விவசாயிகளின் பிரச்னைகளுக்கான தீர்வு பிரதமர் அலுவலகத்தில் முடக்கம்: குரல் கொடுப்பாரா கமல்?

விவசாயிகளின் பிரச்சனைகளுக்கான முழு தீர்வு பிரதமர் அலுவலகத்தில் முடங்கியிருக்கிறது. இதற்காக நடிகர் கமல் குரல் கொடுப்பாரா? என்று தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
விவசாயிகளின் பிரச்னைகளுக்கான தீர்வு பிரதமர் அலுவலகத்தில் முடக்கம்: குரல் கொடுப்பாரா கமல்?

விவசாயிகளின் பிரச்சனைகளுக்கான முழு தீர்வு பிரதமர் அலுவலகத்தில் முடங்கியிருக்கிறது. இதற்காக நடிகர் கமல் குரல் கொடுப்பாரா? என்று தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

'சுத்தத் தமிழ் வீரம் ரத்தத்துல ஊறும் சிங்கத் தமிழன் சங்கத் தமிழன்' என்கிற தங்களது திரைப்பட பாடல் வரிகளின் நிஜ வாழ்க்கை வெளிப்பாடாகத்தான் தங்களது தற்போதைய அரசாங்கம் மற்றும் அரசியல் குறித்த வெளிப்படையான, துணிச்சலான கருத்துகளைப் பார்க்கின்றோம். வாழ்க்கையில் சில பேருக்குத்தான் பேசியபடி வாழ்ந்துகாட்ட வாய்ப்பு கிடைக்கும். வெகு சில பேருக்குத்தான் சினிமாவில் பேசிய வசனங்களை வாழ்க்கையில் செய்து சாதிக்கும் மன உறுதி இருக்கும். அது தங்களுக்கு இருக்கிறது. மகிழ்ச்சி. தமிழர்களாகப் பெருமை அடைகிறோம்.

விவசாயிகள் தற்கொலை, போராட்டங்கள், விலை உயர்வு, உணவுத்தரமின்மை என நாடு பல ஆபத்தான பிரச்னைகளில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், விவசாயப் பிரச்னைக்கான முழுத் தீர்வு என்று அரசின் உயர்மட்டக் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்ட, விவசாயிகளின் வாழ்க்கையை (குறிப்பாக சிறு, குறு) சீராக்கும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த, கிராம அளவில் செய்யக்கூடிய / செயல்படுத்தக்கூடிய புதிய அணுமுறை, பிரதமர் அலுவலகத்தில் தேங்கிக்கிடக்கிறது.

இந்தியாவின் மிக முக்கியப் பிரச்னையாக உருவெடுத்திருக்கும் விவசாயப் பிரச்னைக்கான தீர்வை பிரதமர் கவனத்துக்குக் கொண்டுசெல்வதில் தடைகள் உள்ளன. தங்களைப் போன்ற அரசியலும் அரசாங்கமும் எப்படி செயல்பட வேண்டும் என்று நன்கறிந்த, மனதிடம் கொண்ட, பிரபலமான ஒரு நபராலேயே அந்தத் தடைகளை உடைத்து பிரதமர் அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியும். கொண்டு சேர்ப்பீர்கள்; 70 கோடி மக்களின் வாழ்வாதாரத்துக்காகக் குரல் கொடுப்பீர்கள் என்கிற நம்பிக்கையில் இது தொடர்பான தகவல்களை தங்களிடம் சேர்க்கின்றோம்.    

 தமிழகத்தைச் சேர்ந்த கணிப்பொறி வல்லுநர்கள் குழு 15 ஆண்டுக்கும் மேலான முயற்சியின் மூலம் தகவல் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியை, பயன்பாட்டினை விவசாயிகள் முழு அளவில் பயன்படுத்தி தரம், உற்பத்தி, நிகர லாபம் அதிகமாக்குதல் மற்றும் விவசாயம் செய்வதில் உள்ள  கடினத்தன்மையை இலகுவாக்கும், ஒரு புது இணையத் தளம் சார்ந்த கிராம அளவில் செயல்படும் திட்டத்தை உருவாக்கியிருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் சோதனை முறையில் இத்திட்டத்தை செயற்படுத்த வாய்ப்பு கிடைத்தது. வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட இந்தத் தீர்வை ஆய்வு செய்த மாநில மற்றும் மத்திய உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழு (தலைமைச் செயலாளர் மற்றும் விவசாயம் தொடர்புடைய செயலாளர்கள்), இது விவசாயத் துறையில் புதிய பரிமாணத்துக்கு வழிவகுக்கும் என்றும் இது ஆந்திரப் பிரதேசம் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்தக்கூடியது என்கிற சிறப்பான மதிப்பீட்டோடு ஒரு மாவட்டம் முழுமைக்கும் விரிவுபடுத்த அனுமதி வழங்கியது. துரதிஷ்டவசமாக ஆந்திர மாநிலத்தில் நடந்த தொடர் அரசாங்க பிரச்னைகளால், இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் போய்விட்டது.

மனம் தளராமல், சோதனை முறையில் கிடைத்த வெற்றியுடனும், உயர்மட்ட அதிகாரிகளின் அறிய மதிப்பீடுகளுடனும், நாடு முழுவதும் செயல்படுத்தும் முயற்சியில் அந்த வல்லுநர் குழு ஈடுபட்டு வருகிறது.

டெல்லியில் நடந்த பேரணி ஒன்றில் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டதையடுத்து, நாடாளுமன்றத்தில் விவசாயப் பிரச்னையின் கடுமையை விளக்கி, அதற்கான தீர்வை வேண்டி பாரதப் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். ஒரு நேர்மையான பிரதமர் நாட்டுக்கு கிடைத்தால் நிர்வாகம் எப்படி சீரடையும் என்பதற்கான உதாரணமாகக் அது கருதப்பட்டது. எங்கள் 15 ஆண்டுகால உழைப்புக்கான நேரம் வந்ததாக உணர்ந்தோம். பிஜேபியின் தேசியச் செயலாளரின் மூலமாக 48 மணி நேரத்துக்குள் எங்கள் தீர்வை பிரதமர் அலுவலகத்திடம் சமர்ப்பித்தோம். அதிகாரிகள் மிகவும் பாராட்டியதாகவும், விரைவில் அரசு இத்திட்டத்தை செயல்படுத்தும் என்று உறுதி கூறியதாகவும் அறிந்து மன நிறைவு அடைந்தோம். அடுத்த உத்தரவுக்காகக் காத்திருந்தோம். அடுத்த சில நாட்களில் டிஜிட்டல் இந்தியா திட்டம் மிகப்பெரிய அளவில் அறிவிக்கப்பட்டது. டிஜிட்டல் இந்தியா கிராமப்புற மேம்பாட்டுக்காக, விவசாயிகள் முன்னேற்றத்துக்காக  என்ன செய்ய முடியும் என்பதற்கான நிரூபணம் உள்ள நிலையில், அதற்கான எவ்வித அறிவிப்பும் வராததால் ஏமாற்றம் அடைந்தோம். அதிலிருந்து அதிகாரிகளிடமிருந்து எவ்வித பதிலையும் பெற முடியவில்லை, பிஜேபியின் தேசியச் செயலாளராலும்கூட.

 இந்நிலையில், உணவுப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போவதற்கு, தற்போதைக்கு விளைந்துகொண்டிருக்கும் பொருள்களின் தகவல் (live crop production data) இல்லாததுதான் என்று  பாரதப் பிரதமர் கூறிய கருத்து வெளியானது. எங்கள் திட்டத்தின் அடிப்படை விஷயங்களில் ஒன்று, அன்றன்று பயிரிடப்படும் தகவல்களை இணையத்தகவல்களாகப் பதிவது என்பதும்தான். எனவே, நாங்கள் சமர்ப்பித்த தீர்வு பாரதப் பிரதமர் கவனத்துக்குக் கொண்டுவரப்படவில்லை என்பதை அறிந்தோம். இல்லையென்றால், பாராளுமன்ற வாயிலில் தலைவைத்து வணங்கி நுழைந்த பாரதப் பிரதமர், நாடாளுமன்றத்தில் வேண்டிய தீர்வுக்குப் பதில் அளித்த எங்கள் தீர்வின் சிறப்பை, எங்கள் நாட்டுப்பற்றை நிச்சயம் அங்கீகரித்திருந்திருப்பார்.

மத்தியப் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த விவசாயப் போராட்டங்கள் ஒன்றை தெளிவாக உணர்த்துகிறது. தண்ணீர் மற்றும் உற்பத்தி கிடைத்துவிட்டால் மட்டும் விவசாயிகளின் பிரச்னை தீர்ந்து விடாது. விவசாயிகளின் விளைபொருள்களுக்கான உரிய விலை கிடைப்பதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்படாத வரை பிரச்னை தீரப்போவதில்லை.

தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யக்கூடிய கட்டமைப்பு, தீர்வு, விவசாயிகளுடன் அரசு நேரடித் தொடர்பில் இருக்கக்கூடிய வாய்ப்பு இருந்தால் மட்டும்தான் குறைந்தபட்ச விலை என்பது நடைமுறைக்குச் சாத்தியமாகும்.


கடன்களை தள்ளுபடி செய்வது நிரந்தர தீர்வை ஏற்படுத்துமா? நிச்சயம் இல்லை. அடுத்த விவசாயப் பருவத்தில் விலை வீழ்ச்சியோ, வறட்சியோ, அதிக மழையோ ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? தற்போதைய அணுகுமுறையில் என்ன மேம்பாடு செய்திருக்கிறோம் அத்தகைய விளைவுகளைத் தவிர்ப்பதற்கு? இந்த நிலை நீடித்தால், விவசாயம் என்றாலே போராட்டங்கள், பிரச்னைகள் என்கிற கருத்து வலுத்து, விவசாயத்தின் மீது இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விடும்.

இன்றைய உடனடித் தேவை தண்ணீர் இருந்து விவசாயம் செய்பவர்களது நிகரலாபத்தை அதிகரிப்பது (நல்ல தரம், அதிக விளைச்சல், உரிய விலை) மற்றும் விவசாயம் செய்வதில் உள்ள கடினத்தன்மையை இலகுவாக்குவது என்பதுதான். இதுதான் விரக்தியில், வாழ்க்கையைப் பற்றிய பயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நம்பிக்கையை, ஆர்வத்தை கொடுக்கும். நதி நீர் இணைப்பு, விளைபொருள்கள் கிட்டங்கி, எளிமைப்படுத்தப்பட்ட வங்கிக்கடன் மற்றும் சிறந்த பயிர்க் காப்பீடு போன்ற முக்கியத் திட்டங்கள் செயப்படுத்தப்படுவதற்கு வழி வகுக்கும்.

எங்களது திட்டம் குறித்து தங்களிடம் எடுத்துரைப்பதற்கு வாய்ப்பை நல்கும்படி வேண்டிக்கொள்கின்றோம்.

- Rm திருச்செல்வம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com