ஜிஎஸ்டியால் இந்த ஆண்டு முன்கூட்டியே வருகிறதா ஆடி மாதம்.. எப்படி?

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் என்றால் அது ஷாப்பிங் சீசன் என்பது போல அதிரடி தள்ளுபடிகள் களைகட்டும்.
ஜிஎஸ்டியால் இந்த ஆண்டு முன்கூட்டியே வருகிறதா ஆடி மாதம்.. எப்படி?


சென்னை: வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் என்றால் அது ஷாப்பிங் சீசன் என்பது போல அதிரடி தள்ளுபடிகள் களைகட்டும்.

ஆடி மாதத்தை ஆங்கில மாதத்தில் சொல்ல வேண்டும் என்றால் ஜூலை -  ஆகஸ்ட் மாதங்களில் வரும்.  ஆனால், இந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால், ஆடி மாத தள்ளுபடிகளை முன்கூட்டியே அறிவிக்க சிறு வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மேஜை, நாற்காலி விற்பனை கடைகள் உள்ளிட்ட சில்லறை வணிகக் கடைகள் பலவும் தங்களிடம் உள்ள ஏராளமான சரக்குகளை ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வருவதற்கு முன்பே விற்பனை செய்து விடும் வகையில், தள்ளுபடி விலையை அறிவிக்க முன் வந்துள்ளன. சில கடைகளில் 50% அளவுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள மிகப்பெரிய ஸ்டேஷனரி கடையில் கைக்கடிகாரங்களுக்கு 25 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பின்னணி என்னவென்றால், கைக்கடிகாரங்களுக்கான வரி விகிதம், ஜிஎஸ்டியால் மாறுபடுகிறது. தற்போது 14 சதவீதமாக இருக்கும் வரி, ஜிஎஸ்டிக்குப் பிறகு 28% ஆக உயரும். எனவே தற்போது 25% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதாம்.

கன்ஸ்யூமர் டியூரபிள் மற்றும் டிஜிட்டல் புராடக்ட்ஸ் விற்பனை மையத்தில் லேப்டாப் உட்பட பல பொருட்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் நிர்வாகி பி.ஏ. ஸ்ரீனிவாசன் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பல பொருட்களின் விலை உயரும் என்பதால், ஏற்கனவே இருக்கும் பொருட்களை தள்ளுபடி விலையில் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

தற்போதிருக்கும் விலையை விட, ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலை உயரும் வாய்ப்பிருக்கும் பொருட்களை, தள்ளுபடி விலையில் விற்க பல சில்லறை வணிக நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

பிரான்டட் துணி வகைகளுக்குக் கூட தற்போது சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. 

துணி விற்பனையில் ஜிஎஸ்டி என்ன செய்யும் என்று பார்த்தால், ஒரு துணியின் 60% விலைக்கு 12% வரி விதிக்கப்படும். எனவே, ஒரு துணியின் எம்ஆர்பி விலையிலேயே வரியும் அடங்கிவிடும். இதனால் சில்லறை விற்பனையாளர் எந்த வரியும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. 

அதேசமயம், ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஒரு ஆலையில் இருந்து வெளியேறும் ஒரு துணியின் மதிப்புக்கு வரி மதிப்பிடப்படும். அதாவது, ரூ.1000க்கு மேல் இருக்கும் ஒரு துணிக்கு 12% வரியும், ஆயிரத்துக்குக் குறைவாக இருக்கும் துணிக்கு 5% வரியும் விதிக்கப்படும். இதனால் தற்போது கிடப்பில் இருக்கும் பொருட்களை ஜூலை 1ம் தேதிக்கு பிறகு விற்பனை செய்தால், ஜிஎஸ்டி வரியை தனியாக வசூலிக்க வேண்டியதிருக்கும். எனவே, தங்களிடம் இருக்கும் இருப்புகளை காலி செய்யவே சில்லறை விற்பனையாளர்கள் விரும்புவார்கள்.

செல்போன் விற்பனையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், தற்போது அலமாரிகளில் பல நாட்களாக விற்பனையாகாமல் இருக்கும் செல்போன்களுக்கு மட்டுமே தள்ளுபடி அறிவிக்கிறோம். ஜிஎஸ்டி பற்றி பலருக்கும் புரியவில்லை. இந்த நிலையில் எப்படி செல்போன் வாங்குவார்கள். அதனால்தான் சலுகை அறிவிக்கிறோம் என்கிறார்கள்.

இது குறித்து வழக்குரைஞர் மற்றும் வரித் துறை ஆலோசகருமான வைத்தீஸ்வரன் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், 'சில்லறை விற்பனையாளர்கள், தங்களிடம் இருக்கும் ஓராண்டுக்கும் மேலான பழைய இருப்புகளை விற்பனை செய்யவே இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டு வருகிறது. இவற்றுக்கு ஜிஎஸ்டியால் எந்த பலனும் கிடைக்காது என்பதால் தான்' என்று கூறுகிறார்.

இந்த பொருட்களுக்கு எல்லாம், ஏற்கனவே இருக்கும் பழைய வரி விதிப்பின் கீழ் வரி செலுத்தப்பட்டுவிட்டிருக்கும்.  உதாரணமாக உற்பத்தி வரி, மதிப்புக் கூட்டு வரி போன்றவை. இவற்றை ஜூலை 1ம் தேதிக்குப் பிறகு விற்பனை செய்தால், கூடுதலாக ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியது இருக்கும். அதனால்தான் முன்கூட்டியே விற்பனை செய்ய சில்லறை வணிகர்கள் விரும்புகிறார்கள்.

ஜூலைக்கு முன்பு அவற்றை காலி செய்யவே தள்ளுபடி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சந்தையில் ஜிஎஸ்டியால் ஒரு பொருளின் விலை ஏறுகிறது, குறைகிறது என்று பலவாறான கருத்துகள் இருக்கின்றன. அதே சமயம் ஜிஎஸ்டி வணிகர்களுக்கு நல்லதாகவும் இருக்கலாம், மோசமானதாகவும் இருக்கலாம் என்கிறார் வைத்தீஸ்வரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com