பாகம்-9: நாம் எவ்வளவு சொத்து வைத்திருக்கலாம்.. சட்டம் சொல்வது என்ன?

தமிழகத்தில் வாழும் ஒவ்வொருவரும் எவ்வளவு சொத்து வைத்திருக்கலாம்? தமிழ்நாடு நிலச்சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயச்) சட்டம் 1961-ன் சரத்துக்கள் சொல்வதென்ன என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
பாகம்-9: நாம் எவ்வளவு சொத்து வைத்திருக்கலாம்.. சட்டம் சொல்வது என்ன?

தமிழகத்தில் வாழும் ஒவ்வொருவரும் எவ்வளவு சொத்து வைத்திருக்கலாம்? தமிழ்நாடு நிலச்சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயச்) சட்டம் 1961-ன் சரத்துக்கள் சொல்வதென்ன என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 39-இன் படி, மூல வளங்கள் ஒரே இடத்தில் குவிப்பதை தடுக்கும் வண்ணமும், உற்பத்தி முறைகள் பொது நலத்திற்கு தீங்கு இழைக்காதவாறும் அரசு தனது கொள்கையை வழி செலுத்திட வேண்டுமென உரைக்கிறது.

மாநிலத்தில் குறைந்த அளவிலேயே வேளாண் நிலம் இருக்கிறது. வேளாண்மை உடைமையுரிமையில் மிகுந்த ஏற்றதாழ்வுகள் உள்ளன. குறிப்பிட்ட சிலரிடம் நிலங்கள் குவிந்துள்ளன. இந்த சூழ்நிலையில் ஏற்றத்தாழ்வுகள் குறைக்கப்பட வேண்டியதாகியுள்ளது. இந்நோக்கத்திற்காக வேளாண்நிலங்கள் மீது உச்சவரம்பு விதிப்பதும், உச்சவரம்பிற்கு மேற்பட்ட நிலங்களை கையகப்படுத்துவதும் அவற்றை நிலமற்றவர்களுக்கு பகிர்ந்தளிப்பதும் தேவையாகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 39-இல் குறிப்பிட்டவாறு அரசின் கொள்கையை வழிநடத்திச் செலுத்தும் நெறியினை (Directive Principles of state policy) செயல்படுத்தும் வண்ணம் 1961-ஆம் ஆண்டின் நிலச் சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயச்) சட்டம் இயற்றப்பட்டது.

தமிழ்நாடு நிலச்சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயச்) சட்டம், 1961 (Tamilnadu Land Reforms (Fixation of Ceiling on Land Act, 1961) இந்திய நாடாளுமன்றம் தன் அதிகாரத்தை செலுத்தி 1964 ஆம் ஆண்டு ஜூன் 20 நாளன்று 1966 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் உள்ளடக்கியது. 1960 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ஆம் நாளிலிருந்து செயலுக்கு வந்த இச்சட்டம் முன்மேவுத்தன்மை(retrospective) கொண்டது.

நில உச்சவரம்பு நிர்ணயித்தல்

தமிழ்நாடு நிலச்சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயச்) சட்டம், 1961 த்தின் படி:-

குடும்பம் ஒன்றிற்கான உச்சவரம்பு
பிரிவு 5. உட்பிரிவு (அ) மற்றும் (ஆ) குடும்பம் ஒன்றிற்கான உச்சவரம்பை கூறுகிறது.

1) ஒருவரின் குடும்பம் என்பது, அவரையும் அவரது மனைவி மைனர்மகன், மணமாகாத மகள், மேலும், அவரது தாய் , தந்தையை இழந்த மைனர் பேரன்கள், மணமாகாத பேத்திகள், உள்ளடக்கியது.

2) ஐந்து உறுப்பினர்களுக்கு மேற்படாத குடும்பத்திற்கான நில உச்சவரம்பானது 15 தரநிலை ஏக்கர்களாகும் (Standard Acres). பிரிவு.5(1)(a)

3) ஐந்து உறுப்பினர்களுக்கு மேற்பட்டிருக்கும் குடும்பத்தினர்களின் நில உச்சவரம்பு, 15 தரநிலை ஏக்கர்களும், கூடுதலாக ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5 தரநிலை ஏக்கர்களும் ஆகும். பிரிவு.5(1)(b).

4) எனினும் எக்காரணம் கொண்டும் மொத்த உச்ச அளவு 30  தரநிலை ஏக்கர்களுக்கு  மிகாமல் இருத்தல் வேண்டும். பிரிவு.5(1)(5)

5) ஒரு குடும்பத்திற்கான உச்சவரம்பை தீர்மானிக்கும் பொருட்டு ஒரு குடும்பத்தின் தனித்தனி நபர்கள் கொண்டிருக்கும் நிலங்கள் அல்லது சில உறுப்பினர்கள் கூட்டாக கொண்டிருக்கும் நிலங்கள் அல்லது அனைத்து உறுப்பினர்களும் கொண்டிருக்கும் நிலங்கள், அத்தகைய குடும்பம் கொண்டிருக்கும் நிலமாகவே கருதப்படும். பிரிவு.5.(1) 

6) குடும்பத்து பெண் உறுப்பினர் கொண்டிருக்கும் சீதன நிலத்துடன் சேர்த்து குடும்பம் கொண்டிருக்கும் மற்ற நிலத்தையும் சேர்த்து, அது 15 தரநிலை ஏக்கர்களுக்கு மேற்பட்டிருந்தால், பிரிவு 1-இன் கீழ் குடும்பம் கொண்டிருக்கும் உரிமையுள்ள நில அளவுடன் கூடுதலாக, பெண் உறுப்பினர் , 10 தரநிலை ஏக்கர்களுக்கு மிகைபடாமல் சீதன நிலத்தை கொண்டிருக்க உரிமை உண்டு.

7) ஆனால், குடும்பம் கொண்டிருக்க உரிமை உள்ள அளவுடன், பெண் உறுப்பினர் கொண்டிருக்கும் சீதன நிலத்துடன் சேர்க்கும் போது அவ்வாறு சேர்க்கப்படும் அளவானது, 10 அல்லது 10 க்கு மேற்பட்ட தரநிலை ஏக்கர்களாக இருக்கும்போது, அவ்வாறு சேர்க்கப்பட்ட அளவுடன், அவர் கூடுதலாக தனது சீதன நிலத்தையும் கொண்டிருக்க உரிமை கிடையாது. 10 தரநிலை ஏக்கர்களை விட குறைவாக இருப்பின் அவ்வாறு சேர்க்கப்பட்ட அளவுடன் சீதன நிலத்தையும் கொண்டிருக்க உரிமையுண்டு. ஆனால், அது சேர்க்கப்பட்ட நில அளவானது 10 தரநிலை ஏக்கர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஐந்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ள ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு பெண் உறுப்பினர், கொண்டிருக்கும் சீதன நில அளவானது, 5 அல்லது 5-க்கு மேற்பட்ட தரநிலை ஏக்கர்களாக இருப்பின், உட்பிரிவு-1 இன் செயல்களுக்காக, குடும்ப உறுப்பினராக கருதப்பட மாட்டார். ஐந்து அல்லது ஐந்து தரநிலை ஏக்கர்களுக்கு குறைவாக இருப்பின், அனுமதிக்கப்படும் சீதன அளவு குறைக்கப்படும்.

இவ்வாறான அளவுக்கு மேலுள்ள நிலங்கள் நிலமிகுதி (surplus) எனக் கருதப்படும்.

நிறுவனங்கள் கொண்டிருக்க உரிமையுள்ள நிலங்கள் பிரிவு 5 (1) (c) 

அறப்பண்பு கொண்ட பொதுப்பொறுப்புரிமை அமைப்பு (public trust of charitable nature) கொண்டிருக்கும் உச்ச அளவானது 5 தரநிலை ஏக்கர்கள் பிரிவு 5. (d)

ஒரு தனிப்பட்ட பொறுப்புரிமை அமைப்பில் ஒவ்வொரு பயனாளியும் பங்கு அளவு கொண்டவராகவே கருதப்படுவார்.

விலக்களிப்புகள் (Exemptions)

  • சமய பொறுப்புரிமை அமைப்புகள்
  • கரும்பு ஆலைகள் பயன்படுத்தப்படும் நிலங்கள்
  • குன்றுப்பகுதியில் உள்ள நிலங்கள்
  • போன்றவற்றிற்கான விலக்களிப்புகளும் படிப்படியாக விலக்கப்பட்டுவிட்டன.

1, ஜூலை, 1959 தேதியில் அல்லது அதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட

  • தோட்டப்பயிர் பிரிவு 73. (vi)
  • தோப்புகள் பழத்தோட்டங்கள் பிரிவு 73. (vii)
  • எரிபொருளாக பயன்படுத்தப்படும் மரங்கள், பிரிவு 73. (viii)
  • மற்றும்
  • பால் பண்ணை மற்றும் கால்நடை வளர்ப்புக்கான மேய்ச்சல் நிலங்கள்
  • பல்கலைக்கழகங்கள்
  • அரசின் அனுமதியுடன் இயங்கும் நிறுவனங்கள்
  • கிராம தான மற்றும் பூமி தானத்திற்கு அளிக்கப்பட்ட நிலங்கள் ஆகியவற்றிற்கான விலக்கு தொடர்ந்து வருகிறது.
     

நில இருப்பின் மீதான உச்ச வரம்பு

இச்சட்டத்தின் பிரிவு7 இன் படி 15, பிப்ரவரி, 1970 இச்சட்டம் செயல்பாட்டிற்கு வந்த நாள் முதல் எவரும் உச்சவரம்பிற்கு மேல்  நிலம் கொண்டிருக்க உரிமையில்லை.

மேலும் அறிந்து கொள்ள.. முந்தைய கட்டுரைகள்..
பாகம்-5: நீங்கள் வாங்கும் சொத்தை பதிவு செய்ய ஆகும் செலவுகள் என்னென்ன?

கையகப்படுதப்பட்ட நிலத்திற்கான தொகையை வழங்குதல்(Compensation) பிரிவு. 50

அதிகாரம் பெற்ற அலுவலர் குறிப்பிட்ட வீதப்படியை தீர்மானித்து, கையகப்படுதப்பட்ட நிலத்திற்கான தொகையை வழங்குவார்.

நில வாரியம்

இச்சட்டத்தின் பொறுப்பு நில வாரியம் ஆகும். இதன் அமைப்பு முறை

  1. நில ஆணையர்
  2. வனத்துறைத் தலைவர்
  3. நிலச் சீர்திருத்தங்கள் இயக்குனர்

நிலத் தீர்ப்பாயம் (Land Tribunal)

இது சம்மந்தமான பிரச்சினைகளை நிலத் தீர்ப்பாயத்தில்(Land Tribunal)  முறையிடலாம்.


மாவட்ட அளவில் மாவட்ட வருவாய் அலுவலரும், மாநில அளவில் நில சீர்திருத்த ஆணையரும் பொறுப்பு வகிப்பர்.

தொடரும்…

C.P.சரவணன், வழக்கறிஞர்

தொடர்புக்கு - 9840052475
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com