கமலஹாசன் எழுதிய கவிதை!

பிரபல வார இதழ் ஒன்றில் கமல் 2006 வருடம் எழுதிய கவிதை இது.  மீள் வாசிப்பில் புதியதாகத் தோன்றலாம். 
கமலஹாசன் எழுதிய கவிதை!

பிரபல வார இதழ் ஒன்றில் கமல் 2006-ஆம் வருடம் எழுதிய கவிதை இது.  மீள் வாசிப்பில் புதியதாகத் தோன்றலாம். 

தெருப்பாடகன்

ஒற்றி ஒற்றி எடுத்தும்
சிவப்பாய் கசிந்தது காயம்.
சுற்றி நின்ற கூட்டத்தின் நிழலால்
காயம் சரியாய்தென்படவில்லை.
சற்றே உற்று
தெளிவாய்ப் பார்த்ததில்,
சின்னக் குழிவு,
பிடரியின் நடுவில்.
விட்டுவிட்டு வரும்
சிவப்புக்கு நடுவே,
தட்டுத்தட்டாய் துருத்தியதெலும்பு.
ரத்தச் சகதியில் சுற்றி நின்றவர்
காலணி செய்த ரண ரங்கோலி.

போக்குவரத்துக் கிடைஞ்சலில்லாமல்
ரோட்டின் ஓரம் நகர்த்தினோம்
அவனை.
பேண்ட்டுப் பையில்
பர்சும் இல்லை,
யார் எனக் கேட்டால்
பதிலும் இல்லை.
இரண்டு கட்டையில்
காந்தாரத்தில் ஸ்ருதி பிசகாமல்
கேட்டவைக்கெல்லாம்
ஸ்வரமாய் பிடித்தான்.

‘நிறைய ரத்தம்
பிழைப்பது கஷ்டம்’
வேடிக்கை பார்க்கும் பெரியவர்
சொன்னார்.
அது கேட்டதுபோல்
அவன் பாடிய ஸ்வரத்தை
மாற்றிப் பாடினான்,
கீழ் ஸஜ்ஜமத்தில்.
‘கா’வை நிறுத்தி
‘சா’வென்றிசைத்தான்.

அடுத்து கேள்விகள்
அனைத்திற்கும் அவன்
‘சா’ ‘கா’ என்றான்
ஸ்ருதிப் பிழையின்றி
‘பாட்டுக் கலைஞன்’ கூட்டத்தில்
ஒருவர் புதிர் விடுவித்தார்
அதுவும் கேட்டது போல் அவன்
இசைக்கும் ஸ்வரத்தை
உடனே இழந்தான்
வெற்றுச் சொல்லாய் ‘சா’ எனச்
சொன்னான்
செத்தான் என்பதின் பகுதி
‘சா’வேதான். இவன் தமிழன்
என்றார் மனமகிழ்ந்த ஓர்
தமிழாசிரியர்.

பக்கத்தூரில் மருத்துவ வசதி,
பாதி வழியிலே உயிர்
பிரிந்ததினால்,
காய்கறி லாரியில்
ஊர்வலம் போனான்.

சுற்றி நின்றதால்
சுற்றமா என்ன?
அவரவர் வீட்டிற்குப்
புறப்பட்டுப் போனோம்.

என்றோ வானொலி கீதம்
இசைக்கையில் அல்லது
பச்சைக் காய்கறி
விற்கும் சந்தையில்.‘சா’ ‘கா’
என்றவன் நினைவு கிளம்பும்.

ஜுரம் விடும் வேளையில்
வெந்நீர் குளியலில்படுக்கைவிட்டு
மீண்ட களிப்பில் ‘சா’ ‘கா’ என்று
நானும் பாடி, அவன் காந்தாரத்தைக்
கொப்பளித்துமிழ்வேன்.

இடித்தவன் தவிர
மற்றவர் யார்க்கும்
மனதளவிலே பாதிப்பில்லை.
குற்ற உணர்வும்
மற்ற வியாதி போல்
அவ்வளவாகத் தொற்றுவதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com