கல்வெட்டுகளும், செப்பேடுகளும் இல்லாவிட்டால் இந்தியா வெறும் பழங்கதை பேசும் நாடே!

பல்லாயிரம் ஆண்டுகளாக வெயில், மழை போன்ற இயற்கை சீற்றங்களில் அழியாத கல்வெட்டு தற்போது மனித சமூகத்தால் அழிக்கப்படுவது வேதனையளிக்கிறது.
கல்வெட்டுகளும், செப்பேடுகளும் இல்லாவிட்டால் இந்தியா வெறும் பழங்கதை பேசும் நாடே!

ஒரு நாட்டின் கலை, இலக்கியம், அரசியல், சமுதாய, பொருளாதார வரலாற்றை முழுமையாக வெளிக்கொண்டு வரவேண்டுமெனில் அதற்கு அடிப்படைச் சான்றுகளாக அமையும் ஆவணங்கள் எளிதில் கிடைக்க செய்ய வேண்டும்.
பல்கலைக்கழகங்கள், ஆய்வு அமைப்புகள், தனியார் என்று பலதரப்பினரும் அனைவரும் அறியும் வகையில் ஆய்வுகளை மேற் கொள்ளவும் அந்த ஆய்வுகளின் அடிப்படையில் வரலாற்றை எழுதும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
ஒரு முறை எழுதப்பட்டவுடன் வரலாறு எழுதும் பணி முற்றிலுமாக முழுமை பெற்று விடுவதில்லை. ஒவ்வொரு புதியசான்று கிடைக்கும்போதும் ஆய்வு முடிவுகள் மாற்றம் பெறுகின்றன. இதனால் அவ்வப்போது வரலாற்றுக்குப் புதியப்புதிய விளக்கங்களும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமைகொண்ட இலக்கியச் செல்வங்களும், ஏறத்தாழ 2000 ஆண்டுகளின் தொடர்ச்சியான கல்வெட்டுகளும் பெருமளவில் வரலாற்றுக்கு அடிப்படையாகக் கிடைத்திருக்கின்றன.
கடந்த நூற்றாண்டின் இறுதியில் கல்வெட்டுகளைப் படியெடுக்கத் தொடங்கிய பிறகுதான் இருண்டு கிடந்த தமிழ்நாட்டின் இடைக்கால வரலாறு தமிழ் மக்களுக்கே புலப்படத் தொடங்கியது.
மத்திய அரசின் தொல்லியல் துறையினரின் கல்வெட்டுப் பிரிவு, 1887-ம் ஆண்டில் தனது பணியைத் தொடங்கி இதுவரை இந்தியா முழுவதுமிருந்து சுமார் ஒரு லட்சம் கல்வெட்டுகளைப் பதிவு செய்திருக்கிறது.
இதில் தமிழ் கல்வெட்டுகள் மட்டும் சுமார் 60,000. அசோகரின் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தான் இந்தியா அறிவுச் சமூகமாகப் போற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுதான் கல்லணையை அடையாளம் காட்டியது.
2000 ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய பாரம்பரியம் வலிமைமிக்கதாக மட்டுமல்ல, அறிவியலில், மருத்துவத்தில், மொழியியலில், சமத்துவத்தில் உயர்ந்து இருந்திருக்கிறது என்பதையெல்லாம் கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்ற கலைச்செல்வங்கள் மூலம் அறிந்து கொள்கிறோம்.
கல்வெட்டுகளும், செப்பேடுகளும் நமது வரலாற்றுத் தடயங்கள். அவை இல்லாவிட்டால் நாம் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசும் மக்களாக மட்டுமே இருப்போம்.
கல்வெட்டுகள் இல்லையெனில் வரலாற்று ஆய்வாளர்களால் மாமன்னன் அசோகன் என்று ஒருவன் இருந்தான் என்பதை கண்டுபிடித்திருக்க முடியாது. தஞ்சை பெரியகோயிலை எழுப்பியவன் மாமன்னன் ராஜராஜசோழன் என்று அறிந்திருக்க முடியாது. திருவாரூர் தியாகராஜர் கோயில் வரலாறு நமக்குத் கிடைத்திருக்காது. மாமல்லபுரம் நமக்கு இன்றும் ஒரு விந்தை உலகமாகத்தான் தெரிந்து கொண்டிருக்கும்.
திருச்சி மலைக்கோட்டை கல்வெட்டிலிருந்து 10-ம் நூற்றாண்டில் நாராயணகவி பாடிய 100 பாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அப்பாடல்கள் படியெடுத்து சிராமலை அந்தாதி என்ற நூலாக பதிப்பிக்கப்பட்டது.
இதேபோல் கல்வெட்டிலிருந்து கண்டறியப்பட்ட 10 தேவாரப் பாடல்கள் ஏற்கெனவே உள்ள தேவாரப் பாடல்களில் இணைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்ச் சமூகம் எவ்வளவு பழைமையானது பெருமை வாய்ந்தது என்பதை இவற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தமிழ் மக்கள் பண்பாட்டை, நாகரிகத்தை, கலாசாரத்தை பறைச்சாற்றிக் கொண்டிருக்கும் கல்வெட்டு, சிற்பம், ஓவியம் உள்ளிட்ட கலைச் செல்வங்கள் முக்கியத்தும் தெரியாமல் அழிக்கப்படுகிறது.
பழங்கால கோயில்களும் கல்வெட்டுகளும், சிற்பங்களும், செப்பேடுகளும், ஓவியங்களும் தமிழர்களின் கலையுணர்வுக்கு ஆதாரமாக இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட கலைச்செல்வங்கள் இன்றைக்கு அழிக்கப்படுகிறது.
ஏற்கெனவே பல கல்வெட்டுகளைக் கல்வெட்டுகளின் பெருமை அறியாத பலர் அழித்து விட்டார்கள். கோயில்களில் எஞ்சியுள்ள கல்வெட்டுகளும் துளையிட்டு தீயணைப்பு கருவிகள் பொருத்தியும், நவீன வண்ணக் கலவை என்ற பெயரில் பிளாஸ்டர் பெயிண்ட் பூசியும் அழிக்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் கல்வெட்டு உள்ளிட்ட கலைச்செல்வங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே தொடர்கிறது. கோயில்கள் புனரமைப்பு என்ற பெயரில் கல்வெட்டு, ஓவியங்கள் சேதப்படுத்தப்படுகின்றன.
நம்முடைய பழைய நாணயங்கள், ஓலைச்சுவடிகள் போன்ற பல செல்வங்களை அறியாமையால் அழித்தது போல் கல்வெட்டுகளையும் அழிந்துவிடக்கூடாது.
19-ம் நூற்றாண்டில் ஓலைச் சுவடிகள் கொளுத்தப்பட்டன. 20-ம் நூற்றாண்டில் கல்வெட்டுகளைக் கிரேனைட்களாக ஆக்கப்பட்டன. 21-ம் நூற்றாண்டில் வண்ணம் பூசி அழிக்கப்படுகிறது.
கல்வெட்டைத் தவிர மற்ற கலைப் பொக்கிஷங்கள் பாதுகாக்கப்படுகின்றன. கல்வெட்டு மட்டுமே திறந்தவெளியில் அனைவரும் பார்க்கும் வகையில் உள்ளது.
பல்லாயிரம் ஆண்டுகளாக வெயில், மழை போன்ற இயற்கை சீற்றங்களில் அழியாத கல்வெட்டு தற்போது மனித சமூகத்தால் அழிக்கப்படுவது வேதனையளிக்கிறது.
எனவே வருங்கால தலைமுறையினருக்கு, ஆய்வாளர்களுக்கு கல்வெட்டுகளை பாதுகாத்து கொடுப்பது அவசியம். இது தமிழ்ச் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.
நம் மண்ணின் பெருமையையும், வரலாற்றையும் பண்பாட்டை பறைசாற்றிக்கொண்டிருக்கும் கல்வெட்டு உள்ளிட்ட கலைச் செல்வங்களைப் பாதுகாப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com