இத்தனைக்கும் நடுவில் தீபா என்ன செய்து கொண்டிருக்கிறார்? 

ஜெ இறந்து ஒரு மாதம் கடந்த நிலையில் சின்னம்மா கூடாரத்தில் நடந்து கொண்டிருக்கும் சாமர்த்தியமான அரசியல் திட்டமிடல்களில் ஒரு சதவிகிதத்தைக் கூட இன்னும் தீபா தரப்பு எட்டவில்லை.
இத்தனைக்கும் நடுவில் தீபா என்ன செய்து கொண்டிருக்கிறார்? 

எம்ஜிஆர் அனுதாபிகளும், ஜெயலலிதா அனுதாபிகளும் ஆளுக்கொரு புறம் நின்று கொண்டு தீபாவை கட்டி இழுக்காத குறையாக புதுக்கட்சி ஆரம்பித்து தலைமை தாங்கச் சொல்லி அழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தீபாவிடமோ இதுவரையிலும் அதற்கான எழுச்சியோ, புதுக்கட்சிக்கு தலைமை தாங்குவதற்குண்டான மலர்ச்சியோ எதையுமே காணோம். ஆயிரம் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன வி.கே சசிகலாவின் மேல். ஆனால் அவரோ 62 வயதில் எதற்கும் அசராமல், முதல்வராக இருந்த போது ஜெ செய்து கொண்ட மேக் அப்பைக் காட்டிலும் ஒருபடி கூடுதலான பளிச் மேக்கப் அப்பில் அசத்தலாக இந்தியா டுடே மாநாட்டு ஃபோட்டோ ஷூட்டில் தக தகவென மின்னல் முகம் காட்டிக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் நடுவில் தீபா என்ன செய்து கொண்டிருக்கிறார்? 

தனது டி.நகர் வீட்டு பால்கனியில் நின்று கொண்டு இரட்டை இலை காட்டிக் கொண்டிருந்தால் போதுமா? அவரைப் பார்க்கவென்று கூடும் அவசரக் குடுக்கைகளை நம்பி நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்து வாங்கி வைத்து எண்ணிக்கை 1 லட்சம் தாண்டி விட்டது என்று மக்கள் தொகை கணக்கிட்டுக் கொண்டிருந்தால் போதுமா? தீபாவுக்கு நிஜமாகவே அரசியலுக்கு வரும் எண்ணமிருப்பின்  இது நிச்சயமாகப் போதாது. ஜெ இறந்து ஒரு மாதம் கடந்த நிலையில் சின்னம்மா கூடாரத்தில் நடந்து கொண்டிருக்கும் சாமர்த்தியமான அரசியல் திட்டமிடல்களில் ஒரு சதவிகிதத்தைக் கூட இன்னும் தீபா தரப்பு எட்டவில்லை. இப்போது வரையிலும் சசிக்கு எதிரான மனநிலை கொண்ட அப்பாவி அதிமுக தொண்டர்களும், அதிமுக பிரமுகர்களும் தான் தீபாவைச் சந்தித்து வருகின்றனர். தீபா இன்னமும் மக்களுக்கு நடுவே களமிறங்கவே இல்லை. அதிமுக ஓட்டு வங்கி எப்போதும் எம்ஜிஆருக்காகவும், இப்போது ஜெ வுக்காகவும் தான் காத்துக் கொண்டிருக்கிறது என்று நம்புபவர்கள் இருந்தால் தயவு செய்து தீபாவிடம் சொல்லி மக்களை சந்திக்கச் சொல்லுங்கள். ஏனெனில் அரசியல் என்பது அது தோன்றிய காலம் தொட்டே மக்கள் நலனுக்காக அல்ல, அது ஆள நினைப்பவர்கள் தங்களை தொடர்ந்து களத்தில் நிலை நிறுத்திக் கொள்ளச் செய்யும் வித்தை விளம்பரம் என்று உணராது, நெற்றியில் எளிமையாக ஒரு பொட்டுக் கூட வைத்துக் கொள்ளாமல் தூக்கி கிளிப் போடப்பட்ட கொண்டையுடனும், சாதரணமான காட்டன் சுடிதார்களிலும் வலம் வரும் தீபா பார்ப்பவர் கண்களுக்கு படு சோர்வாகத் தோற்றமளிக்கிறார் என்பதே நிஜம். இவரை எப்படி அவரது ஆதரவாளர்கள் ஜெ வுக்கு மாற்றாக நிலைநிறுத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

எம்.ஜி.ஆர் அமெரிக்க மருத்துவமனையில் இருந்த போது அதிமுக வுக்காக ஓட்டுக் கேட்டு ஊர், ஊராக சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்ட  ஜெ கூட அப்போது எளிமையாகத் தான் இருந்தார். ஆனாலும் அவரைக் காண ஊர்கள் தோறும் திரண்ட, திரட்டப்பட்ட கூட்டம் இருக்கிறதே, அது தான் ஜெ வின் முதல் அரசியல் வெற்றி. ஜெ முகத்தைக் காணவும், அவரது பேச்சை ரசிக்கவும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், ரசிகர்களும் பல மணி நேரங்கள் காத்துக் கிடக்கவும் தயங்கியதில்லை. அந்தக் காத்திருப்புக்கு பலன் இருந்தது. ஜெ அப்போது பேசிய காரசாரமான அரசியல் பிரச்சார உரைகள் காணக் கிடைத்தால் கேட்டுப் பாருங்கள். அந்த அளவுக்கு தீபா தயாராகவில்லை என்பது மட்டுமல்ல. தயாராக முடியாது என்பதும் அவரது பேச்சிலிருந்தே கண்டு கொள்ள முடிகிறது.

அத்தையைப் போல் உருவச் சாயல் மட்டும் இருந்தால் போதாது. அரசியலில் தீபா தன் அத்தையைப் பின்பற்ற நினைத்தால் ஜெ தாண்டிக் குதித்த அத்தனை தடகளக் கிணறுகளையும் தீபாவும் தாண்டிக் குதித்துத் தான் ஆக வேண்டும். ஆனால் தன்னைப் பார்க்க திரளும் பார்வையாளர்களை சந்திக்க முடியாமல் ஒரு சில முறை கதவடைத்துக் கொண்டு கணவர் மூலமாகச் செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும் தீபா, தன் அத்தை ஜெ வாழ்ந்து முடித்ததைப் போன்றதொரு அரசியல் போராட்ட வாழ்வைத் தாக்குப் பிடிப்பாரா? என்பது தான் அவருக்கு முன் வைக்கப் படும் பிரதானக் கேள்வி. இதையே தான் தனியார் செய்தித் தொலைக்காட்சி பேட்டியாளர் தீபாவின் நேர்காணலில் அவரிடம் வேறு விதமான அரசியல் முன்னுதாரணங்களைக் காட்டி கேள்வி கேட்டார். அப்போது தீபா அளித்த பதில்‘தன்னால் முடியும்’ என்பதே. ஆனால் எப்படி முடியும்? என்பதற்கு அடையாளமாக அரசியல் ரீதியான போராட்டமாகவோ, அல்லது மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் பிரச்சார அல்லது வேறு வகையிலோ எந்த ஒரு விதமாகவும் ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டு தன்னை முன்னிறுத்திக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் தீபாவை நம்பி களமிறங்க நினைப்பவர்களை நினைத்து பரிதாபப்படத் தான் முடிகிறது. தீபாவுக்கு அரசியலில் என்ன தெரியும்? என்று அவருக்கும் தெரியவில்லை, அவரது ஆதரவாளர்களுக்கும் தெரியவில்லை. ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு வரையிலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற வகையில் தமிழக அரசியலில் நிழலுருவமாகத் தான் தீபா எப்போதாவது செய்தித் தாள்களிலும், பத்திரிகைகளிலும் இடம் பிடித்தார். ஆனால் இப்போது, ஜெ மறைந்ததிலிருந்து சசிகலாவுக்கு நிகராக ஜெ. தீபாவும் அனைத்துப் ஊடகங்களிலும் தவிர்க்க முடியாத நபராகி விட்டார். ஊடகங்களில் அதிகம் படிக்கப் பட்ட, அதிகம் பகிரப்பட்ட செய்திகளில் தீபா முன்னிலையில் இருக்கிறார். ஆனால் இந்த இடத்தில் தான் தொடர்ச்சியாக தமிழக அரசியலை ஆர்வத்தோடு கண்காணித்து வருபவர்களுக்கு இயல்பிலேயே ஒரு கேள்வி எழவேண்டும். அது எத்தனை பேருக்கு எழுந்ததென்று தெரியவில்லை. ஆனால் தீபாவை அரசியலுக்கு அழைப்பவர்கள், அவரது அரசியல் ஞானத்தைப் பற்றி ஒரு நொடி கூட யோசிக்காமல் அழைக்கிறார்களே என்று நினைக்குப் போது தான் வருத்தமாக இருக்கிறது. தீபாவின் ஆதரவாளர்கள் முதலில் செய்ய வேண்டியது ஒன்றுண்டு. நீங்கள் உங்கள் ஈடு இணையற்ற தலைவியின் அண்ணன் மகளை தலைவியாக்க நினைப்பதில் தவறில்லை. ஆனால் அதற்குத் தேவையான அத்தனை தகுதிகளோடும் அவர் இருக்கிறாரா? என்ற சிந்தனையும் வேண்டும் தானே? சும்மாக் கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டி கதையாகி விடக் கூடாது பாருங்கள். 

தங்களுக்கு கிடைத்த மக்கள் ஆதரவு எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு அரசியலில் குதித்து அப்பீட் ஆனவர்கள் பலருண்டு. தான் அப்படியாகக் கூடாது என தீபா நினைத்தால் அவருக்கு அரசியலில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. முதலில் சொந்த அத்தையிலிருந்தே தொடங்கலாம். முதலில் அரசியல் கற்றுக் கொள்ள ஆசைப்படுங்கள். பிறகு அரசியல்வாதி ஆகலாம். அத்தையின் கட்சி என்று சொந்தம் கொண்டாடுவதற்கு அதிமுக ஒன்றும் பாட்டி சந்தியா பரிசளித்த டி.நகர் வீடு இல்லை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com