பீட்ஸா டெலிவரி பாய்ஸை கொஞ்சம் நிதானமா டீல் பண்ணுங்க பாஸ், இல்லன்னா முகத்துல கோடு போட்டுடுவாங்களாம்!

இதில் தவறு இரு தரப்பிலும் தான் இருக்கிறது. நம் மக்கள் டெலிவரி பாய்கள் தானே என்று அவர்களை ஏக வசனத்தில் அழைப்பதும், அதிகாரத் தொனியில் அதட்டுவதும் பல இடங்களில், பல்வேறு சந்தர்பங்களில் நாம் காண
பீட்ஸா டெலிவரி பாய்ஸை கொஞ்சம் நிதானமா டீல் பண்ணுங்க பாஸ், இல்லன்னா முகத்துல கோடு போட்டுடுவாங்களாம்!

டோர் டெலிவரி என்பது இப்போது சர்வ சாதாரணம். மளிகைச் சாமான்கள், மருந்துகள், உணவுப் பொருட்கள், ஃபர்னிச்சர்கள், கட்டில், பீரோக்கள், நவீன ரக ஆடைகள் வரை அனைத்துமே இப்போதெல்லாம் ஆர்டர் கொடுத்த சில மணி நேரங்களில் டோர் டு டோர் டெலிவரி செய்யப்படுகின்றன. இவற்றில் உணவுப் பொருட்கள் தவிர பிற அனைத்துமே அடிக்கடி டோர் டெலிவரி சேவை தேவைப்படாதவை. மளிகைச் சாமான்கள் கூட மாதமொரு முறை தானே வாங்குகிறோம். ஆனால் இந்த பீட்ஸா, பர்கர், கே.ஃப்.சி சிக்கன் வகையறாக்களை மட்டும் வாரம் தவறாமல் ஆர்டர் செய்து சாப்பிடத் தவறாதவர்கள் நம்மிடையே அனேகம் பேர் உள்ளனர். ஒரு பக்கம் ஜங்க் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும் என்று இணையத்திலும், வெளியிலுமாக கோஷமெழுப்பியவாறு மறுபக்கம் வாரம் தவறாமல்... சொல்லப் போனால் வாரத்தில் இரண்டு , மூன்று முறைகளாவது மேற்கண்ட உணவுப் பொருட்களை ஆரடர் செய்து உண்ணாமல் ஓய்வதில்லை பலர். 

காரணம் அந்த உணவின் மீதான மோகம் என்பதைத் தாண்டி, அவற்றை உண்பதை அந்தஸ்துக்கான காரணமாகவும் சிலர் நினைத்து விடுகிறார்கள் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம். அது மட்டுமல்ல இந்த வகை உணவுகளை நாம் கையெல்லாம் ஈசிக் கொண்டு சாப்பிடத் தேவையில்லை. அவர்களே அவற்றை வைத்து உண்பதற்கான டிஷ்யூ காகிதங்களையும் அளித்து விடுகிறார்கள். தொட்டுக் கொண்டு சாப்பிட அரதப் பழசான டொமட்டோ கெச்சப்பும் உண்டு. நமது சொரணை கெட்ட நாக்கின் ருசிக்கு முன் இது போதாதோ! விடுமுறை நாட்களில் அசைவ உணவு சமைக்கிறேன் பேர்வளியென்று மாங்கு, மாங்கென்று மசாலா அரைத்து, வியர்க்க...விறு விறுக்க சமைத்த பின்னும் கூட... உண்ணும் போது சமையலில் அது சரியில்லை, இது சரியில்லை... மொத்தத்தில் உனக்கு சமைக்கவே தெரியவில்லை என்று குறை கூறும் கணவர்களை சமாளிக்கும் விதமாகவும் மொத்தக் குடும்பத்தையும் பீட்ஸாவுக்கும், பர்கருக்கும் பழக்கும் மம்மிக்கள் இங்கே இருக்கிறார்கள் தானே! அவர்களுக்கெல்லாம் டோர் டெலிவரி என்பது ஆகச் சிறந்த வசதிகளில் ஒன்றாக மாறியது. அவர்களுக்கு மட்டுமில்லை வீட்டுச் சாப்பாடு அலுத்துப் போன, எதையும் லைட் அண்ட் ஸ்டைலாக உண்ணத் தலைப்படும் இளைய தலைமுறையினருக்கும் இந்த டோர் டெலிவரி ஒரு மிகச் சிறந்த வசதியாகப் போய் விட்டது. சிலர் குறிப்பிட்ட அந்தக் கடைகளுக்கே நேரடியாகச் சென்று உண்ணும் வழக்கம் கொண்டிருந்தாலும் பெரும்பாலும் மதிய உணவு மற்றும் மாலை நேர ஸ்னாக்ஸாக இவற்றை ஆர்டர் செய்யும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகம் தான். அத்தைகையோர் பெரும்பாலான நேரங்களில் தங்களது பசிக்காகவும், உணவுக்காகவும் டெலிவரி பாய்களை நம்பிக் காத்திருக்க வேண்டியதாகி விடுகிறது. இங்கே தான் நாம் டெலிவரி பாய்களுக்கும், கஸ்டமர்களுக்கும் இடையிலான உறவைப் பற்றி பேச வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம்.

இன்றைய தினசரியில் பாருங்கள், 

மழையின் காரணமாக தாமதமாக பீட்ஸா செய்த டெலிவரி பாயை, அவரது கஸ்டமர்களில் ஒருவர் கடிந்து கொண்டு ஆர்டர் செய்த பீட்ஸாவை ஏற்றுக் கொள்ள மறுக்கவே அது பெரும் பிரச்னையாகி கடைசியில் அடிதடியில் முடிந்திருக்கிறது. இங்கே தவறு யாருடையது என்று ஆராய்ந்தால் அது இரண்டு தரப்பிலும் தான் என்பதே சரி.

போரூர் மங்கல நகரைச் சேர்ந்த 30 வயது அஸ்வத்தாமன் செவ்வாயன்று இரவு உணவுக்காக தனக்கொரு பீட்ஸா வேண்டி அருகிலிருந்த உணவகம் ஒன்றுக்கு ஆர்டர் அளித்திருக்கிறார். ஆர்டரின் பேரில் பீட்ஸா டெலிவரி செய்ய மழையோடு மழையாகப் புறப்பட்ட டெலிவரி பாய் தினேஷ், மழை நேரத்துச் சென்னையின் போக்குவரத்து நெரிசலைச் சமாளித்து, சரியான முகவரியை கண்டுபிடித்து அஸ்வத்தாமனின் வீட்டை அடைந்து அவருடைய பீட்ஸாவை அவருக்கு டெலிவரி செய்ய சற்றுத் தாமதமாகி விட்டது. சொன்ன நேரத்தில் டெலிவரி செய்யாமல் தாமதமான டெலிவரி ஆனதில் கோபம் கொண்டு மகாபாரத அஸ்வத்தாமனாய் வெகுண்டெழுந்த போரூர் அஸ்வத்தாமன் பீட்ஸாவை வாங்க மறுத்து ஆர்டரைக் கேன்சல் செய்து டெலிவரி பாயைத் திட்டி வெளியில் அனுப்பி விட்டார்.

அதோடு மட்டுமல்ல சம்மந்தப்பட்ட உணவகத்தை தொடர்பு கொண்டு, மேனேஜரிடம், பீட்ஸா டெலிவரி பாய் தினேஷ் குமாரின் அசட்டைத் தனம் குறித்து புகார் அளித்திருக்கிறார் அஸ்வத்தாமன். இதனால் தினேஷை கடிந்து கொண்ட அவரது மேனேஜர், உடனடியாக அவரைப் பதவி நீக்கம் செய்து வெளியில் அனுப்பி விட்டார். காரணத்தை எடுத்துச் சொல்லியும் தனக்கு நேர்ந்த இந்த அவமானத்தைக் கண்டு கொதித்துப் போன தினேஷ் அடுத்துச் செய்தது தான் மிக மோசமான முன்னுதாரணம். அவர் உடனடியாக, தனது தந்தை நாராயணனை அழைத்துக் கொண்டு மீண்டும் அஸ்வத்தாமனின் வீடு சென்று அவருடன் வாக்குவாதத்தில் இறங்கியுள்ளார். திடீரென வாக்குவாதம் முற்றி நாராயணனும், அவரது மகன் தினேஷும் அஸ்வத்தாமனை முகத்தில் தாக்கி விட இப்போது பிரச்னை தீவிரமாகி விவகாரம் காவல்துறை வாயிலில் நிற்கிறது. ஏனெனில் இருவரும் சும்மா தாக்கவில்லை தினேஷ் தான் அணிந்திருந்த அடையாள பேட்ஜின் ஊசி போன்ற கூரான முனையால் அஸ்வத்தாமனை தாக்கியதால் அதிர்ந்து போன அஸ்வத்தாமனை உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள். தாக்கிய இருவரும் கைது செய்யப்பட்டு SRMC காவல்நிலையத்தில் வைக்கப் பட்டனர். தற்போது அவர்கள் இருவர் மீதும் வலியத் தாக்கிக் காயம் உண்டாக்கிய குற்றம், தவறான ஒழுக்க முன்னுதாரணம், உள்ளிட்ட குற்றவியல் பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாஜிஸ்ட்ரேட் ஆணையின்படி தற்போது தந்தையும், மகனும் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

ஒரு சாதாரண பீட்ஸா டெலிவரி விசயம் எங்கே போய் முடிந்திருக்கிறது என்று பார்த்தீர்களா?

இதில் தவறு இரு தரப்பிலும் தான் இருக்கிறது. நம் மக்கள் டெலிவரி பாய்கள் தானே என்று அவர்களை ஏக வசனத்தில் அழைப்பதும், அதிகாரத் தொனியில் அதட்டுவதும் பல இடங்களில், பல்வேறு சந்தர்பங்களில் நாம் காணக் கிடைக்கும் சம்பவங்கள் தான். இதில் கிளர்ந்தெழுந்து கூட ஒரு வேளை அந்த டெல்விவரி பாய், தன் தந்தையுடன் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கலாம். கூடவே அவருக்கு அந்த வேலை எத்தனை அவசியமாய் இருந்ததோ... அதைப் பற்றி அவர் மட்டுமே விளக்கமளிக்க முடியும். அஸ்வத்தாமனைப் பொறுத்த வரை இது ஒரு சாதாரண உணவுப் பிரச்னை தானே... கொஞ்சம் கடிந்து கொண்டு கண்டித்து விட்டு மன்னித்து விட்டிருக்கலாம். மேனேஜருக்குப் புகார் அளித்து டெலிவரி பாயின் வேலைக்கே உலை வைக்கும் அளவுக்கு அவர் சென்றிருக்கத் தேவையில்லை. ஆனால் எல்லாமே கிரமப்படி நடந்து முடிந்து இப்போது இருவர் மத்திய சிறையிலும், ஒருவர் மருத்துவமனையிலுமாக அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com