அசோகமித்ரனின்  ‘கரைந்த நிழல்கள்’  நாவல் ஒரு பார்வை!

நாவலில் உலவும் நபர்கள் அனைவரும் நிஜ வாழ்க்கை மனிதர்களே என்ற ஐயத்தைத் தருமிடத்தில் ஒரு வித கிசுகிசு பாணியாகி விடும் எழுத்து மேலும் அவ்விஷயங்களை விளக்க முற்படாமல் விலகிச் செல்லுமிடத்தில் இலக்கியத் தரம்
அசோகமித்ரனின்  ‘கரைந்த நிழல்கள்’  நாவல் ஒரு பார்வை!

பல வருடங்களுக்கு முன்பே வாசிக்க நினைத்த நாவல்... எப்படியோ வாய்ப்பு நழுவிக் கொண்டே போய் கடந்த வாரம் தான் அதை முழுமையாக வாசிக்க நேர்ந்தது. 60 களின் தமிழ் சினிமா எஜமானர்கள் முதல் தொழிலாளர்கள் வரை, ஒரு சினிமா முழுமையாக உருவாகக் காரணமான அத்தனைபேரின் ஒட்டுமொத்த லாப, நஷ்டக் கணக்கையும் ஒரு புளிப்பு மிட்டாயாக்கி செரிக்க விட்ட வகையில் அசோகமித்ரனுக்கு வாசகர்கள் நாம் அனைவருமே கடமைப்பட்டவர்களாகிறோம்.

நாவலில் உலவும் நபர்கள் அனைவரும் நிஜ வாழ்க்கை மனிதர்களே என்ற ஐயத்தைத் தருமிடத்தில் ஒரு வித கிசுகிசு பாணியாகி விடும் எழுத்து மேலும் அவ்விஷயங்களை விளக்க முற்படாமல் விலகிச் செல்லுமிடத்தில் இலக்கியத் தரம் பெற்று விடுகிறது. ரெட்டியார், ராம ஐயங்கார், ஜெயச் சந்திரிகா, ராஜ்கோபால், கிழட்டு ஹீரோ குமார ராஜா, இந்தியாவின் தலைசிறந்த நடிகர், தனபாக்கியம், ராம ஐயங்காரின் பிள்ளை பாச்சா, சந்திரா கிரியேஷன்ஸ், சாஹினி ஸ்டுடியோ என்றெல்லாம் வாசிக்கையில் 60 களில் புகழின் உச்சியிலிருந்த சினிமா பிரபலங்கள், பட அதிபர்கள் மற்றும் அவர் தம் வாரிசுகளின் முகங்கள் நினைவில் வந்து போகின்றன. ஆனால் கதாபாத்திரங்களைச் சித்தரிக்கும் போது சுஜாதா சொல்வாரே ‘ஜல்லி அடிப்பது’ என்றொரு பதம்... அதைப் போல இரண்டு, மூன்று பிரபலங்களின் குணாதியங்களைக் கலந்து கட்டி ரெட்டியார் கதாபாத்திரம் உருவாக்கப் பட்டிருக்கலாம் என்று தோன்றியது. ராம ஐயங்காரில் அப்படிப்பட்ட குழப்பம் எதுவும் வரவில்லை. வசிப்பவர்களுக்கு ஆர்வமூட்டும் இத்தகைய அம்சம் தாண்டி;

நாவலில் சினிமாத்துறையில் அடிமட்டத் தொழிலாளர்களான குரூப் டான்ஸர்கள் ப்ரொடக்‌ஷன் பாய், உதவி இயக்குனர்கள் போன்றோரின் துயரங்கள் வரையறை செய்யப்பட்ட விதம் நல்ல மெலோடிராமாவாக இருந்தது. அதிலும் ராஜ்கோபால் பசித்த வயிற்றோடு சான்ஸுக்காக சாஹினி ஸ்டுடியோவுக்குப் போய் விட்டு தன் நண்பர்களுடன் போதை மருந்து உள்ளீடு செய்த பீடியைப் புகைத்து விட்டு செய்யும் ரகளையில் அன்றிருந்த உதவி இயக்குனர்களின் அவல வாழ்க்கை கண் முன் நின்றது. சினிமா உதவி இயக்குனர்களின் வாழ்க்கைச் சிரமங்கள் அன்றைப் போலவே தான் இன்றும் நீடித்து வருகிறது என்பது வேறு விஷயம். அவர்களின் நிலையில் இப்போதும் பெரிதாக மாற்றங்கள் எதுவுமில்லை. வெற்றிகரமான திரைப்படம் எடுக்க இயலா விட்டால் அப்புறம் இந்த பொல்லாத சினிமாத்துறையில் எல்லோருக்கும் மிஞ்சியது மதியச் சாப்பாடும், கார் சவாரியும் மட்டும் தான் என்றொரு கதாபாத்திரம் புலம்பும் போது இந்நாளிலும் கூட அதை உண்மை என்றே ஒப்புக் கொள்ளலாம்.

மிக, மிக பொறுப்பான புரொடக்‌ஷன் மேனேஜராக நாவலின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் நடராஜனின் கடைசிச் சித்தரிப்பு மிக்க வலி கொண்டதாக மாறுகிறது. சினிமா தனது உண்மையான ஊழியனுக்கு எப்போதுமே வலிகளையும், துயரத்தையும் தான் பரிசாகத் தரும் போலும்! 

எத்தனுக்கு, எத்தனாக பிழைப்புக்கான வழி தேடி சினிமா உலகின் அத்தனை சந்து, பொந்துகளிலும் ஏறி, இறங்கத் தயாராக இருக்கும் சம்பத் மட்டுமே இந்த நாவலில் படிப்படையாக முன்னேறி, முன்னேறி கடைசியில் நானும் ஒரு முதலாளி தான் ரேஞ்சுக்கு வளர்ந்து நிற்கிறானே தவிர மற்ற அனைவருமே பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

மண்ணின் மைந்தர்களின் வேலைவாய்ப்புகள் பிற மாநிலத்தவர்களால் தட்டிப் பறிக்கப் படுகிறது எனும் ஆவேஷம் கிளர்ந்தெழ சிவசேனைக்காரர்கள் ராம ஐயங்காரின் புதிய இந்திப் படத்தை அங்கே வெளியிட கடுமையான எதிர்ப்பைக் காட்டவே கலங்கிப் போகும் ராம ஐயங்கார் தனது மகன் பாச்சாவிடம் வந்து நின்று அதற்கான தீர்வைக் கேட்கிறார். அதற்கு பாச்சா சொல்லும் பதில்; ‘ நீங்கள் இங்கே இந்தியை எதிர்த்துக் கொண்டே இருப்பீர்கள்.. ஆனால் அவர்கள் மட்டும் நீங்கள் எடுக்கும் படத்தைப் பார்த்து விட்டு உங்களுக்கு கோடி, கோடியாக சம்பாதித்துத் தரவேண்டுமா? இதென்ன நியாயம்? என கம்யூனிஸ சித்தாந்தம் பேசுமிடத்து அன்றைக்கிருந்த அரசியல் சூழலையும் இந்த நாவல் அடிப்படையில் விளங்கிக் கொள்ள முடிகிறது.

70 களின் ஆரம்பத்தில் சென்னையின் லோயர் மிடில் கிளாஸ் பிராமணக் குடும்பத்தின் குறைந்த பட்ச ஒருநாள் தேவையைப் பூர்த்தி செய்வதில் 1 ரூபாய் நோட்டு மிகச் சிறந்த பங்காற்றி இருக்கிறது என்பதையும் இந்த நாவல் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். அந்த 1 ரூபாய் நோட்டுக்கான மதிப்பு இன்றைய 500 ரூபாய்க்கு ஈடானது என்று கொள்க!

ஆக மொத்தத்தில் அசோக மித்ரன் கரைந்த நிழல்களில் நமக்களித்த சித்திரம் என்றும் கரைந்து போக விரும்பாத சினிமா உலக காரணவர்களின் அன்றாட வாழ்க்கைச் சிரமங்களே!

வாசிக்க மிகச் சுவையான நாவல் என்பதோடு, அது தந்து செல்லும் சமகால பிம்பங்கள் அப்படி, அப்படியே அந்தந்த காலத்தையும், அன்றிருந்த அரசியலையும், அன்றைய சினிமா உலக நிதர்சனங்களையும் நிஜம் போலவே கண் முன் நிழலாடச் செய்வதே இந்நாவலின் வெற்றி!

நாவல் வெளிவந்த காலத்தில் நாவலின் ஓட்டம் புரியவில்லை என்றொரு குறைபாடு இருந்திருக்கிறது. ஆம்; 60, 70 களின் சினிமா உலகப் பரிச்சயம், குறைந்தபட்சம் வாசிப்பு வழியாகவாவது இல்லாதவர்களுக்கு... இந்த நாவலின் கட்டமைப்பு பிடிபடாமல் போகலாம். ஆனால் தமிழில் இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் புத்தகப் புழுக்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல்களில் இதுவும் ஒன்று!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com