ரூபாவைப் போன்ற நேர்மையான அதிகாரியின் சோதனையில் மாட்டிக் கொண்டது சசிகலா குடும்பத்தாரின் துரதிருஷ்டமே: திலகவதி ஐபிஎஸ்!

தான் பொறுப்பேற்றுக் கொண்ட 18 நாட்களில் இவ்வளவு பெரிய முறைகேடு ஒன்றை அவர் கண்டுபிடித்திருக்கிறார். அந்த முறைகேட்டை கடைசி வரை ஆராய்ந்து அதிலுள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வர அவருக்கு அனுமதி அளிக்காமல்
ரூபாவைப் போன்ற நேர்மையான அதிகாரியின் சோதனையில் மாட்டிக் கொண்டது சசிகலா குடும்பத்தாரின் துரதிருஷ்டமே: திலகவதி ஐபிஎஸ்!

பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை முறைகேடுகளைப் பற்றி நமது ஊடகங்களில் நாளுக்கொரு செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது. ரூபா ஐபிஎஸ் தனது பொய்யான குற்றச்சாட்டுகளுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் மானநஷ்ட வழக்குப் போடுவேன் என டிஜிபி சத்யநாராயணா குறித்த செய்தி முதல் நாள் வெளியானால், மறுநாள்; நான் பொய்யாக எந்தக் குற்றச்சாட்டையும் கூறவில்லை, மன்னிப்புக் கேட்க முடியாது என மறுநாள் ரூபா ஐபிஎஸ் குறித்து செய்தி வெளியாகிறது. நமது ஊடக விவாதங்களோ இந்த விவகாரத்தைப் பற்றிய தெளிவான விவரங்களை அளிப்பதற்கு பதில் மேலும் மக்களைக் குழப்பமடையச் செய்யும்படியான விவாதங்களையே ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. உண்மையில் கர்நாடகாவின் பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்ததென்ன? என்று இணையத்தில் தேடியதில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான திலகவதி ஐபிஎஸ் அவர்களது நேர்காணல் சற்றுத் தெளிவான விளக்கங்களுடன் இருப்பதாகத் தோன்றியது. இவ்விவகாரத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதை வாசித்தறிந்தால் பொதுமக்களுக்கும் இவ்விஷயத்தின் மீதான சில குழப்பங்கள் தீரலாம்.

திலகவதி ஐபிஎஸ் தனது நேர்காணலில் பகிர்ந்து கொண்ட விவரங்கள்...

“சசிகலா சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார் என்பதை நிரூபிக்க வீடியோ ஆதாரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இணையத்தில் அதை நானும் கூட பார்த்தேன். அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை, ஏனென்றால் ஆரம்பத்தில் இருந்தே சுய சம்பாத்தியம் எதுவுமில்லாமல், சுயமான உழைப்பு எதுவுமில்லாமல் சொகுசு வாழ்க்கைக்கு பழகிப் போன ஒருவர் தன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ சம்பாதிக்காத பணத்தை எல்லாத் திசைகளிலும் வாரி இறைத்து தனக்கான சலுகைகளையும், வசதிகளையும் பெற முடியும். எதை வேண்டுமானாலும் செய்து விட்டுதப்பித்து விடலாம் என்ற மனோபாவத்தில் தான் இவ்வளவு காலமும், அவரும் அவரது குடும்பத்தினரும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள், அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். அதனால் அதே உத்தியை அவர்கள் சிறையிலும் பயன்படுத்தி இருப்பார்கள். அங்கே அவர்களது துரதிருஷ்டம், ரூபா என்ற ஐபிஎஸ் அதிகாரி கர்நாடகத்தின் பரப்பன அக்ரஹாரா சிறைத்துறைக்கு மாற்றலாகிப் பொறுப்பேற்றுக் கொண்டது. இங்கே ரூபாவின் டிராக் ரெகார்டைப் பார்த்தால் அவர் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

அவர் 2000 மாவது ஆண்டில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். காவல்துறை சேவைக்கு தன்னுடைய விருப்பத்தின் பேரில் வந்தவர். காவல்துறை அதிகாரிக்கான பயிற்சி முடிவில் ஐந்தாம் இடம் பெற்றவர், அங்கேயே துப்பாக்கி சுடுவதில் வல்லமை பெற்றவர் என்று பதக்கமும் பெற்றிருக்கிறார். 2010 இல் ஒரு ஐஏஎஸ் அதிகாரியை மணந்து கொண்டிருக்கிறார், அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதுவரை மூன்று மாவட்டங்களில் பணிபுரிந்திருக்கிற ரூபா முக்கியமாக கனிம வளக் கொள்ளையர்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கும் முயற்சிகளில் வெற்றிகரமாக இயங்கியவர் எனப் பெயரெடுத்திருக்கிறார், உமா பாரதியைக் கைது செய்திருக்கிறார். எடியூரப்பாவிற்கு வழங்கப்பட்ட கார்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமானதாக இருக்கிறது, அவற்றை காவல்துறைப் பயன்பாட்டுக்கு எடுக்க வேண்டும் எனத் துணிச்சலாக கூறியவர். சொல்லி விட்டு அதை வாபஸும் பெற்றிருக்கிறார். அந்த அளவுக்கு தனது காவல்துறை பணியை நேசித்து நேர்மையும், துணிவும் கொண்டு செயலாற்றும் ஒரு அதிகாரி தான் ரூபா! அப்படிப்பட்ட ரூபா சைபர் கிரைம் பிரிவிலிருந்து ஜூன் மாதம் 26 ஆம் தேதி தான் சிறைத்துறைக்கு மாற்றப்பட்டு பொறுப்பேற்றிருக்கிறார். இங்கே நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், அவர் பொறுப்பேற்றுக் கொண்ட நான்கே நாள்களில் அதாவது ஜூன் 30 ஆம் தேதி அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்ட பாலபாடத்தின் படி பரப்பன அக்ரஹார சிறையில் ஒரு அடிப்படை ஆய்வை மேற்கொள்கிறார்.

பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையின் எக்கச்சக்கமான முறைகேடுகளில் ஒரு புள்ளி தான் சசிகலா விவகாரம், அதைத்தாண்டியும் அங்கே முறைகேடுகள் உண்டு!

பரப்பன அக்ரஹார சிறையில் எக்கச்சக்கமான முறைகேடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் சசிகலா விவகாரம் ஒரு சின்ன புள்ளி தான். அதைத் தாண்டியும் அங்கு வேறு 30 விதமான முறைகேடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. என்று ரூபாவுக்குத் தகவல் கிடைக்கிறது. அந்தத் தகவல்களின் அடிப்படையில் ரூபா 30 ஆம் தேதி ஒரு சூப்பர்ஃபீஸியல் ஆய்வை மேற்கொள்கிறார். அந்த நேரத்தில் அங்கிருந்த மருத்துவர்கள் அளித்த மருத்துவ அறிக்கையைப் பார்க்கிறார். அவர்கள் அளித்திருந்த அறிக்கையின் படி பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்ட 25 கைதிகளில் 18 பேர் போதை மருந்துக்கு அடிமையாகி இருப்பது தெரிய வருகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியான ரூபா... அதன் பின்னர் தான் அந்த சிறைச்சாலையில் செல்ஃபோன், குட்கா, கஞ்சா உள்ளிட்டவை தாரளமான புழக்கத்தில் இருப்பதை கண்டறிகிறார். இதைப் பற்றி மேலும் விவரமாக அறிந்து கொள்ளும் பொருட்டு அவர் மேலும் தகவல் சேகரிக்கத் தொடங்குகிறார். அதன் பிறகு தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அது உண்மையா, பொய்யா என்பதை அறிந்து கொள்ள ஜூன், 10 ஆம் தேதி மறுபடியும் பரப்பன அக்ரஹார சிறைக்குச் செல்கிறார். 

அப்போது தான் அவருக்குத் தெரிகிறது சசிகலா தங்கியிருந்த சிறைச்சாலை அறை நவீனப் படுத்தப் பட்டிருக்கிறது, அவருக்கு அங்கே இரட்டைக் கட்டில் ஒன்று தரப்பட்டிருக்கிறது. ஃபேன் தரப்பட்டிருக்கிறது, சமையலறை ஒன்று மாடுலர் கிச்சன் முறையில் நவீன வசதிகளுடன் வழங்கப் பட்டிருக்கிறது, 52 இஞ்ச் டிவி தரப்பட்டிருக்கிறது... இந்த வசதிகளை எல்லாம் சசிகலாவுக்கு வழங்க சட்டப்படி அங்கே அனுமதியே கிடையாது. சிறைவிதிகள் என்றொரு புத்தகம் இருக்கிறது, கர்நாடகா சிறைச்சாலை மேனுவல் என்றொரு புத்தகமும் இருக்கிறது, அவையெல்லாம் 10,000 பக்கங்கள் கொண்ட மிகத்தடிமனான புத்தகங்கள் எல்லாம் கிடையாது. அவை வாய்ப்பாடு போன்ற சிறு கையடக்கப் பிரதிகள் தான். எத்தனையெத்தனையோ புத்தகங்களைப் படித்து ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றூ தேர்வாகி வருகிற ரூபாவைப் போன்ற் அதிகாரிக்கு இதைப் படித்து விளங்கிக் கொள்வது ஒன்றும் சிரமமான வேலையே அல்ல! ஒரு மணி நேரம் ஓன்றிப் படித்தாலே அதில் இருக்கும் சட்டதிட்டங்களை அவரால் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். அப்படி அதைப் படித்து விட்டு வந்து பார்த்ததில் தான் சசிகலாவுக்கு முறைகேடாக வழங்கப்பட்டுள்ள மிதமிஞ்சிய சலுகைகள் என்னென்ன என்று அவருக்குத் தெரிகிறது.

சிறைச்சாலையில் சசிகலா, தனது சொந்த ஆடையில் தான் உலா வருகிறார். அவருக்குப் பழங்கள், மருந்துகள் எல்லாம் சிறைக்கு வெளியில் இருந்து நிறைய வந்து கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி அவர் மீது வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டாக, அவருக்குப் பணிபுரிவதற்கென்றே அங்கேயே பணியிலிருக்கும் சிறைக்காவலர் ஒருவரும், அங்கே தண்டனைக் கைதியாக இருக்கும் பெண் ஒருவரும் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். சசிகலாவுக்குத் தேவையான சமையல் வேலைகளை அந்தப் பெண்மணி தான் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதெல்லாம் ரூபாவுக்குத் தெரிய வருகிறது. இது தவிர பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையிலிருந்து முக்கால் கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. அங்கே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டோ அல்லது சொந்தமாகவே வாங்கிக் கொண்டோ சசிகலாவுடன் சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இளவரசியின் மகன் விவேக் தங்கி வசித்து வருகிறார்... சசிகலாவுக்குத் தேவையான சாப்படு எல்லாம் அங்கிருந்து தயாராகி வருகிறது... ஓரிருமுறைகள் சசிகலா சிறை அதிகாரியின் காரிலேயே அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று திரும்பி இருக்கிறார். சிறையை விட்டு வெளியேறிச் சென்று தனக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருகிறார். கோயில்களுக்குச் சென்று வருகிறார் என்பது மாதிரியான நிறைய விஷயங்களை எல்லாம் ரூபா கேள்விப்படுகிறார். 

இப்போது ரூபா என்ன செய்கிறார்? என்றால்; 

சிறைத்துறையின் உயரதிகாரியான டிஜிபி அவர்களுக்கே லஞ்சம் அளிக்கப்பட்டதால் தான், இவ்வளவு துணிச்சலாக இப்படிப்பட்ட மிதமிஞ்சிய முறைகேடான செயல்களில் இவர்கள் ஈடுபடுகிறார்கள் என்று கேள்விப்படுகிறார். முறைகேடுகள் என்றால் ஒன்றோ, இரண்டோ அல்ல! ரூபா சசிகலா விவகாரத்தைப் பற்றி மட்டுமே அப்போது பேசவில்லை. அவர் அங்கிருக்கும் பிற முறைகேடுகளையும் சேர்த்து சோதித்துப் பார்த்து விட்டு அவற்றுக்கான ஆதாரங்களையும் சேகரித்துத் தான், புகைப்படச் சான்றுகளுடன் தனது மேலதிகாரிகளுக்கு அனுப்பி இருக்கிறார். அதில் இன்னொரு முக்கியமான விவகாரம் முத்திரைத் தாள் மோசடி மன்னனான தெல்கி விவகாரம். சசிகலாவுக்கு என்னென்ன சலுகைகள் செய்யப்பட்டிருக்கின்றனவோ அதே சலுகைகளை தெல்கியிம் அனுபவித்து வருகிறார் என்பதோடு அவர் ஆண் என்பதால் அவருக்கு தினமும் மசாஜ் செய்துகொள்ளும் வசதி கூட அங்கே வழங்கப் பட்டிருக்கிறதாம். இதையெல்லாம் ரூபா ஆதாரங்களுடன் பதிவு செய்து அனுப்பி இருக்கிறார்.

இதற்கிடையில் நம்ம ஊர் டிராஃபிக் ராமசாமி போல, அங்கே கர்நாடகத்தில் இருக்கும் சமூக ஆர்வலர் ஒருவர் சசிகலா ஜெயிலுக்கு போன 31 அம் நாள், சசிகலாவை இதுவரை எத்தனை நபர்கள் சந்தித்திருக்கிறார்கள்? 40 பேர் சந்தித்ததாகத் தகவல் வருகிறதே? அது உண்மை தானா? என்று கேட்டு ஒரு RTI போடுகிறார். அந்த RTI  க்கு வந்த பதிலில் இதுவரை 14 பேர் சசிகலாவைச் சந்தித்திருப்பதாக பதில் வருகிறது சிறைத்துறையிலிருந்து. சசிகலா 14 பேரைச் சந்தித்ததும் கூட முறைகேடு தான்.  காரணம் என்னவென்றால் இவர் ஒரு தண்டனைக்கைதி... அதிலும் மிக மோசமான ஒரு ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப் பட்டு தண்டனை பெற்றவர். இதெல்லாம் தெரிய வந்த போது ரூபா என்ன செய்தார் என்றால்; தனக்குத் தெரிய வந்த, தான் கேள்விப்பட்ட தகவல்களை எல்லாம் ஒரு பக்கம் தனியாகப் பிரிக்கிறார். இன்னொரு பக்கம் தனக்குக் கிடைத்த தரவுகள் மற்றும் வாக்குமூலங்களைத் தனியாகப் பிரித்து எடுத்து வதந்திகள் தனி, வாக்குமூலங்கள் மற்றும் ஆதாரங்கள் தனி என இருவிதமான புகார் கோப்புகளை டிஜிபிக்கு அனுப்புகிறார். அப்படி அவர் அனுப்பிய புகாரில், 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு இந்த முறைகேடுகளை எல்லாம் நீங்கள் அனுமதித்ததாக இங்கு வதந்திகள் உலவுகின்றன. எனவே உங்களுடைய பெயரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொறுப்பு உங்களுக்கு இருப்பதால் உடனடியாக இந்த விஷயத்தில் நடவடிக்கைகளை எடுங்கள் என்று குறிப்பிட்டு நல்லெண்ணத்துடன் ஒரு புகார் அனுப்புகிறார். அவர் டிஜிபிக்கு மட்டுமே புகார் அனுப்பவில்லை... அந்தப் புகாரின் நகல்களை முறைப்படி உள்துறை செயலருக்கு ஒரு பிரதியும், தலைமைச் செயலருக்கு ஒரு பிரதியும், முதலமைச்சர் அலுவலகத்துக்கு ஒரு பிரதியும் கூட அனுப்பி வைக்கிறார். அதில் ஏதோ ஒரு பிரதி மூலமாக தகவல்கள் வெளியில் கசிந்து பத்திரிகையாளர்கள் ரூபாவைச் சந்திக்கிறார்கள்.

அந்தச் சந்திப்பு யூ டியூபில் காணக் கிடைக்கிறது. யார் வேண்டுமானாலும் அதைப் பார்க்கலாம், அதில் அவர் திரும்பத் திரும்பச் சொல்வது நான் கேள்விப்பட்ட வதந்திகள் மற்றும் ஆதாரங்களை தனித் தனியாகப் பிரித்து தான் நான் என் உயரதிகாரிகளுக்குப் புகார் அனுப்பி இருக்கிறேன். அதில் உள்ள விவரங்களை அஃபீஸியல் சீக்ரெட் ஆக்ட் சட்டவிதிகளின் படி நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. என்று தான் தெரிவிக்கிறார். என்னைப் பொறுத்தவரை நிச்சயமாக இந்த விஷயத்தில் ரூபா எடுத்தது மிக நேர்மையான நடவடிக்கை. தான் பொறுப்பேற்றுக் கொண்ட 18 நாட்களில் இவ்வளவு பெரிய முறைகேடு ஒன்றை அவர் கண்டுபிடித்திருக்கிறார். அந்த முறைகேட்டை கடைசி வரை ஆராய்ந்து அதிலுள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வர அவருக்கு அனுமதி அளிக்காமல் அவசர, அவசரமாக அவரை இடம் மாறுதல் செய்தது அநியாயமானது. இது குற்றவாளிகளுக்குத் துணை போவது. இது அவர்களுக்கு செளகரியம் செய்வதற்கு ஒப்பானது என்று தான் நான் இந்த விஷயத்தைப் பார்க்கிறேன்.”
 
சிறையில் இருக்கும் கைதிகளுக்கு என்னென்ன சலுகைகள் எந்தெந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன என்பது குறித்து...

“சசிகலா சிறைச்சாலைக்குள் நுழைவதற்கு முன்பாகவே, தான் உடல்நிலை சரியில்லாதவர் என்பதால் தனக்கு சமைத்துக் கொள்ளவோ, அல்லது சிறப்பு சாப்பாடு வெளியில் இருந்து பெற்றுக் கொள்வதற்கோ எனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் அதை அனுமதிக்க முடியாது என்று இதே டிஜிபி சத்யநாராயண ராவ் தான் மறுத்து விட்டார். அதற்குப் பிறகு சசிகலா தன்னை ஒரு சிறப்புக் கைதியாக (A கிளாஸ்) அங்கீகாரம் கொடுத்து நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிமன்றம் அதை மறுத்து விட்டது. ஆகவே இவருக்கு எந்தவிதமான சிறப்புத் தகுதியும் வழங்கப்படவில்லை. சில கைதிகளுக்கு அப்படியான சிறப்புச் சலுகைகள் வழங்கப் பட்டால், அந்தச் சலுகைகள் என்னவாக இருக்குமென்றால், அவர்களது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கொஞ்சம் பருப்பு அதிகமாகப் போட்டு சமைத்துக் கொடுங்கள், அல்லது சர்க்கரை குறைவாகப் போட்டு சமைத்துத் தாருங்கள், மருந்து மாத்திரைகள் வழங்கலாம், அத்தகையோர் அவரவர் சொந்த உடைகளையே அணிந்து கொள்ளலாம் என்பது மாதிரியான சலுகைகள் தான் வழங்கப் படக் கூடுமே தவிர; வேறு விதமான சலுகைகளெல்லாம் சிறைச்சாலையில் வழங்கப் படமாட்டாது. சசிகலா இத்தகைய குறைந்தபட்ச சலுகைகளுக்கு கூட தகுதியற்றவர் என நீதிமன்றம் அறிவித்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகளென வீடியோ ஆதாரங்களுடன் வெளியிடப்பட்ட விஷயங்கள் மிக மிக அதிர்ச்சிகரமானவை. இதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாமல் இங்கே தமிழ்நாட்டில் நமது அரசியல்வாதிகளும், அறிவாளிகளும் யானையைப் பார்த்த ஐந்து குருடர்களைப் போல அவரவர் கட்சி சார்ந்த நியாயங்களைப் பேசிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர். கர்நாடகாவின் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் முறைகேடாக சலுகைகள் வழங்கப்பட்டது சசிகலாவுக்கு மட்டுமில்லை முத்திரைத்தாள் மோசடி தெல்கிக்கும் தான். இந்த மோசடிகளை, முறைகேடுகளை எல்லாம் நிரூபிக்கத் தான் ஆதரங்களைச் சேகரித்து உயரதிகாரிகளுக்கு அனுப்பினார் ரூபா. ஆனால் நாம் தமிழ்நாட்டில் இதென்னவோ சசிகலாவுக்கு மட்டுமே எதிரான விவகாரம் என்று கருதிக் கொண்டு, அவரது பெயரை மட்டுமே மந்திர உச்சாடனம் போல உச்சரித்து தேவையில்லாமல் அவரை பெரிய மனுஷியாக்கிக் கொண்டிருக்கிறோம். 

சசிகலா சிறைச்சாலைக்கு சென்ற 117 நாட்களுக்குப் பின் மறுபடியும் நரசிம்ம மூர்த்தி என்பவர் சசிகலாவை இதுவரை எத்தனை பேர் சந்தித்திருக்கிறார்கள்? என்று மீண்டும் ஒரு RTI மனு போடுகிறார். அதற்கு வந்த பதிலில் அவர் இதுவரை 82 நபர்களை சிறையில் சந்தித்தாகத் தகவல் வருகிறது. சிறையிலிருக்கும் ஒரு நபர் ஒரு வருடத்தில் ஒரே மனிதரை 6 முறை மட்டுமே சந்திக்க அனுமதி உண்டு. ஆனால் சசிகலா விவகாரத்தில் விவேக் மட்டுமே கடந்த 117 நாட்களில் 7 முறை சந்தித்திருக்கிறார். அவரைத்தவிர தினகரன் சசிகலாவைச் சந்திக்கச் செல்வதைப் பற்றியும், தம்பிதுரை சசிகலாவைச் சந்திக்க செல்வது பற்றியும் நமது ஊடகங்கள் உடனுக்குடனே பதிவு செய்து வருகின்றன. அப்படியானால் நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள் இவருக்கு எப்படிப் பட்ட சலுகை வழங்கப் பட்டிருக்கிறது என்பதைப் பற்றி. சசிகலாவுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை ஒரு விசிட்டரைச் சந்திக்கத் தான் அனுமதி உண்டு. ஆனால் அவரை இதுவரை சந்தித்தவர்களின் லிஸ்டைப் பாருங்கள். அதெல்லாம் எத்தனை பெரிய முறைகேடு என்பது உங்களுக்கே புரிய வரும்.

அது மட்டுமல்ல ரூபாவின் இந்த சிறைச்சாலை ஆய்வில் ஆதாரங்களைச் சேகரிக்க உதவியதாக 32 பேரை சந்தேக லிஸ்டில் வைத்த ஜெயிலரும், சூப்பரிண்டெண்டும் அவர்களை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தி நள்ளிரவில் கர்நாடகாவில் உள்ள பிற சிறைச்சாலைகளில் ஆளுக்கொருவராக தூக்கி கடாசி விட்டதாகக் கூட ஒரு பேச்சிருக்கிறது அங்கு! அந்த 32 பேரில் 15 பேர் பெண்கள், 17 பேர் ஆண்கள்.  இதற்கெல்லாம் வீடியோ ஆதாரங்களுடன் தேசிய மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பி ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரித்து வருகிறது. 

ஒரு சிறைச்சாலைக்குள் இப்படியெல்லாம் முறைகேடுகள் நடப்பதைப் பார்த்துக் கொண்டு அரசு சும்மா இருக்க முடியுமா? வினய் குமார் என்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு விசாரனைக் கமிஷன் அமைத்து மேற்கண்ட விவகாரங்களைப் பற்றி தற்போது விசாரணை நடந்து வருகிறது. இது தவிர கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவின் பேரில்  ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அவர்களும் தனித்தனியாக விசாரித்து உண்மை நிலையைக் கண்டறிந்து ரிப்போர்ட் அனுப்புமாறு பணிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் ரூபாவை இடமாற்றம் செய்த கையோடு சிறைத்துறை டிஜிபியை அவர் ஓய்வு பெற 12 நாட்களே இருக்கும் நிலையில் கட்டாய விடுப்பில் அனுப்புகின்றனர். கட்டாய விடுப்பு அளித்து அனுப்பப்பட்ட டிஜிபி மறுபடி சிறைச்சாலைக்குள் செல்ல வேண்டியதே இல்லை. ஆனால் அவர் செல்கிறார். சென்று சசிகலாவுக்காக கட்டப்பட்டிருந்த நவீன சமையலறையை அங்கிருந்த சிறைவாசிகளைக் கொண்டே உடைத்தெறிகிறார். இது எவ்வளவு முறைகேடான செயல்?! கட்டாய விடுப்பில் அனுப்பப் பட்ட பின் இவருக்கென்ன அதிகாரம் இருக்கிறது இப்படி எல்லாம் செய்ய? அப்போது குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது என்று தானே நினைக்க வேண்டியதாக இருக்கிறது.

அங்கே இவ்வளவு விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இங்கிருப்பவர்கள் விவாத மேடைகளில் பேசுகிறோம் என்ற பெயரில் ஆளாளுக்கு அவரவர் கட்சி நிலைப்பாட்டில் நின்று கொண்டு பேசி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள். பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை முறைகேடு விவகாரத்தை விவாதிக்க காங்கிரஸாரை அழைத்தால் அவர்கள் இதற்கெல்லாம் காரணம் பாஜக தான் என்கிறார்கள். தினகரனைக் கேட்டால் இபிஎஸ் தான் காரணம் என்கிறார். இபிஎஸ்ஸைக் கேட்டால் அவர் ஓபிஎஸ் தான் காரணம் என்பார். இப்படித்தான் இந்த விவகாரம் தமிழ்நாட்டில் நீர்த்துப் போய்க் கொண்கிருக்கிறது. அங்கே உண்மையாகவே நடந்தது என்ன? என்பதைப் பற்றிப் பேச இங்கே ஒருவருக்கும் அக்கறை இல்லை.

ஒருவர் ஊழல் செய்தார், லஞ்சம் வாங்கினார் சிறைச்சாலைக்கு அனுப்புவார்கள், ஆனால் சிறைச்சாலையிலேயே லஞ்சம் வாங்கினால் அவரை எங்கே அனுப்புவது?!”

Image & source courtesy: News glitz

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com