அன்பான முன்னாள் டி.வி காம்பியர்களே உங்களை நாங்க ரொம்பவே மிஸ் பண்றோம்!

தனக்கு நன்றாகத் தமிழ் உச்சரிக்கத் தெரியும் என்பதால் மட்டுமே ஒருவர் அருமையான மக்கள் ரசனைக்குரிய காம்பியராகி விட முடியாது. அவர்கள் பேசும் முறைமை, அங்க சேஷ்டைகள்( பாடி லாங்வேஜ்)
அன்பான முன்னாள் டி.வி காம்பியர்களே உங்களை நாங்க ரொம்பவே மிஸ் பண்றோம்!

நேற்று ஒரு பிரபல தொலைக்காட்சியின் நகைச்சுவை நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. உண்மையில் அவர்கள் பயன்படுதிய உரையாடல் முறை கண்டு வெகு துக்கமாகி விட்டது. பார்வையாளர்களை ஒரு நிகழ்ச்சியைப் பார்க்க வைப்பதற்காகவும், டி.ஆர்.பி ரேட்டிங் ஏற்றுவதற்காகவும் இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்களையும், பங்கேற்பாளர்களையும் எப்படி வேண்டுமானாலும் பேச வைக்கலாம் என்றொரு ஃபேஷன் வந்து விட்டது இப்போது. முழுவதும் இரட்டை அர்த்த வசனங்கள், அடவடித் தனமான அராத்து உரையாடல்கள், எப்படியாவது தங்களது முகம் டி.வி திரையில் வந்தால் போதுமென தொகுப்பாளர்களின் நீ, வா, போ வெனும் ஏக தேச விளிப்புகளையும் பொறுத்துக் கொண்டு பல்லைக் காட்டிக் கொண்டு நிற்கும் பங்கேற்பாளர்கள்... இதைச் சுட்டிக் காட்டி பூலோகம், கவண், தொடரி,  என்று எத்தனை மீடியா விமர்சனத் திரைப்படங்கள் வந்தாலும் சரி அதையெல்லாம் கண்டு கொள்ளாத வெகுஜன ரசிகர்கள்.

இப்படித் தான் எவ்வித எதிர்ப்புகளுமின்றி பதினாறு கால் பாய்ச்சலில் குதி போட்டு ஓடிக் கொண்டிருக்கின்றன நமது பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களின் காம்பியரிங் கை வண்ணங்கள்.

இவர்களை எல்லாம் பார்க்கும் போது தான் தனியார் தொலைக்காட்சிகளின் ஜீவித தொடக்க காலத்தில் தங்களது நயமான காம்பியரிங் மூலம் லட்சோபலட்சம் ரசிகர்களைக் கவர்ந்த பழைய காம்பியர்களின் ஞாபகம் லேசாக எட்டிப் பார்த்து கண் சிமிட்டுகிறது. எங்களை மறந்தீர்கள் இல்லையா? அப்போது பாடாய் படுங்கள் நீங்களும், உங்கள் செந்தமிழ் மொழியும் என்று அவர்கள் கெக்கலி கொட்டிச் சிரிப்பதாக ஒரு கேலிச்சித்திரம் நெஞ்சில் தோன்றிக் கலைகிறது.

சன் டி.வி யின் E. மாலா முதல் ‘வார்த்தை விளையாட்டு’ நடத்திய ஆனந்த கீதன், இசை சார்ந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய சாகுல் ஹமீது, சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய A.V.ரமணன், ஸ்டார் விஜயில் தமிழ்நாட்டின் செல்லக் குரலைத் தேடி அழைந்த சின்மயி, ஒரு வார்த்தை ஒரு லட்சம் வழங்கும் ஜேம்ஸ் வசந்தன், காஃபி வித் அனு வழங்கிய விஜய் டி.வியின் அனு ஹாசன், நையாண்டி தர்பார் வழங்கிய யூகி சேது, ‘செல்லமே செல்லம்’ குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உமா பத்மநாபன், ‘எங்க வீட்டுக் கல்யாணம்’ ரம்யா, ராஜ் டி.வி யின் ‘லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு’ நடத்திய B.H. அப்துல் ஹமீது... 

விதம் விதமாய் ஹேர் ஸ்டைல் மாற்றினாலும் சன் டி.வியில் தங்கத் தமிழை சங்கப் பிழையின்றி பேசத் தயங்காத ஆனந்த கண்ணன், சன் மற்றும் ஜெயா டி.வி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களின் செவியில் மங்காத தமிழுரைத்து மொத்த தமிழ் காம்பியரர்களுக்கெல்லாம் உதாரணமாகத் திகழ்ந்த ரபி பெர்னாட் மற்றும் சுதாங்கன், கேலாக்ஸி நிறுவனத் தலைவரும் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவருமான ரமேஷ் பிரபா, எல்லாவற்றுக்கும் முத்தாய்பாக சன் டி.வி யில் ஜோடிப் பொருத்தம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ரெகோ. ஸ்ரீலேகா ஜோடி. அரசியல் கலந்துரையாடல்கள் நடத்தும் வீர பாண்டியன், இவர்களது நயமான தமிழையும், நேர்மையான உரையாடல்களையும் யாரும் விமர்சிக்கவே வாய்ப்பில்லை.

ஏனெனில் மேலே நினைவைக் கிளறும் அத்தனை காம்பியர்களும் அருமையான தமிழுக்குச் சொந்தக்காரர்கள். மொழி என்பது உச்சரிப்பின் தெளிவில் மட்டுமல்ல அது கையாளப் படும் நளினம் மற்றும் மாண்பினாலும் தான் மேன்மையானதெனக் கொண்டாடப் படக் கூடும். தனக்கு நன்றாகத் தமிழ் உச்சரிக்கத் தெரியும் என்பதால் மட்டுமே ஒருவர் அருமையான மக்கள் ரசனைக்குரிய காம்பியராகி விட முடியாது. அவர்கள் பேசும் முறைமை, அங்க சேஷ்டைகள்( பாடி லாங்வேஜ்), அவரது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருக்கும் விருந்தினரை காயப்படுத்தாமல் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் முறை, தான் பேச எடுத்துக் கொண்ட பொருள் சார்ந்த அறிவு மற்றும் தெளிவு இத்தனையும் ஒத்திசைவாக அமைந்ததால் தான் மேற்கண்ட காம்பியர்கள் அந்நாளில் இந்நாளைய கவர்ச்சியான அம்சங்கள் எதுவும் இல்லாத நிலையிலும் தங்களது தமிழ் உச்சரிப்பாலும், நயமான, நேர்மையான நிகழ்ச்சிப் பங்களிப்புகளாலும் பெரும்பான்மை ரசிகர்களால் ரசிக்கப் பட்டு இன்றளவும் மக்கள் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கிறார்கள்.

இன்றைய காம்பியர்கள் அவர்களைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லாவிட்டாலும் கூட குறைந்த பட்சம் இரட்டை அர்த்தை வசனங்களையாவது பேசாமல் இருக்கலாம். மேலே குறிப்பிட்ட பட்டியலில் ரம்யா இப்போதும் ஒரு பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளினி தான்... அவரது ‘எங்க வீட்டுக் கல்யாணம்’ நிகழ்ச்சியின் அருமையான தமிழுக்கும் அழகான பட்டுப் புடவை காஸ்டியூமுக்கும் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு ரசிக, ரசிகையர்கள் உண்டு. இன்றைய காம்பியரிங் சடுகுடு ஆட்டத்தில் கலந்து கொண்டு தமிழகத் தொலைக்காட்சிகளின் டாப் மோஸ்ட் காம்பியர் ஆகும் ரேஸில் இப்படியான நயமான காம்பியர்கள் எல்லாம் தங்களது ஒரிஜினாலிட்டியை இழக்க முற்பட்டால் அதற்கான பழியை ரசிகர்களான நாம் ஏற்க வேண்டியதில்லை.

அந்தப் பழி மொத்தமும் சம்மந்தப் பட்ட தொலைக்காட்சி நிறுவனத்தை மட்டுமே சாரும். 

ஒரே ஒரு ரபி பெர்னார்ட்... அவர் பின்னாளில் கொள்கையளவில் மாறுபட்டு சன்னில் இருந்து ஜெயாவுக்கு மாறினாலும் அவரது காம்பியரிங் ஸ்டைல் மாறவில்லை. ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கும் போதோ, அல்லது ஒரு விருந்தினரை தனது நிகழ்ச்சியில் பேட்டி காணும் போது பின்பற்ற வேண்டிய கண்ணியமான அணுகுமுறையிலோ அவர் எந்த டி.வி யிலும் எந்தக் குறையும் வைத்ததாக நினைவில்லை. ஒரு பேராசிரியர்... ஊடகக்காரர் ஆனதின் பலாபலன்களே ‘முதல்வன்’ திரைப்படத்தில் காம்பியராக, நெறியாளராக வரும் அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு ரபி பெர்னாட்டின் மேனரிஸங்களை எடுத்தாள இயக்குனர் சங்கருக்கு உந்துகோலானது.

இன்றைய காம்பியர்களே இதையெல்லாம் கொஞ்சம் நோட் பண்ணுங்கப்பா... சும்மா கவுண்ட்டரும், எதிர்கவுண்ட்டரும் தருவது தான் காம்பியரிங் எனில் அதற்கு கவுண்டமணியும், சந்தானமும் அவர்களின் காப்பி கேட்களுமே போதுமே! திறமைசாலிகளான காம்பியர்கள் எதற்கு?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com