பொம்மலாட்ட பொம்மைகளல்ல... டிஆர்பி அள்ளும் சிறுவர் போட்டி நிகழ்ச்சிகள் முடிவுக்கு வருமா?

சினிமா பாட்டு, நடனம் என்ற நிலை மாறி, தற்போது சினிமா காட்சிகளை சித்தரிக்கும் சில நிகழ்ச்சிகளில் சிறுவர், சிறுமியர் பங்கேற்று
பொம்மலாட்ட பொம்மைகளல்ல... டிஆர்பி அள்ளும் சிறுவர் போட்டி நிகழ்ச்சிகள் முடிவுக்கு வருமா?

சென்னை: தற்போதெல்லாம் தொலைக்காட்சிகளில் சிறுவர்கள் பங்கேற்கும் போட்டி நிகழ்ச்சிகள் டிஆர்பியில் முதலிடம் பெறுகின்றன.

போட்டியில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பாடும் ஆடும் நடிக்கும் திறமை இருக்க வேண்டியது அவசியமில்லை. கற்றுக் கொடுப்பதை கற்றுக் கொண்டு அதை அப்படியே வெளிப்படுத்தினால் போதும் என்ற வேதாந்தத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

ஒரு வேளை, ஏதாவது ஒரு குழந்தை தனது தனித்திறமையை வெளிப்படுத்தி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துவிட்டால், அந்த குழந்தைக்குக் கிடைக்கும் அதிகப்படியான வாக்குகளைக் கொண்டு, முக்கிய நகரத்தில் ஒரு குடியிருப்பு வீடு அக்குழந்தைக்கு பரிசளிக்கப்படும்.

ஒரு 30 வயதுக்கு மேல் இருக்கும் அனுபவம் வாய்ந்த பாடகர் பாடிய ஒரு பாடலை 5 வயதுக்குட்பட்ட குழந்தையை பாட வைத்து கைதட்டல் பெறும் தொலைக்காட்சி சானல்களில் பங்கேற்கும் அனைத்துக் குழந்தைகளும் உற்சாகமாக இருப்பது போலத்தான் தோன்றும். ஆனால், தனது இயல்பான வாழ்க்கையை விட்டுவிட்டு, எப்போதும் ஷூட்டிங்கில், மேக்கப்புடன் வெற்றி தோல்வியை நினைத்த பயத்துடன் இருப்பது குழந்தைகளின் மன நலத்தை நிச்சயம் பாதிக்கும் என்பதை அவர்களது பெற்றோர் உட்பட யாருமே மறுக்க முடியாத உண்மை.

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ்பெறும் குழந்தைகள், வருங்காலத்தில் தோல்வி மற்றும் நிராகரிப்புகளை சந்திக்கும் போது அதனை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு ஆளாவார்கள் என்கிறார் மனோதத்துவ நிபுணர் மருத்துவர் என். ஷாலினி.

தங்களது பிள்ளைகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை மிகப்பெரிய பாக்கியமாக பெற்றோர் கருதுகிறார்கள். அவ்வளவு ஏன், இதுபோன்ற நிகழ்ச்சிகளில், மிகவும் வறுமையான பின்னணியுடன் பங்கேற்பதாக சிலரைக் காட்டுவார்கள். அதிலும் சில நிகழ்ச்சியின் விளம்பரத்துக்காக செய்யப்படும் நாடகமாக இருக்கலாம். குழந்தைகளை விட, பெற்றோர் தான் அதிக ஆர்வத்தோடு கலந்து கொள்கிறார்கள் என்கிறார் தற்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர் ஒருவர்.

ஒரு போட்டியாளரின் தாய் கூறுகையில், போட்டியில் பங்கேற்கும் குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த ஆர்வத்தோடு இருப்பார்கள். குழந்தைகளை சிறப்பாக செயல்படுமாறு சிலர் அடிக்கவும் செய்வார்கள். 4 நாட்கள் வரை பயிற்சி இருக்கும். அதுவும் வார நாட்களில்தான். இதனால் நிச்சயம் பள்ளிக்குச் செல்ல முடியாது. ஷூட்டிங் என்றால் பல மணி நேரம் நடக்கும். குழந்தைகளுக்கு முதலுதவி செய்யக் கூட மருத்துவர் குழு இருக்காது. ஒரு வேளை போட்டியில் இருந்து ஒரு சிறுவனை வெளியேற்ற வேண்டும் என்றால், நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் சார்பில் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்கிறார்.

சிறுவர்கள் நிகழ்ச்சியின் இயக்குநர் ஒருவர் கூறுகையில், நாங்கள் முன்னெச்சரிக்கையாகவே இருக்கிறோம். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் சிறுவனின் பெற்றோர் மற்றும் பள்ளியில் இருந்து சான்றிதழ் பெற்றுக் கொள்கிறோம். பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதை பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் அறிந்தே இருக்கும். ஆனால், அது ஒரு பெரிய பிரச்னையாக இரு தரப்புக்குமே இல்லை என்கிறார். 

குழந்தை தொழிலாளர் ஒழிப்புச் சட்டம் 1986ல், பணத்துக்காகவோ, புகழுக்காகவோ எந்த குழந்தையும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதி செய்கிறது. நிச்சயம் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்த சட்டத்துக்கு எதிராக செயல்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. அதுவும் நிகழ்ச்சிகள் படப்பிடிப்பு பல மணி நேரம் நடைபெறுவதும், குழந்தைகளை துன்புறுத்துவதற்கு ஈடானதே.

நான் சென்னையைச் சேர்ந்தவர் இல்லை, சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன். இதனால் ஒரு மாத காலத்துக்கும் மேலாக நான் பள்ளிக்குச் செல்லவில்லை. ஆனால், நான் தற்போது பங்கேற்கும் நிகழ்ச்சியில் வெகு சிறப்பாக செயல்பட்டு வருவதால் மகிழ்ச்சியாக உள்ளேன் என்கிறார் 11ம் வகுப்பு படிக்கும் போட்டியாளர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளின் மன நிலையும் இதனால் மாறுகிறது. ஒரு குடியிருப்பை சம்பாதித்தால், நான் பள்ளிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்ற மனப்பான்மை வரும். நாளை நிகழ்ச்சி முடிந்த பிறகு அதற்கு பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை என்றால், அதனை பெற்றோர் வற்புறுத்த முடியாது. அன்று பணம் வேண்டும் என்றால் பள்ளிக்குப் போக வேண்டாம், இன்று போக வேண்டுமா என்று கேள்வி கேட்கும் வாய்ப்பு அதிகம்.

மேலும், சினிமா பாட்டு, நடனம் என்ற நிலை மாறி, தற்போது சினிமா காட்சிகளை சித்தரிக்கும் சில நிகழ்ச்சிகளில் சிறுவர், சிறுமியர் பங்கேற்று தங்களது வயதுக்கு மீறிய காட்சிகளில் நடிக்கிறார்கள். இதுவரை திறமை, தனித்திறமை என்ற நிலை மாறி, இப்போது இவர்களது பரிதாப நிலை குறித்த உண்மை நிலையை உணரும் பலருக்கும் வருத்தத்தையே ஏற்படுத்துகிறது.

இப்போதிருக்கும் கட்டமைப்பில் ஓடியாடி விளையாட முடியாத சூழ்நிலை இருக்கும் போது, அவர்களது குழந்தைப் பருவத்தை குறைந்தபட்ச சந்தோஷத்தோடாவது  வாழ்ந்தே ஆக வேண்டும் என்பதை பெற்றோர் உணர வேண்டும். குழந்தைகளை வைத்து நாம் பொம்மலாட்டம் காட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதை போட்டியில் பங்கேற்கும் பெற்றோர் உணர வேண்டும்

அரசும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்தி, பங்கேற்கும் குழந்தைகளின் குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்க வேண்டும்.

வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கும் இந்த நிகழ்ச்சிகளால் பாதிப்பு ஏற்படுகிறது. கார்டூன் பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை, இந்த நிகழ்ச்சியைப் பார்க்குமாறு கூறும் பெற்றோர், அந்த குழந்தை எப்படி பாடுகிறது, நீயும் இருக்கியே என்று மட்டம் தட்டும் நிலை இன்னும் மோசமானது.

இரண்டு சிறுமிகள், மாமியார் - மருமகளாக நடித்து சண்டை போடும் போது அதனை பார்க்கும் சிறுமிகளின் மன நிலையையும் நிச்சயம் இந்த நிகழ்ச்சி பாதிக்கும் என்பதை பல உண்மை அறிந்த பெற்றோர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

குழந்தைகளை குழந்தைகளாக இருக்க (வாழ) விடுங்கள். உங்கள் பொம்மலாட்டத்துக்குக் கிடைத்த பொம்மைகளாக்கி நூலில் தொங்க விடாதீர்கள். அறுந்து விழுந்தால் எழ முடியாமல் போகலாம். எச்சரிக்கை!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com