விமானக் கட்டணத்துக்கு நிகராக ரயிலின் ஏசி வகுப்பு டிக்கெட்; பயணமும் அப்படி இருக்கிறதா?

ரயிலின் 3 படுக்கை வசதி கொண்ட ஏசி வகுப்புக்கான டிக்கெட், விமானத்தில் முன்கூட்டியே பதிவு செய்யும் டிக்கெட் கட்டணத்துக்கு நிகராக இருக்கிறது. ஆனால், பயணமும் அப்படி இருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில்.
விமானக் கட்டணத்துக்கு நிகராக ரயிலின் ஏசி வகுப்பு டிக்கெட்; பயணமும் அப்படி இருக்கிறதா?

சென்னை: ரயிலின் 3 படுக்கை வசதி கொண்ட ஏசி வகுப்புக்கான டிக்கெட், விமானத்தில் முன்கூட்டியே பதிவு செய்யும் டிக்கெட் கட்டணத்துக்கு நிகராக இருக்கிறது. ஆனால், பயணமும் அப்படி இருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில்.

சென்னை - மதுரை டோரன்டோ விரைவு ரயிலில் ஏசி வகுப்பில் பயணிக்கும் பயணி, தனது பயணம் இனிதாக அமையும் என்று எதிர்பார்த்தால் அது நிச்சயம் பலிக்காது.

டோரன்டோ விரைவு ரயிலின் ஏசி பெட்டிகள் பலவும் மிகவும் பழையவை. அதிலும் சில பெட்டிகள் 25 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருபவை. இந்த தகவல் எப்படி தெரியவந்ததென்றால்... தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயே இதனைத் தெரிவித்துள்ளது.

கொளத்தூரைச் சேர்ந்த ஆர். மணிவண்ணன் என்பவர், அந்த ரயிலைப் பற்றிய தகவல்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரியிருந்தார். முதல் முறை விண்ணப்பித்த போது இதற்கு பதில் அளிக்க மறுக்கப்பட்டது. அடுத்த விண்ணப்பத்துக்குக் கிடைத்த பதிலில், டோரன்டோ விரைவு ரயிலில் பயன்படுத்தப்படும் பெட்டிகள் 1992 முதல் 1999ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டவை என்று கூறப்பட்டுள்ளது. இது தீவிரமாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விஷயம். ஒரு ரயில் பெட்டியின் அதிகபட்ச ஆயுளே 25 ஆண்டுகள்தான். அதற்கு மேலும் பயன்பாட்டில் இருக்கும் இதுபோன்ற ரயில் பெட்டிகளை பழைய இரும்புப் பொருட்களாகப் போட வேண்டும்.

கடந்த காலங்களில் நடந்த பல ரயில் விபத்துக்களுக்கு இதுபோன்ற பழைய ரயில் பெட்டிகளும் ஒரு காரணம். இதுபோன்ற ரயில் பெட்டிகள் தயாரிப்பு இந்த ஆண்டு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. முற்றிலும் புதிய தொழில்நுட்பத்துடனான ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. எல்எச்பி என்று கூறப்படும் ரயில் பெட்டிகளில் பாதுகாப்புக்கான பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த ரயில்கள் தடம்புரண்டாலும் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த தகவல்கள் கடந்த பிப்ரவரி மாதம் கிடைத்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

தற்போது ரயில்வே அதிகாரிகளை எக்ஸ்பிரஸ் செய்தியாளர் அணுகிய போதும், அதே பழைய ரயில் பெட்டிகள்தான் இன்னும் தண்டவாளங்களில் ஓடிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

டோரன்டோ விரைவு ரயிலில் ஒரு ஏசி முதல் வகுப்பு, 3 இரண்டு படுக்கை வசதி கொண்ட ஏசிப் பெட்டிகள், 8 மூன்று படுக்கை வசதி கொண்ட ஏசிப் பெட்டிகள் உள்ளன. சென்னைப் பிரிவில் இந்த ரயில் பராமரிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

பழைய ரயில் பெட்டிகள் குறித்து கேட்டதற்கு, ஐசிஎஃப் ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டியின் ஆயுள் காலம் 25 ஆண்டுகள், அதன்பிறகே அவை மாற்றப்படும். இருந்தாலும், அவை அடிக்கடி பரிசோதிக்கப்பட்டு நல்ல நிலையில் இருக்கும் வகையில் பராமரிக்கப்படும் என்றார்.

எல்எச்பி ரயில் பெட்டிகள் குறித்து கேட்டதற்கு, எந்தெந்த ரயில்களுக்கு எல்எச்பி ரயில் பெட்டிகளை ஒதுக்குவது என்பதை ரயில்வே வாரியம்தான் முடிவு செய்கிறது. மதுரை டோரன்டோ ரயிலுக்கு எல்எச்பி ரயில் பெட்டிகளை ஒதுக்குவது தொடர்பாக தற்போதைக்கு எந்த திட்டமும் இல்லை என்றும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com