ஜல்லிக்கட்டு போராட்டம் சொல்லித்தரும் பாடம்!

இன்று உலகமே வியந்து கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக எனக்குள்
ஜல்லிக்கட்டு போராட்டம் சொல்லித்தரும் பாடம்!

இன்று உலகமே வியந்து கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக எனக்குள் சில கேள்விகள் எழுந்தது.

  • முல்லைப் பெரியார் போராட்டத்தின் போது வராத எழுச்சி,
  • காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் வன்முறை முற்றியபோது எழாத கோபம், 
  • பன்னாட்டு நிறுவனங்களின் உழைப்புச் சுரண்டல், பெரிய அளவில் பணி நீக்கம் என்ற போதெல்லாம் வராத கோபம்
  • விவசாய படுகொலைகள், மணல், ஆற்று நீர்- வளங்கள் சுரண்டப்படுவது, மீத்தேன் வாயு, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போன்ற நிகழ்வுகளிலெல்லாம் தோன்றாத ஒற்றுமை இப்போது மட்டும் எப்படி சாத்தியமாகியது?
  • ஜல்லிக்கட்டு என்ற பிரச்சனையில் எப்படி ஒருங்கிணைந்தது.
  • இந்த போராட்டம் எப்படி முடிவிற்கு வரும்?
  • இந்த போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர இயலாமல் அரசு திணறுகிறதா?
  • இத்தகைய தன்னெழுச்சிப் போராட்டத்தை அரசியல் லாபங்கருதி வளரவிடுவது, பின்னர் அரசுகளுக்கே எதிராக மாறாதா?

மேலே சொல்லப்பட்ட பல்வேறு நிகழ்வுகளின் போதும் மற்றும் உலகமயமாக்கல் எதிர்ப்பு, தனியார்மய எதிர்ப்பு போன்ற நிகழ்வுகளின் போதெல்லாம் மக்களை, இளைஞர்களை அரசியல்படுத்துதல், என்பதை நோக்கிய பிரச்சாரம் இடது சாரி சிந்தை உள்ளவர்களால், மார்க்சிய-லெனினிய சிந்தனையாளர்களால் முன்வைக்கப்பட்டு வந்த போதிலும், இயல்பாகவே ஓட்டு வங்கி சார்ந்த அரசியல் மற்றும் ஊழல்களின் மீது எழுந்த வெறுப்பினாலும், அரசியல் கட்சிகள் முன் வைக்கிற போராட்டங்களின் மீது ஒருவித ஈர்ப்பின்மை காரணமாகவும் இளைஞர்கள் ஒன்றுபடவில்லை.  அதே சமயம் அவர்களுக்குள்ளேயே ஒருவித கருத்துருவாக்கத்தை ஒவ்வொரு நிகழ்வும்  உருவாக்கிக் கொண்டேயிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப்போனால்

  1. எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்ற மேதகு அப்துல்கலாமின் உரைகள்
  2. இன்றைய டெல்லி முதல்வர் மாண்புமிகு அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் இளைஞர்கள் மத்தியில் தோற்றுவித்த எழுச்சி,
  3. அன்னா ஹசாரே ஊழல் எதிர்ப்பு போர் (அது கார்ப்பரேட்களால் உருவாக்கப்பட்டது, பின்னர் கேலிக் கூத்தாகியது என்ற போதிலும்)

போன்றவை இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஒருவித கருத்தாக்கத்தை உருவாக்கிக் கொண்டே வந்தது.  ஏறக்குறைய வெட்டிப் போட்ட மரச் சரகுகள், நாள்பட்டு வெயிலில் காய்ந்தபிறகு எங்கோ ஒரு பொறி படினும் விரைவாக பற்றிக் கொள்ளும் என்பது போல் மத்திய, மாநில அரசியல் அரசுகளின் மீது வெறுப்புணர்வு உள்ளே கனன்று கொண்டிருந்த நேரத்தில் தமிழ், பாரம்பரியம் என்ற வகையில் தோன்றிய ஜல்லிக்கட்டு போராட்டத்தால் பற்றிக் கொண்டது என்பதுதான் யதார்த்தம். இந்த ஒற்றுமையை சாத்தியமாக்க சமூக வலைதளங்கள் மூலம் இணைப்பு என்பது பெரிய அளவில் உதவியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் தோன்றுவது போல் இந்த வருடமும் அலங்காநல்லூரில் தான் வாடிவாசலை திறக்க அனுமதிக்க வேண்டும், ஜல்லிக்கட்டு அனுமதிக்க வேண்டும், உச்ச நீதிமன்ற தடையை அகற்ற அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்ற வகையில்தான் போராட்டம் துவங்கியது.  அலங்காநல்லூர் போராட்டத்தின் போது இளைஞர்களை கைது செய்ததில்தான் அரசின் ‘தவறு’ என்ற ‘பொறி’ காய்ந்த சருகுகளான இளைஞர்களின் மீது விழுந்தது என்றே சொல்ல வேண்டும்.  விரைவாக அந்த இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என்றுதான் அடுத்த கோரிக்கை எழுந்தது. அவர்களை விரைவாக விடுவித்து, உச்ச நீதிமன்ற தடையை நீக்க, அவசர சட்டம் இயற்ற அரசு உடனடியாக முயற்சியை துவங்கும் என்ற வகையில் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தால், ஒரு வேளை போராட்டம் மட்டுப் பட்டிருக்கலாம்.

  1. ஆனால் மத்திய அரசிற்கு தமிழகத்தில் காலூன்ற மற்றும் பண மதிப்பிழப்பில் எழுந்த கோபத்தை மறக்கச் செய்ய இதை பயன்படுத்திக் கொள்ளலாமா என்கிற சலனம்,
  2. மாநில அரசில் உட்கட்சி பிரச்சனைகளை முதல்வர் மறைந்த பிறகு எழுந்திருக்கிற பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப - மற்றும் மாநில அரசின் மீது ஆளுமை செய்ய முயலும் மத்திய அரசினை முழுமையாக விட்டுவிடாமல், மக்கள் கோபமிருக்கிறது என்பதை சுட்டிக் காட்ட
  3. இந்த போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாமா என்கிற எண்ணச் சலனங்களால் ஏற்பட்ட முயற்சியின்மையால் இந்த தீ மாநிலம் முழுவதும் பற்றிக் கொண்டது என்றே சொல்ல வேண்டும்.

இந்தப் போராட்டத்தில் சிறிதளவும் வன்முறை நிகழாமல் பார்த்துக் கொண்டதில்தான் இந்த இளைஞர்களின் வெற்றி சாத்தியமாகியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.  குறிப்பாக வடமாநில மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பெண்களை மதிப்பது குறித்து தமிழக இளைஞர்களிடம் கற்க வேண்டும் என வியந்திருந்ததை குறிப்பிட வேண்டும். ஏனென்றால் சிறிதளவு வன்முறை எங்காவது தோன்றியிருந்தாலும், காவல்துறை மிக எளிதாக கட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் என்பதோடு, போராட்டத்தின் வீச்சு என்பது திசை மாறிப் போயிருக்கும்.  அரசியல்வாதிகளை போராட்டக் களத்திற்குள் அனுமதிக்காதது என்பதை கண்டிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட தங்களுக்குள் விவாதப் பொருளாக்கி இளைஞர்களின்-பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும் வண்ணம் தங்களின் வருங்கால நடவடிக்கைகளை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.  மாநில அரசு இயற்றும் அவசரச் சட்டம் அனுமதிக்கப்பட்டவுடன் இந்த போராட்டம் முடிவிற்கு வரும் என்றே நம்பலாம்.

  • பாரதி, விவேகானந்தர், பகத்சிங், சேகுவாரா போன்றவர்கள் தூவிய விதைகள் துளிர் விடத் துவங்கியிருக்கிறது.
  • உலகமயமாதல், Hire & Fire என்ற வகையிலான பெரிய அளவில் வேலையிழப்பு செய்தல்,
  • இந்த தேசத்தின் வளங்களை பெருமளவில் கார்ப்பரேட்டுகளுக்கு அனுமதித்தல்,
  • நதிநீர் பங்கீடு, நீதித்துறையின் மீது விமர்சனம்

என்பதெல்லாம் கூட எதிர்காலத்தில் ஏதோ ஒரு வகையில் இளைஞர்களை, மாணவர்களை தொடர்ந்து ஒன்றிணைக்கும் புள்ளிகளாகலாம் என்பதும் ஓட்டு அரசியலைத் தாண்டி நிகழும் நிகழ்வுகளை அன்றாடம் மாணவர்கள், இளைஞர்கள் கவனிக்கிறார்கள் என்பதும் இந்த போராட்டம் உணர்த்தும் பாடம்.

எஸ்.சம்பத்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com