அதிமுகவில் களை கட்டும் அதிகார யுத்தம்! இன்னும் மிச்சமிருக்கிறதா வேடிக்கை வினோதக் காட்சிகள்?!

மொத்தத்தில் அதிகாரப் போட்டியின் உச்சத்தில் தற்போது அல்லாடிக் கொண்டிருக்கிறது அதிமுக. இந்நிலையில் வெல்லப் போவது யார்? பிளவு பட்ட அணிகள் இணையுமா? அம்மாவின் அரசியல் வாரிசாக தமிழக மக்கள் யாரை
அதிமுகவில் களை கட்டும் அதிகார யுத்தம்! இன்னும் மிச்சமிருக்கிறதா வேடிக்கை வினோதக் காட்சிகள்?!

சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தை மீட்க இடைத்தரகர் சுகேஷுக்கு லஞ்சம் அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டி.டி.வி தினகரன், இரு தினங்களுக்கு முன் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்ததை அடுத்து தனது சின்னம்மாவும், கட்சியின் பொதுச் செயலாளர் என்று தன்னைக் கருதிக் கொள்பவருமான சசிகலாவை நேற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சந்தித்து கட்சி நிலவரம் குறித்துப் பேசினார். அப்போது சசிகலா; “அதிமுக இரு அணியில் உள்ளவர்களுக்கும் மேலும் 60 நாட்கள் கால அவகாசம் கொடுக்கலாம். அப்போதாவது கட்சியின் முதன்மை நிர்வாகிகளும், அமைச்சர்களும் முன்னர் தாங்கள் அளித்த உறுதிமொழிக்கு ஏற்றவாறு நடந்து கொள்கிறார்களா? என்று பார்க்கலாம். அதன் பிறகு நடவடிக்கை எடுக்கலாம்” என்று தம்மிடம் கூறியதாக டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

முன்னதாக தினகரன் பெங்களூரு பயணத்தில் இருக்கையில்; நேற்று திடீரென தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி அறையில் ஒன்று கூடிய 20 அமைச்சர்கள், அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் திரண்டு கட்சியின் எதிர்கால நலனை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி ஒப்புதலுடன் சில முக்கியமான முடிவுகளை எடுத்திருப்பதாக அறிவித்தனர். அவர்கள் எடுத்த முடிவுகளின் படி; ஏப்ரல் 17 அன்று உறுதியளித்தபடி தினகரன் அதிமுக கட்சி நடவடிக்கைகளில் இனி ஈடுபடக் கூடாது. சசிகலா குடும்பத்தாருக்கும், அதிமுகவுக்கும் இனி எவ்விதத் தொடர்பும் இல்லை. கட்சியோ, அமைச்சர்களோ சசிகலா குடும்பத்தாரையோ, தினகரனையோ சார்ந்து இல்லை என்று அறிவித்தனர். 

ஆனால் அமைச்சர்களின் இந்த முடிவை எதிர்த்து தினகரன் சார்பாக பெரம்பூர் எம்.பி வெற்றிவேல் பேசுகையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரை கட்சிப் பணியில் ஈடுபடக்கூடாது எனத் தடுக்கும் எதேச்சாதிகாரம் அமைச்சர்களுக்கு இல்லை என்று கூறி அமைச்சர்களின் முடிவை கடுமையாக எதிர்த்து தனது கருத்தைப் பதிவு செய்தார். அவருக்கு பதில் அளிக்கும் வகையில் அதிமுக வின் ஓ.பி.எஸ் அணியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் பேசுகையில்; எடப்பாடி அணியினர் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கி விட்டதாகக் கூறும் வாய்மொழி உத்தரவை நம்ப முடியாது எனவும் இவ்விதமான குழப்பமான நிலை நீடிப்பதால் அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான சூழல் தற்போது இல்லை எனவும், இந்தாண்டு இறுதிக்குள் அதாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்து முடிந்ததும் தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு வரும் சூழல் வரலாம் என்றும் குறிப்பிட்டார்.

முன்னாள் முதல்வர் ஜெ மறைவை ஒட்டி அவசர, அவசரமாக மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு சீர்கெடக் கூடாது என்று கூறி அதிமுகவினர் ஓ.பி.எஸ் ஸை முதல்வர் ஆக்கினார்கள். ஜல்லிக்கட்டு விவகாரம் உட்பட சில விவகாரங்களில் ஓ.பி.எஸ் செயல்பாடுகள் பிடிக்காததால் கட்சியின் பொதுச்செயலாளராக அப்போது அதிமுகவின் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் வாயிலாக ஒருமனதாக கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்ட வி.கே. சசிகலா ஆளுனர் வித்யாசாகர் ராவிடம் தனது பெரும்பான்மை ஆதரவை நிரூபித்து தானே தமிழக முதல்வராகி விடலாம் என்று திட்டமிட்டார். ஆனால் சசிகலாவின் இந்த முடிவை முதலி ஒப்புக் கொண்ட ஓ.பி.எஸ் பின்பு திடீரென ஜெ நினைவிடத்துக்குச் சென்று தியானத்தில் அமர்ந்து ‘அம்மாவின் ஆன்மா’ தன்னிடம் பேசியதாகக் கூறி தன்னிடம் இருந்து முதல்வர் பதவி சசிகலா குடும்பத்தாரால் வலுக்கட்டாயமாகப் பறிக்கப் பட்டு விட்டது என ஊடகங்கள் முன்னிலையில் மனம் திறந்தார். ஓ.பி.எஸ் மனம் திறத்தலும், ஜெ வின் அண்ணன் மகள் தீபா ஓ.பி.எஸ் அணியுடன் இணைந்து செயல்படுவது என முடிவெடுத்தலும் ஒன்றாக நடந்தேறியது. ஆனால் இந்த மாற்றம் வெறும் ஊடகப் பார்வைக்குத் தான். தொடர்ந்து நடைபெற்ற ஆர்.கே நகர் இடைத்தேர்தல் அறிவிப்பில் தீபா ஜகா வாங்கி தனியாக தேர்தலில் நிற்பது என முடிவெடுத்து விட்டார். அது ஒரு தனிக்கதை.

தொடர்ந்து அதிமுக சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி, என இரு அணிகளாகப் பிளவு பட்டது. சசிகலா அணி சார்பாக அவசர, அவசரமாக எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பதவியேற்றார். ஜெ மறைவை அடுத்து முழுதாக 4 ஆண்டுகள் வரை பதவிக் காலம் மிச்சம் இருக்கையில் உடனடியாக உட்கட்சி குழப்பத்தை காரணம் காட்டி அதிமுக ஆட்சி கவிழ்க்கப் படுவதை விரும்பாத அமைச்சர்கள் அனைவரும் ஒரு அணியாகத் திரண்டு சசிகலாவுக்கு ஆதரவு அளித்தனர். சசிகலா தமிழக முதல்வராகும் சூழல் நிறைந்திருந்த வேளையில் விதி விளையாடியது. சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வெளிவந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் தண்டணை பெற்று பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப் பட்டனர். சசிகலா சிறையில் இருக்கும் போது தான் தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பு எனும் கண் துடைப்பு ஓட்டெடுப்பு நடந்து சசிகலா ஆதரவு அமைச்சர்கள் சார்பாக எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராகத் தேர்வானார்.

தமிழகத்தை ஆள்வது சசிகலா குடும்பத்தார் தான் எடப்பாடியார் அவர்களது கைபொம்மை, என்ற ரீதியில் ஊடகங்களில் பல்வேறு கட்சிகளைச் சார்ந்த அரசியல்வாதிகளும், நடுநிலையாளர்களும், சமூகப் போராளிகளும் இந்த அரசியல் மாற்றத்தை விமரிசித்தனர். இந்நிலையில் சென்னை ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் வந்தது. அப்போது அதிமுக; எடப்பாடி தலைமையில் அதிமுக அம்மா அணி எனவும், ஓ.பி.எஸ் தலைமையில் புரட்சித் தலைவி அம்மா அணி என இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. கட்சி பிளவு பட்டதும் இரட்டை இலைச் சின்னத்துக்கு இரு அணிகளும் உரிமை கோரவே தேர்தல் ஆணையம்; சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்டதற்கான நியமன ஆணையை ரத்து செய்ததோடு, கட்சியின் சின்னத்தையும், பெயரையும் முடக்கியது.  இதனிடையில் ஆர்.கே நகர் தேர்தல் அறிவிக்கப் படவே; போதாக்குறைக்கு எடப்பாடி, சசிகலா எதிர்ப்பாளர்களும், ஓ.பி.எஸ் எதிர்ப்பாளர்களும் ஒன்றிணைந்து அதிமுகவிலேயே கணிசமான தொண்டர்கள் ஜெ வின் அண்ணன் மகள் தீபாவின் ஜெ தீபா பேரவைக்கு ஆதரவு அளித்து ஒன்று திரண்டனர். இப்படி ஒரே கட்சியின் அடையாளங்களாகக் கருதப் படும் எம்.ஜி.ஆர், ஜெ வை முன்னிறுத்தி மூன்று அணிகள் தோன்றி அந்த மூன்று அணிகளும் ஒருவருக்கொருவர் போட்டியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாங்கள் தான் உண்மையான அதிமுக என தங்களைத் தாங்களே பிரகடனப் படுத்திக் கொண்டதும் மக்களிடையே அப்போது மிகப்பெரிய கேலிக்கூத்துக்களாகின.

இப்படி... தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும், மத்திய அரசின் கவனத்தையும் ஒரு சேர ஈர்த்துக் கொண்டிருந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலை, ஓட்டுக்குப் பணம் தருகிறார்கள் என்று கூறி தேர்தல் ஆணையம் ரத்து செய்து விட்டது. அதைத் தொடர்ந்து அமைச்சர் இல்லாத தொகுதியாக ஆர்.கே. நகர் தொகுதி நீடித்து வருகிறது.

அதனையடுத்து இரட்டை இலைச் சின்னத்தை மீட்க இடைத்த்ரகர் சுகேஷ் மூலமாக லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக தினகரன் டெல்லி போலீஸாரால் கைது செய்ய்ப்பட்டு குற்றம் நிரூபிக்கப் பட்டு திகார் சிறையில் அடைக்கப் பட்டார். தினகரன் சிறை சென்றதைத் தொடர்ந்து அதுவரை அவரை ஆதரித்து வந்த எடப்பாடி அணி அமைச்சர்கள் திடீரென அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஒன்றிணைந்து அதிமுகவுக்கும் சசிகலா குடும்பத்தாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என அறிவித்தனர். இன்னிலையில் தற்போது தினகரன் மீண்டும் நிபந்தனை ஜாமீனில் சிறையிலிருந்து வெளிவந்து, பெங்களூரு சென்று, தனது சின்னம்மா சசிகலாவையும் சந்தித்து விட்டு வந்து கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலாவால் நியமிக்கப் பட்ட கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான தன்னை கட்சிப் பணியாற்றக் கூடாது எனக் கூற அமைச்சர்களுக்கு அதிகாரமில்லை என அறிவித்துள்ளார்.

சசிகலா, தினகரன் இருவரும் சிறை சென்ற பின்பு தமிழக அதிமுகவில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என இரு அணியாகச் செயல்பட்டு வந்த அதிமுக தற்போது தினகரன் எதிர்ப்பை ஒட்டி மூன்று அணிகளாகிறது. இவர்களோடு தீபா அணியையும் சேர்த்தால் தற்போது அதிமுக நான்காக பிளவு பட்டுள்ளது என்று தான் எண்ண வேண்டியதாகிறது. இந்த நான்கு அணிகளும் தமிழக மக்களுக்கு அளித்த உறுதிமொழி என்னவோ, புரட்சித் தலைவி அம்மா ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் நிலை நிறுத்துவோம் என்பதைத் தான். ஆனால் நடப்பதெல்லாம் அம்மா ஆட்சியை நிலை நிறுத்துவதற்கான மக்கள நல கொள்கைக்காக என்பதாகத் தெரியவில்லை. ஆக மொத்தத்தில் அதிகாரப் போட்டியின் உச்சத்தில் தற்போது அல்லாடிக் கொண்டிருக்கிறது அதிமுக. இந்நிலையில் வெல்லப் போவது யார்? பிளவு பட்ட அணிகள் இணையுமா? அம்மாவின் அரசியல் வாரிசாக தமிழக மக்கள் யாரை அங்கீகரிக்கப் போகிறார்கள் என்பதை அறிய மீண்டும் ஒரு தேர்தல் தமிழகத்துக்கு உண்டா? என்பதெல்லாம் புரியாத புதிர்.

இப்போதுள்ள நிலையில் தமிழகம்;  பிளவு பட்ட அதிமுக அணிகள் வாயிலாக மீண்டும் சில வேடிக்கை வினோதமான நிகழ்வுகளை காணும் வாய்ப்பைப் பெறவிருக்கிறது என்பது மட்டுமே நிஜம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com