நாடக அரசரே.. நிழல் நிஜமாகாது: கமலஹாசனுக்கு ஒரு விண்ணப்பம்!

கடந்த சில நாட்களாக ‘பிக் பாஸ்' நிகழ்ச்சி பற்றிய விமர்சனம் பரபரப்பாக ஊடகங்களில் உலவிக்கொண்டிருக்கிறது.
நாடக அரசரே.. நிழல் நிஜமாகாது: கமலஹாசனுக்கு ஒரு விண்ணப்பம்!

கடந்த சில நாட்களாக ‘பிக் பாஸ்' நிகழ்ச்சி பற்றிய விமர்சனம் பரபரப்பாக ஊடகங்களில் உலவிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் அந்த நிகழ்ச்சியை தாங்கிப் பிடிக்கும் கமலஹாசன். அவரின் பேட்டி எங்கோ தொடங்கி எங்கெங்கோ சென்று கடைசியில் அரசியலில் வந்து முடிந்தது.

கமலஹாசன் அவர்களே! சமீபகாலமாக உங்கள் பேட்டிகளில் அரசியல் விமர்சனம் அதிகமாக இருக்கிறது. நான் அரசியல் சாராதவன். ஆனால், அரசியலையும், ஒரு கட்சியையும், ஆட்சியையும் தொடர்ந்து விமர்சனம் செய்வேன் என்பது மிகச் சரியான நடவடிக்கையாக இருக்க முடியாது. சட்டப்படி உங்களுக்கு அந்த உரிமை உண்டு. ஆனால், அரசியலுக்கும், நாட்டுக்கும் எத்தகைய பங்களிப்பை தந்திருக்கிறீர்கள்? சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, வேண்டாத வீரவசனங்களைப் பேசி, பின் அதற்காக வருத்தம் தெரிவித்தவர்தானே நீங்கள்! நீங்கள் மட்டுமல்ல, உங்களைப் போன்ற பல நடிகர்களுக்கும் இப்போதைய அரசியல் வெற்றிடங்கள் ஆசையை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் ஒன்றும் தவறில்லை. நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. நேரடியாகக் களத்தில் குதியுங்கள். அதைவிடுத்து தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தாதீர்கள்.

ஒரு தவறோ, அசிங்கமோ சினிமாவில் நிகழ்த்தலாம். திரையரங்குகளுக்குச் சென்று அந்த விஷயங்களை நாங்கள் தெரிந்துகொள்ளலாம், தவறில்லை. அதே அசிங்கங்களை வீட்டுக் கூடத்தில் இறக்கிவைப்பது எந்த விதத்தில் நியாயம்! தொலைக்காட்சி மூலமாக அப்படி ஒரு இறக்குமதி வீட்டுக்குள் நடக்குமேயானால், சமூகம் நசிந்து போகும்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நீங்கள் சொந்தக்காரரா? எதற்காக அவர்களுக்காக வக்காலத்து வாங்குகிறீர்கள்?

‘முத்தக்காட்சியில் கெட்டுப் போகாத கலாசாரம் இப்போது மட்டும் கெட்டுப்போகிறதா?' என்று கேள்வி எழுப்புகிறீர்கள். முத்தக்காட்சி எங்களுக்கு ஊக்கமளித்தது என்று யாராவது உங்களிடம் தெரிவித்தார்களா? ஒரு ஆணும், பெண்ணும் தனிமையில் உணர்ந்து புரிந்துகொள்ள வேண்டிய விஷயத்தை முச்சந்தியில் வைத்த தவறை தண்டிக்காமல் போனதால், அது நியாயமாகாது. காலைக் காட்சி என்ற பெயரில் இன்றும் அசிங்கங்களை திரையிடும் நிறைய திரையரங்குகள் இருக்கின்றன. அப்படியென்றால், அந்த அசிங்கங்களால் சமுதாயம் சீர்கெடவில்லை என்று நீங்களாகவே அர்த்தம் கொண்டால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. ஒரு தவறை பொறுத்துக்கொண்டோம் என்பதற்காக அதையே உதாரணமாகக் கொள்ள முடியாது. ஒரு தவறால் இன்னொரு தவறை நியாயப்படுத்த முடியாது. மக்கள் அவரவர் செய்யும் பணியில் கவனமாக இருக்கிறார்கள். இதை நீங்கள் அமைதி என்றோ அல்லது நாம் செய்யும் செயல்களை அவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றோ தப்புக் கணக்கு போடாதீர்கள்.

நீங்கள் ‘நாத்திகர்' என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படலாம். எங்களுக்கு அதில் எந்தப் பெருமையும் கிடையாது. ‘ஆத்திகர்கள் என் படத்தை பார்க்க வேண்டாம்' என்று சொல்லும் துணிச்சல் உங்களுக்கு இருக்கிறதா? ஆத்திகனாக எத்தனையோ படத்தில் நடித்துள்ளீர்கள். என்றாவது ஆத்திகப் பணம் எனக்கு வேண்டாம் என்று சொன்னதுண்டா? கருப்புச் சட்டையையும், இந்துக்களையும் முடிச்சுப் போடாதீர்கள். கருப்புச் சட்டை நாத்திகனுக்கு மட்டும் சொந்தம் என்று நீங்களாகவே நினைத்துக்கொண்டால், அதற்கு மற்றவர்கள் எப்படி பொறுப்பாவார்கள்?

‘தசாவதாரம் வெளியானபோது என்னை கொண்டாடினார்கள்' என்று சொல்கிறீர்கள். தசாவதாரம் படம் வெளியானதும், காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டதா? சீனா தங்கள் எல்லைக்குள் முடங்கிவிட்டார்களா? அல்லது அரசியல் சிஸ்டம் சரியாக இருப்பதற்கு தசாவதாரம் எந்த வகையிலாவது உதவியிருக்கிறாதா? எதை வைத்து மக்கள் கொண்டாடினார்கள் என்று சொல்கிறீர்கள்.

‘அரசியலுக்கு நான் வர வேண்டிய அவசியமில்லை. நல்ல தலைவர் யாராவது வந்தால் போதும்' என்று சொல்கிறீர்களே, அப்படிப்பார்த்தால், இருப்பவர்கள் யாரும் நல்ல தலைவர் அல்ல என்று உணர்த்துகிறீர்களா? குதர்க்கமாக உங்களுக்குத்தான் பேசத் தெரியும் என்று நினைக்காதீர்கள். எல்லோருக்கும் அடுத்தவனை குறை கூறும் ஆட்டம் ஆடத் தெரியும்.

‘ரோடு சரியில்லைன்னு சொல்றேன். நான் ஒரு ரோடு வழியா கடந்துபோயிருப்பேன், காட்டுன்னா?' என்று பேசியிருக்கிறீர்கள். குறை மட்டும் சொல்வேன். அதற்கான தீர்வை குறிப்பிட்டுச் சொல்லமாட்டேன் என்று சொல்கிறீர்கள். ஒரு பொது வாழ்க்கையில் இருப்பவரின் சமூக அக்கறை இதுதானா? உங்களிடமிருந்து ஒரு பொறுப்பான பேச்சை எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு சமூக அக்கறை இருக்குமானால் அதை சுட்டிக் காட்டுங்கள்.

சிஸ்டம் சரியில்லை, அரசியல் சரியில்லை என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை, ஆட்சி மாறியிருக்கலாம், ஆள்பவர் மாறியிருக்கலாம், காட்சியில் பெரிய மாற்றமில்லை. ஏனென்றால், எங்களுக்கு ஆள்பவரிடமிருந்து தனிப்பட்ட முறையில் எந்த லாபங்களும் வருவதில்லை. எல்லாமே ஒரு அமைப்பில் இயங்கிக்கொண்டிருக்கின்றது.

‘சென்சார் போர்டு சினிமாவுக்கே தேவையில்லை என்ற கருத்து உடையவன்' என்று சொல்கிறீர்களே! இதை யாராவது ஏற்றுக்கொள்வார்களா?

சாதியை உங்களால் நீக்க முடிந்ததா? என்று கேட்கிறீர்கள். தேவர் மகன், சபாஷ் நாயுடு போன்ற படங்களில் ஜாதியின் பெயர் ஒட்டிக்கொண்டிருக்கிறதே! ‘பாப்பாத்தி சிக்கனை நீ டேஸ்ட் பண்ணிப் பார்த்துச் சொல்லும்மா'' என்ற ஒரு வசனத்தை விஸ்வரூபம் திரைப்படத்தில் சொன்னீர்களே, இதுதான் சாதி ஒழிப்பில் உங்கள் பங்கா?

‘அடுத்த வீட்டைப் பார்த்துதான் கற்றுக்கொள்ள முடியும்?' என்று சொல்கிறீர்கள். அப்படி ஒரு நிலை எங்களுக்கு இல்லை.

‘மேசைக்கு அடியில் நடைபெறும் பேரமும் வேண்டாம்' என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படியென்றால், இதுவரை எத்தனை முறை இப்படிப்பட பேரங்களை தாண்டி வந்திருக்கிறீர்கள் என்பதை தெரிவியுங்கள்.

இதையெல்லாம்விட, பேட்டியின்போது ஒரு உண்மையை கூறியிருக்கிறீர்கள்.

‘நம்பும் மக்களுக்கு நல்ல விருந்தளிக்க கடமைப்பட்டிருக்கிறேன்; நம்பாத மக்களுக்கு எனக்குக் கடமை கிடையாது. இருந்தாலும் அவர்களும் இந்த நிகழ்ச்சியை கோபத்தின் பெயரிலாவது பார்த்தால் நல்லதுதான், பார்க்கட்டும்' என்கிறீர்கள். உங்களின் ஒட்டுமொத்த நோக்கம் இந்த நிகழ்ச்சியை பார்க்கவைப்பதுதான் என்பதை மிகத் தெளிவாக சொல்லிவிட்டீர்கள்.

‘சினிமா ஒழுக்கச் சீர்கேட்டின் கையேடு; சமூக சீர்குலைவுக்கான ஆயுதம். ஆயிரம் நல்ல காட்சிகள் இருந்தாலும், அது உன் வாழ்க்கைக்கு ஒரு துளியும் உதவாது', என்று ஒரு பகிர்வு, வாட்ஸ் ஆப்-ல் சில நாட்களுக்கு முன் வலம் வந்தது. இந்த உண்மை எங்கள் எல்லோருக்கும் தெரியும். சினிமா ஒரு பொழுதுபோக்கி. நாங்கள், உங்களை மகிழ்விக்கிறோம் என்று ஒரு நடிகர் சொன்னால், அதை ஏற்றுக்கொள்கிறோம். அந்தக் கோட்டைத் தாண்டி வந்து எங்களுக்கு கேட்டை விளைவிக்காதீர்கள்.

ஒரு ரசிகனாக உங்கள் படத்தை பார்க்க ரெடி. ஆனால், அரசியல் விமர்சகராக  உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுதான் இந்தக் கட்டுரை.

‘எங்களுக்கு கமலஹாசனின் நடிப்பு பிடிக்கும். அதை என்னுடைய வீட்டில் விசிடியில் பலமுறை பார்த்து ரசித்துக்கொள்கிறேன்' என்று நாங்கள் சொல்வதில்லை. காரணம் நீங்கள் மகிழ்விக்கிறீர்கள். பதிலுக்கு டிக்கெட் பணம் மூலம் உங்களை நாங்கள் மகிழ்விக்கிறோம். இந்தப் பொறுப்பும் கடமையும் கமலஹாசனுக்கு இருந்திருந்தால், இப்படியெல்லாம் அவர் பேட்டி அளித்திருக்கமாட்டார்.

இந்தத் தருணத்தில் ஒரு குட்டிக்கதை.

ஒரு அரசன். அவனுடைய நாட்டுக்கு ஒரு நாடகக் குழு வந்தது. அரசனுக்கு நாடகம் பார்க்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. உடனடியாக நாடகக் கொட்டகைக்கு சென்றான். நாடகம் பார்க்க மக்களும் அங்கு கூடியிருந்தனர்.

‘தானும் அந்த நாடகத்தில் நடிக்க வேண்டும்' என்ற ஆசை அரசனுக்கு ஏற்பட்டது. உடனடியாக நாடக குழுவின் உரிமையாளரை அழைத்து தன் ஆசையை வெளிப்படுத்தினான் அரசன்.

‘அரசே! நீங்கள், எங்கள் நாடகத்தில் நடிப்பதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம். நாடகம் அரச வம்சத்தைப் பற்றிய கதை. ஆனால், நீங்கள் அரசராக நடிக்க வேண்டுமென்றால் நிறைய வசனங்கள் மனப்பாடம் செய்ய வேண்டும். அதற்கு இப்போது கால அவகாசம் இல்லை' என்று பவ்யமாகச் சொன்னார் உரிமையாளர்.

‘அதெல்லாம் முடியாது. நான் நடித்தே தீருவேன். வசனமில்லாத ஒரு கதாபாத்திரம் கொடு. அது மட்டுமில்லாமல், நாடகம் முடியும் வரை நான் மேடையில் தோன்ற வேண்டும்' என்று சொன்னான் அரசன்.

‘அரசே! நீங்கள் கேட்பதுபோல் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. நாடகத்தில் அரசருக்கு ஒரு பாதுகாவலன் இருப்பான். நாடகம் முடியும் வரை அவன் அரசனோடு இருப்பான். அவன் வசனம் பேசத் தேவையில்லை. நீங்கள் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறீர்களா? நாடகம் மூன்று மணி நேரம் நடக்கும்' என்று பயத்தோடு கேட்டான்.

‘அதனாலென்ன! நான் நடிக்கிறேன்' என்றான் அரசன்.

அரசனுக்கு பாதுகாவலன் வேஷம் போட்டார்கள். நாடகம் நல்லபடியாக நடந்து முடிந்தது.

நாடக உரிமையாளர் ஓடி வந்தான்.

‘அரசே! தங்கள் நடிப்பு அருமை' என்று பாராட்டினான்.

அந்த சமயம், நாடகத்தில் அரசனின் வேடத்தில் நடித்த நடிகனும் அரசனை வணங்கினான்.

‘அரசே! நாடகத்தில் பலமுறை உங்களை திட்டும் காட்சி வந்தது. நானும் திட்டினேன். பலமுறை உங்களை அசிங்கப்படுத்தினேன். சில முறை பாராட்டும் காட்சிகளும் வந்தது. இவற்றையெல்லாம் எப்படி தாங்கிக்கொண்டீர்கள்?' என்று கேட்டான் அந்த நடிகன்.

சிரித்தான் அரசன்.

‘உங்களுடைய ஆட்டமெல்லாம் மூன்று மணி நேரத்தில் முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில் பொறுத்துக்கொண்டேன்' என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் அரசன்.

கமலஹாசன் அவர்களே! நீங்கள் ஒரு நாடக அரசர். இதை நினைவில் கொள்ளுங்கள். மூன்று மணி நேரத்தில் உங்கள் ஆட்டம் முடிவுக்கு வருகிறது. எங்களை மகிழ்விக்கும் பணியை நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அந்தப் பணியை மட்டும் சிறப்பாகச் செய்யுங்கள். தேவையில்லாத பிரச்னைகளிலும், விவாதங்களிலும் சிக்கிக்கொள்ளாதீர்கள். உங்களை ஆதரிக்கும் எங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தாதீர்கள். நிழல் நிஜமாகாது.

- சாது ஸ்ரீராம் 
மின்னஞ்சல் : saadhusriram@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com