தேவை சட்டத்தின் ஆட்சி

சென்னையில் பல சுவர்களை அலங்கரித்துக் கொண்டிருக்கும் போராட்ட அழைப்பு, இவை. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 A(1) என்ன சொல்கிறது என்பதை காண்போம்.
தேவை சட்டத்தின் ஆட்சி

“ஆகஸ்ட் 7, இடம்: சம்ஸ்கிருதக் கல்லூரி, மயிலை, சென்னை-4. தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தும், ஆவனி அவிட்டத்தை எதிர்த்து ‘பன்றிக்கு பூணூல் போடும்' போராட்டம், சென்னை மாவட்டம்.”

சென்னையில் பல சுவர்களை அலங்கரித்துக் கொண்டிருக்கும் போராட்ட அழைப்பு, இவை.

இந்திய இறையாண்மையை கசக்கி குப்பையில் வீசிவிட்டு எழுதப்பட்ட வாசகங்கள் இவை. எப்படி அடுத்தவர்களின் மத, இன உணர்வுகளை இவர்கள் அப்பட்டமாக அசிங்கப்படுத்துகிறார்கள்? யார் இவர்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது? சச்சரவுகளையும், குழப்பங்களையும், வன்முறையை தூண்டும் விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இதை பலரும் பார்க்கிறார்கள். முகம் சுளிக்கிறார்கள். இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. இது போல் பலமுறை அசிங்கங்களையும், வெறுப்பு பேச்சுக்களையும் இவர்கள் அமைதியான சமுதாயத்தில் நடமாடவிட்டிருக்கிறார்கள்.    

ஒருவரின் ஜாதிப் பெயரை சொல்லி அழைப்பது, திட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இன்றும் பல அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளை அண்டிப்பிழைக்கும் ஒட்டுண்ணி இயக்கங்களும் இத்தகைய செயல்களை தொடர்ந்து செய்து வருகின்றன.  
 
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 A(1) என்ன சொல்கிறது என்பதை காண்போம்.

பேச்சாலோ, எழுத்தாலோ அல்லது சைகையாலோ மத, இன, மொழி, சாதி, சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சி செய்வது குற்றமாகும். குற்றத்தினை புரிபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 295 A என்ன சொல்கிறது என்பதை காண்போம்.

மதவழிபாட்டில் ஈடுபடுவோரின் உணர்ச்சிகளை சிற்றமுற்று எழச் செய்ய வேண்டும் என்ற தீய கருத்துடன் வேண்டுமென்றே பேச்சாலோ, எழுத்தாலோ, அல்லது ஜாடையாலோ அவர்கள் மதத்தை அல்லது மத உணர்வுகளை புண்படுத்துவதும் அல்லது புண்படுத்த முயற்சி செய்வதும் குற்றமாகும். மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

இதுவரை எத்தனை நபர்கள் மீது இத்தகைய சட்டங்கள் பாய்ந்திருக்கிறது? அவர்களில் எத்தனை பேரை சிறையில் தள்ளியிருக்கிறது? திராவிடர் கழகம் என்ற பெயரில், கூட்டங்களில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை கேவலமாக பேசுவதும், சித்தரிப்பதும் தொடர்ந்து நடந்து கொண்டு தானே இருக்கிறது. எல்லோருடைய கண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலம் இது. இதை யாரும் தட்டிக் கேட்காமல் இருப்பதால், இந்தக் கேவலங்கள் நியாயமாகிவிடாது.

சமீபத்தில் ஒரு விடியோ ஒன்று வாட்ஸ் ஆப்பில் பகிரப்பட்டது. அதில் சிலர் சாலை ஓரத்தில் நின்று கொண்டு ‘பார்ப்பனர்கள் ஒழிக' என்ற கோஷமிடுகிறார்கள்.  சாலையில் சென்ற ஒரு பெண்மணி அவர்களுடன் வாதிடுகிறார். போராட்டக்காரர்களில் ஒருவர், ‘இது பெரியார் பூமி. ‘பார்ப்பனர்கள்' என்று தான் சொல்லுவோம் என்று திமிராக பதிலளிக்கிறார். பேச்சு வளர்கிறது. சற்று நேரத்தில் மகாகவி பாரதியாருக்கு எதிராகவும் கோஷம் எழுப்புகிறார்கள்.   

சமீபகாலமாக வாஞ்சிநாதன் தியாகத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக விஷமப் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. இதையெல்லாம் சமூகத்தில் இருக்கும் எல்லோரும் செய்வதில்லை. மிகச் சொற்ப எண்ணிக்கையில் உள்ள சிலர் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், அரசை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களை கட்டுப்படுத்துவது அரசின் கடமை. அரசின் நடவடிக்கை மட்டும் இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்காது. சமுதாயத்தில் வசிக்கும் மற்ற பிரிவினரும் இணைந்து கண்டித்தால் மட்டுமே இத்தகைய அசிங்கங்களை தடுத்து நிறுத்த முடியும்.  

ஏதோ ஒரு காலத்தில் யாரோ தவறு செய்தார்கள் என்று சொல்லி, தற்போது இருப்பவர்களை அசிங்கப்படுத்துவது சரியல்ல. நம்மைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களை உதாரணமாக சுட்டிக்காட்டலாம். ஆனால், அவை நிலைமையை மேலும் சிக்கலாக்கும். ஜாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் அடுத்தவரை இழிவுபடுத்தும் செயலுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இதற்கு இரண்டு விதமான மாற்றங்கள் அவசியம்.  

ஒன்று, சமுதாயத்தில் உள்ள அனைத்து பிரிவினர்களும் ஜாதி, மத பேதமின்றி இத்தகைய அசிங்கங்களை தட்டிக் கேட்க வேண்டும்.  

மற்றொன்று, சமூகத்தில் துவேஷத்தை தூண்டிவிடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஒரு விஷச் செடி வளர வளர அதை வெட்டுவது அந்தச் செடியின் வளர்ச்சியை வேண்டுமானால் கட்டுப்படுத்தலாம், முற்றிலும் அழிக்க முடியாது. அப்படி முற்றிலும் அழிக்க வேண்டுமென்றால், அதை வேரோடு அகற்ற வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு சட்டத்தை கொண்டுவரவேண்டும். அதாவது, தீண்டாமைச் சட்டத்தை அனைத்து ஜாதியினருக்கும் பொதுவானதாக அறிவிக்க வேண்டும். அல்லது தீண்டாமை சட்டத்திற்கு நிகராக ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும். அதன்படி, ஒருவர், அடுத்தவரை, ஜாதியின் பெயரால் அவமானப்படுத்தக்கூடாது. அப்படிச் செய்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.  

இப்படிப்பட்ட மிகவும் வருத்தமான நிகழ்வுகள் தினமும் நம் கண் முன்னே நடக்கிறது. ஒரு அமைப்பு தொடர்ந்து இத்தகைய அசிங்கங்களை ஒரு பிரிவினருக்கு எதிராக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு அரசியல் கட்சியாவது இதை கண்டித்தார்களா? ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மெளனம் சமுதாயத்தில் ஒளிந்திருக்கும் தீய சக்திகளுக்கு வலுவூட்டிக் கொண்டிருக்கிறது. ஆகையால், அரசியல் கட்சிகளே! மெளனத்தை களையுங்கள். அவலங்களை கண்டியுங்கள்.     

ஒரு அரசன், அவன் நாட்டில் பல முறைகேடுகள் நடந்தன. அதை அரசனிடம் சென்று முறையிட பலரும் முயற்சி செய்தனர். ஆனால், ஒருவராலும் அரசனை சந்திக்க முடியவில்லை.   

‘அரசன் அரண்மனையில் இல்லை', என்ற பதில் தான் அவர்களுக்கு கிடைத்தது.

‘அரசன் மிக நல்லவன். அவனை சந்திப்பதுதான் கடினம். சந்தித்து கோரிக்கைகளைச் சொன்னால் போதும், பிரச்னை தீர்ந்துவிடும்', என்று எல்லோரும் நம்பினார்கள்.

அந்த ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அரசனை சந்திக்க நினைத்தான். அதற்கான வழிகளை யோசிக்கத் தொடங்கினான்.

‘அரசன் அரண்மனையை விட்டு வெளியே வரவில்லை. ஆனால், அரண்மனையில் இல்லை என்கிறார்கள். ஆகையால், உடனடியாக அரசன் தங்கியிருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள வேண்டும்', என்று நினைத்தான். நேராக அரண்மனை காவலனிடம் சென்றான். விசாரித்தான்.

‘அரசனைப் பற்றி சொல்கிறேன். நீ எனக்கு நூறு பொற்காசுகள் லஞ்சமாகத் தர வேண்டும்', என்று கேட்டான் காவலாளி.

நூறு பொற்காசுகளை லஞ்சமாகக் கொடுத்தான் இளைஞன்.

‘தம்பி! அரசன் அந்தப்புரத்திலேயே இருக்கிறார். அரண்மனைக்கு வருவதில்லை. அங்கு செல்ல உனக்கு அனுமதியில்லை. ஆகையால், யாராவது ஒரு பெண்ணை அனுப்பு. அவளை அரசர் சந்திப்பார். உங்கள் கோரிக்கையை தெரிவிக்கலாம்', என்றான் அவன்.

அங்கிருந்து புறப்பட்ட இளைஞன், அந்தப்புரக் காவலாளியை சந்தித்தான்.

‘ஐயா! நான் அரசனை சந்திக்க வேண்டும். என்னை அந்தப்புரத்திற்குள் அனுமதியுங்கள்', என்றான் இளைஞன்.

‘ஒரு யோசனை சொல்கிறேன். அதற்கு நூறு பொற்கசுகளை லஞ்சமாக கொடுக்க வேண்டும்', என்றான் இரண்டாம் காவலாளி.

நூறு பொற்காசுகளை கொடுத்தான் இளைஞன்.

‘தம்பி, இப்படியே சென்றால் அரசனை சந்திக்க முடியாது. அரசர் பெண்களை மட்டுமே சந்திப்பார். நீ பெண் வேடமணிந்து வா. உன்னை அந்தப்புரத்திற்குள்
அனுமதிக்கிறேன்', என்றான் அவன்.

பெண் வேடத்தில் அந்தப்புரத்தில் நுழைந்தான் இளைஞன். மூன்றாவதாக ஒரு காவலாளி அங்கிருந்தான். அவன் இளைஞனிடம் பேசினான்.

‘தம்பி, நீ ஒரு ஆண் என்பது எனக்குத் தெரியும். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. நீ அரசனிடம் பெறும் ஆதாயத்தில் எனக்கு பாதியை கொடுக்க வேண்டும்', என்று சொல்லி உள்ளே அனுப்பினான் காவலாளி.

அந்தப்புரத்தில் அரசனை சந்தித்தான் இளைஞன். தன்னுடைய கோரிக்கைகளை அரசரிடம் கொடுத்தான்.  அரசர் பேசினார்.

‘எல்லா கோரிக்கைகளையும் அரசனிடம் மட்டுமே நேரடியாக கொடுக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. என் ஆட்சி சட்டத்தின் ஆட்சி. சட்டம் தன் கடமையைச் செய்யும் வகையில் சமுதாயத்தில் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆகையால், உங்கள் பிரச்னைகளை அந்தப்புரம் வரை கொண்டு வந்தது தவறு', என்றான் கோபத்தோடு.

‘அரசே! மன்னிக்க வேண்டும். ஒரு உண்மையைச் சொல்கிறேன். நான் ஒரு ஆண். தங்களை சந்திப்பதற்காக பெண் வேடத்தில் வந்திருக்கிறேன். இது நாள்வரை நான் சம்பாதித்த செல்வங்களையெல்லாம் இரண்டு காவலர்கள் லஞ்சமாக பெற்றுக் கொண்டார்கள். நீங்கள் ஏதாவது கொடுத்தால், அதிலும் பாதியை பிடிங்கிக்கொள்ள காத்திருக்கிறார் மூன்றாம் காவலாளி. என் பெண் வேடமும், மூன்று காவலாளிகளுமே உங்கள் ஆட்சி நடக்கும் விதத்திற்கு சான்று. இது சட்டத்தின் ஆட்சியல்ல. அந்தப்புர ஆட்சி. இதில் எனக்கு நியாயம் கிடைக்காது. நான் வருகிறேன். எனக்கு ஏதாவது கொடுக்க விரும்பினால், அதை மூன்றாவது காவலாளிக்கு கொடுத்துவிடுங்கள்', என்று சொல்லிவிட்டு புறப்பட்டான் இளைஞன்.  

அரசன் யோசித்தானா, நடவடிக்கை எடுத்தானா என்பதெல்லாம் நமக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை. இந்தக் கதை யாரையும் புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டதல்ல. சொல்ல வந்த விஷயம் ரொம்ப சிம்பிள். சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும், அவ்வளவுதான். அப்படி இல்லாவிட்டால், ஆட்சி அந்தப்புரத்தில் இருக்கிறது என்று அர்த்தம். ஆட்சி மாறலாம், அரசன் மாறலாம், அடிப்படை சட்டம் மாறக்கூடாது. அதன் நடவடிக்கைகளும் மாறக்கூடாது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com