இந்தியாவின் துணை ஜனாதிபதிகளும், தேர்தல்களும்: சில சுவாரஸ்ய தகவல்கள்!

இந்தியாவின் 15-ஆவது துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடக்க உள்ளது.
இந்தியாவின் துணை ஜனாதிபதிகளும், தேர்தல்களும்: சில சுவாரஸ்ய தகவல்கள்!

இந்தியாவின் 15-ஆவது துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடக்க உள்ளது. இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியின் சார்பாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகளின் கூட்டணி சார்பாக, மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் இதற்கு முன்பாக இந்தியாவில் நடைபெற்ற 14 துணை ஜனாதிபதி தேர்தல்கள் குறித்தும், தேர்வு  செய்யப்பட்ட துணை ஜனாதிபதிகள் குறித்தும் சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். 

1.முதல் துணை ஜனாதிபதியான தத்துவப் பேராசிரியர்..!

காங்கிரஸ் உறுப்பினரும், சென்னை மாநில கல்லூரியில் துவங்கி இந்தியாவின் பல்வேறு முக்கிய பல்கலைக்கழகங்களில் தத்துவப் பேராசிரியராக பணியாற்றியவருமான சர்வபள்ளி ராதாகிருஷணன் காங்கிரஸ் சார்பில் இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட ஷேக் காதர் ஹுசைனின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியாக சர்வபள்ளி ராதாகிருஷணன் போட்டியின்றி 25.04.1952 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2.மீண்டும் ராதாகிருஷணன்..!

இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியாக ராதாகிருஷணன் ஐந்தாண்டுகளை நிறைவு செய்த பின்னர் மீண்டும் 1957-இல் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இம்முறையும் அவருக்கு எதிராக போட்டியிட்டவர்களின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், இரண்டாவது முறையாக போட்டியின்றி 23.04.1957 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ராதாகிருஷ்ணன் தனது பதவிக்காலம் முழுவதும் இந்தியாவின் முதல் ஜனாதிபதியான பாபு ராஜேந்திர பிரசாத்தின் கீழ் பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3.முதல் இஸ்லாமிய துணை ஜனாதிபதி..!

முதலிரண்டு முறை துணை ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷணன், தற்பொழுது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு விட்டார். இந்த  நிலையில், நாட்டின் மூன்றாவது துணை ஜனாதிபதி யார் என்பதனை தேர்ந்தெடுக்கும் தேர்தலில், தில்லியில் துவங்கப்பட்டு நாட்டின் மிக முக்கிய மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மாறிய 'ஜாமியா மில்லியா இஸ்லாமியா' வின் நிறுவனர்களில் ஒருவரான ஜாகிர் ஹுசைன் மற்றும் காங்கிரசின் சமந்த்சின்ஹர் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். இதில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஜாகிர் ஹுசைன் 07.05.1962 அன்று வெற்றி பெற்றார்.

4.காந்தியால் அரசியலுக்கு வந்த வழக்கறிஞர் இப்பொழுது துணை ஜனாதிபதி! 

ராதாகிருஷ்ணனைப் போலவே ஜாகிர் ஹுசைனும் ஜனாதிபதியாக போய் விட, நான்காவது துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இம்முறை சிறந்த வழக்கறிஞரும், வாழ்நாள் முழுவதும் தொழிலாளர் சங்கம் சார்ந்த செயல்பாடுகளுக்கு முன்னுரிமை தந்தவருமான வரககிரி வெங்கட கிரியும் (சுருக்கமாக வி.வி.கிரி), பேராசிரியர் ஹபீபும் களத்தில் நின்றனர். இதில் வி.வி.கிரி வெற்றி பெற்று 13.05.1967 அன்று நான்காவது துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். 

5.நீதிபதியிலிருந்து துணை ஜனாதிபதி..!

அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த ஜாஹிர் ஹுசைனின் அகால மரணத்தினை அடுத்து, துணை ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி பொறுப்பு ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டதனை அடுத்து, மீண்டும்  தேர்தல். ஆறு பேர் போட்டியிட்ட இந்த தேர்தலில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி, மத்திய சட்ட அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்த கோபால் ஸ்வரூப் பதக் வெற்றி பெற்றார். இவர் 31.08.1969 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

6.நகராட்சி உறுப்பினரிலிருந்து நாட்டின் துணை ஜனாதிபதி..!

ஸ்வரூப் பதக்கின் பதவிக்காலம் முடிந்ததும் நடைபெற்ற தேர்தலில் கர்நாடகாவின் ஒரு சிறிய மாவட்டத்தில் நகராட்சி உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையினைத் தொடங்கிய பி.டி.ஜாட்டியும்,  ஹோரோ என்பவரும் போட்டியிட்டனர். இதில் பி.டி.ஜாட்டி வெற்றி பெற்று 31.08.1974 அன்று ஆறாவது துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.   

7.ஒரு உருதுக் கவிஞர் துணை ஜனாதிபதியாக..! 

பி.டி.ஜாட்டியின் பதிவிகாலம் முடிவுற்றதனைத் தொடர்ந்து, நடந்த தேர்தலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, கல்வியாளர், எழுத்தாளர் மற்றும் உருதுக் கவிஞர் என பன்முகங்களைக் கொண்ட ஹிதாயத்துல்லா, போட்டியின்றி  வெற்றி பெற்று 31.8.1979 அன்று துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.         

8. தஞ்சையில் இருந்து தர்பார் மண்டபம் சென்ற தமிழன்..!

ஹிதாயத்துல்லாவுக்குப் பிறகு நடந்த தேர்தலில் தமிழகத்தில் இருந்து முதன் முறையாக ஒருவர் துணை ஜனாதிபதி போட்டிக்கு வருகிறார். தஞ்சையினை பூர்வீகமாக கொண்டவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்,மத்திய அமைச்சர் எனப் பல்வேறு பதவிகளை திறம்பட வகித்தவருமான ஆர்.வெங்கட்ராமன் போட்டியிடுகிறார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாபு சந்த்ரசென் காம்ளே என்பவரை தோற்கடித்து 31.08.1984 அன்று ஆர்.வெங்கட்ராமன் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

9. சாகச சங்கர் தயாள் ஷர்மா..!

ஆர்.வெங்கட்ராமன் தனது பதவிக்காலம் முடியும் முன்பே ராஜிநாமா செய்து விட்டு ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டதன் காரணமாக, துணை ஜனாதிபதி தேர்தல் முன்னரே நடைபெற்றது. இதில் போபால் மாநில முதல்வர், ஆளுநர், காங்கிரஸ் கட்சித் தலைவர் எனப்பலவேறு பதவிகளை வகித்தவரும்,மிகச் சிறந்த சட்ட நிபுணருமான சங்கர் தயாள் ஷர்மா போட்டியிட்டார். எதிர்த்து போட்டியிட்ட 26 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர் போட்டியின்றி 03.09.1987 அன்று துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

10. நேரு பாராட்டி..இந்திரா காந்தியினால் அரசியலுக்கு வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இப்பொழுது துணை ஜனாதிபதி..!

தனக்கு முந்தியவரான வெங்கட்ராமன் போலவே சங்கர் தயாள் சர்மாவும் பதவிக்காலம் முன்பே ராஜிநாமா செய்து விட்டு, ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் காரணமாக நடைபெற்ற தேர்தலில், தலித் சமூகத்தினைச் சேர்ந்தவரும், நேருவால் பாரட்டப்பட்ட இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியுமான கே .ஆர்.நாராயணன் போட்டியிட்டார். இந்திரா காந்தியால் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்ட இவர், ராஜிவ் காந்தியின் அமைச்சரவையில் பணியாற்றியுயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜோகிந்தர் சிங்கினை தோற்கடித்த அவர், 21.08.1992 அன்று துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

11. காங்கிரஸ் கட்சியின் இளம் துருக்கியர்களில் ஒருவர் இப்பொழுது துணை ஜனாதிபதி..!

கே.ஆர்.நாராயணனைத் தொடந்து அடுத்த துணை ஜனாதிபதிக்கான தேர்தலில்,இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் காங்கிரசின் 'இளம் துருக்கியர் படை' என்று பாராட்டப்பட்ட அணியினைச் சேர்ந்தவரான கிருஷ்ணகாந்த்  போட்டியிட்டார். எதிராக இருந்த சுர்ஜித் சிங்கை வென்ற அவர் 21.08.1997 அன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

12.ராஷ்டிரபதி நோக்கி ராஜஸ்தானின் சிங்கம்..!

கிருஷ்ண காந்த்தின் மறைவினைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்தவரும், மூன்று முறை ராஜஸ்தானின் முதல்வராக இருந்தவருமான பைரோன் சிங் செகாவத் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரசின் சுஷில் குமார் ஷிண்டேவினை தோற்கடித்த அவர் 19.08.2002 அன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

13. துணைவேந்தர் டூ துணை ஜனாதிபதி..!

பைரோன் சிங் செகாவத்தினைத்  தொடந்து நடந்த தேர்தலில், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியாக இருந்தவரும், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவருமான ஹமீத் அன்சாரி போட்டியிட்டார். அவருக்கு எதிராக நஜ்மா ஹெப்துல்லா மற்றும் ரஷீத் மசூத் ஆகிய இருவரும் போட்டியிட்ட பொழுதும், இருவரையும் முந்தி அன்சாரி வெற்றி பெற்றார். இவர் 11.08.2007 அன்று துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்          

14. ராதாகிருஷ்ண்னுக்கு அடுத்து இவர்தான்..!

முதல்முறை பதவிக்காலம் முடிந்ததும் மீண்டும் தேர்தலில் அன்சாரி போட்டியிட்டார். இம்முறை பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்தவரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் போட்டியிட்டார்.அவரை எளிதாக வென்ற அன்சாரி தற்போதைய துணைக் குடியரசுத் தலைவராக உள்ளார். நாட்டின் முதல் துணை ஜனாதிபதியான ராதாகிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக தொடர்ந்து இரண்டாவது முறை இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர் அன்சாரிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது அடுத்ததாக வெங்கய்யா நாயுடுவா அல்லது கோபாலகிருஷ்ண காந்தியா என்பதற்காக துணை ஜனாதிபதி மாளிகை காத்திருக்கிறது     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com