தமிழர்கள் என்ன மனநோயாளிகளா மிருகவதை செய்ய? வேண்டும்...வேண்டும் ஜல்லிக்கட்டு எங்களுக்கு வேண்டும்!

உலகில் முதல் முறையாக வேளாண்மையைக் கற்றுக் கொள்ளும் சமூகம் தானடைந்த மிகப்பெரிய வெற்றியின் அடையாளமாக அதை ஜல்லிக்கட்டு எனும் பெயரில் இன்றளவும் நினைவு கூர்வது எப்படி மிருக வதை ஆக முடியும்?
தமிழர்கள் என்ன மனநோயாளிகளா மிருகவதை செய்ய? வேண்டும்...வேண்டும் ஜல்லிக்கட்டு எங்களுக்கு வேண்டும்!

தமிழ் சினிமாக்களில் ஜல்லிக்கட்டு சித்தரிக்கப்பட்ட விதத்தில் எப்போதும் ஒரு காவியத் தன்மை இருக்கும். அதாவது மிகப் பெரும் பணக்காரர் ஒருவர் தன் மகளையோ, தங்கையயோ ஜல்லிக்கட்டில் பரிசுப் பொருளாக அறிவிப்பார். காளையை அடக்கும் வீரனுக்கு மங்கையை மணக்கும் அதிர்ஷ்டம் காத்திருக்கும். இப்படித்தான் பால்யத்தில் நமக்கு ஜல்லிக்கட்டு அறிமுகமாகியிருக்கிறது. ஆனால் ஜல்லிக்கட்டின் நோக்கம் அது மட்டும் அல்ல; ஜல்லிக்கட்டு என்பது மாட்டுக்கு தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் ஆநிரைகளுக்கு நன்றி செலுத்தும் ஒரு சடங்காக நமது ஆரிய, திராவிடப் பாரம்பரியங்களில் பன்னெடுங்காலமாகப் பின்பற்றப் பட்டு வந்த ஒரு வழக்கம். இதற்குச் சான்றாக சிந்து வெளி நாகரிக காலத்திலும் அடுத்து வந்த வேத கால நாகரிகத்திலும் பல்வேறு குறிப்புகளும், ஆதாரங்களும் இருக்கின்றன.
 
மக்களில் பேதம் பிரிக்க நினைப்பவர்களுக்கு தான் ஆரிய, திராவிட வேறுபாடுகள் பிரச்சினைக்குரியதாக இருக்க முடியும். ஆனால் ஜல்லிக்கட்டில் ஆரியப் பாரம்பரியமும், திராவிடப் பாரம்பரியமும் இணைந்து தான் மிளிர்கின்றன. ஏனெனில் ஜல்லிக்கட்டு இரு பிரிவினருக்கும் பொதுவான ஒரு விசயமாகவே இருந்திருக்கிறது. மகாபாரதத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது எட்டு மனைவிகளில் ஒருவரான கோசல ராஜ்ஜியத்தைச் சேர்ந்த இளவரசியை காளைகளை அடக்கிப் போட்டியில் வென்று மணந்ததாக வியாஸர் கூறுகிறார். ஆக அப்போதிருந்தே ஜல்லிக்கட்டு வழக்கத்தில் இருந்திருக்கிறது. ஸ்ரீகிருஷ்ணரையும், மகாபாரதத்தையும் ஆரியப் பண்பாடு என எவரேனும் ஒதுக்கினால் அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள திராவிட உதாரணங்களும் புறநானுற்றிலும், சங்க இலக்கியங்களிலும்  எக்கச்சக்கமாக கொட்டிக் கிடக்கின்றனவே!

ஹரப்பாவில் நிகழ்த்தப் பட்ட அகழ்வாய்வுகளில் கிட்டிய பசுபதி உருவம் தான் இந்தியாவில் நிகழ்ந்த ஆதி ஜல்லிக்கட்டுக்கான முதல் பெரும் சான்று. இதில் பசு என்பது காளையையும் பதி என்பது அதை அடக்கிய வீரனையும் சுட்டுகிறது. காளையை அடக்கிய பசுபதியாக நாம் இப்போதும் இடப வாகன சிவனை வணங்கிக் கொண்டு தான் இருக்கிறோம். திராவிடப் பாரம்பரியத்தில் வேளாண்மையைக் கற்றுக் கொள்ளும் முதல் பெரும் தலைமுறையின் அடையாளம் தான் ஜல்லிக்கட்டு.
 
காளைகள் இல்லாமல் நம்மால் ஆதி விவசாயத்தை எங்கனம் நிகழ்த்தியிருக்க முடியும்? பாகுபலியில் காட்டப்படுவதைப் போன்ற முரட்டுத்தனமான காளைகள் எல்லாம் மனிதனால் அடக்கப்பட்டு, பழக்கப்படுத்தப் பட்டு காட்டு வாழ்விலிருந்து படிப்படியாக நாட்டு வாழ்விற்கு மாற்றப்பட்டன. உலகில் முதல் முறையாக வேளாண்மையைக் கற்றுக் கொள்ளும் சமூகம் தானடைந்த மிகப்பெரிய வெற்றியின் அடையாளமாக அதை ஜல்லிக்கட்டு எனும் பெயரில் இன்றளவும் நினைவு கூர்வது எப்படி மிருக வதை ஆக முடியும்? ஜல்லிக்கட்டின் மூலம் ஆதியில் தான் வென்ற மிருகத்தை நட்பாக்கிக் கொள்ளவே மனிதன் எப்போதும் யத்தனிக்கிறான்.

வதைப்பதும், துன்புறுத்துவதும் மனநோயாளிகளின் செயல். ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் வீரர்கள் இந்திய சரித்திரத்திலும் சரி, தமிழர் சரித்திரத்தில் எந்த இடத்திலும் அப்படியாக சித்தரிக்கப்பட்டதே இல்லை. அவர்கள் காளைகளோடு நட்பானவர்கள். ஜல்லிக்கட்டுக்கு இத்தனை வலுவாக எதிர்ப்பு தெரிவிக்கும் பீட்டா அமைப்பினர் எத்தனை ஜல்லிக்கட்டுகளை நேரில் கண்டிருப்பார்கள் என்றே ஐயமாக இருக்கிறது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். இதை அவர்கள் உணரும் காலம் வருகிறதோ இல்லையோ; நிச்சயமாக ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் இளைய சமுதாயம் அவர்களை உணர வைத்தே தீரும். 

பெயரளவுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டை அறிந்தவர்கள் எவரேனும் இருந்தால், இதோ அவர்களுக்காக ஜல்லிக்கட்டு குறித்த சிறு அறிமுகம் இங்கே;

ஜல்லிக்கட்டு பெயர் விளக்கம்:

சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு பெயர்காரணத்திற்கு பொருத்தமாக முரட்டுக்காளை திரைப்படத்தில் வரும் காளை அடக்கும் காட்சி இதோ;

ஜல்லிக்கட்டில் பலவகைகள் இருக்கின்றன;

வேலி ஜல்லிக்கட்டு:

வேலி ஜல்லிக்கட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு, அவை எந்த விதக்கட்டுப்பாடுகளும் இன்றி ஓடும் போது அதை இளைஞர்கள் அடக்குவார்கள். இது ஒரு வகை ஜல்லிக்கட்டு. தேனி மாவட்டம் கண்டமனூர் அருகிலிருக்கும் எனது சொந்த கிராமத்தில் கிட்டத்தட்ட இதே வகையானதொரு ஜல்லிக்கட்டை நேரடியாகப் பார்த்த நினைவுகளுண்டு. அங்கே திடலில் காளைகளைத் திறந்து விடுவதில்லை மாறாக ஜல்லிக்கட்டு காளைகளை ஊரின் இளவட்டக் காளைகள் கயிற்றோடு சேர்த்து இறுகப் பற்றிக் கொள்ள காளைகள் அதி விரைவாக ஊருக்கு வெளியிருக்கும் வைகையாறு வரை ஒரு மிதமிஞ்சிய களிப்புடன் ஒரு துள்ளோட்டம் சென்று வரும். காளைகளோடு சேர்ந்து ஈடுகொடுத்து ஓட முடியாமல் இளவட்டங்கள் திணறுவது படு வேடிக்கையாக இருக்கும். மாட்டுப் பொங்கலன்று நடைபெறும் இந்த விழாவைக் காண இப்போதும் மனம் ஏங்கத் தான் செய்கிறது. 

வாடிவாசல் ஜல்லிக்கட்டு:
 

இது தமிழ் சினிமாக்களில் நாம் காலம் காலமாகப் பார்த்து ரசித்த ஜல்லிக்கட்டு வகைகளில் ஒன்று. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலவாடி, உள்ளிட்ட இடங்களில் இந்த வகை ஜல்லிக்கட்டு வழக்கத்தில் இருக்கிறது. வாடிவாசலில் ஜல்லிக்கட்டுக் காளைகள் துள்ளி வரும் அழகைக் காண கண் கோடி வேண்டும். உயர்ந்த திமிலுடன், கூர் கொம்புகள் மினுங்க கட்டுதறியிலிருந்து விடுபட்டதும்
திமிறிக்கொண்டு சீறி வரும் காளைகளைக் காண்பது ஒரு தெய்வானுபவம். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து தமிழின் மூத்த படைப்பாளி சி.சு. செல்லப்பா அவர்கள் எழுதிய நாவல் ‘வாடிவாசல்’. ஜல்லிக்கட்டு குறித்து உணர்வு பூர்வமாக மட்டுமின்றி அது நடத்தப்படும் முறைகள் குறித்தும் நேர்த்தியாகவும், அழகியலோடும் விவரிக்கப்பட்ட விதத்தினாலும் இன்றளவும் பெருமையுடன் நினைவு கூரப்படும் நாவல் இது ஒன்றாகத் தான் இருக்க முடியும். இந்த நாவலின் அடிப்படையில் பார்த்தால் ஜல்லிக்கட்டில் மாட்டுக்கும், மனிதனுக்குமான பந்தத்தில் நிறைய ரத்தம் சிந்தப்பட்டாலும் கூட அது போட்டியில் கலந்து கொள்ளும் வீரனின் தன்மானம் சார்ந்த விசயமாகவும் இருப்பதால் ஜல்லிக்கட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது தமிழர் பண்டிகை சார்ந்த மற்றுமொரு வாழ்வியல் முறை என்று தான் கருத வேண்டும். ஏனெனில் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவது வேண்டுமானால் வீரர்களாக இருக்கலாம். ஆனால் பீடு நடை போட்டு ஊரைச் சுற்றி வரும் ஜல்லிக்கட்டு காளைகளை சொந்தப் பிள்ளைகளைக் காட்டிலும் மேலாகப் பேணி வளர்ப்பதென்னவோ வீரங்கனைகளான நம் குலத் தமிழ்ப் பெண்டிரே!

அதற்கு நமது திரைப்படங்களில் பல உதாரணங்கள் உள்ளன. இதோ அவற்றில் ஒன்று.  வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் வெள்ளையம்மா வளர்த்த அஞ்சாத காளையொன்றின் சிறப்பு குறித்த பாடல்;

வடம் ஜல்லிக்கட்டு:

20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்வார்கள். இதை வடம் ஜல்லிக்கட்டு என்று குறிப்பிடுகிறார்கள். வாடிவாசல் ஜல்லிக்கட்டுக்குப் பின் இதுவும் சற்று ஆபத்தான விளையாட்டே! வடம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து ‘இளமி’ என்றொரு திரைப்படம் கூட வெளிவரவிருக்கிறது. அதோடு இந்த வகை ஜல்லிக்கட்டுக்கு உதாரணமாக 2014 ல் வெளியான பாகுபலி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏறு தழுவல்’ காட்சியைக் கூறலாம். மலைக்காடுகளில் பிடிக்கப்பட்ட காட்டெருதை பல்லாள தேவன் அடக்கும் போது தானே அந்த முரட்டுக் காட்டெருதை  அடக்கியாண்ட பெருமிதத்தை படம் பார்த்த ஒவ்வொரு ரசிகனும் அடைந்தான் என்பதும் நிஜம். ஆக மொத்தத்தில் எருது அடக்குதல் மன்னர் காலம் தொட்டு திராவிடப் பாரம்பரியத்தில் ஊறித் திரைப்படங்கள் வாயிலாகத் தெளிவாக்கப் பட்ட விசயம். இதை அறியாமல் பீட்டா அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் நியாயமே இல்லை. 

கடைசியாக ஒரு விசயம்;

ஜல்லிக்கட்டை எதிர்க்கும் பீட்டா அமைப்பினர், தங்கள் கடுமையான எதிர்ப்பிற்கு முன்வைக்கும் காரணங்களில் பிரதானமானது மிருக வதை! ஆனால் அயல்நாட்டு விலங்குகள் நல அமைப்பான பீட்டாவுக்கு எப்படிப் புரிய வைப்பது? இது மிருக வதையே அல்ல. மாட்டுக்கும் மனிதனுக்குமான அனுபந்தம் என்பதை! ஜல்லிக்கட்டு வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அதற்கு தமிழர்களின் வாழ்வோடும், வளத்தோடும் பின்னிப் பிணைக்கப்பட்ட பல நூறு அடையாளங்கள் இருக்கின்றன. வளமான, வீரியமான காளை இனங்கள் வீழாமல் இருக்க நமக்கு ஜல்லிக்கட்டு வேண்டும்.

ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது அப்படி ஒன்றும் எளிதான காரியமில்லை. உரமான, திடமான காளைகளை தீனியிட்டு வளர்ப்பதென்பது மிகப்பெரும் பொருட்செலவு கொண்ட விசயம். ஒரு குடும்பத்தினர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க வேண்டுமெனில் அவர்களுக்கு அதற்கான காரணமும் வலுவானதாக இருக்க வேண்டியது அவசியம் தானே! ஜல்லிக்கட்டே இல்லை எனும் நிலை வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதில் பெரும்பங்கு வகிக்கும் காளை இனங்கள் அழியும். ஜல்லிக்கட்டில் அழிவதைக் காட்டிலும் அதிகமான காளைகள் சரியான தீனிகள் இன்றி அடிமாடுகளாகும் நிலை வரும். இதற்குத் தான் பீட்டா அமைப்பு ஆசைப்படுகிறதா? இப்படி நூதனமான காரணம் காட்டி  நாட்டுக் காளை இனங்களை அழித்தொழித்து விட்டு பசுக்கள், பொலி காளைகள் மூலம் வீரியமான கன்றுகளை ஈனத் தடை ஏற்படுத்தி, ஒட்டுமொத்தமாக இந்தியாவில் நாட்டுக் காளை இனங்களே இல்லாமல் செய்து எதிர்கால இந்தியச் சந்ததியினரை தரமான பாலுக்காக பன்னாட்டு வணிக நிறுவனங்களிடம் கையேந்தி நிற்க வைப்பது தான் பீட்டா அமைப்பின் தலையாய நோக்கமா? அப்படியானால் அவர்களின் நோக்கம் நிறைவேறலாமா? கூடாது தானே?

பொங்கல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த வருடமாவது ஜல்லிக்கட்டு வருமா? வராதா? என்ற இழுபறி நிலை நீடித்துக் கொண்டிருந்த நேரத்தில் இன்று தமிழக முதல்வர் உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும் என அறிவித்திருப்பது மிகத் துணிச்சலான முடிவு. ஏனெனில் ஜல்லிக்கட்டு தமிழர்களின் உயிரோடும், உணர்வோடும் ரத்தமும், சதையுமாகப் பின்னிப் பிணைந்த வாழ்வியல் அடையாளங்களில் ஒன்று. 

தமிழக முதல்வருக்கு ஒரு சபாஷ்!

ஏனெனில் ஜல்லிக்கட்டு விசயத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கிறோம் என மத்திய அரசு மழுப்பலாக பதில் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் தடையை மீறி இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடந்தே  தீரும் என நம்பிக்கை தந்தமைக்கு!

அடுத்த சபாஷ் கடந்த ஞாயிறு அன்று சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் திரண்ட மாபெரும் இளையோர் கூட்டத்துக்கு. ஏனெனில் முதல்வரின் இந்த துணிச்சலான முடிவுக்கு அவர்களது பேரணி வெற்றியும் ஒரு காரணமாக இருக்கலாம் என நம்புவதால்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com