குறைந்த செலவில் முழு உடல் பரிசோதனை: லைக்ஸ் அள்ளும் அரசு மருத்துவமனை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்த ‘அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்’ மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
குறைந்த செலவில் முழு உடல் பரிசோதனை: லைக்ஸ் அள்ளும் அரசு மருத்துவமனை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்த ‘அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்’ மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

பரிசோதனை செய்து கொண்டவர்கள் அரசு மருத்துவமனையில் இப்படி ஒரு திட்டமா என்று நிச்சயம் ஆச்சரியப்படுவது மறுக்க முடியாத உண்மை.

பலருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும், தெரியாத சிலருக்கு உதவும் என்பதால் இந்த தகவல்கள் இங்கே பகிரப்பட்டுள்ளன. முதலில் வருபவர்களுக்கு முதலில் சேவை என்பதே இங்கு அடிப்படை. 

தனியார் மருத்துவமனைகளில் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3 ஆயிரம் ரூபாய்க்கு முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. கட்டணத்தை பணமாக மட்டுமே செலுத்த முடியும். 

தனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவுக்கு மிகவும் சுத்தமாக, சுகாதாரமாக முழுக்க முழுக்க ஏசி அறை வசதியுடன், பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 1.3.2016 அன்று ரூ.10 கோடி மதிப்பில் அதி நவீன உபகரணங்களுடன் 4550 சதுர அடி பரப்பளவில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டத்தை துவக்கி வைத்தார். 

இந்த திட்டம் எண்ணற்ற ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் பொது மக்கள் குறைந்த கட்டணத்தில் உடல் பரிசோதனைகளை முழுமையாக ஒரே இடத்தில் பெறச்செய்வதாகும்.

மேலும், மூன்று பிரிவுகளில் ரூபாய் 1000க்கு அம்மா கோல்டு முழுஉடல் பரிசோதனை திட்டமும், ரூபாய் 2000க்கு அம்மா டைமண்டு முழு உடல் பரிசோதனை திட்டமும், ரூபாய் 3000க்கு அம்மா பிளாட்டினம் முழுஉடல் பரிசோதனை திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசு மற்றும் பிற மாநில அரசு உயர் அலுவலர்கள் இத்திட்டத்தை பார்வையிட்டு தொடர்ந்து வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

குறைந்த கட்டணம்
முழுவதும் குளிரூட்டப்பட்ட இம்மையம் மிகவும் சுகாதாரமான முறையில் தனியார் மருத்துவமனைகளுக்கு மேலாக பராமரிக்கப்படுகிறது. இந்த பரிசோதனைகளை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டால் குறைந்தது ரூ.10,000க்கு மேல் செலவாகும். அம்மா முழு உடல் பரிசோதனையில் பயனாளிகள் பதிவு செய்தவுடன் அன்றே பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் அளிக்கப்பட்டு மருத்துவர்களால் உரிய மேல்சிகிச்சைக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். பரிசோதனைக்கு வரும் பயனாளிகளுக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவு எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்கப்படுகிறது.

என்னென்ன பரிசோதனைகள்
இந்த முழு உடல் பரிசோதனை திட்டத்தின் கீழ் சுமார் 18 வகை மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

அம்மா பிளாட்டினம் சிறப்பு பரிசோதனைக்கு 3 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 

இந்த திட்டத்தில் முழு ரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, சக்கரை நோய்க்கான ரத்த பரிசோதனை (சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிட்ட பின்பும்) சிறு நீரக ரத்த பரிசோதனை, ரத்த கொழுப்பு பரிசோதனை, கல்லீரல் ரத்த பரிசோதனை ஹெப்படைடிஸ் பி ரத்த பரிசோதனை, ரத்த வகை மற்றும் ஆர்.எச். பரிசோதனை, இசிஜி, மார்பு டிஜிட்டல் எக்ஸ்ரே, மிகையொலி பரிசோதனை (ஸ்கேன் அப்டாமன்) கருப்பை முகைப் பரிசோதனை , மின் ஒலி இதய வரைவு (எக்கோ), பி.எஸ்ஏ, தைராய்டு பரிசோதனைகள், ஹெச்பிஏ1சி பரிசோதனைகள், டிஜிட்டல் மார்பக சிறப்பு பரிசோதனை, டெக்ஸா ஸ்கேன், எலும்பு உறுதிதன்மை ஆகிய பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
பரிசோதனை செய்ய வருபவர்களை நேரில் வந்தோ அல்லது ஆன்லைனிலோ பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் ‘mmcmhc.in’ பதிவு செய்யலாம்.

பரிசோதனை நேரம்
காலை 8 மணிக்கு பரிசோதனை மையத்துக்கு வர வேண்டும். வரவேற்பாளரிடம் பெயர் பதிவு செய்து கொண்டு தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். 8 மணிக்கு துவங்கும் பரிசோதனைகள் அனைத்தும் 11.30 மணிக்குள் முடிந்து விடும். பரிசோதனைக்கு வருபவர்களுக்கு இலவசமாகவே  காலையில் இட்லி, பொங்கல், காபி வழங்கப்படுகிறது.

பரிசோதனைக்கு வருபவர்கள் இரவு 8 மணிக்கே சாப்பாட்டை முடித்து கொள்ள வேண்டும். முதல் பரிசோதனை எடுக்கும்போது சாப்பிட்டு 12 மணி நேரம் ஆகி இருக்க வேண்டும். 8 மணிக்கு வரும்போது தண்ணீர் மட்டும் குடித்து வரலாம். டீ, காபி எதுவும் குடிக்கக் கூடாது. காலையில் அனைத்து பரிசோதனைகளும் முடிந்ததும், மறுநாள் காலை 10 மணிக்கு வந்து அனைத்து பரிதசோதனை முடிவுகளும் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை மருத்துவர்களிடம் தேவையான ஆலோசனைகளை பெறலாம்.

இங்கு 3 மீன் தொட்டிகள், 3 டி.வி. வைக்கப்பட்டுள்ளன. படிப்பதற்கு புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இனிமையான இசை  ஒலிபரப்பப்படுகிறது. மையத்திற்கு முன்பு மனதை கவரும் வகையில் பச்சை பசேலென தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அருகிலேயே சாப்பிட காண்டீன் உள்ளது. இதனால், பரிசோதனை மையத்துக்குள் சென்றால் மருத்துவமனைக்குள் இருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் மன நிறைவும், மகிழ்ச்சியும் தரும் வகையில்  அமைக்கப்பட்டுள்ளது.


செயல்படும் நாட்கள்
ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினம் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் பரிசோதனை மையம் செயல்படும். 

அரசு மருத்துவமனை என்ற நினைப்பே இல்லாத அளவுக்கு, சிறந்த உபசரிப்பு, சிறப்பான முறையில் வழிகாட்டுதல், இதமான சூழ்நிலை, குறைந்த கட்டணத்தில் நவீன கருவிகள் மூலம் சிறப்பான பரிசோதனை ஆகியவை அனைவரையும் கவர்ந்துள்ளது.

முதல் முறையாக இங்கு வந்து முழு உடல் பரிசோதனை செய்து கொள்வோர், மிகுந்த மகிழ்ச்சி அடைவதை காண முடிகிறது. தனியார் மருத்துவமனையில் கூட இந்த அளவுக்கு சுத்தமாக இல்லை. அந்த அளவுக்கு சுத்தமாக இருக்கிறது. பரிசோதனைகள் வேகமாக முடிகிறது. மிகவும் அன்பாக நடத்துகிறார்கள் என்று கூறுகிறார்கள். மேலும், இந்த பரிசோதனைக்கு வந்த பிறகு நிச்சயம் அவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் இதனை பரிந்துரைக்கிறார்கள்.

இது குறித்து சரஸ்வதி காயத்ரி என்பவர் பேஸ்புக்கில் பதிவு செய்திருப்பதாவது,

அதன் சாராம்சம்...

நண்பர்களின் கவனத்திற்கு,
சென்னை அரசு மருத்துவமனையில் " முழு உடல் பரிசோதனை" ரூபாய் 3000/- க்கு செய்யப்படுகிறது. GH என்றதும் நானும் முகம்சுளித்தேன். ஆனால் நேரில் சென்று பார்த்ததும் மூக்கின் மேல் விரல் வைத்தேன்.

1. கொள்ளை காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கிற மருத்துவமனை சுத்தம், கவனிப்பு.
2. தனியாக பரிசோதனை செய்து கொள்ள வருகிற ஆண்,பெண்களை சரியாக வழிகாட்டி அவர்களே ஒவ்வொரு பரிசோதனைக்கும் கூட்டிச்செல்வது.
3. பரிசோதித்துக்கொள்பவர்களுக்கு வயிற்றைக்கெடுக்காத இலவச சிற்றுண்டி.
4. அதி சுத்தமான கழிப்பறை. தொடர்ந்து சுத்தம் பண்ணிக்கொண்டே இருக்கிறார்கள்.
5. அட்டகாசமான இன்டீரியர் டெகரேஷன். மூங்கில் ஸோஃபா,நாற்காலிகள்.
6. இதம் தரும் வயலினிசை; சதா LED டி.வியில் அலறுகிற செய்திச்சானலை off செய்து விடலாம். அல்லது tom & jerry போடலாம்.
7. சிரித்த முகத்துடன் உலா வருகிற இளம் மருத்துவர்கள்.
8. ரிஷப்ஸனிஸ்ட் அளவான ஒப்பனையில், அழகான சுடிதாரில் wow சொல்ல வைக்கிறார்.
9. நல்ல சுத்தமான குடிநீர்.
10. நீங்கள் v.i.p. எனில் இன்னும் சுத்தமான அறையில் அமரவைக்கப்படுவீர்கள்.
11. கண்களைக்கவரும் மூன்று பெரிய fish tanks. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியவில்லை.
12. News paper விரும்பிகளுக்கு படிக்க அதுவும் உண்டு.
13. காலை 7.00 மணிக்கு அங்கே இருப்பது மாதிரி ப்ளான் பண்ணிக்கொண்டால் 12.00 மணிக்கு எல்லா சோதனைகளையும் முடித்து விடுகிறார்கள் மறுநாள் காலை 9.00 மணிக்கு  ரிசல்ட் or report.

நம் உடல் நமக்கு முக்கியம். வாய்ப்பும்,நேரமும், மூவாயிரம் பணமும் இருப்பவர்கள் தயவுசெய்து முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இப்பரிசோதனைகளை வெளியே செய்துகொண்டால் அதிகமாய் பணம் செலவாகும்.

பயன்பெற்றவர்கள் பகிரச்சொன்னார்கள். நேரில் சென்று பார்த்து, பதிவு செய்கிறேன்.

என்று நம் நாட்டில் கல்வியும்,மருத்துவமும் அத்தனை பேருக்கும் சமமாகக்கிடைக்கிறதோ அன்றே நாம் வல்லரசாகிவிடுவோம் தானே! என்று பதிவிட்டிருந்தார்.


இதோடு, இந்த பதிவை ஏராளமான மருத்துவர்களும் தங்களது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்திருப்பதும் கூடுதல் தகவல்.

மேலும் விவரங்களை அறிந்து கொள்ள http://www.mmcmhc.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும். தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற  044 - 2530 5000 என்ற எண் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com