‘ஜெ’ விட்டுச் சென்றது வெறுத்துக் கொண்டே ரசிக்கப்பட்ட ஆளுமையின் வெற்றிடம்!

சட்டத்தைப் பொறுத்தவரை ஜெ இறந்து விட்டாலும் அரசியல் வரலாற்றில் ஊழல் செய்து தண்டனை பெற்ற குற்றவாளியாகத் தான் குறிப்பிடப்படுகிறார். ஆனால் அவரது அபிமானிகள் மனதில் அவர் தமிழகத்தின் நிரந்தர அம்மா!
‘ஜெ’ விட்டுச் சென்றது வெறுத்துக் கொண்டே ரசிக்கப்பட்ட ஆளுமையின் வெற்றிடம்!

டிசம்பர் 4 ஆம் தேதி...

ஜெ இறப்புக்கு முன் தினம் மாலை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு குடும்பத்துடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறோம். வழியெங்கும் வாகனங்கள் இயங்கும் முறையில் நிறையவே பதட்டம். சர் சர்ரென தங்களது இலக்குகளை நோக்கி சீறிப் பாயும் வாகனங்களைக் கண்டு கொஞ்சம் பீதியாகத் தான் இருந்தது. அதோடு ஆங்காங்கே பெட்ரோல் பங்குகள் வேறு அடைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. வாட்ஸ் அப்களில் ஜெ இறந்து விட்டார் என்றும் அதை அறிவிக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதாகவும் பகலில் மக்கள் புழக்கம் அதிகமிருக்கையில் அறிவித்தால் ஏதாவது அசம்பாவிதமாகி விடும் என்பதால் இரவில் அறிவிக்க இருக்கிறார்கள் என்றும் யூக மெசேஜ்கள் பறந்து கொண்டிருந்தன.

உருப்படியாக வீடு போய்ச் சேருவோமா அல்லது ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்வோமோ என்று உள்ளூர ஒரு குழப்பம் குடைந்து கொண்டே இருந்தது. ஓரளவு உடல்நலன் தேறி வந்தார் என்று சொல்லப்பட்ட நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதி இரவு திடீரென ஜெ வுக்கு இருதய அடைப்பு என்றார்கள் அப்பல்லோ மருத்துவர்கள். ஜெ உடல்நிலை குறித்து இனியும் பொது மக்களுக்கு அறிவிக்காமல் இருக்க முடியாது எனத் தோன்றியதால் அப்பல்லோ பிரதாப் ரெட்டியின் மகள் சுனிதா ரெட்டி இதை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டார். சென்னை முழுதும் அன்று நிலவியது அசாதாரண சூழல்! அன்று தொடங்கிய அந்த அசாதரண சூழலின் தாக்கம் இன்று வரை சென்னையில் ஓயவே இல்லை என்பது மெய். எப்படியோ ஒரு வழியாக இரவு 10 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். ஜெ உடல்நிலை குறித்து செய்தி ஊடகங்களில் வினாடிக்கு ஒரு முறை அப்டேட்டிக் கொண்டே இருந்தார்கள். அப்பல்லோ முன் திரண்டிருந்த அதிமுக தொண்டர்களின் முகங்களைக் காணும் போது ஜெ வை வெறுத்தவர்கள் கூட அவருக்காக அனுதாபப் படும் நிலையானது. 

டிசம்பர் 5:

மறுநாள் வழக்கம் போல சென்னை வாழ் மக்கள் அனைவரும் அனிச்சை செயலாக அவரவர் அலுவலகம் வந்தாயிற்று. தொலைக்காட்சி, இணையம், வாட்ஸப் உரையாடல்கள் எங்கெங்கும் ஜெ மட்டுமே! அன்றைய சூழலில் தமிழ்நாட்டில் இருந்த ஒவ்வொருவரது மனதிலும் ஜெ இருந்தார் என்று தான் கூற வேண்டும். காலைமுதலே ஏதோ ஒரு அசம்பாவிதச் செய்தியை எதிர்பார்த்தவாறு சென்னை பரபரப்பாக இருந்தது. பள்ளிகள் அனைத்தும் மதியத்திற்கு மேல் விடுமுறை அறிவித்தன. மதியம் 2 மணியளவில் பல தனியார் அலுவலகங்கள் தங்களது ஊழியர்களுக்கு விடுப்பு அளித்து பாதுகாப்பாக வீட்டுக்குப் போகச் சொல்லி கேட்டுக் கொண்டது. சென்னைச் சாலைகள் எங்கும் ஜனக்கூட்டங்கள் நிரம்பி வழிந்தன. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

எப்படியோ இருட்டுவதற்குள் சென்னை மக்கள் அனைவரும் பாதுகாப்பாக அவரவர் கூடடைந்தனர். மாலையில் மறுநாள் கடைகள் அடைக்கப்படும் எனும் அச்சமிருந்ததால் மக்கள் நான்கைந்து நாட்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களைச் சேமிக்கத் தொடங்கினர். கடைகளில் பாலும், பிரெட்டும் வந்த வேகத்தில் காலியாகின. பலர் குழந்தைகளுக்கு பால் பாக்கெட் கிடைக்காமல் அமுல் இன்ஸ்டண்ட் பால் பவுடர் சாஷேக்களை அள்ளிக் கொண்டு போனார்கள்.

இருக்கிறாரா? விடை பெற்றாரா?

இரவு நெருங்கிக் கொண்டிருந்தது. திடீரென இரவு 7 மணி சமீபத்தில் சன் தொலைக்காட்சியிலும், தந்தி தொலைக்காட்சியிலும் ‘ தமிழக முதல்வர் ஜெ சிகிச்சை பலனின்றி மரணம்’  என்று ஜெ படத்தைப் போட்டு கிராபிக்ஸில் மலர் தூவினார்களோ இல்லையோ! அப்பல்லோ முன் குழுமி இருந்த அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் கதறி அழத் தொடங்கினர். ஜெயா தொலைக்காட்சியிலும் முதலில் அப்படித்தான் அறிவித்தார்கள், பின்னர் அதிமுக தலைமைக் கழகத்தில் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டார்கள். இதையெல்லாம் வைத்து அப்போதே ஒட்டு மொத்த தமிழகமும் ஒரு முடிவுக்கு வந்து விட்டது. அப்போது தொலைக்காட்சிப் பெட்டியின் முன் தவம் கிடந்த ஒவ்வொரு மனித மனமுமே ஒரு கணம் ஜெ வின் மறைவுக்காக ஒரு நொடியேனும் மானசீகமாக கதறி அழுதது என்று தான் சொல்ல வேண்டும். திடீரெனக் காட்சி மாறியது. செய்தி ஊடகங்கள் அறிவித்த செய்தி பிழையானது என்றும். ஜெ நலமுடனே இருக்கிறார் என்றும், மருத்துவர் குழு ஜெ வை மீட்கப் போராடிக் கொண்டிருக்கிறது. ஜெ மீண்டு வருவார் என்றும் ஃப்ளாஷ் நியூஸ் போட ஆரம்பித்தார்கள். ஜெ மறைவுக்காக துக்கப்பட்ட மனங்கள் எல்லாம் கொஞ்சம் ஆசுவாசமாகின. சிலர் இரவு 10 மணி வரை செய்திகளை மேய்ந்து விட்டுப் போய் படுத்தனர். நாள் முழுதும் நிலவிய பரபரப்பில் அனைவரது மனமும், உடலும் அன்று ஓய்வுக்காக ஏங்கியது என்றும் சொல்லலாம். 11 மணிக்கு மேல் பாதிச் சென்னை உறங்கிய நேரத்தில் அதிகாரப் பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

இருதய அடைப்பால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்!

வருடா வருடம் ஜெ பிறந்தநாளுக்கு எண்ணற்ற அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து இருப்பார்கள். எத்தனையோ பேர் விலையுயர்ந்த பரிசுகள் அளித்திருக்கலாம். ஆனால் இந்தப் பிறந்தநாளின் நெருக்கத்தில் ஜெ தனது பிறந்த நாள் பரிசாக மரணத்தை நினைத்துக்கூடப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எந்த சொத்துக் குவிப்பு வழக்கை அவர் பல்லாண்டுகளாக இழுத்தடித்தாரோ அது கடைசியில் அவரது உயிரைப் பறித்துக் கொண்டு ஒரு வழியாக அவரது பிறந்த மாதமான ஃபிப்ரவரி 14 ஆம் நாள் முடிவுக்கு வந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம், கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிமதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதிப்படுத்தி தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி ஜெ இறந்த பின்னும் கூட அவர் ஒரு ஊழல் குற்றவாளி தான். இதோ அவரது அண்ணன் மகன் தீபக் ஜெ வுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான 100 கோடி ரூபாய்களை ஜெ வின் பிற சொத்துக்களுக்கு ஈடாக கடனாகப் பெற்று உச்சநீதிமன்றத்தில் செலுத்தப் போவதாக தெரிவித்திருக்கிறார். சட்டத்தைப் பொறுத்தவரை ஜெ இறந்து விட்டாலும் அரசியல் வரலாற்றில் ஊழல் செய்து தண்டனை பெற்ற குற்றவாளியாகத் தான் குறிப்பிடப்படுகிறார். ஆனால் அவரது அபிமானிகள் மனதில் ஜெ ஒரு தேவதை! அவர் தமிழகத்தின் நிரந்தர அம்மா! என்பதையும் மறுக்க முடியாது. 

இது 2015 ஆம் ஆண்டு வெள்ளச் சீரழிவின் பின் ஜெ வாட்ஸ் அப்பில் வெளியிட்ட ஆடியோ...

இந்த வாட்ஸப் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையுமே வந்தடைந்தது எப்போது தெரியுமா? வெள்ளம் எல்லாம் வடிந்து மக்கள் தங்களைத் தாங்களே நொந்து கொண்டு ஒரு வழியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில். அதனால் இந்த வாட்ஸப் ஐடியாவுக்கு வந்து குவிந்தன எண்ணிக்கையிலடங்கா கண்டனங்கள். அன்புச் சகோதரி வாட்ஸப் இணையத்தில் பல்லாயிரம் முறை கலாய்த்து கழுவி ஊற்றப் பட்டது. ஆனாலும் ஒரே ஆண்டில் 2015 ஆம் வருடத்திய கடும் வெள்ளச் சேதங்களின் போது ஜெ வை மனதார வெறுத்த ஒவ்வொரு மனமும் ஜெ இறந்த அன்று அவருக்காக வருந்தியது. இது முரணாக இருந்தாலும் ஜெ வை வெறுத்துக் கொண்டே அவரை ரசித்தவர்கள் தான் இங்கு அதிகமிருந்தனர்.

ஒரு பக்கம் மத மாற்றத் தடைச் சட்டம், டெஸ்மா, பொடா போன்ற அவரது மூர்க்கமான பிடிவாத முடிவுகளுக்காக அவரைத் தூற்றிக் கொண்டே மறுபுறம் அவர் திருந்தி ஊழலற்ற நல்லாட்சி புரிய மாட்டாரா என்று காத்திருந்தார்கள் தமிழ்நாட்டு மக்கள். ஏனெனில் அதற்கான வாய்ப்புகள் அவருக்கு நிறையவே இருந்தன. ஒருவழியாக ஆக்டோபஸாக தன்னை வளைத்துக் கொண்டிருக்கும் குடும்பத்தினரின் சுயநலத்தையும் தாண்டி மக்களுக்கான முதல்வராக ஜெ மாற நினைத்த நேரத்தில் காலன் அவருக்கு அவகாசம் தரவில்லை. தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வராகத் தன்னைக் கருத ஆரம்பித்த, அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளராக அக்கட்சியினராலும், தொண்டர்களாலும் பிரகடனப் படுத்தப் பட்ட ஒரு தலைமை, ஒரு தன்னிகரற்ற ஆளுமை தமிழக அரசியலில் இருந்து மரணத்தின் பெயரால் முற்றிலுமாக மறைந்தது.

எது எப்படியாயினும் எம்.ஜி.ஆருக்குப் பிறகு பெண் வாக்காளார்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற ஜெ போன்ற இன்னொரு தலைவர் இனி தமிழ்நாட்டுக்கு இல்லை என்பதே நிஜம்!. இந்த நிஜம்
மனதை வலிக்கச் செய்கிறது. 

ஆண் அரசியல்வாதிகளை நடுங்கச் செய்த பெண் தலைமை!

ஆண்களின் சதவிகிதம் அதிகமிருந்த சட்டமன்றத்தில் மாநில முதல்வராக, முதல்வரிசையில் கவர்ந்திழுக்கும் மையமாக ஜெ இருந்தார். சபை நிகழ்வுகளில் அவரது பேச்சு பல சமயங்களில் ரசிக்கும் படியிருக்கும். எதிர்கட்சியினரை உசுப்பேற்றும் படி இருக்கும், சில சமயங்களில் நான் ஆணையிட்டேன், எனது ஆட்சி, எனது தலைமையிலான அரசு, என்று அவரது பேச்சு மக்களைச் சோதித்தாலும் மக்கள் ஜெ வை விரும்பினார்கள் என்பதற்கு அவரது அரசியல் வெற்றிகளே சான்று. சட்டமன்றத்தில் எதிர்கட்சியினரின் எந்தக் கேள்விகளுக்கும் தங்கு தடையின்றி பதில் அளிக்கக் கூடிய, செய்தியாளர்களிடமும், ஆங்கில ஊடகவியலாளர்களிடம் தமிழை விடவும் அதிக லகுத் தன்மையுடன் ஆங்கிலத்தில் உரையாடக் கூடிய, அதிமுக தொண்டர்களைக் கண்டதும் முகமும், அகமும்  மலர்ந்த சிரிப்புடன் இரு விரல் உயர்த்தி இரட்டை இலைச் சின்னம் காட்டும் ஜெ இனி எப்போதுமில்லை. ஆனால் அவரது நேர்காணல்களும், உரையாடல்களும் இணையமெங்கிலும் இறைந்து கிடக்கின்றன. அவற்றில் சில இதோ...

சட்டசபையில் நடைபெற்ற கச்சத்தீவு விவாதத்தின் போது ஸ்டாலினை நோக்கி ஜெ வின் காட்டமான கேள்விகள்...

அன்றைய எதிர்கட்சித் தலைவர் விஜயகாத்துடனான சட்டமன்ற விவாதத்தின் போது ஜெ உரை...

மரணத்துக்கு முந்தைய தேர்தல் காலத்தில் ஜெ பர்கா தத்துக்கு அளித்த பொறுமையான, நேர்த்தியான ஆங்கில நேர்காணல்...

கரன் தாப்பருடனான காட்டமான நேர்காணல் விவாதம் பார்ட் 1

கரண் தாப்பருடனான விவாதம் பார்ட்- 2

என் டி டி வி நிருபர் ஜெனிஃபர் அருளுக்கு ஜெ அளித்த இந்த நேர்காணலில் அவர் இவ்வாறு கூறுகிறார், ‘என் வாழ்வின் ஒரு கால கட்டத்தில் எனக்கு தேர்ந்தெடுக்க அரசியல் தவிர வேறு மார்க்கங்கள்
எதுவுமிருக்கவில்லை.’

தனி மனுஷி! 

என்ன தான் அரசியல் களத்தில் ஆரம்பம் முதலே சசிகலா ஜெ வுடன் இருந்து வந்தாலும், ஜெ வைப் பொருத்தவரை அவர் தனி மனுஷியாகத்தான் அவரது ரசிகர்களாலும், அபிமானிகளாலும் தனிப்பெரும் ஆளுமையாக ஆராதிக்கப்பட்டார். இன்று உச்ச்நீதிமன்றத் தீர்ப்பில் ஜெ, சசி, இளவரசி, சுதாகரன் நால்வரும் வழக்கமான மனித சுபாவப்படி கூடி  சேர்ந்து வாழ வேண்டும் எனும் நல்ல நோக்கத்தில் போயஸ் கார்டன் இல்லத்தில் சேரவில்லை என்றும், கூட்டுச்சதி செய்தும், அதிகார துஷ்பிரயோகம் செய்தும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பதற்காகவே அவர்கள் அங்கே சேர்ந்து வாழ்ந்தார்கள் என்றும் கூறப்பட்டாலும் ஜெ என்றதுமே சாதாரணமாக நமக்கு நினைவுக்கு வரக்கூடிய விசயம் போயஸ் கார்டன் வீடு தான். எம்.ஜி.ஆர் கூட கார்டனுக்குப் பிறகு தான் ஜெ வோடு சேர்த்து இப்போதெல்லாம் நினைவு கூரப்படுகிறாரோ என்னவோ!

ஓ.பி.எஸ் கோரியபடி அம்மாவின் வீடு அவரது நினைவிடமாக மாற்றப்பட்டு அரசால் பராமரிக்கப்படுவது ஒன்றே அவரது அபிமானிகள் ஜெ மீது வைத்த நிரந்தர பாசத்துக்கு வெகுமதியாகவும் ஜெ வுக்குச் செய்யும் அதிக பட்ச மரியாதையாகவும் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com