விவசாய பிரச்னைகளும் தீர்வுகளும்.. பிரதமர் அலுவலகக் கதவுகள் திறக்கும் வரை குரல்கொடுப்போம்!

விவசாய பிரச்னைகளுக்கு தீர்வு காண தமிழக தொழில்நுட்ப வல்லுநர்கள் அழைப்பு விடுத்திருப்பதை காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் ஆறுபாதி ப. கல்யாணம் வரவேற்றுள்
விவசாய பிரச்னைகளும் தீர்வுகளும்.. பிரதமர் அலுவலகக் கதவுகள் திறக்கும் வரை குரல்கொடுப்போம்!

விவசாய பிரச்னைகளுக்கு தீர்வு காண தமிழக தொழில்நுட்ப வல்லுநர்கள் அழைப்பு விடுத்திருப்பதை காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் ஆறுபாதி ப. கல்யாணம் வரவேற்றுள்ளார்.

அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாய சங்க தலைவர்கள் தலைநகர் டெல்லியில் 100 நாட்கள் போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் நிலையில், விவசாய சங்க தலைவர்கள், விவசாயிகள் நல ஆர்வலர்கள் மனது வைத்தால் விவசாயிகள் பிரச்சனைக்கான தீர்வை 100 மணி நேரத்தில் ஏற்படுத்த முடியும் என்று தமிழக தொழில்நுட்ப வல்லுநர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

அந்தக் கட்டுரை: விவசாயிகள் பிரச்னைக்கான தீர்வு 100 மணி நேரத்தில்: நாங்கள் தயார்; நீங்கள்?

இது குறித்த அறிக்கையை பிரதமர் அலுவலகத்திலும் அளித்துள்ளனர். ஆனால், அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து தினமணி.காமில் வெளியான கட்டுரையைப் பார்த்த ஆறுபாதி ப. கல்யாணம்  அனுப்பியுள்ள கடிதத்தில், 

இந்தியாவின் 14 கோடி விவசாயிகளில் ஒருவரான நான், நேரிடையாக விவசாயப் பணிகளில் கடந்த 30  ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன். விவசாயிகளுக்கு வாழ்க்கை பாதுகாப்பை உறுதி செய்தால்தான் தேசம் நிலையான உணவுப் பாதுகாப்பை பெறமுடியும் என்று கடந்த 20 ஆண்டுகளாக மத்திய - மாநில அரசுகளிடம் எங்கள் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மூலம் விவசாயிகள்  நலன் காக்கும் நடவடிக்கைகள், கொள்கை முடிவுகள் எடுக்க வலியுறுத்தி வருகிறோம்.

இந்தியாவில் நலிந்துபோன விவசாயிகளின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க விவசாயம் செய்வதற்கு நீர்ப்பாசன ஆதாரங்களை உறுதி செய்ய வேண்டும். வேளாண் பயிர்கடன்கள் வட்டி இன்றியும், இதர விவசாய கடன்கள் அனைத்தும்  4 சதவீத வட்டிக்கு மிகாமல் போதுமான அளவில், குறித்த நேரத்தில் கிடைக்க வேண்டும். விவசாய விளைபொருள்கள் அனைத்துக்கும் உற்பத்தி செலவுக்கும் மேல் குறைந்தபட்சம் 50 சதவீதம் லாபம் வைத்து ஆதாய விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையாக (MSP) கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். விவசாய பயிர்க் காப்பீடு தனிநபர் காப்பீடாக, ஒவ்வொரு விவசாயியின் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில், முழு அரசுப் பொறுப்புடன் ஏற்படுத்த வேண்டும். விவசாய உற்பத்தி மற்றும், விவசாயிகள் நலன்கள் இவை இரண்டும் சமமாக முக்கியப்படுத்த வேண்டும். 

இந்த ஐந்து முக்கியப் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டால்தான், இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் என்ற அவல விபரீத நிலைகளைத் தடுக்க முடியும்  என்று தொடர்ந்து அரசுகளிடம் வலியுறுத்தி வருகிறோம். "விவசாயிகளின் தற்கொலைகள்  தேசிய அவமானம்" என்று அரசுகள் உணர வேண்டும்.  மறைக்கப்பட்ட காந்திய பொருளாதார மாமேதை டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் "நிலைத்த பொருளாதாரக் கொள்கைகளை" அடிப்படையாகக் கொண்டு  "தற்சார்பு பசுமை கிராமங்களை" உருவாக்கினால்தான், இந்தியாவின் தேய்ந்து நலிந்துவிட்ட கிராமங்கள்  செழுமையும், வளமையும் மிகுந்து ஒளிரும். 

மேற்கண்ட அனைத்தும்  நிறைவேற, ஒவ்வொரு கிராம அளவிலும் நுண்ணிய திட்டமிடல் மற்றும் செயலாக்கம் (Micro level Planning & Execution) தற்போதைய நவீன  தகவல் தொழில்நுட்பம் மூலம் நிறைவேற்ற முடியும். ஆனால், அரசுகள் இதுவரை இதைச் செய்யவில்லை. தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இவற்றை நிறைவேற்ற வேண்டும். இவற்றை நிறைவேற்றினால் இந்திய விவசாயச் சங்கங்கள் டெல்லியில் போராட வேண்டிய அவசியம் ஏற்படாது. தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள்,  மீண்டும் மீண்டும்  தலைநகரில் கோவணத்துடன் போராடும் நிலை ஏற்படாது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, டிஜிட்டல் இந்தியா, தகவல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி "வளர்ச்சி" என்று பேசி பல துறைகளிலும்  இந்தத் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த கணினிப் பொறியாளர்கள் குழு வேளாண்மைத் துறையில் இந்த நவீன தகவல்  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காண  பிரதமர் அலுவலகத்தில் அளித்த செயல் திட்ட அறிக்கை முடங்கிப் கிடப்பதாகவும், இதற்கு நடிகர் கமல் குரல் கொடுப்பாரா? என்று இக்குழுவைச் சேர்ந்த திருச்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார். அதை  "தினமணி"  இணையதளத்தில் படித்தேன். 

அந்தக் கட்டுரை: விவசாயிகளின் பிரச்னைகளுக்கான தீர்வு பிரதமர் அலுவலகத்தில் முடக்கம்: குரல் கொடுப்பாரா கமல்?

தகவல் தொழில்நுட்ப உதவியுடன் விவசாயிகளின் பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு காண கிராம அளவில் நுண்ணிய திட்டமிடல், செயலாக்கம்  மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக அரசுகளிடம் வலியுறுத்தி வரும் எங்கள் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழக  கணினிப் பொறியாளர்கள் குழு அளித்த திட்டங்களை நிறைவேற்ற உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை  வேண்டிகொள்கிறது. இதற்கு தமிழக விவசாய சங்கங்கள் அனைத்தும் ஒற்றுமையாக மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம். தமிழக விவசாயிகள் வாழ்வாதார மீட்புப் போராட்டத்துக்கு கடந்த ஓராண்டாக தீவிரமாகக் குரல் கொடுத்துவரும் தமிழ்த் திரை உலகைச் சேர்ந்த அனைவரும், சமூக அமைப்புகளும் இதை பாரதப் பிரதமரிடமும், தமிழக முதல்வரிடமும் கொண்டு செல்ல வேண்டும்.

இயற்கையை சிதைக்காத அறிவியல் வளர்ச்சிதான் இந்தியாவை வளமாக்கும். 
தற்சார்பு பசுமை கிராமங்கள்!  வலிமையான  சுதேசி இந்தியா! 
நம் லட்சியம் -  விவசாயிகளின் வாழ்க்கை பாதுகாப்பு; தேசத்தின் உணவுப் பாதுகாப்பு
விவசாயிகளைக் காப்போம்! தேசத்தைக் காப்போம்.
தங்கள்,
ஆறுபாதி ப. கல்யாணம்
பொதுச் செயலாளர், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, காவிரி டெல்டா மாவட்டங்கள்.
தொடர்பு: arupathykalyanam@rediffmail.com
அலைபேசி: 9443093447 என்று தெரிவித்துள்ளார்.

எனவே, இதுவரை விவசாயப் பிரச்னையாகவே இருந்து வந்தது. உண்மையில் இது விவசாயத்தின் பிரச்னையோ, விவசாயிகளின் பிரச்னையோ அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னை. தமிழர்களின் பிரச்னை. எனவே, இது குறித்து சமூக ஆர்வலர்களும், திரையுலகப் பிரமுகர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டும். 

பாமரர்களும், சாமானியர்களும் நம்மால் என்ன செய்துவிட முடியும் என்று இருந்துவிடாமல், இந்த பிரச்னைகளும், அதற்கான தீர்வுகளும் பிரதமரின் காதுகளை சென்றடையும் வரை குரல் கொடுப்போம். வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் மோடி, அங்கு இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் இந்தியர்களைத் தேடிச் சென்று சந்திக்கிறார். 
அந்த வகையில், தமிழக விவசாயிகளும் விவசாய நாடு என்னும் இந்தியாவுக்கான அடையாளத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் பெருமைக்குரியவர்கள்தான். எனவே, விவசாயிகளையும், விவசாயப் பிரச்னைக்கான தீர்வுகளுடன் காத்திருக்கும் தமிழக தொழில்நுட்பட்க குழுவினரையும் நேரில் சந்தித்து, அவர்களுக்கான தீர்வுகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்வரை நமது குரல் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com