நமக்கு நண்பனாக இருக்கும் நாய்கள்!

நாய்களுக்கு உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம் என்னவென்றால், லைட் கம்பம், கார்
நமக்கு நண்பனாக இருக்கும் நாய்கள்!

ஹாய் குட்டீஸ்! 

நீங்கள் எல்லோரும், உலகப் பொது மறையான திருக்குறள் படித்திருப்பீர்கள். அதில்,  மனப்பாடப் பகுதியில்,  'நன்றி  மறப்பது நன்றன்று' எனத் தொடங்கும் குறளை, மனப்பாடம் செய்திருப்பீர்கள். 

இக்குறள், ஆறறிவு உள்ள மனிதப் பிறவிகளுக்காக திருவள்ளுவரால் எழுதப்பட்டது. ஆனால், ஐந்தறிவு உள்ள உயிரினங்களில் நன்றி மறவாத ஒரு உயிரினம் உண்டென்றால், அது நாய் மட்டும்தான். 

பல வீடுகளில், செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் நாய்க்கு மோப்ப சக்தி மிகவும் அதிகம் உண்டு. அவைகளுக்கு மட்டும் எப்படி அந்த சக்தி சாத்தியமாகிறது? 

மனிதனுக்கு, ஐந்து மில்லியன் நுகர்ச்சி செல்கள் உள்ளன. ஆனால் நாய்க்கு, இருநூற்று இருபது மில்லியன் நுகர்ச்சி செல்கள் உள்ளன. அதனாலேயே அவைகளுக்கு மோப்ப சக்தி வலிமையாக உள்ளது. 

பிறக்கும் பொழுது ஒவ்வொரு குட்டிக்கும், முதலில் பார்க்கும் திறன் இல்லாமல் தான் இருக்கும். ஆனால் நுகரும் சக்தி மட்டும் அப்பொழுதிலிருந்தே செயல்படத் தொடங்கி விடும். அதனால்தான் பார்வை இல்லாவிட்டாலும் பால் மணத்தை அறிந்து, தேடித் தேடி தாயிடம் பால் குடிக்கத் தொடங்கிவிடுகிறது. 

ஒரு முறை, ஒருவரை பார்த்து விட்டால், (பார்த்து விட்டால் என்று கூறுதல் தவறு) அதாவது அவரின் வியர்வை வாசனையை நுகர்ந்து விட்டால், எத்தனை நாட்கள் கழித்து மீண்டும் பார்த்தாலும், வாசனையைக் கொண்டு அடையாளம் கண்டுபிடித்து விடும். 

அதன் காரணமாகவே, குற்றவாளியைக் கண்டு பிடிக்க காவல் துறையினர், நாய்களை பயன்படுத்துகின்றனர். நீங்கள் கவனித்திருப்பீர்கள். நாய்கள் எப்பொழுதுமே நிலத்தினை முகர்ந்த வண்ணம்தான் செல்லும். வியர்வை மணமானது ஒருவரது ஆடைகளிலும், அவருடைய செருப்பு,  அதன் மூலம் நிலத்தின் மீதும் படியும் தன்மை கொண்டது. அந்த வாசனையை நாய்களால் மட்டுமே உணர முடியும். 

குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, அந்தந்த நாட்டிற்குத் தகுந்தாற்போல், நாய்கள் பழக்கப்படுத்தப் படுகின்றன. அவைகளால், நூற்றைம்பது வார்த்தைகள் வரை புரிந்து கொள்ள முடியும் என்பது பொதுவான விதி. ஆனால் ஒரு குறிப்பிட்ட இனம், ஆயிரம் வார்த்தைகள் வரை புரிந்து கொள்ளும் சக்தியைக் கொண்டது. 

ஜெர்மன் ஷெப்பர்ட், பிளட் ஹௌண்ட், டாபர்மேன், பாக்ஸர், டெரியர் ஆகிய வகைகள்,  குற்றவாளிகளைப் பிடிக்க,  காவல் துறையினரால், உபயோகப்படுத்தப் படுகின்றன. அதற்குண்டான தேர்ந்த பயிற்சியாளர்கள் மூலம் நாய்களுக்குப்  பயிற்சி அளிக்கப்படுகிறது. அவைகளின் மூக்குப் பகுதி எப்பவுமே ஈரப்பசையுடன் தான் காணப்படும். அதுவே அவைகளுக்கு நுகர்ச்சிக்கு உதவி புரிகின்றது. காற்று அடிக்காத பொழுதும், பூமி ஈரமாக இருக்கும் சமயமும் நாய்களின் மோப்ப சக்திக்கு சாதகமான தருணமாம். 

ஒன்றை கவனித்திருக்கிறீர்களா? புதிய சப்தம் எதையாவது கேட்டால் (நமக்குக் கேட்காத) காதுகளை அப்படியும், இப்படியும் திருப்பி உன்னிப்பாக கவனிக்கும். வெகு ஆரோக்கியமாக கேட்கும் திறன் கொண்ட ஒரு மனிதனை விட, நான்கு மடங்குகள் கேட்கும் திறன் அதிகம் கொண்டது. 

கண்களும், காதுகளும் செய்யக்கூடிய வேலைகளை எல்லாம் சேர்த்து அவைகளின் மூக்கே செய்துவிடும். அவ்வளவு மோப்பத் திறன் கொண்ட விலங்கு. 

அவைகளுக்கு கருப்பு, வெள்ளை இரண்டு நிறங்கள் தான் புலப்படும் என்று சொல்லப்பட்டாலும், நீல நிறத்தையும், மஞ்சள் நிறத்தையும் கூட அவைகளால் அடையாளம் காண முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 

நாய்களுக்கு உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம் என்னவென்றால், லைட் கம்பம், கார், சைக்கிள் போன்ற வஸ்துக்களைக் கண்டால், ஒரு காலைத் தூக்கி சிறுநீர்  கழிக்கத் தொடங்கிவிடும். பொதுவாக ஆண் நாய்கள் தான் அவ்வாறு செய்யும். பெண் நாய்கள் குந்திய வண்ணம் தான் சிறுநீர் கழிக்கும். 'ஆண் நாய்கள், பெண் நாய்களை கவர்வதற்காகவும், தான் வந்த இடத்தினை அடுத்த முறை வரும் பொழுது புரிந்து கொள்வதற்காகவும் அவ்வாறு செய்கின்றன என்று அறியப்படுகிறது) நாய்கள் பொதுவாக குந்திய வண்ணம் தான் மலம் கழிக்கும். ரத்தம், சிறுநீர் இவை இரண்டுமே நாய்களை எளிதில் கவரக் கூடியது. 

'வாலைக் குழைத்து வரும் நாய்தான். அது மனிதனுக்கு தோழனடி பாப்பா' என்று முண்டாசுக்கவி பாடியிருக்கிறார். வீட்டை பாதுகாக்கவும், இயற்கை பேரிடர் வந்தால் உதவவும்,  போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தவறு செய்பவர்களை  அடையாளம் காட்டவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும் மிகவும் உதவி செய்கிறது. 

வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் செல்லப்பிராணிகளில் முதலிடம் வகிக்கிறது. ஒருவர் அதற்கு வாஞ்சையுடன் ஒரு முறை ஆகாரம் கொடுத்துவிட்டால் போதும். அவரைக் காணும் பொழுதெல்லாம் வாலை ஆட்டி நன்றி தெரிவிப்பதோடு அல்லாமல் வாழ்நாள் முழுவதும் அவரை மறக்கவே மறக்காது. 

செல்லங்களே, நீங்கள் எல்லோரும் நாய்களைப் பற்றி கொஞ்சம் அறிந்து கொண்டீர்கள் அல்லவா? உங்க அப்பா அம்மாவுக்கு  நீங்கள்  செல்லக் குழந்தைகள் தானே? அவர்கள்,  உங்களை எவ்வளவு பாசத்துடனும், பண்புடனும், ஒரு நல்ல குடிமகனாகவும், உதாரணப் பிரஜையாகவும் வளர்க்கப் பாடுபடுகிறார்கள்?   

ஒரு ஐந்தறிவு ஜீவனே எஜமானரிடம்  இவ்வளவு நன்றியுடன் இருக்கும் பொழுது, நீங்கள் உங்கள் பெற்றோரிடம் எவ்வளவு நன்றியுடனும், பொறுப்பணர்ச்சியுடனும் நடந்து கொள்ள வேண்டும்? இந்தியாவின் வருங்காலத் தலைவர்களே, உங்கள் கடமையை வீட்டிற்கும், நாட்டிற்கும் பரிபூரணமாக அர்ப்பணித்து, தலை சிறந்த குடிமகனாக மிளிருங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com