உங்கள் பின் நம்பர் என்ன? இந்த கேள்விக்கான பதில் இங்கே!

உங்கள் பின் நம்பர் என்ன? என்று வங்கிகளிடம் இருந்து உங்கள் செல்பேசிக்கு வரும் அழைப்புகளுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
உங்கள் பின் நம்பர் என்ன? இந்த கேள்விக்கான பதில் இங்கே!

உங்கள் பின் நம்பர் என்ன? என்று வங்கிகளிடம் இருந்து உங்கள் செல்பேசிக்கு வரும் அழைப்புகளுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தொலைக்காட்சிகள், செல்போன் குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் என பல்வேறு வகைகளிலும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு திரும்பத் திரும்ப ஒரு தகவலை அறிவுறுத்தி வருகிறது.

அது என்னவென்றால், "எந்த காரணத்தைக் கொண்டும் வங்கி அதிகாரிகளோ ஊழியர்களோ, தங்களது வாடிக்கையாளரிடம் அவரது ஏடிஎம் எண், சிவிவி எண், பின் நம்பர், ஓடிபி, பிறந்த நாள் உள்ளிட்ட விவரங்களை கேட்க மாட்டார்கள்" என்பதுதான்.

இதன் தீவிரம் குறித்து எத்தனை பொதுமக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்றால், ஒரு சில சதவீதம் மட்டுமே.

வங்கியில் இருந்து பேசுவதாக ஒரு அழைப்பு வருகிறது, உங்கள் ஏடிஎம் அட்டையின் பணப்பரிவர்த்தனை அளவு உயர்த்தப்படுகிறது. அதற்காக உங்கள் அட்டை எண், பின் எண் தாருங்கள் என்று கேட்கிறார்கள். இந்த பேச்சில் திருப்தியடைந்த வாடிக்கையாளரும், உடனடியாக அவரது வங்கிக் கணக்கு குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். அடுத்த நாள் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் களவு போகிறது.

அடுத்து, ஆன்லைனில் ஒரு சில பொருட்களை வாங்க ஒருவர் ஆர்டர் செய்கிறார். பொருள்கள் வரவில்லை. அடுத்த நாள் ஒரு அழைப்பு வருகிறது. நீங்கள் ஆர்டர் செய்த பொருளை அனுப்ப முடியவில்லை. பணத்தைத் திரும்ப செலுத்த வேண்டும், உங்கள் வங்கி கணக்கு, ஏடிஎம் அட்டை எண், பின் நம்பர் ஆகியவற்றை அனுப்புமாறு கோருகிறார்கள். ஒன்றும் தெரியாத வாடிக்கையாளர் பணம் திரும்ப வர வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்கும் அனைத்தையும் அனுப்புகிறார். மறுநாள் பணம் வந்திருக்கிறதா என்று வங்கிக் கணக்கை பரிசோதித்தவருக்கு பேரதிர்ச்சி.. சில ஆயிரங்கள் காணாமல் போயுள்ளது.

இதுபோன்று ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 21% வங்கி வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்கிறது அசோசெம் நடத்திய ஆய்வு. இது 2016ம் ஆண்டு புள்ளி விவரம் என்பதும், 2017ல், இந்தியாவில் இதுபோன்ற மோசடிகள் அதிகரித்திருப்பதும் அடுத்த அதிர்ச்சித் தகவல்.
 

வங்கிகள் பல முறை அறிவுறுத்தியும், அறியாமை காரணமாக சிலர் ஏமாற்றப்படுகிறார்கள் என்கிறது வங்கி. எங்களது தனிப்பட்ட விவரங்கள் எப்படி இதுபோன்ற மோசடிக்காரர்களுக்குக் கிடைக்கிறது என்று மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில், 3ம் நபர் உருவாக்கும் செல்போன் செயலிகள் மற்றும் இ-காமர்ஸ் இணையதங்களில் பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள்தான் என்கிறது பகீர் ரிப்போர்ட்.

பிரிஸ்க்இன்போசெக் டெக்னாலஜி அன்ட் கன்சல்டிங் நிறுவனர் அருல்செல்வர் தாமஸ் கூறுகையில், "மொபைல் பேங்கிங் செயலிகள், வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்களில் சமரசம் செய்து கொள்கிறார்கள். நாம் தற்போது ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகிவிட்டோம், ஒவ்வொரு செயலியையும் டவுன்லோட் செய்யும் போது ஒரு மெசேஜ் வரும், அதாவது 'உங்கள் கான்டேக்ட்ஸ், கேலரி உள்ளிட்டவற்றை ஆக்ஸஸ் செய்யலாமா' என்பதுதான், அதனை நாம் முழுமையாக படித்து புரிந்து கொள்ளாமல் அக்செப்ட் கொடுத்து விடுகிறோம். செயலியை பயன்படுத்துவதில் மட்டுமே நம் கவனம் இருக்கிறதேத் தவிர, நமது தகவல்களின் பாதுகாப்பில் இல்லை" என்கிறார்.

அவரே தொடர்கையில், "இதனால் உங்கள் செல்போனை வேறு யாரிடமாவது கொடுத்தால், அது உங்கள் பாஸ்புக்கை வேறொருவரிடம் கொடுப்பதற்கு சமம்" என்றும் கூறுகிறார்.
 

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாளர் நடராஜன் சங்கரராமன் கூறுகையில், வங்கிகள் அனைத்தும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு, வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை யாருக்கும் வழங்காதீர்கள் என்ற அறிவுறுத்தல் தகவலை எஸ்எம்எஸ் மூலம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அனுப்பிக் கொண்டே இருக்கின்றன.

ஆர்பிஐ விதியின்படி, ஒரு நபரின் வங்கிக் கணக்குத் தொடர்பான தகவல்களை செல்போன் மூலமாகக் கேட்க யாருக்குமே அதிகாரம் இல்லை. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிக்கிறோம். ஆனாலும் சில வாடிக்கையாளர்கள் ஏமாந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

உங்கள் வங்கிக் கணக்கில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டின் பணப்பரிவர்த்தனை அளவை அதிகமாக்குகிறோம் என்று கூறி ஓடிபி எண்ணைக் கேட்டால் நிச்சயம் அது மோசடி அழைப்பு என்பதை உணருங்கள். இதுபோல இ-காமர்ஸ் இணையதளங்களைப் பயன்படுத்தும் போதும் எச்சரிக்கையாக இருங்கள் என்கிறார் அவர்.

இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு, சில வங்கிகளில் பணியாற்றுபவர்களே உடந்தையாக செயல்படுகின்றனர். ஆனால் இது எல்லா இடத்திலும் நடப்பதில்லை. 

இதுபோன்ற வங்கி மோசடிப் புகார்கள் குறித்து இணையதளம் வாயிலாகவே புகார் கொடுப்பதோ, அதற்கான பலன் கிடைக்கும் என்று காத்திருப்பதோ உங்கள் நேரத்தை வீணடிக்கும் செயல், உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளியுங்கள் அல்லது சைபர் செல்லில் பதிவு செய்யுங்கள் என்கிறார் விவரம் தெரிந்த ஒருவர்.

உங்கள் வங்கிக் கணக்கை பாதுகாப்பது எப்படி?
உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து யாரும் பிக்பாக்கெட் அடிக்காமல் இருக்க வேண்டும் என்றால் நாம் சில வழிமுறைகளை நிச்சயம் கடைபிடித்தேத் தீர வேண்டும்.

அதாவது, 
1. கஃபே, நூலகங்கள் போன்ற பொதுவிடங்களிலும், பலரும் பயன்படுத்தும் கணினிகளிலும் நெட்பேங்கிங்கை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

2. ஒவ்வொரு முறையும் நெட் பேங்கிங்கை பயன்படுத்திய பிறகும் அதனை லாக் - ஆப் செய்ய மறந்து விடாதீர்கள். மேலும் நெட்பேங்கிங் பயன்படுத்திய பிரவுசரையும் க்ளோஸ் செய்து விடுங்கள்.

3. உங்கள் பிரவுசரில் இருக்கும் 'ஆட்டோ கம்ப்ளீட்' என்ற ஆப்ஷனை டிஸ்ஸேபிள் செய்து விடுங்கள்.

4. உங்கள் கணினியில் ஃபைர்வால் மற்றும் ஆன்டி-வைரஸ் மென்பொருட்களை பதிவேற்றி வையுங்கள். இதனால், உங்கள் கணினியில் யாரேனும் மோசடி செய்வதற்கான மென்பொருளை பதிவேற்றம் செய்தால் கண்டுபிடித்து விடலாம்.

5. உங்கள் பாஸ்வேர்ட் எப்போதும் மிகக் கடினமானதாக இருக்கட்டும். எளிதாக கண்டுபிடிக்க முடியாததாகவும் இருக்கவேண்டும். ஒரு சில வங்கிக் கணக்குகளுக்கு ஒரே பாஸ்வேர்ட் வைப்பதையும் தவிர்க்க வேண்டும்.

6. செல்பேசியில் இருந்து வரும் எந்த அழைப்புக்கும், உங்கள் வங்கிக் கணக்கு பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டவே வேண்டாம்.

7. உங்கள் நெட்பேங்கிக் பாஸ்வேர்டை அவ்வப்போது மாற்றிக் கொள்ளுங்கள். அதனை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

இப்போது சொல்லுங்கள், உங்கள் பின் நம்பர் என்ன? என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்பது தெரிந்திருக்குமே. இனி இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்பதும் நிச்சயம் முடிவு செய்திருப்பீர்கள் அல்லவா...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com