பாகம்-12: தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் வீடு வாங்குவது எப்படி?

குடிசைகளே இல்லாத தமிழகத்தை உருவாக்கும் உயரிய லட்சியத்தோடு ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் பயன்பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
பாகம்-12: தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் வீடு வாங்குவது எப்படி?

குடிசைகளே இல்லாத தமிழகத்தை உருவாக்கும் உயரிய லட்சியத்தோடு ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் பயன்பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் (Tamil Nadu Slum Clearance Board )

நாட்டின் மிகவும் நகர் மயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். விரைவான நகர்மயமாக்கலின் பொருட்டு நிகழும் குடிசைப்பகுதிகளின் பெருக்கம் நகர்ப்புற சூழ்நிலைக்கு பெரும் சவாலாக அமைகின்றது. 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 14.63 இலட்சம் குடும்பங்கள் தமிழகத்தின் நகர குடிசைப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். அடிப்படை வசதிகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான குடியிருப்புப் போன்றவை இன்றி  இக்குடிசைப்பகுதிகள் அமைந்துள்ளதால், அங்கு வாழும் குடும்பங்கள் தங்களுடைய அடிப்படைத் தேவைகளையும் வாழ்வாதாரங்களையும் நிறைவேற்றிக் கொள்ள மிகவும் கடுமையாகப் போராடுகின்றனர். எனவே, இம்மக்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளையும், வேலை வாய்ப்பு சார்ந்த பயிற்சிகளையும் வழங்கி அவர்களை திறனுள்ள சக்தியாக மாற்றி பொருளாதாரத்தை வலுப்படுத்த “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற குறிக்கோளுடன் தமிழ்நாடு குடிசைப்பகுதி  மாற்று வாரியம் செப்டம்பர்,1970-இல் துவங்கப்பட்டது.

நிறுவன அமைப்பு

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தமிழ்நாடு குடிசைப்பகுதிகள் (மேம்பாடு மற்றும் மாற்று) சட்டம், 1971-இன் கீழ் ஆளுமை செய்யப்படுகிறது மற்றும் இவ்வாரியம் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரின் கீழ் இயங்குகிறது. தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சென்னையில் 3 சரகங்கள், மதுரை மற்றும் கோயம்புத்தூரில் தலா ஒரு சரகம் மற்றும் சென்னையில் 15 கோட்டங்கள், கோயம்புத்தூரில் 2 கோட்டங்கள் மற்றும் மதுரை,  திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி நகரங்களில் தலா ஒரு கோட்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதுதவிர, தமிழ்நாடு குடிசைப்பகுதி  மாற்று வாரியத்தின் கட்டமைப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு பிரிவு வாரியத்தின் அனைத்துத்   திட்டங்களுக்கான கட்டமைப்பு வடிவங்களுக்கான பணிகள் மற்றும்  திட்டக்களங்களில் தர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. 

குடிசைப்பகுதிகளுக்கான கொள்கை

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மாநிலத்தில், நகர்வாழ் ஏழை மக்களின் தொடர்ந்த வீட்டுவசதித் தேவையினைப் பூர்த்தி  செய்யும் மாநிலத்தின் முன்னோடி நிறுவனமாகும். சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம், வேலூர், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி மற்றும்  திருநெல்வேலி ஆகிய நகரங்களில் சென்னை நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் பகுதி-1 மற்றும் 2 மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்  திட்டம் போன்ற புதுமையான  திட்டங்களின்கீழ் உலக வங்கியின் உதவியுடன் மேம்படுத்தப்பட்ட மனைகளை அமைத்து, நேரு வேலைவாய்ப்புத்  திட்டம், வால்மீகி அம்பேத்கார் வீட்டுவசதித்  திட்டம் (Valmiki Ambedkar Awas Yojana), ரொக்க கடனுதவித்  திட்டம் போன்ற  திட்டங்களின்கீழ் நிதியுதவி அளித்து நகர ஏழைக் குடும்பங்கள் மற்றும் குடிசைப்பகுதி வாழ் குடும்பங்கள் சொந்த வீடுகள் பெற உதவியுள்ளது. இத் திட்டம் மிகவும் வெற்றிகரமான திட்டமாக உலக வங்கியால் பாராட்டப்பட்டுள்ளது. 

முன்னர் 230 சதுர அடி கட்டட பரப்பில் ஒரு அறை மட்டுமே கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் தமிழ்நாடு குடிசைப்பகுதி  மாற்று வாரியத்தால் அமைக்கப்பட்டன.

குடிசைப்பகுதி வாழ் குடும்பங்களின் விருப்பத்திற்கேற்ப வீட்டுவசதி  தேவைகளைக் கருத்தில் கொண்டு முன்னாள் முதலமைச்சர் அவர்கள், 400 சதுர அடி கட்டட பரப்பளவுடன் பூட்டக்கூடிய ஒரு படுக்கையறை, பல்நோக்கு அறை, சமையலறை, பால்கனி மற்றும் கழிப்பறை வசதிகளுடனும், மின்விசிறி மற்றும் மின் பொருத்துதல்களுடன் கூடிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை அமைத்துத்தர ஆணையிட்டார்கள். அதற்கிணங்க, தற்போது அனைத்து அடுக்குமாடிக் குடியிருப்புகளும் 400 சதுர அடி கட்டட பரப்பளவுடன் பூட்டக்கூடிய ஒரு படுக்கையறை, பல்நோக்கு அறை, சமையலறை, பால்கனி மற்றும் கழிப்பறை வசதிகளுடன் நவீன வடிவமைப்புகள் மற்றும் பசுமை கட்டட தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்படுகின்றன.

குடிசைப்பகுதிகளற்ற நகரங்களை உருவாக்கும் வகையில் குடிசைவாழ் குடும்பங்களுக்கு குடியிருப்புகள் கட்டப்படுமென தற்போதைய அரசின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் வெளியிடப்பட்ட “தொலைநோக்கு 2023” ஆவணத்திலும், 2023-க்கு முன்னர் குடிசைப்பகுதிகளற்ற நகரங்களை அமைக்க வகை செய்யப்பட்டுள்ளது. 

இந்த இலக்கினை அடைய தமிழ்நாடு குடிசைப்பகுதி  மாற்று வாரியம் கீழே கூறப்பட்டுள்ள அணுகுமுறைகள் மற்றும் உத்திகளைக் கொண்டு பல்வேறு வீட்டுவசதி  மற்றும் இதரத்  திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது:-

(i) களப்பகுதிகளில் அடிப்படை வசதிகளுடன் கூடிய அடுக்குமாடிக் குடியிருப்புத்  திட்டங்கள்

ஆட்சேபகரமற்ற நிலங்களில் உள்ள குடிசைப்பகுதிதிகள், அவ்விடங்களில் வாழும் மக்களுக்கு, சுகாதாரமற்ற, நெருக்கமான, மக்களின் வாழும் தன்மைக்கு ஆபத்தான சூழலை உருவாக்குகின்றன. அக்குடிசைப்பகுதிதிகளில் வாழும் குடும்பங்களுக்கிடையே நிலத்தை சமமாகப் பங்கிட முடியாததைக் கருத்தில் கொண்டு, சாத்தியமான அதிகபட்ச தரைப்பரப்பு குறியீட்டினைப் பயன்படுத்தி  அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு, முன்னர் அப்பகுதியில் வாழ்ந்து வந்த அதே குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதுவரை 1.84 இலட்சம் அடுக்குமாடிக் குடியிருப்புகள்/வீடுகள் அமைக்கப்பட்டு குடிசைப்பகுதி வாழ் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

(ii) மனை உரிமத்துடன் களப்பகுதிகளில் “உள்ளது உள்ளபடி நிலையில்” மேம்பாடு

சில நகர குடிசைப்பகுதிதிகள் “உள்ளது உள்ளபடி நிலையில்” கள மேம்பாட்டிற்கு உகந்தவையாக உள்ளன. இப்பகுதிகளை சுகாதாரமான மற்றும் வாழ்வதற்கேற்ற பகுதிகளாக்க, தேவைப்படும் அடிப்படை வசதிகளான சாலைகள், தெரு விளக்குகள், நடைபாதை போன்ற வசதிகளை அமைக்கத் தகுந்தவையாக அமைந்துள்ளன. பின்னர், இத் திட்டப் பகுதிகளின் நிலம் தமிழ்நாடு குடிசைப்பகுதி  மாற்று வாரியத்திற்கு நிலமாற்றம் செய்யப்பட்டு அம்மனைகளில் வசித்து வந்தோருக்கு அவர்கள் வசித்து வந்த மனைப்பரப்பிற்கு நில உரிமம் வழங்கப்படுகிறது. இம்மனைகளில் குடியிருப்போருக்கு வீடுகள் கட்டுவதற்கு ஏதுவாக நிதி  ஆதாரங்களும் வழங்கப்படுகின்றன.

(iii) ஒருங்கிணைந்த வீட்டுவசதித்  திட்டங்கள்

ஆட்சேபகரமான பகுதிகளான நதிக்கரைகள், சாலையோரங்கள், பொது பயன்பாட்டிற்குத் தேவைப்படும் நிலங்கள் போன்றவற்றில் அமைந்துள்ள குடிசைப்பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கு அருகாமையில் உள்ள வெற்று நிலங்களில் அடிப்படை மற்றும் சமூக வசதிகளுடன் கூடிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு ‘ஒருங்கிணைந்த நகரங்களாக’ உருவாக்கப்படுகின்றன. ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்தப்பட்ட அந்நிலங்கள் அசல் பயன்பாட்டிற்கென மீட்டெடுக்கப்படுகின்றன.

(iv) பயனாளிகள் தாமாகவே வீடுகள் கட்டுதல்

நிலத்திற்கான தெளிவான மனை உரிமத்துடன், நிரந்தர தன்மையற்ற வீடுகளில் வசிக்கும் நகர குடிசைப்பகுதி வாழ் குடும்பங்கள், தாங்களாகவே வீடுகள் கட்டிக்கொள்ள பல்வேறு  திட்டங்களின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.

(v) சிதிலமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளை மீண்டும் கட்டுதல் மற்றும் பழுதுபார்த்தல்

தமிழ்நாடு குடிசைப்பகுதி  மாற்று வாரியம் 1970-ஆம் ஆண்டு முதல் அடுக்குமாடிக் குடியிருப்புகளை அமைத்து வருவதால், முந்தைய ஆண்டுகளில் கட்டப்பட்ட சில அடுக்குமாடிக் குடியிருப்புகள் இயற்கையின் மாறுபாடுகளின் காரணமாக சிதிலமடைந்துள்ளன. இதன் காரணமாக இக்குடியிருப்புகள் அங்கு வாழும் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால், இக்குடியிருப்புகளின் பாதிப்புத்தன்மை ஒரு தொழில்நுட்பக் குழுவினால் ஆராயப்படுகிறது. அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இவைகள் மறுகட்டுமானத்திற்கு  எடுத்துக் கொள்ளப்பட்டு முன்னர் அங்கு வாழ்ந்த குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

இக்குடியிருப்புகளின் ஆயுள் மற்றும் கட்டமைப்பு பலத்தினை உறுதி  செய்யும் வகையில் குறிப்பிட்ட இடைவெளியில், சுவர்களுக்கு வெள்ளையடித்தல், வர்ணம் பூசுதல் மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

(vi) வாங்கும் திறனுக்கேற்ற வீடுகளுக்கான புதிய தொழில்நுட்பம்

பிரதம மந்திரியின் வீட்டுவசதித் திட்டத்தினைச் செயல்படுத்தும் மாநில அளவிலான முகமை நிறுவனமான தமிழ்நாடு குடிசைப்பகுதி  மாற்று வாரியம், நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி  குடியிருப்புகள் கட்டுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடிக்கக்கூடிய கட்டடங்களை விரைவாகவும், பாதுகாப்புடனும், அமைக்க கட்டுருவாக்கத் தொழில்நுட்பம் மற்றும் கற்காரை கொண்டு சுவர்களையும் தளங்களையும் இணைத்து கட்டுவதற்கான அலுமினிய சாரப்பலகை பயன்படுத்தும் கட்டுமான முறையுடன் இலகுவான இரும்பு திட்டங்களைக் கொண்டு கதவுகள் மற்றும் ஜன்னல்கள், UPVC ஜன்னல்கள் மற்றும் கதவு திட்டங்கள் முதலியவை பயன்படுத்தப்படுகின்றன. வடசென்னையில் மூர்த்திங்கர் தெரு மற்றும் ஈரோடு-பெரியார் நகர் ஆகிய  திட்டப்பகுதிகளில் முன்னேற்றத்திலுள்ள பணிகளில் கட்டுருவாக்கத் தொழில்நுட்பம் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

(vii) இதர  திட்டங்கள்

குடிசைப்பகுதி வாழ் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் சுயசார்படைந்தால் மட்டுமே நகர குடிசைப்பகுதியின் மேம்பாடு முழுமையடையும். குடிசைப்பகுதி வாழ் ஏழைகள் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பொருளாதார ரீதியிலான சுயசார்புநிலை மற்றும் சுயநிலைத்தன்மை அவசியமானதாகும்.

வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் பொருட்டு  திறன் மேம்பாட்டை உறுதிப்படுத்த திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் புகழ்பெற்ற தன்னார்வ நிறுவனங்களின் உதவியுடன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன மற்றும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

1970 முதல் மார்ச் 2017 வரையிலான திட்டங்கள் 

தமிழ்நாடு குடிசைப்பகுதி  மாற்று வாரியம் துவங்கப்பட்டது முதல் மார்ச், 2017 வரை 1.84 இலட்சம் வீடுகள்/குடியிருப்புகளை அமைத்துள்ளது. மேலும் 504 குடிசைப்பகுதிகளில் வாழும் 1.31 இலட்சம் குடும்பங்களுக்கு சென்னைப் பெருநகர் மேம்பாட்டுத்  திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்  திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட மனைகள் வழங்கப்பட்டுள்ளன மற்றும் மார்ச் 2017 வரை நகர குடிசைப்பகுதி வாழ் குடும்பங்களுக்கு பல்வேறு  திட்டங்களை செயல்படுத்த மூலதன செலவினமாக ரூ.5,569.73 கோடி செலவிடப்பட்டுள்ளது.

2011 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான 6 ஆண்டுகால திட்டங்கள்

தமிழ்நாடு குடிசைப்பகுதி  மாற்று வாரியம், 2011 முதல் மார்ச் 2017 வரை ரூ.3,855.28 கோடி செலவில் 74,224 குடியிருப்புகள்/தனி வீடுகளை பல்வேறு  திட்டங்களின் பின்வருமாறு அமைத்துள்ளது:

2017-2018 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் (முன்னேற்றத்தில் உள்ள மற்றும் புதிய  திட்டங்கள்)

தமிழ்நாடு குடிசைப்பகுதி  மாற்று வாரியம், 2017-2018- ஆம் ஆண்டில் 3,13,477 குடியிருப்புகள்/வீடுகள் அமைக்கவும் ரூ.1,460.00 கோடி செலவிடவும் பின்வருமாறு  திட்டமிட்டுள்ளது.
 

முன்னேற்றத்தில் உள்ள பெரும்  திட்டங்கள்

2017-2018-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ள பெரும்  திட்டங்கள் பின்வருமாறு:-

மைய அரசின் பங்களிப்பு  திட்டங்கள்

(அ) அனைவருக்கும் வீட்டுவசதி 

தமிழ்நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கென உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் நீண்டகாலத் திட்டமான “தொலைநோக்குத்  திட்டம் 2023” அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் குடிசைப்பகுதி வாழ் குடும்பங்கள் அனைவருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய வீடுகள் அமைக்கவும் மாநகரங்கள் மற்றும் நகரங்களை 2023-க்கு முன்னர் குடிசைப்பகுதிகளற்ற பகுதிகளாக மாற்றவும் வகை செய்யப்பட்டுள்ளது. இத் திட்டம் அனைவருக்கும் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் மைய அரசு மானியம், மாநில அரசு மானியம், பயனாளிகளின் பங்களிப்பு, நிதி  நிறுவனங்களின் நிதி  உதவி போன்ற நிதி  ஆதாரங்களைப் பயன்படுத்தி செயல்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் வீட்டுவசதித் திட்டத்தினை செயல்படுத்துவதில் நாட்டிலேயே முதலாவது மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

மாநில அளவிலான முகமை நிறுவனமாக தமிழ்நாடு குடிசைப்பகுதி  மாற்று வாரியம், கீழ்க்காணும் பிரிவுகளைப் பயன்படுத்தி  அனைவருக்கும் வீட்டுவசதித்  திட்டத்தினை செயல்படுத்தி  வருகிறது.

(i) பங்களிப்புடன் வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள் 

நெருக்கமான குடிசைப்பகுதிகள் மற்றும் இதர ஆட்சேபகரமான பகுதிகளில் வாழும் நகர குடிசைப்பகுதி வாழ் குடும்பங்களுக்கு கிடைக்கக்கூடிய வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க 400 சதுர அடி கட்டட பரப்பளவுள்ள குடியிருப்புகள் இப்பிரிவின்கீழ் அமைக்கப்படுகின்றன. தமிழ்நாடு குடிசைப்பகுதி  மாற்று வாரியம், களப் பகுதிகளில் குடியிருப்புகள், மறு கட்டுமானம் மற்றும் மாற்றிடங்களில் மறுகுடியமர்வு  திட்டங்களாக சராசரியாக அலகு ஒன்றிற்கு ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் குடியிருப்புகள் அமைத்து வருகிறது. திட்டத்தின் இப்பிரிவு கீழே கூறப்பட்டுள்ள நிதி ஆதாரங்களைக் கொண்டு செயல்படுத்தப்படுகின்றது.

(ii) பயனாளிகள் தலைமையிலான கட்டுமானம்
தகுதி  வாய்ந்த பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு குடும்பங்களுக்கு புதிய குடியிருப்பு கட்ட அல்லது தற்போதுள்ள குடியிருப்பினை மேம்படுத்த மானியம் வழங்கப்படுகிறது. திட்டத்தின் இப்பிரிவு கீழே கூறப்பட்டுள்ள நிதி   ஆதாரங்களைக் கொண்டு செயல்படுத்தப்படுகின்றது.

சொந்த நிலம் உள்ளதற்கான அத்தாட்சி உள்ள குடிசைப்பகுதிகளின் உள்ளே அல்லது வெளியே குடிசைகளில் வாழும் ஏழை குடும்பங்கள் மற்றும் நகர குடிசைப்பகுதி வாழ் குடும்பங்கள் மேற்கூறப்பட்ட சலுகைகளைப் பெறலாம். மானியத் தொகையினைக் காட்டிலும் கூடுதலாக ஆகும் செலவினத்தைப் பயனாளிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

(iii) அனைவருக்கும் வீட்டுவசதித் (நகர்ப்புறம்) திட்டத்தின் முன்னேற்ற நிலை
அனைவருக்கும் வீட்டுவசதித் திட்டத்திற்கான மைய அரசின் ஒப்பளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு இதுவரை தமிழகத்தின் மாநகரங்கள்/நகரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் ரூ.10,759.84 கோடி மதிப்பீட்டில் 3.12 இலட்சம் குடியிருப்புகள்/வீடுகள் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாட்டிலேயே மிகவும் அதிக அளவிலான ஒப்புதலாகும். இவற்றுள், பேரூராட்சிகளில் ரூ.4,159.66 கோடி செலவில் 1,33,335 தனி வீடுகளும், மாநகரங்கள் மற்றும் நகரங்களில் ரூ.6,600.18 கோடி மதிப்பீட்டில் 1,79,005 வீடுகளும் செயல்படுத்தப்படும். இதன் விவரங்கள் பின்வருமாறு:

(31.05.2017 வரை மைய அரசின் ஒப்பளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ள  திட்டங்கள்) மாநகரங்கள் மற்றும் நகரங்கள் - தமிழ்நாடு குடிசைப்பகுதி  மாற்று வாரியத்தால் செயல்படுத்தப்படும்  திட்டங்கள்

பேரூராட்சிகள் - பேரூராட்சிகள் இயக்குநரகம் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள்
 

சுமார் 1,30,486 அலகுகளுக்கான கட்டுமானப் பணிகள்  முன்னேற்றத்திலுள்ளன. மேலும், சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மீதமுள்ள அலகுகளுக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் துவங்கப்படும்.

(ஆ) ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத்  திட்டம்

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத்  திட்டம் மைய அரசின் பங்களிப்பு திட்டமாக 50:40:10 என்ற விகிதாசாரத்தில் மைய அரசு, மாநில அரசு மற்றும் பயனாளிகளின் பங்குடன் செயல்படுத்தப்படுகிறது. எனினும், திட்டத்தின் முதல் மதிப்பீட்டுத் தொகையில் 50% மட்டுமே மைய அரசு வழங்கியுள்ளதால்  திட்டம் முடிவுறும் தொகையில் 70% மாநில அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இத் திட்டத்தின்கீழ் ஆட்சேபகரமான பகுதிகளில் வாழும் குடிசைப்பகுதி வாழ் குடும்பங்களை மறுகுடியமர்வு செய்ய சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பெருநகரங்களில் ரூ.2,393.98 கோடி செலவில் 42,318 அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கொண்ட ஒருங்கிணைந்த நகரங்களை உருவாக்கும் பணிகளுக்கு மைய அரசு ஒப்புதலளித்துள்ளது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 41,042 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் முன்னேற்றத்திலுள்ள மீதமுள்ள 1,276 குடியிருப்புகள் 2017-2018-ஆம் ஆண்டில் முடிக்கப்படும். மீதமுள்ள குடியிருப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் 2017-2018-ஆம் ஆண்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் ரூ.143.66 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். அதன் விவரங்களாவன:

 (இ) இராஜீவ் வீட்டு வசதி   திட்டம் 

இராஜீவ் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் சென்னை மற்றும் இதர நகரங்களில் ரூ.318.73 கோடி மதிப்பீட்டில் 4,763 குடியிருப்புகள்/தனி வீடுகள் கட்டமைய அரசு ஒப்புதலளித்துள்ளது. இக்குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் பல்வேறு முன்னேற்ற நிலைகளில் உள்ளன. இதுவரை 4,359 குடியிருப்புகள்/தனி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 404 குடியிருப்புகள்/தனி வீடுகள் 2017-2018-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும். இப்பணிகளுக்காக ரூ.13.57 கோடி செலவிடப்படும்.

மாநில நிதியுதவி பெறும்  திட்டங்கள்
(அ) பேரூராட்சிகளில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு குடும்பங்களுக்கு பசுமை வீடுகள் தமிழ்நாட்டில் பேரூராட்சிகளில் வாழும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு குடும்பங்களுக்கு ரூ.420.00 கோடி செலவில் 20,000 பசுமை வீடுகள் அமைக்கும்  திட்டத்தை  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார்கள். இத் திட்டம், மையஅரசு/மாநில அரசு/நிதி  நிறுவன கடன் ஆகிய நிதி ஆதாரங்களுடன் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தின்கீழ் 7,144 பசுமை வீடுகள் கட்டும் பணிகள் முடிவுற்றுள்ளன. மீதமுள்ள 12,856 பசுமை வீடுகள் 2017-2018-இல் முடிவுறும்.

(ஆ) சிதிலமடைந்த குடியிருப்புகளின் மறுகட்டுமானம்
தமிழ்நாடு குடிசைப்பகுதி  மாற்று வாரியம் கடந்த 46 ஆண்டுகளாக அடுக்குமாடிக் குடியிருப்புகளை அமைத்து  வருவதால், சென்னை மற்றும் இதர நகரங்களில் முந்தைய ஆண்டுகளில் கட்டப்பட்ட குடியிருப்புகள் மாறுபட்ட தட்பவெப்பம், காலக்கடப்பு, பயன்பாடு மற்றும் தேய்மானம், வளிமண்டல பாதிப்புகள், குடியிருப்புகளின் அமைப்புகளில் மாற்றங்கள் செய்வது, குடியிருப்புத் தொகுப்புகளிடையே ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கட்டடத்தின் கட்டமைப்பு வலுவிழந்து, பின்னர் சிதிலமடைந்து குடியிருப்போரின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் நிலையிலுள்ளன. 

சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் சிதிலமடைந்த நிலையிலுள்ள 3,500 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு ரூ.280.00 கோடி செலவில் மறுகட்டுமானம் செய்யும் திட்டத்தினை தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார்கள். அதற்கிணங்க 3,533 குடியிருப்புகளுக்கான மறுகட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு அவற்றுள் 2,988 குடியிருப்புகள் கட்டும் பணிகள் முடிவுற்றுள்ளன. திருச்சிராப்பள்ளியில் முன்னேற்றத்திலுள்ள மீதமுள்ள 545 குடியிருப்புகள் 2017-2018-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட திட்ட வாரியான விவரங்கள் பின்வருமாறு:

(ரூ.கோடியில்)

மேலும், இதர நிதி  ஆதாரங்களைக் கொண்டு சிதிலமடைந்த குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்ய மேற்கொள்ளப்பட்ட பணிகள் முன்னேற்றத்திலுள்ளன.

இத்திட்டத்தின்கீழ் சென்னை, சேனியம்மன் கோயில் திட்டப்பகுதியில் முன்னேற்றத்திலுள்ள 200 குடியிருப்புகள் அமைக்கும் பணிகள் 2017-2018-இல் முடிவுறும். 

இப்பணிகளுக்காக ரூ.16.55 கோடி செலவிடப்படும். மறுகட்டுமானத் திட்டத்தின்கீழ் குடியிருப்புகள், கூடுதல் தரைப்பரப்பு, புதிய வடிவமைப்புகள், பன்னடுக்கு மேம்பாடு போன்ற புதிய அம்சங்களுடன் அமைக்கப்படுகின்றன.

புதிய திட்டங்கள் குறித்து குடிசை மாற்றுவாரிய கோட்ட அலுவலகத்தை அணுகி தகவல் பெறலாம்.

தொடரும்……………

C.P.சரவணன், 9840052475
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com