறது. பூமியில் துளையிட்டு இந்த வாயுவை எடுத்த பின் அங்கு உருவாகும் வெற்றிடத்தில்  அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பாறைகள் எலாஸ்டிக் போல் வந்து நிரப்பிக் கொள்ளும், அத்துடன் அருகிலுள்ள நிலத்தடி நீரும் அங்கு நிரப்பிக் கொள்ளும். இவை போதாதென்று பூமியின் மேற்பரப்பிலுள்ள நீரும் சிறிதளவு கீழே செல்ல வாய்ப்பு மிக அதிகம்.

முன்னோடியான மீத்தேன் எரிவாயு திட்டம்

2011-இல் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக அரசு மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு குஜராத்தைச் சேர்ந்த கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்பரேசன் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. இந்த திட்டத்தின் படி பசுமை வளம் கொழிக்கும் தஞ்சை டெல்டா வயல்களில் வேதிக் கரைசல்களைச் செலுத்தி மீத்தேன் எரிவாயு எடுக்கப்படுவதாக திட்டம். இந்த திட்டம் நிறைவேறினால் நிலங்கள் முற்றிலும் பாழாகும். நிலத்தடி நீர் நஞ்சாகும், சுற்றுச் சூழலும் நாசமாகும் என்பதால், விவசாய இயக்கங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. அப்பொழுது,அது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில்  மீத்தேன் திட்டத்தின் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்த நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று தமிழக அரக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழக அரசும் மீத்தேன் திட்டத்துக்கான அனுமதியை ரத்து செய்தது.

தற்போதைய ஹைட்ரோ கார்பன் திட்டம்

புதுக்கோட்டை மாவட்டம்  வடகாடு அருகே நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்ட ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 15-ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்குத்தான் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது நாம் முன்னரே பார்த்த, ஹைட்ரோ கார்பன் என்ற பொதுப்பெயரில் அழைக்கப்படும் மீத்தேன் வகை வாயுக்களான மீதேன், ஈதேன், ப்ரோபேன், பியூட்டேன் எனும் அனைத்து வாயுக்களின் கலவையை பூமியில் துளையிட்டு எடுப்பதுதான். இவற்றை ஷேல் காஸ், டைட் காஸ் என்று பிரிக்கலாம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?

நிலத்தில் இருந்து இயற்கை எரிவாயுவை எடுப்பது சுற்றுசூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக நிலத்தடி நீர் வளம் குறையும் என்பதும் இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களின் குற்றச்சாட்டு. எரிவாயுவை எடுப்பதற்கு செங்குத்தாகவும், படுக்கை வசமாகவும் பூமியில் 1000, 5000 மீட்டர் துளைகள் அமைக்கப்பட்டு நிலத்தடி நீர் வெளியே உறிஞ்சப்படும் என்கிறார்கள் அவர்கள்.

இதுபோன்ற திட்டங்கள் பொதுவாக கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்படுத்தப்படும். அம்மாதிரி செயல்படுத்தப்படும் போது, நிலத்தடியில் உள்ள நீர்வளம் குறையும் என்ற பிரச்சனை எழுவதில்லை. ஆனால் தற்போது விவசாயப் பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதுதான் முக்கிய எதிர்ப்புக்குக் காரணம்.

புதுக்கோட்டைக்கு கூடுதல் பாதிப்பு?

காவிரி நீர், கானல் நீராகிப் போன நிலையில், டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்று பாசனத்தை நம்பியே விவசாயம் நடைபெற்று வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் வளம் முற்றிலும் அழிந்து விவசாயம் முற்றிலும் வீணாகும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து போகும் என்கிறார்கள் பலர்.

என்ன செய்ய வேண்டும் மத்திய அரசு?

நெடுவாசலைத் தொடர்ந்து காரைக்காலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஹைட்ரோ கார்பன் செறிவுள்ள கங்கை சமவெளியை விட்டு தமிழகத்தில்தான் எடுக்க வேண்டுமென்ற கட்டயமில்லை.

இதனால் தமிழகத்திற்கோ தமிழக மக்களுக்கு என்ன பிரதி பலன் செய்ய போகிறோம் என்பதை மத்திய அரசு சொல்லவில்லை. குடியிருப்பு மற்றும் விவசாய பகுதிகளில் எரிவாயு எடுக்கக்கூடாது என்ற விதிகள் இல்லையென்றாலும், கடலோர, மக்கள் வாழாத இடங்களில் இம்முயற்சியை செய்யலாம், மாற்று வழியாக இதே மீத்தேனை சாண எரிவாயு மூலம் எடுப்பதை ஊக்குவிக்கலாம்.

தமிழகத்திற்கு பெரிதும் உதவக் கூடிய AIIMS மருத்துவ கல்லூரி அமைப்பது போன்ற விசயங்களில் மெத்தனம் காட்டி விட்டு, மக்கள் விருப்பமில்லாத இதுபோன்ற திட்டங்களை அமுல்படுத்துவது தன் மூலம் ஆட்சியளர்கள் மீது மக்கள் வெறுப்பை சம்பாதிப்பதே மிச்சம்.

நாம் என்ன செய்யலாம்?

இதனை தடுக்க சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பஞ்சாயத்திலும் தீர்மானம் நிறைவேற்றி, தீர்மானத்தை மத்திய அரசுக்கும் அனுப்பலாம், இப்பொழுது உள்ளாட்சி அமைப்புகள் காலம் முடிவடைந்த நிலையில், அதற்கு என தமிழக அரசு நியமித்துள்ள சிறப்பு அதிகரிகள் மூலம் மக்கள் எதிர்ப்பை தெரிவிப்பது சிறந்த முறையாகும்.

இறுதியாக..

ஆக்கப்பூர்வமான திட்டம் என்றாலும் அதன் ஆபத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், விஞ்ஞானத் திட்டங்களை நிறைவேற்றும்போது இயற்கைக்கும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அரசின் முன் வைக்கின்ற கோரிக்கையாக உள்ளது.

(கட்டுரையாளர்: C.P.சரவணன், வழக்கறிஞர் - 9840052475)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com