குடியரசுத் தலைவர் தேர்தல் நடப்பது எப்படி?

இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர் இந்தியக் குடியரசு எனப்படும் இந்திய அரசின் தலைவர் ஆவார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் நடப்பது எப்படி?

குடியரசுத் தலைவர்

இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர் இந்தியக் குடியரசு எனப்படும் இந்திய அரசின் தலைவர் ஆவார். இந்தியாவின் முதல் குடிமகன் என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார். மத்திய நிர்வாகக் குழுவின் தலைவரும், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவரும், இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். பிரதமரும் அமைச்சரவையுமே செயல்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளனர். இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர். இராஜேந்திரப் பிரசாத் ஆவார், தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆவார்.

குடியரசுத் தலைவர் தேர்தல்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் 5 ஆண்டுகள் பதவிக்காலம் ஜூலை மாதம் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட போவது யார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அரசியல்வாதிகளிடமும் நாட்டு மக்களிடமும் ஏற்பட்டுள்ளது. தேர்தல் தேதி ஜூலை 17 என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்ததும் இந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
அது ஒருபக்கம் இருந்தாலும், இந்திய குடியரசு தலைவர் தேர்வு எப்படி நடைபெறுகிறது என்பது குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வமும் இருக்கத்தானே செய்யும். அது குறித்த விளக்கம்தான் இது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாகம்-V, அத்தியாயம்1--- நிர்வாகம், குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத் துணைத்தலைவர் பற்றி குறிப்பிடுகிறது.

சரத்து.52. இந்திய குடியரசுத்தலைவர்:

இந்தியாவுக்கு ஒரு குடியரசுத்தலைவர் இருப்பார்.

சரத்து.54. குடியரசுத்தலைவர்தேர்தல்:

குடியரசுத் தலைவர் வாக்களர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார், வாக்காளர் குழுமம் என்பது.-

  1. நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும்;
  2. மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும் கொண்டிருக்கும்.

விளக்கம்: இந்த ஷரத்திலும்,ஷரத்து 55 இலும் மாநிலம் என்பதில் தேசத்தின் தலைநகர் டில்லியும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமும் அடங்கும்.

சரத்து.55. குடியரசுத் தலைவரின் தேர்தல் நடைமுறை:

  1. குடியரசுத் தலைவர் தேர்தலில், கூடுமான வரையில் மாநிலங்களுக்கு  இடையிலான பிரதிநிதித்துவத்தில் ஒரே மாதிரியான விகிதாச்சாரமிருத்தல் வேண்டும்.
  2. மாநிலங்களுக்கிடையில் ஒரே மாதிரியான தன்மை நிலவுவதற்காகவும், மாநிலங்கள் மற்றும் ஒன்றியத்தில் சரிசம நிலை நிலவுவதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினரும் அளிக்கக்கூடிய வாக்குகள் பின்வரும் பாங்கில் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.
  1. மாநில மக்கள் தொகையை, அந்த மாநிலச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து, அதன் ஈவை, ஆயிரத்தால் பெருக்கிக் கிடைக்கும் வாக்குகளே, அந்த சட்டமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் அளிக்கும் வாக்குகளின் மதிப்புகளாக இருக்கும்.
  2. அவ்வாறு ஆயிரத்தால் பெருக்கிய பின்னர் மீதமுள்ளது ஐந்நூறுக்கு குறையாமல் இருந்தால் உட்கூறு(a) இல் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரின் வாக்குடன் மேலும் ஒருவாக்கு அதிகரிக்கும்.
  3. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒவ்வொரு உறுப்பினரும் அளிக்கும் வாக்கின் மதிப்பாவது:

அவர்கள் சார்ந்துள்ள மாநிலச்சட்டமன்ற உறுப்பினர்களுக்கு,

உட்கூறுகள் (a) மற்றும் (b) இல் ஒதுக்கப்பட்டுள்ள வாக்குகளை நாடாளுமன்றத்தின் ஈரவைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்துக் கிடைக்கும் எண்ணிக்கையே, அவர்கள் அளிக்கும் வாக்கின் மதிப்பாகும். பாதிக்கு மேல் வரும் பின்னத்தை நன்றாக எடுத்துக் கொண்டு மற்றவை ஒதுக்கி விடுதல் வேண்டும்.

  1. குடியரசுத்தலைவரின் தேர்தல், சராசரி பிரதிநிதித்துவ முறைப்படி, அதாவது ஒற்றை மாற்று ஒட்டு முறையில் நடைபெறுதல் வேண்டும். மற்றும் அத்தகைய தேர்தல் இரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெறுதல் வேண்டும்.

விளக்கம்:

இந்த ஷரத்தில் “மக்கள்தொகை’ என்பது, அத்தகைய தேர்தலுக்கு முன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் உறுதி செய்து வெளியிடப்பட்ட மக்கள் தொகையைக் குறிக்கும்.

வரம்புரையாக: இந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடைசி முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பைக் குறிப்பது என்பது, 2026-ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதலாவதாக எடுக்கப்பட்டு வெளியிடப்படும் சரியான எண்ணிக்கைகள் வரையில், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பையே குறிப்பதாகக் கொள்ளவேண்டும்.

சரத்து.56. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்:

  1. குடியரசுத் தலைவர் தான் பதவியேற்ற தேதியிலிருந்து ஐந்தாண்டுகள் தொடர்ந்து பதவியிருப்பார்.
    1. குடியரசுத் துணைத்தலைவர் முகவரிக்கு, தமது கைப்பட எழுதிக் கொடுத்து விட்டு குடியரசுத்தலைவர் பதவி விலகலாம்.
    2. குடியரசுத்தலைவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்பட்டால், அவர் ஷரத்து 61-இன் கீழ் குற்றஞ் சாட்டப்பட்டு பதவியிலிருந்துநீக்கப்படுவார்.
    3. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் முடிந்தபிறகும், அவரை அடுத்து வருகின்ற குடியரசுத் தலைவர் பதவி ஏற்கும் வரையில் அவர் தொடர்ந்து பதவியில் இருப்பார்.
  1. கூறு (a) உட்கூறு (b) இன் கீழ் குடியரசுத்தலைவர் தமது விலகல் தொடர்பாக, குடியாசுத் தலைவருக்கு முகவரியிட்டு  அனுப்பிய மடலை அவர் உடனடியாக மக்களவைத் தலைவருக்கு தெரிவித்தல் வேண்டும்.

சரத்து.57. மறு தேர்தலுக்கு தகுதியாதல்:

குடியரசுத்தலைவராகப் பதவி வகிக்கும் நபர் அல்லது பதவி வகித்த நபர், இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் மற்றைய வகையங்களுக்கு உட்பட்டு, மீண்டும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட தகுதியுடையவராக இருப்பார்.

58. குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதிகள்:

  1. இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்க படவிருக்கிற நபர்கள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருத்தல்வேண்டும். அந்நபர்-
  1. இந்திய குடிமகனாக இருத்தல்வேண்டும்.
  2. 35 வயது நிறைவுற்றவராக இருத்தல் வேண்டும்.
  3. அவர் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுப்பதற்குரிய தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்.
  1. இந்திய அரசாங்கத்தின் கீழ் அல்லது ஏதேனும் மாநில அரசாங்கத்தின் கீழ் அல்லது அத்தகைய அரசாங்கங்களின் கட்டுபாட்டிலுள்ள வேறு ஏதேனும் அதிகார நிலையின் கீழ் இலாபம் பெறக்கூடிய ஏதெனும் அலுவலில் ஈடுபட்டுள்ள நபர்கள் எவரும், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவராவார்.

விளக்கம்:

இந்த ஷரத்தின் நோக்கத்தின் பொருட்டு குடியரசுத் தலைவர் அல்லது குடியரசுத் துணைத் தலைவராக பதவி வகிக்கும் ஒருவரை அல்லது மாநிலம் எதனின் ஆளுநர் அல்லது மத்திய ,மாநில அரசின் அமைச்சர் ஒருவர், அந்தப் பதவி காரணமாக அரசின் கீழ் இலாபம் பெறக்கூடிய ஒர்  அலுவலில் இருப்பதாகக் கொள்ளக்கூடாது

சரத்து.59. குடியரசுத் தலைவர் பதவிக்குரிய நிபந்தனைகள்:

  1. குடியரசுத் தலைவர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலோ, மாநிலச் சட்டமன்றத்திலோ உறுப்பினராக இருத்தல் கூடாது. அவர் நாடாளுமன்றத்தின் இரு அவையிலோ, மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராக இருக்கும் போது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படால், அவர் அந்தப் பதவியை ஏற்கும் தேதியிலிருந்து அந்த அவையின் உறுப்பினர் பதவிலிருந்து விலகிக் கொண்டதாகக் கருதப்படுவார்.
  1. குடியரசுத் தலைவர் இலாபம் தரும் எத்தகைய அலுவலையும் கொண்டிருக்கக் கூடாது.
  1. குடியரசுத்தலைவர், தமது அலுவலக உறைவிடத்தை வாடகைச் செலுத்தம் எதுவுமின்றிப் பயன்படுத்திக் கொள்ள உரிமையுடையவராவார், நாடாளுமன்றம், சட்டமன்றத்தின் மூலம் நிர்ணயிக்கும்ஊதியங்கள், படிகள் மற்றும் சலுகைகளைப் பெறவும் உரிமையுடையவராவார். அதற்காக வகையங்கள் எதுவும் இயற்றப்படுகின்ற வரையில், அவர் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள ஊதியங்கள், படிகள் மற்றும் சலுகைகள் பெறுவார்.
  1. குடியரசுத் தலைவரின் பதவிக்காலத்தில், அவரது ஊதியங்கள், படிகள் மற்றும் சலுகைகளைக் குறைக்கக் கூடாது.

சரத்து.60. குடியரசுத் தலைவரால் எடுத்துக் கொள்ளப்படும் ஆணை உறுதிமொழி அல்லது மெய்யுறதி மொழி:

ஒவ்வொரு குடியரசுத் தலைவரும், குடியரசுத் தலைவர் பொறுப்பு வகிக்கும் ஒவ்வொரு நபரும் அல்லது குடியரசுத்தலைவரின் பணியை ஆற்றுபவரும், தமது அலுவலகப் பணியை மேற்கொள்வதற்கு முன்னர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதியரசர் அல்லது அவர் இல்லாத போது, அப்போது கிடைக்கப் பெறும் பணிமூத்த உச்சநீதிமன்ற நீதியரசர் முன்னிலையில் பின்வரும் முறையில் ஆணையுறுதி மொழி அல்லது மெய்யுறுதி மொழி எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

அதாவது-

அ. ஆ வாகிய நான் இறைவன் பெயரில் ஆணை உறுதி மொழி கூறி இந்தியக் குடியரசுத் தலைவரின் அலுவலை உணமையாக நிறைவேற்றுவேன் (அல்லது குடியரசுத்தலைவரின் செயற்பாடுகளைச் செய்வேன்) என்றுன், என்னுடைய நல்ல திறமையின் அடிப்படையில் அரசியலமைப்பையும் மற்றும் சட்டத்தையும் பேணிப் பாதுகாப்பேன் என்றும், இந்திய மக்களின் நலத்திற்காகவும், அவர்கட்காக பணிபுரியவும் என்னை நான் அற்பணித்துக் கொள்வேன் என்று உறுதி கூறுகிறேன்’.

சரத்து.62. குடியரசுத் தலைவரின் காலியான பதவி இடத்தை நிரப்புவுதற்கான தேர்தலுக்குரிய கால அளவும் தற்செயலாகக் காலியான அந்தப் பதவி இடத்தை நிரப்ப தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் பதவிக்காலமும் :

(1) குடியரசுத்தலைவரின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாக, அந்தக் காலி இடத்தை நிரப்புவுதற்குரிய தேர்தலை நடத்தி முடித்தல் வேண்டும்.

(2) குடியரசுத்தலைவரின் இறப்பு, பதவி விலகல், அல்லது பதவியிலிருந்து நீக்கப்படுதல் அல்லது வேறு ஏதேனும் காரணத்தால், குடியரசு தலைவரின் காலியான பதவி இடத்தை நிரப்புவதற்காக நடைபெறும் தேர்தல், பதவியிடம் காலியான தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு மேற்படாமல் உடனடியாக நடத்தி இடத்தை நிரப்பும் நபர், உறுபு 56-இன் வகையங்களுக்கு உட்பட்டு, அவர் எந்தெத தேதியில் பதவி ஏற்கிறாரோ அந்தத் தேதியிலிருந்து ஐந்தாண்டுகள் முழுமையாகப் பதவி வைப்பார்.

தேர்தல் ஆணையம்

குடியரசுத் தலைவர் மற்றும் துணை- குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டம், 1952  மற்றும் குடியரசுத் தலைவர் மற்றும் துணை- குடியரசுத் தலைவர் தேர்தல் விதிகள், 1974 க்கு உட்பட்டு தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தும்.

இந்திய வாக்காளர் குழு (Indian electoral college)

இந்தியாவின் வாக்காளர் குழு என்பது இந்தியாவின் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 55(2) பிரிவு வழங்கியுள்ள உரிமைகளில் ஒன்றாகும்.

வாக்காளர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள்:

மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் (இந்திய நாடாளுமன்றத்தின் கீழவை);

மாநிலங்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் (இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை);

அனைத்து மாநிலங்களின் சட்டப் பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்; மற்றும்

சட்டப்பேரவை கொண்டுள்ள ஒவ்வொரு ஒன்றிய ஆட்சிப்பகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

குறிப்பு: நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு வாக்குரிமை இல்லை.

இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் மாநிலங்களைப் பொறுத்தவரை ஓர் சார்பாற்றம் வீதத் தெரிவாண்மை ஆகும்.ஒரு குறிப்பிட்ட மாநில சட்டமன்ற உறுப்பினரின் வாக்குக்கு வாக்காளர் குழுவில் அதிக்கப்படும் மதிப்பு = மாநிலத்தின் மக்கள்தொகை / (தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை X 1000)

அதாவது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் உள்ள வாக்கு மதிப்பு அவர் எத்தனை ஆயிரம் வாக்காளர்களின் சார்பாக உள்ளார் என்பதாகும். இவ்வகையாக அனைத்து மக்களும் மறைமுகமாக குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுக்க கீழ்கண்டவாறு ஒவ்வொரு மாநிலங்களுக்கு வாக்குகளும் வாக்காளர்களும் பிரிக்கப்பட்டுள்ளது.

வரிசை

மாநிலம்

சட்டமன்றத் தொகுதிகள் (elective)

மக்கள்தொகை (2011 கணக்கெடுப்பு)

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்கின் மதிப்பு

மாநிலத்தின் மொத்த வாக்கின் மதிப்பு

1.

ஆந்திரப் பிரதேசம்

175

84,665,533

248

43,400

2.

அருணாச்சலப் பிரதேசம்

60

1,382,611

8

480

3.

அசாம்

126

31,169,272

116

14,616

4.

பீகார்

243

103,804,637

173

42,039

5.

சத்தீஸ்கர்

90

25,540,196

129

11,610

6.

கோவா

40

1,457,723

20

800

7.

குஜராத்

182

60,383,628

147

26,754

8.

அரியானா

90

25,353,081

112

10,080

9.

இமாச்சலப் பிரதேசம்

68

6,856,509

51

3,468

10.

ஜம்மு காஷ்மீர்

87

12,548,926

72

6,264

11.

ஜார்கண்ட்

81

32,966,238

176

14,256

12.

கர்நாடகா

224

61,130,740

131

29,344

13.

கேரளா

140

33,387,677

152

21,280

14.

மத்தியப் பிரதேசம்

230

72,597,565

131

30,130

15.

மகாராஷ்டிரா

288

112,372,972

175

50,400

16.

மணிப்பூர்

60

2,721,756

18

1,080

17.

மேகாலயா

60

2,964,007

17

1,020

18.

மிசோரம்

40

1,091,014

8

320

19.

நாகலாந்து

60

1,980,602

9

540

20.

ஒரிசா

147

41,947,358

149

21,903

21.

பஞ்சாப்

117

27,704,236

116

13,572

22.

ராஜஸ்தான்

200

68,621,012

129

25,800

23.

சிக்கிம்

32

607,688

7

224

24.

தமிழ்நாடு

234

72,138,958

176

41,184

25.

திரிபுரா

60

3,671,032

26

1,560

26.

உத்தரகண்ட்

70

10,116,752

64

4,480

27.

உத்தரப்பிரதேசம்

403

199,581,477

208

83,824

28.

மேற்கு வங்கம்

294

91,347,736

151

44,394

29.

புதுதில்லி

70

16,753,235

58

4,060

30.

புதுச்சேரி

30

1,244,464

16

480

31

தெலுங்கானா

119

  

17,617

 

மொத்தம்

4120

1,210,193,422

 

549,474

ஜனாதிபதியை நாடாளுமன்ற இரு அவை எம்.பி.க்கள் மற்றும் மாநில சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுப்பார்கள். லோக்சபா மற்றும் ராஜ்யசபா என்று, எம்.பி.க்கள் மொத்தம் 776 பேர் உள்ளனர். நாடெங்கும் 4120 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் ஓட்டுக்கும் ஒரு மதிப்பு உண்டு. அதன்படி ஒரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு தலா 708 ஆகும்.

பாராளுமன்றம்

இடங்கள்

வாக்கின் மதிப்பு

மொத்த வாக்கின் மதிப்பு

லோக் சபா

543

708

384,444

ராஜ்ய சபா

233

708

164,964

மொத்தம்

776

708

549,408

ஒட்டு மொத்தமாக

மொத்த வாக்காளர்கள்

வாக்கின் மதிப்பு

தேர்ந்த்டுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்

4120

549,474

தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்

776

549,408

மொத்தம்

4896

1,098,882


எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு அந்தந்த மாநில மக்கள் தொகை மற்றும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்படும். ஒட்டு மொத்தமாக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 882 ஆகும். இதில் பாதிக்கு மேல் பெறுபவர் தான் ஜனாதிபதியாக முடியும்.

C.P.சரவணன், வழக்கறிஞர்.  9840052475.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com