மெல்ல சாகடிக்கப்படுகிறதா தொடக்கக்கல்வித்துறை?

ஆனால் தொடக்கக்கல்வித்துறையும், அரசுப்பள்ளிகளும் எதை நோக்கி பயணிக்கின்றன? வரும் 2017-18 கல்வியாண்டில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எவ்வாறு இருக்கப்போகிறது?
மெல்ல சாகடிக்கப்படுகிறதா தொடக்கக்கல்வித்துறை?

இதோ இன்னொரு கல்வியாண்டு தொடங்கப்போகிறது. அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருவது கண்கூடு. ஓரளவுக்கு வருமானம் ஈட்டக்கூடிய பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்துவிட்டு கூடுதல் செலவால் அவதிப்படுகின்றனர். இந்நிலை நீடித்தால் என்ன ஆகும் ? இன்னும் சில ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து தனியார் பள்ளிகளில் மட்டுமே நிலைத்திருக்கும். வறுமைக்கோட்டை ஒட்டியுள்ள பெரும்பாலான குடும்பங்களுக்கு இலவசக்கல்வி என்பது கானல் நீராகிவிடும். 

எப்படி தோன்றியது இந்நிலைமை? 80களில் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் நியமனமே இல்லை என்ற நிலை உருவானது. பெரும் எண்ணிக்கையிலான காலிப்பணியிடங்கள் உருவானது. அரசுப்பள்ளி என்றாலே போதிய ஆசிரியர் இருக்க மாட்டார்கள் என்பதும், தேர்ச்சி விகிதம் மிகக்குறைவாக இருக்கும் என்றும் மக்கள் புரிந்துக்கொண்டார்கள். அதே நேரத்தில் அப்போதைய அரசு தனியார் பள்ளிகளுக்கு சுலபமாக அனுமதி வழங்கும் கொள்கையை கடைபிடித்தது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். தனியார் பள்ளிகளும் புற்றீசல்கள் போல் அதிகரித்தது.

பொதுவாக சமூக ஆர்வலர்களும், கல்வி  சிந்தனையாளர்களும் வைக்கும் குற்றச்சாட்டு  அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதில்லை என்பதே. இதன்பின்னனியில் உள்ள உண்மை என்ன?

கடந்த 6 ஆண்டுகளில் சராசரியாக தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 91 இலட்சம் மாணவர்கள் பயின்றுள்ளனர்.   ஆனால் 10,800 அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் 44 இலட்சம் மாணவர்கள் பயின்றுள்ளனர். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பதை நிறுத்தினால் இதற்கு தீர்வு கிடைத்துவிடுமா? அரசு புள்ளிவிவரக் கணக்குப்படி, அரசுப்பள்ளிகளில் 98 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் வீடுகளில் உத்தேசமாக குடும்பத்திற்கு 2 பள்ளி செல்லும் குழந்தைகள் இருப்பதாக கணக்கில் கொண்டு அனைவரும் தனியார் பள்ளியில் படிப்பதாக பாவித்துக்கொண்டாலும் 2 இலட்சம் மாணவர்களை மட்டுமே அரசுப்பள்ளிக்கு கொண்டு வரமுடியும். மீதமுள்ள 42 இலட்சம் மாணவர்களை அரசுப்பள்ளிகளுக்கு கொண்டு வரமுடியுமா? இந்த 42 இலட்சம் மாணவர்களை அரசுப்பள்ளிகளை நோக்கி கொண்டு வருவதற்கு என்ன திட்டம் இருக்கிறது?

தமிழக அரசின் புதிதாக பதவியேற்றுள்ள மாண்புமிகு கல்வி அமைச்சரும், கல்வித்துறைச்செயலர் அவர்களும் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முயல்வது ஓரு நம்பிக்கையை விதைத்துள்ளது. ஆனால் தொடக்கக்கல்வித்துறையும், அரசுப்பள்ளிகளும் எதை நோக்கி பயணிக்கின்றன? வரும் 2017-18 கல்வியாண்டில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எவ்வாறு இருக்கப்போகிறது?

அரசு எடுக்கும் முயற்சிகள் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துகிறதா? 

அரசுக்குச் சில ஆலோசனைகள்...


•    தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை கட்டுப்படுத்துவதற்கு அரசிடம் கடுமையான சட்டங்கள் இல்லை. ஒரே ஊரில் ஒரு தனியார் பள்ளியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களும் அதன் அருகில் உள்;ள ஓர் அரசுப்பள்ளியில் சில நூறு மாணவர்களே படிக்கும் நிலை உள்ளது. ஒரு தனியார் பள்ளியில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களே சேர்க்கப்படவேண்டும் என்று கட்டுப்படுத்தப்படவேண்டும்.
•    கும்பகோணம் தீ விபத்திற்கு பிறகு தனியார் பள்ளிகளை நடத்துவதற்கான வழிமுறைகள் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகளால் இவை ஒழுங்காக கண்காணிக்கப்பட்டால் தனியார் பள்ளிகளின் அசுர வளர்ச்சி ஒரு கட்டுக்குள் வரும்.
•    தனியார் பள்ளிகளில் மூன்று வயது ஆகும் போதே குழந்தைகள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அரசுப்பள்ளியில் முதல் வகுப்பில் 5 வயது நிறைவு செய்த குழந்தைகளை மட்டுமே அனுமதிக்கப்படலாம். அரசுப்பள்ளிகளில் 3 வயதில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள்கூட அதற்கு வாய்ப்பில்லாததால் தனியார் பள்ளியை நாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனாலும் அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைகிறது.  எனவே தொடக்கப்பள்ளி வளாகங்களிலேயே மழலையர் வகுப்புகளை தொடங்கி 3 வயது குழந்தைகளை சேர்ப்பதற்கு ஆணைகள் வெளியிடப்படவேண்டும்.
•    கல்வி உரிமைச்சட்டப்படி ஏழை மாணவர்கள் தாங்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் சேர்ந்து இலவசமாக படிப்பதற்கு வழிவகையுள்ளது. வைகோ உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் நிலவரம் புரியாமல் இதற்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் இந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு காலம் தவறியாவது செலுத்திவிடுகிறது. இது தனியார் பள்ளி முதலாளிகளுக்கு லாபம் ஈட்டி தரும் நடவடிக்கையே ஆகும். இந்த மாணவர் சேர்க்கை அனைத்தும் அரசுப்பள்ளிக்கு சேர வேண்டியவையே ஆகும்.  
•    தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் வகுப்புக்கு ஒரு ஆசிரியரை நிர்வாகங்கள் நியமிக்கின்றன. இது மட்டுமின்றி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும் பட்சத்தில் பதிலி ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பெரும்பாலான அரசுத் தொடக்கப்பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவே செயல்பட்டு வருகின்றன. அதாவது  1 முதல் 5 வகுப்புகளுக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். தன் குழந்தைக்கு சிறந்த கல்வியைக் கொடுக்க நினைக்கும் ஒரு பெற்றோர் இவ்விரண்டில் எதை தேர்ந்தெடுப்பார் என்பது அனைவருக்கும் வெளிச்சம். மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் தான் அதிக ஆசிரியர்கள் நியமிக்கப்படலாம் என்பது அரசின் கொள்கை. வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருந்தால்தான் நாங்கள் மாணவர்களை சேர்ப்போம் என்பது பெற்றோர்களின் வாதம். இதற்கு இடையில் தொங்கிக் கொண்டிருக்கிறது அரசுப்பள்ளிகளின் எதிர்காலம்.
•    தனியார் பள்ளிகளில் பயிலும் ஒரு மாணவன் ஆண்டுக்கு சுமார் ரூபாய் 22 ஆயிரம் கட்டணம் செலுத்துகின்றான். அரசுப்பள்ளியில் பயிலும் ஒரு மாணவனுக்கு அரசு செலவிடும் தொகை அதைவிட அதிகம். ஆசிரியர்கள் ஊதியம் சத்துணவு ஊழியர் ஊதியம் விலையில்லா பாடநூல் குறிப்பேடு புத்தகப்பை சத்துணவு சீருடை காலணி ஆகியவற்றை கணக்கிட்டால் ஒரு மாணவனுக்கு அரசு செலவிடும் தொகை ஒரு ஆண்டுக்கு ரூபாய்  30 ஆயிரத்தை தாண்டும். எனவே அனைத்து பள்ளிகளும் அரசுடைமையாக்கப்பட்டு வருமான வரி செலுத்துவோரின் குழந்தைகளிடமிருந்து மட்டும் கட்டணம் பெற்றுக்கொண்டு மற்ற அனைவருக்கும் இலவசக்கல்வியை வழங்குவதே சரியான தீர்வாகும். அரசு ஆசிரியர் பணியிடங்களும் புதிதாக உருவாகும்.

மேலே கூறப்பட்டுள்ள ஆலோசனைகள் அனைத்தும் ஆட்சியாளர்களுக்கும் அலுவலர்களுக்கும் தெரியாமல் இல்லை. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒரே ஆணையின் மூலம் செல்லா நோட்டுகளாக அறிவித்த மத்திய அரசாலும் நடைமுறைப்படுத்திய மாநில அரசாலும்; இது ஒன்றும் செய்ய முடியாததில்லை. ஆனால் தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் கல்வி வள்ளல்களாக புதிய அவதாரம் எடுத்துள்ள அரசியல்வாதிகள் சிறுபான்மை மற்றும் ஆன்மீக அறக்கட்டளைகள், நீதிமன்ற வழக்குகள் ஆகியவற்றின் தடைகளை மீறி கல்வித்துறையை சீர் செய்வதில் தயக்கம் உள்ளது என்பதே உண்மை.
                       
  தொடர்புக்கு: kmasnagai@gmail.com                    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com