எச்சரிக்கை! சாலை விதிகள் என்பவை யாருக்கோ சொல்லப் பட்ட ராமாயணங்களல்ல!

விதிமுறைகளுக்கு ஏற்ப வாகனம் ஓட்டுபவர் தகுந்த சந்தர்ப்பங்களில் தக்க சைகை காட்ட வேண்டும். கை சைகை காட்ட முடியாதபட்சத்தில் எலெக்ட்ரிக்கலில் இயங்கக்கூடிய சாதனம் வாகனத்தில் இருக்க வேண்டும்.
எச்சரிக்கை! சாலை விதிகள் என்பவை யாருக்கோ சொல்லப் பட்ட ராமாயணங்களல்ல!
  1. லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி மூதாட்டி, ஓட்டுநர் சாவு: மதுர வயல் மேம்பாலத்தின் அருகே நின்று கொண்டிருந்த சரக்குப் பெட்டக லாரி மீது திடீரென ஆம்புலன்ஸ் மோதியதால் அதனுள் சிகிச்சைக்கென பயணித்துக் கொண்டிருந்த மூதாட்டி இறந்து விட்டார். இது நேற்று நடந்த சம்பவம்.
  2. ஓடும் காரில் தீ விபத்து, 7 பேர் உயிர் தப்பினர்- இது சென்னை நசரேத் பேட்டையில் நேற்று நடந்த சம்பவம். வேலூர், ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் 6 நபர்கள் தங்களது குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க வேண்டி சென்னை டி.நகருக்கு வாடகை காரில் வந்தனர். அவர்களுடன் ஓட்டுநர் சுரேஷ் என்பவரும் இருந்தார். அவர்களது கார் சென்னை பூந்தமல்லி நசரேத் பேட்டைக்கு அருகில் வரும் போது காரின் முன்பகுதியிலிருந்து திடீரென புகை கிளம்பியது. அருகிலிருந்த பி.எஸ்.என்.எல் தொலைபேசியகம் முன்பு காரை நிறுத்தி முன் பக்கத்தை சோதனையிட முயன்றபோது திடீரென கார் அணைக்க இயலாமல் தீ பற்றி எரியத் தொடங்கி முழுக் காரையும் நாசமாக்கி முடித்தது. ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த இந்த சங்கதி அங்கிருந்தோரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
  3. பேருந்துக்கு காத்திருந்தவர்கள் மீது கார் மோதல், இரு பெண்கள் சாவு- மாமல்லபுரத்தில் பேருந்து நிறுத்தமொன்றில், பேருந்துக்காக காத்திருந்த இரு பெண்களின் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதியதில் இருபெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர். 
  4. டெம்போ வாகனம் மீது பேருந்து மோதல்! சாலையில் பெருக்கெடுத்து ஓடிய பால்! தனியார் பால் நிறுவனத்துக்குச் சொந்தமான டெம்போ வேனின் மீது அரசுப் பேருந்து மோதியதில் டெம்போவில் இருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பால் சாலையில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடி வீணானது. பலத்த காயங்களுடன் டெம்போ வேன் ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
  5. லாரி மோதி கல்லூரி மாணவி சாவு!  பெரியபாளையத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி பிரியா என்கிற ப்ரியதர்ஷினி இரவில் தன் தம்பியுடன் பைக்கில் வீடு திரும்பும் போது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மேற்கண்ட சம்பவங்கள் அனைத்துமே நேற்று ஒருநாளில் நடந்தவை. குறிப்பிட்டுச் செல்ல வேண்டுமானால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டுமே நடந்தவை. 2011 ஆம் ஆண்டு எடுக்கப் பட்ட ஒரு புள்ளி விவரக் கணக்கின் படி நாடு முழுதும் ஒரு வருடத்துக்குள் 5 லட்சம் சாலை விபத்துக்கள் நடக்கின்றனவாம். இவற்றில் இரு சக்கர வாகனங்களில் நேரும் விபத்துக்களின் சதவிகிதம் தான் மிகவும் அதிகம். அவற்றை அடுத்து அதிகமாக விபத்துகளில் சிக்கும் வாகனங்களில் டிரக்குகள் மற்றும் லாரிகள் இரண்டாமிடம் வகிக்கின்றன. வருடமொன்றில் விபத்துக்குள்ளாகும் கனரக வாகனங்களின் சதவிகிதம் 19.2. இவை இரண்டுக்கும் அடுத்தபடியாக கார்கள் அதிகம் விபத்துக்குள்ளாகின்றன. கார்களை அடுத்து பேருந்துகள், ஜீப்புகள், ஆட்டோ போன்ற மூன்று சக்கர வாகனங்கள் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன. 

2012 ஆம் ஆண்டின் சாலை விபத்துகள் குறித்த வரை படம்...

இந்த புள்ளி விவரக் கணக்கின் அடிப்படையில் பார்த்தால் நாடு முழுதும் ஏதாவது ஒரு இடத்தில், எங்கோ ஒரு மூலையில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒரு முறை ஒரு விபத்து நடந்து கொண்டு தானிருக்கிறது. ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கு ஒருமுறை யாராவது ஒரு நபர் விபத்தில் மரணித்துக் கொண்டே இருக்கிறார். இது 2011 ஆம் ஆண்டின் புள்ளி விவரக் கணக்கு. இப்போது 2017 ஆம் ஆண்டு. இடைப்பட்ட 6 ஆண்டுகளில் நிச்சயம் இந்த விகிதங்களில் பெரும் மாறுதல் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறதா? எனத் தெரியவில்லை. ஏனெனில் மேலெ கண்ட கணக்கீட்டின் படி இரு சக்கர வாகன விபத்துக்களால் நேரும் மரண சதவிகிதம் தான் அதிகமாகக் காணப் படுகிறது. இந்த 6 வருடங்களில் இரு சக்கர வாகனங்களில் இருந்து கார் வாங்கிப் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் கூட இரு சக்கர வாகனப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையும் அப்படியொன்றும் குறைந்தபாடாகத் தெரியவில்லை. இப்போது ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் இரு சக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்திருக்க வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.

இது 2015 ஆம் ஆண்டுக்கான சாலை விபத்து விகிதங்களுக்கான வரைபடம்...

ஆண்டு தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கும் சாலை விபத்து விகிதங்களை அரசின் சட்டங்களாலோ, அல்லது கடுமையான சாலை விதிகளாலோ இதுவரை மாற்ற முடிந்ததில்லை. அப்படி மாற்றம் சாத்தியமெனில் வருங்காலங்களில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டுமல்லவா? அது குறையவே இல்லை என்பதோடு மட்டுமல்ல நாள் தோறும் கூடிக் கொண்டே இருப்பதும் தான் மிகுந்த வருத்தத்திற்குரிய விசயம். 

சாலை விபத்துக்களுக்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா? ஒட்டுமொத்த மக்களும் சாலை விதிகளை யாருக்கோ எழுதப் பட்ட ராமாயணம் போல கருத்தில் ஏற்றிக் கொள்ளாது அவற்றைக் கைவிட்டு அவரவர் இஷ்டத்துக்கு சாலைகளையும், வாகனங்களையும் கையாள்வதினால் தான் இத்தனை அதிகமாக விபத்துகள் நேரிடுகின்றன. எனவே நாம் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது வாகனங்களை இயக்க அல்ல. சாலை விதிகளை.

இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவதில் நடைபெறும் முறைகேடுகள்...

அயல்நாடுகளில் ஓட்டுனர் உரிமம் பெறுவது மிகக்கடினமான ஒரு டாஸ்க். சாலை விதிகள் குறித்துப் படித்து, தேர்வு எழுதி, வாகனங்களை முறையாக ஓட்டிக் காண்பித்து அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். நம் நாட்டிலும் அந்த முறை தான் பின்பற்றப்படுகிறது. ஆனால் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் எத்தனை பேர் முறையாக சாலை விதிகளையும், போக்குவரத்து விதிகளையும் அறிந்தவர்கள் என்பதில் தான் இருக்கிறது அந்த முறைமையின் வெற்றி. இன்றும் ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ள பெரும்பாலான நபர்களுக்கு சாலை விதிகள் என்றால் என்னவென்றே பரிச்சயம் இல்லாமல் தன் போக்கில் வாகனங்களைக் கையாள்பவர்கள் உண்டு. அவர்களுக்கு வாகனங்களை இயக்கத் தெரியும். எதிரில் வரும் வாகனங்களை இடித்துக் கொள்ளாமலும், பின்புற வாகனங்களைப் பக்கவாட்டுக் கண்ணாடியில் பார்த்தறிந்து முந்திச் செல்லவோ, பிந்திச் செல்லவோ மட்டுமே தெரிந்திருக்கும். சாலை விதிகளுக்குட்பட்டு சைகை வாயிலாகவோ, இண்டிகேட்டர்கள் வாயிலாகவோ தங்களது வாகன மொழியைப் பேசத் தெரிந்தோர் எத்தனை பேர் எனக் கணக்கிட்டால் நமக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சக் கூடும். இதற்கு காரணம் பெருகி வரும் தனியார் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள். பயிற்சிப் பள்ளிகளில் எந்தப் பிரச்னையும் இல்லை... ஆனால் அவற்றில் பின்பற்றப் படும் முறைகேடான குறுக்கு வழிகள் தான் ஆபத்தைத் தேடி வந்து சேர்க்கின்றன.
இன்றைய தேதிக்கு வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம் பெற வேண்டுமெனில் ஏதாவது ஒரு தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி வாயிலாக விண்ணப்பித்து விட்டு, அவர்கள் சொல்லும் நாளன்று ஆர்.டி.ஓ அலுவலகம் சென்றால் போதும்... உங்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப் பட்டு தேர்வெழுத அனுமதிக்கப் படுவீர்கள். சாலை விதிகளை நீங்கள் முற்றாக அறிந்திருக்கிறீர்களா? என்பதற்கான ஆப்சனல் தேர்வை உங்களுக்காக உங்களது தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியின் பிரதிநிதிகளே கூட எழுதி விடுவார்களாயிருக்கும். பின்னர் எல்.எல்.ஆர் என்று சொல்லப்படக் கூடிய கற்றுக் கொள்பவர்களுக்கான ஓட்டுனர் உரிமப் பதிவு வழங்கப் படும். இந்தப் பதிவைப் பெற்றவர்கள் தங்களது வாகனங்களில் L போர்டுடன், பின்னிருக்கையில் பயிற்சியாளரின் துணையுடன் வாகனங்களை இயக்க அனுமதி உண்டு என்கிறது சட்டம். எல்.எல்.ஆர் உரிமம் பெற்றவர்கள் ஆறு மாதங்களுக்குள் ஓட்டுனர் உரிமம் பெற ஆர்.டி.ஓ அலுவலகம் சென்று பிறகு 8 போட வேண்டும். 8 போட்டு விட்டால் ஓரிரு தினங்களுக்குள் உங்களது ஓட்டுநர் உரிமம் உங்களை வந்து சேரும்.

விதிகள் எல்லாம் சரியே... ஆனால் அந்த விதிகள் ஒவ்வொன்றையும் நாம் எவ்விதம் கடக்கிறோம் என்பதில் இருக்கிறது சாலை விபத்துக்களின் விகிதங்கள் கூடுவதற்கும், குறைவதற்குமான பலா பலன்கள்.

கீழே விளக்கப் பட்டுள்ள சாலை விதிகளை முற்றாக அறிந்த பின்னர் தான் நாங்கள் ஓட்டுனர் உரிமம் பெற்றோம் என்று சொல்லக் கூடியவர் எவராயினும் ஒருவர் இருந்தாலும் கூட அது இந்தக் கட்டுரை எழுதப் படும் நோக்கத்துக்கான வெற்றி எனக் கொள்ளலாம். ஏனெனில் இங்கே வாகனங்களை இயக்கத் தெரிந்தால் போதும் ஓட்டுநராகி விட்டதான எண்ணம் தான் எல்லோருக்குள்ளும் மிகிழ்கிறது. யாருக்கும் சாலை விதிகளைப் பற்றி எந்த ஒரு கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. முழுதாகக் கற்றுக் கொண்டு ஒரு விசயத்தில் இறங்குவதை அர்ஜுன தபஸ் போலத் தான் பாவிக்க வேண்டியதாக இருக்கிறது. அப்படிப் பட்டவர்கள் நம்மிடையே குறைவு. பெருகி வரும் வாகன விபத்துகளைத் தடுக்க, தவிர்க்க இனியாவது நாம் ஒவ்வொருவரும் முழுதாக சாலை விதிகளை அறிந்து கொண்டு அதனடிப்படையில் வாகனங்களை இயக்குவோம் என உறுதி ஏற்போம். ஒவ்வொருவரும் உறிதி ஏற்போம். அறியாதோருக்கு கற்றுத் தருவது மானுடக் கடமை. ஒருவருக்கு மட்டும் விதிகள் தெரிந்தி என்ன பயன்? சாலை விதிகளை மதித்தல் என்பது ஒட்டுமொத்த மக்களுக்கும் பொதுவான ஒன்றாக இருந்தாலொழிய விபத்துகள் குறைய வாய்ப்பில்லை. எனவே சொந்தமாக வாகனங்களைக் கொண்ட ஒவ்வொருவரும், வாகனங்களை இயக்கும் ஒவ்வொருவரும் அவரவர் வாகனங்களை இயக்கும் போது முற்றூ முழுதாக சாலை விதிகளையும், போக்குவரத்து விதிகளையும் பின்பற்றி அதனடிப்படையில் மட்டுமே தங்களது பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என உறுதி ஏற்போம். 

நமது உயிருக்கு உயிரானவர்களின் மரணம் எப்போதுமே யாருக்கும் உவப்பானதில்லை. படுகாயங்களிலிருந்து மீள்வது அதனினும் கொடுமையானது. அதைத் தாண்டி விபத்தால் கோமா நிலைக்குச் செல்வது நரகம். மூளைச் சாவு என்பது நரகத்தின் உச்சம். எனவே இத்தகைய கொடுமைகளை எல்லாம் அனுபவிக்க இடம் தராமல் நம்மைக் காக்க வல்ல விதிகளை நாம் பின் தொடர்தல் முக்கியம் என்பதை உணர்வோம்.

சாலை விதிகலை அறிவதற்காக இணையத்தில் தேடும் போது ஜீவா என்பவரது இந்த வலைத்தளம் கண்ணில் பட்டது. மிக எளிமையான விளக்கங்களுடனும், புகைப்படங்களுடனும் சாலை விதிகளைப் பற்றித் தெளிவாக விளக்கப் பட்டிருக்கிறது இந்த வலைத்தளத்தில். தேவைப்படுவோர் அங்கேயே சென்றும் வாசிக்கலாம். சிலருக்கு அந்த வலைத்தளம் திறக்கப் பட முடியாததாக இருப்பின் இங்கேயும் அதன் சாரத்தை வாசித்தறிந்து கொள்ளலாம்.
வலைத்தள முகவரி... http://jeevapodhuarivu.blogspot.in/2015/07/blog-post_75.html

சாலை விதிகள்: 
ஓட்டும் ஒழுங்குமுறை (சாலை விதிப்படி)
சாலை விதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அனைவரும் தெரிந்துகொண்டு ஓட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் 1.7.89 அன்று மத்திய அரசு ஓட்டும் முறையை, ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளை இயற்றி உள்ளது. இதை ஒவ்வொருவரும் கடைப்பிடித்தால் பாதுகாப்பாக, விபத்தில்லாமல் வாகனத்தை ஓட்டலாம். இந்தச் சாலை விதிகளை அனைத்து ரக வாகன ஓட்டுநரும் படித்துத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
 

இடதுபுறமாகச் செல்லவும்
ஓட்டுநர், தன்னுடைய வாகனத்தைச் சாலையின் இடதுபுறத்தில் எவ்வளவு நெருக்கமாகச் செலுத்த முடியுமோ அவ்வாறு செலுத்துவதுடன், தனக்கு எதிர்ப்புறமாக வரும் வாகனத்துக்கு, வலதுபுறமாகக் கடந்து செல்ல போதிய இடம் விட வேண்டும்.
 

இடம் வலம் திரும்ப

  • வாகன ஓட்டுநர் இடதுபுறம் திரும்பும்போது, சென்றுகொண்டு இருக்கும் சாலைக்கும், பிரவேசிக்கும் சாலைக்கும் முடிந்த வரையில் இடதுபுறமாகவே வாகனத்தை ஓட்டிச் செல்ல வேண்டும்.
  • வலதுபுறம் திரும்பும்போது, சென்றுகொண்டு இருக்கும் சாலையின் நடுப்பகுதிக்குச் செல்வதுடன் வாகனத்தை கூடிய வரையில் சாலையின் மையக்கோடுகளுக்கு அப்பாலும், சென்டர் மீடியன் உள்ள சாலையில் அதை ஒட்டிச் சென்று வலதுபுறம் திருப்ப வேண்டும்.
  • வாகன ஓட்டுநர், தான் செல்லும் அதே திசையில் செல்லும் எல்லாப் போக்குவரத்தையும், வலப்புறமாக மட்டுமே முந்திச் செல்ல வேண்டும்.

 

இடதுபுறமாகக் கடந்து செல்லுதல்...

  • முன் செல்லும் வாகனத்தின் ஓட்டுநர், வலது பக்கம் திரும்ப சிக்னல் (இண்டிகேட்டர்) காட்டி, சாலையின் நடுப் பகுதிக்கு வந்துவிட்டால், பின்னால் வரும் வாகனத்தின் ஓட்டுநர் முன் செல்லும் வாகனத்தை இடதுபுறம் கடக்கலாம்.

முந்தக்கூடாத இடங்கள்...
தன்னைப்போல அதே திசையில் பயணம் செய்யும் வாகனத்தை, இடையூறு ஏற்படும்படியும், பார்வை மறைக்கக் கூடிய தடை இருக்கும்போதும் கடந்து செல்லக் கூடாது.

பிற வாகனங்கள் முந்துவதை அனுமதித்தல்...
மற்றொரு வாகனம் முந்திச் செல்லும்போது தன் வாகனத்தின் வேகத்தை அதிகரித்தல் அல்லது மற்றவர் தன்னைக் கடந்து செல்வதைத் தடுக்கும் வகையில் எதையும் செய்யக் கூடாது.
 

சாலைச் சந்திப்புகளை எச்சரிக்கையுடன் கடத்தல்...
சாலைக் குறுக்கீட்டையோ, சாலைச் சந்திப்பையோ, பயணிகள் கடக்கும் இடத்தையோ, திருப்பத்தையோ நெருங்கும்போது வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும். மேலும், அந்த இடங்களில் இருப்பவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து நேராத முறையில் செல்ல முடியும் என்று அறிந்துகொண்ட பின்பே கடக்க வேண்டும்.

சாலைச் சந்திப்பில் முன்னுரிமை...

சாலைச் சந்திப்பில் ஓர் ஓட்டுநர் பிரவேசிக்கும்போது, அந்தச் சாலையில் ஏற்கெனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். பிரவேசிக்கும் சாலையில் வலதுபுறம் வரும் எல்லா போக்குவரத்துக்கும் முதலில் வழிவிட வேண்டும்.

தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ்...

ஒவ்வொரு ஓட்டுநரும் தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பணியில் இருக்கும்போது, அவற்றுக்கு முன்னுரிமை அளித்து, ஒதுங்கி தடையின்றி செல்வதற்கு கண்டிப்பாக வழிவிட வேண்டும்.

முன்னுரிமை...

கட்டுப்படுத்தப்படாத சந்திப்புகளில், பாதசாரிகள் கடக்கும் இடங்களிலும், பாதசாரிகள் சாலையைக் கடக்க முன்னுரிமை உண்டு. சைக்கிள் பாதை, பாதசாரிகள் நடக்கும் பாதை இவை உள்ள சாலைகளில், சீருடையணிந்த காவல்துறை அதிகாரி அனுமதித்தால் தவிர வாகனத்தைச் செலுத்தக் கூடாது.
 

U டர்ன்...

தடை செய்யப்பட்ட இடங்களிலும், நெரிசலான சாலைகளிலும் கண்டிப்பாக எந்த ஓட்டுநரும் 'U' டர்ன் செய்யக் கூடாது. 'U டர்ன் செய்ய அனுமதிக்கப்பட்ட இடங்களில் பின்புறக் கண்ணாடியைப் பார்த்து, வலதுபுறம் திரும்புவதற்கான சைகை காட்டி (இண்டிகேட்டர் ஒளிரவிட்டு) பாதுகாப்பாகத் திருப்ப வேண்டும்.

சைகை...

எல்லா ஓட்டுநர்களும் கை சைகை அல்லது இண்டிகேட்டரை தவறாமல், தேவையான இடங்களில் பயன்படுத்த வேண்டும்.

வாகனத்தை நிறுத்திவைத்தல்...

எந்த ஓட்டுநரும், சாலையை உபயோகிப்பவருக்கு ஆபத்து, தடை, அசௌகரியம் ஏற்படாத வகையில் தனது வாகனத்தை நிறுத்திவைக்க வேண்டும். சாலையில் வாகனத்தை எவ்வாறு நிறுத்த வேண்டும் என்று குறிப்பிடும் சின்னமோ, அடையாளமோ இருந்தால், அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

வாகனத்தை இங்கு நிறுத்தி வைக்கக் கூடாது...

சாலைச் சந்திப்பில், சாலைச் சந்திப்பின் அருகில், பேருந்து நிறுத்தம் அருகில், வளைவில், மலை உச்சியில், பாலங்களில், பாதசாரிகள் கடக்கும் பாதையில், சிக்னல் உள்ள இடங்களில், பிரதான சாலை அல்லது துரித போக்குவரத்து உள்ள சாலையில், ஏற்கெனவே நிறுத்தி வைத்திருக்கும் வாகனத்தின் எதிரே, மற்ற வாகனங்களுக்குத் தடையாக, நிறுத்தி வைத்திருக்கும் வாகனத்துக்கு இணையாக, தொடர்ச்சியாக வெள்ளைக்கோடு வரையப்பட்ட சாலைகளில், பேருந்து நிறுத்தம் அருகில், பள்ளிக்கூடம், மருத்துவமனை, பிற கட்டிடத்தின் நுழைவாயில், போக்குவரத்துச் சின்னத்தை மறைத்து, தீயணைப்புக்கு உரிய தண்ணீர் குழாய்க்கு அருகில், சாலையின் மீது வாகனம் நிறுத்தி வைக்கத் தடை செய்யப்பட்ட இடம் ஆகியவற்றில் வாகனத்தை நிறுத்தி வைக்கக் கூடாது.

பதிவு எண்கள் தெரியும்படி வைத்தல்...

வாகனத்தின் பதிவு எண்கள், விளக்குகள் அல்லது சட்டத்தில் குறிப்பிட்டுள்ள அடையாளங்கள் ஆகியவை மறைக்கும்படி பாரம் அல்லது பொருட்கள் ஏற்றிச் செல்லக் கூடாது. அவ்வாறு ஏற்றிச் செல்ல நேரிட்டால், நகலான பதிவு அடையாளங்கள், விளக்குகள் அல்லது சட்டத்தில் குறிப்பிட்டுள்ள அடையாளங்கள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டுவது குற்றம். பதிவு எண் பிளேட் மற்றும் பொருத்தப்பட வேண்டிய மற்ற அடையாளங்கள் எல்லா நேரங்களிலும் தெளிவாகத் தெரியும்படி வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒருவழிப் பாதை...

'ஒருவழிப் பாதை' என்று குறிப்பிடப்பட்டுள்ள சாலைகளில், எந்தத் திசையில் செல்வதற்கு அனுமதி உண்டோ அந்தத் திசையில் மட்டுமே செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட திசையில் இல்லாமல் எதிர்திசையில் வாகனத்தைப் பின்னால் செலுத்தக் கூடாது.

தடச் சாலையில் வாகனம் ஓட்டுதல் (லேன்)...

  • தடக் கோடுகள் இடப்பட்ட சாலைகளில், தடத்தின் உள்ளேயே வாகனத்தைச் செலுத்த வேண்டும். தடம் மாற நேர்ந்தால், மாறுவதற்கு முன்பு உரிய கை சைகைகள் (இண்டிகேட்டர்) காட்ட வேண்டும்.
  • சாலையின் நடுவே மஞ்சள் கோடு இருந்தால், முன்னே செல்லும் வாகனத்தை முந்துவற்கு, எக்காரணம் கொண்டும் மஞ்சள் கோட்டைக் கடக்கக் கூடாது.
  • சாலைப் பரப்பில் வரையப்பட்டுள்ள சின்னம்
  • சாலைச் சந்திப்பு, பாதசாரிகள் கடக்கும் இடம் போன்ற இடங்களை அணுகும்போது, சாலை மீது, 'நிறுத்தம்' என்ற அடையாளத்தைக் கண்டால், வாகனத்தை நிறுத்தக் கோட்டுக்கு முன்னால் வாகனத்தை நிறுத்த வேண்டும்.

வாகனத்தைக் கட்டி இழுத்துச் செல்லுதல்...

  • இயந்திரக் கோளாறு உள்ள வாகனம், முழுமையடையாத வாகனம், டிரைலர், பக்க இணைப்பு வாகனம் தவிர பிற வாகனங்களைக் கட்டி இழுத்துச் செல்லக் கூடாது. பணிமனைக்கு எடுத்துச் செல்லுதல், எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு எடுத்துச் செல்லுதல், பிறரிடம் வாகனத்தை ஒப்படைத்தல் ஆகிய காரணங்கள் தவிர, பிற காரணங்களுக்குக் கட்டி இழுத்துச் செல்லக் கூடாது.
  • அவ்வாறு கட்டி இழுத்துச் செல்லப்படும் வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில், ஓட்டுநர் உரிமம் பெற்ற ஓட்டுநர் இல்லாமல் கட்டி இழுக்கக் கூடாது. அல்லது கட்டி இழுக்கும் வாகனத்தில் முன்புறம் ஸ்டீயரிங் வீல் அசையாதவாறு கட்டப்பட்டு, முன் சக்கரங்கள் சாலை மீது படாமல் சாலையின் மேற்பரப்பிலிருந்து விலகி பாதுகாப்பாக இருந்தால் கட்டி இழுக்கலாம்.
  • ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தில் கட்டி இழுக்கப்படும்போது இரு வாகனங்களுக்கும் இடையே இடைவெளி 5 மீட்டருக்கு மேல் இருக்கக் கூடாது. கட்டி இழுக்க உபயோகப்படும் கயிறுகள், சங்கிலிகள் போன்ற சாதனங்கள், சாலையை உபயோகிப்பவர்களுக்குச் சுலபமாக அடையாளம் தெரியும்படி இருக்க வேண்டும். இழுக்கப்படும் வாகனத்தின் பின்புறத்தில் 'ளிழி ஜிளிகீ' என்ற எழுத்துக்கள் 75 மி.மீ அளவில் வெள்ளைப் பின்னணியில் கறுப்பு எழுத்துக்களால் எழுதப்பட்டு இருக்க வேண்டும்.
  • இணைப்பு வாகனம் அல்லது பக்க இணைப்பு வாகனம் தவிர, பிற வாகனங்களைக் கட்டி இழுக்கும் வாகனத்தின் வேகம் மணிக்கு 25 கி.மீ&க்கு மேல் இருக்கக் கூடாது.

அமைதியும், ஹாரனும்...
தேவை இல்லாமலும், தொடர்ச்சியாகவும் அல்லது தேவைக்கு அதிகமாகவும் ஹாரனை உபயோகிக்கக் கூடாது. அமைதி காக்கும் இடங்களில், தடை செய்யப்பட்ட இடங்களில் கண்டிப்பாக ஹாரன் உபயோகிக்கக் கூடாது.
இன்ஜினில் இருந்து வெளியேறும் புகையை சைலன்சர் வழியாக இல்லாமல் பிற வழிகளில் வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது. பல வகை ஒலி எழுப்பும் அல்லது திடுக்கிடச் செய்யும், உரத்த மற்றும் கிரீச் சத்தமிடும் ஹாரன்களை வாகனத்தில் பொருத்துவதோ, உபயோகிப்பதோ கூடாது. பயணத்தின்போது அதிக ஓசை எழுப்பும் வாகனங்களை ஓட்டக் கூடாது. அச்சுறுத்தும் ஓசை எழுப்பும் மஃப்ளர் பொருத்தப்பட்ட வாகனங்களை ஓட்டக் கூடாது.

போலீஸ் சிக்னல், போக்குவரத்துச் சின்னம்...
வாகனம் ஓட்டுபவர் மற்றும் சாலையை உபயோகிப்பவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள உத்தரவுகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

  • காவல்துறை அதிகாரி அல்லது போக்குவரத்தைக் கட்டுப்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட நபர் தரும் கை சைகைகள் மற்றும் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட வேண்டும்.
  • போக்குவரத்துச் சின்னங்கள் அல்லது தகுதி வாய்ந்த அதிகாரிகளால் இயக்கப்படும் சிக்னல்கள் ஆகியவைகள் தரும் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட வேண்டும்.
  • சாலைச் சந்திப்புகளில் பொருத்தப்பட்டு இருக்கும் தானியங்கி விளக்குகள் தரும் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட வேண்டும்.

பின் தொடரும் தூரம்

முன் செல்லும் வாகனம் திடீரென்று வேகத்தைக் குறைக்க அல்லது நிறுத்த நேர்ந்தால், பின் செல்லும் வாகனம் அதன்மீது மோதிவிடாமல் தவிர்ப்பதற்கு போதிய இடைவெளி விட்டுப் பின் செல்ல வேண்டும்.

திடீரென்று பிரேக் உபயோகித்தல்

எந்த ஒரு வாகனம் ஓட்டுபவரும் பாதுகாப்பின் தேவைக்குத் தவிர, மற்ற இடங்களில் திடீரென்று பிரேக் உபயோகிக்கக் கூடாது.

மலைச் சாலைகளில் முன்னுரிமை

மலைச் சாலைகளில் மற்றும் மிகவும் சரிவான சாலைகளில் கீழ் நோக்கிச் செல்லும் வாகனங்கள், சாலை அகலம் உள்ள இடங்களில் நிறுத்தி, மேல் நோக்கி வரும் வாகனங்கள் பாதுகாப்பாக ஒன்றையன்று கடந்து செல்வதற்கு முன்னுரிமை தர வேண்டும்.

ஓட்டுநருக்குத் தடையாக இருத்தல்

வாகனம் ஓட்டுபவருக்கு இடைஞ்சல், இடையூறு விளைவிக்கும் வகையில் நிற்கவோ, உட்காரவோ அல்லது எந்தப் பொருளையும் வைக்கவோ அனுமதிக்கக் கூடாது.

வேகத்தைக் கட்டுப்படுத்துதல்

ஊர்வலம், தேசியப் படை, போலீஸ் கூட்டம் செல்லும்போது அதனைக் கடந்து செல்ல நேரிட்டாலோ அல்லது சாலையைப் பழுது பார்க்கும் ஆட்களைக் கடந்து செல்ல நேரிட்டாலோ வாகனத்தை 25 கி.மீ வேகத்துக்கு மேற்படாமல் செலுத்த வேண்டும்.

போக்குவரத்து வாகனங்களில் ஆட்கள்...

டிராக்டரை ஓட்டிச் செல்லும்போது எந்த நபரையும் டிராக்டரில் பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது. பொருள் ஏற்றிச் செல்லும் வாகனத்தை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர், தன் வாகனத்தின் கேபினில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஆட்களை ஏற்றிச் செல்லக் கூடாது. இது தவிர, கட்டணம் அல்லது அன்பளிப்புக்குப் பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடாது.
ஆபத்து விளைவிக்கும்படி வாகனத்தின் முன் பின், பக்கவாட்டில் பொருட்கள் நீட்டிக்கொண்டு, குறிப்பிட்ட அளவுக்கு மேல் உயரமாக பாரங்கள் ஏற்றிய வாகனத்தை ஓட்டக் கூடாது.

அபாயகரமானப் பொருட்களுக்குத் தடை

பொதுப்பணி வாகனங்களில் தேவையான எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களைத் தவிர, வெடிக்கக் கூடிய, எளிதில் தீப்பற்றக் கூடிய, ஆபத்து விளைவிக்கக் கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது.

வாகனத்தைப் பின்புறம் செலுத்தத் தடை

யாருக்கும் ஆபத்து அல்லது அசௌகரியம் ஏற்படாது என்று அறிந்த பின்னால் வாகனத்தைப் பின்புறமாகச் செலுத்தலாம். அவ்வாறு எச்சரிக்கையுடன் பின்புறம் வாகனத்தைச் செலுத்தும்போது வாகனத்தைத் திருப்பிக் கொண்டு வருவதற்குத் தேவையான தூரமும், காலமும் எந்த சூழ்நிலையிலும் மிகாமல் வாகனத்தைச் செலுத்த வேண்டும்.

ஓட்டுநரிடம் இருக்க வேண்டிய சான்றிதழ்கள்
வாகனம் ஓட்டும்போது ஓட்டுநர் உரிமம், வாகனத்தைப் பதிவு செய்த சான்றிதழ், வரி கட்டியதற்கான சான்றிதழ், இன்ஷ¨ரன்ஸ் சான்றிதழ் போன்றவற்றைக் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். போக்குவரத்து வாகனமாக இருந்தால் வாகனத்தின் தகுதிச் சான்றிதழ், அனுமதிச் சீட்டு (பெர்மிட்) போன்றவைகளையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
சீருடை அணிந்த காவல்துறை அதிகாரிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள், போக்குவரத்துத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் சோதனைக்காகக் கேட்கும்போது அனைத்துச் சான்றிதழ்களையும் காண்பிக்க வேண்டும்.

போக்குவரத்து விதிகள்!
போக்குவரத்தைக் கட்டுப்பாடு செய்ய மோட்டார் வாகனச் சட்டத்தில் இருந்தும், தமிழ்நாடு போக்குவரத்து விதிகளில் இருந்தும் ஓட்டுநர் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமானவை சில...

வேகக் கட்டுப்பாடு (1988 பிரிவு 112 சுருக்கம்)...

வேக எல்லைக் கட்டுப்பாட்டை மீறி பொது இடங்களில் மோட்டார் வாகனத்தை அந்தந்த ரக வாகனங்களுக்கு கொடுக்கப்பட்ட வேக அளவைத் தாண்டி ஓட்டக் கூடாது. பொதுமக்களின் பாதுகாப்புக்கும், வசதிக்கும் பங்கம் ஏற்படாதவாறு இயற்கையான சாலை, பாலங்கள், தடம் ஆகியவற்றில் போக்குவரத்துச் சின்னம் குறிக்கப்பட்ட வேக அளவுக்கு மேல் ஓட்டக் கூடாது. மீறி ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும்.
வேகக் கட்டுப்பாட்டை மீறி ஓட்டினால், அபராதம் ரூ.400. அவ்வாறு வாகனத்தை ஓட்டுமாறு செய்தால், அபராதம் ரூ.300. மீண்டும் அதே குற்றத்தைச் செய்தால் ரூ.500.

பெர்மிட் (பிரிவு 113)

எழுத்து மூலம் வழங்கப்பட்ட பெர்மிட்படி மாநிலப் போக்குவரத்து அதிகாரத்துக்கு உட்பட்ட எல்லை மற்றும் தடம் ஆகியவற்றில் பெர்மிட்டுக்கு அதிகமாக பாரம் ஏற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட எடைக்கு அதிகமான எடையுடன் வாகனம் ஓட்டினாலும், ஓட்ட வைத்தாலும் அபராதம் முதன்முறையாக ரூ.3,000. இரண்டாம் முறையாகச் செய்தால் அபராதம் ரூ.5,000.

சைகை (பிரிவு 121)
விதிமுறைகளுக்கு ஏற்ப வாகனம் ஓட்டுபவர் தகுந்த சந்தர்ப்பங்களில் தக்க சைகை காட்ட வேண்டும். கை சைகை காட்ட முடியாதபட்சத்தில் எலெக்ட்ரிக்கலில் இயங்கக்கூடிய சாதனம் வாகனத்தில் இருக்க வேண்டும்.

வாகனத்தை நிறுத்தி வைத்தல் (பிரிவு 122)
ஆபத்து விளைவிக்கும் நிலையில் வாகனத்தை நிறுத்தி வைப்பது, வாகனத்தின் பொறுப்பிலுள்ள நபர் சாலையை உபயோகிக்கும் மற்ற நபர்களுக்கு ஆபத்து, தடை அல்லது தகாத வசதியின்மை ஏற்படுமாறு அல்லது ஏற்படக்கூடிய இடத்தில் நிறுத்தவோ, நிறுத்துமாறு செய்யவோ அல்லது நிறுத்த அனுமதிக்கவோ கூடாது.

பலகைமீது அமர்ந்து செல்லுதல் (பிரிவு 123)
வாகனத்தின் பொறுப்பில் உள்ளவர், வாகனத்தின் உட்புறம் இல்லாமல் நடப்புப் பலகையின் மேல் அல்லது மற்ற இடத்தில் எந்த நபரையும் ஏற்றிச் செல்லவோ அல்லது ஏற்றிச் செல்ல அனுமதிக்கவோ கூடாது.

எவரும் நடப்புப் பலகையின் மீது நின்றுகொண்டோ அல்லது வாகனத்தின் கூரை மற்றும் பானெட்டின் மீது அமர்ந்துகொண்டோ பயணம் செய்யக் கூடாது.

ஓட்டுநருக்குத் தடை ஏற்படுத்துதல் (பிரிவு 125)
ஓட்டுநர், வாகனத்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு இடையூறு விளைவிக்குமாறு எந்த நபரையும் அந்த வாகனத்தில் ஏற்றிச் செல்லவோ அல்லது ஏற்றிச் செல்ல அனுமதிக்கவோ கூடாது.

நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் (பிரிவு 126)

வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் உரிய உரிமம் பெற்று அமர்ந்திருப்பவரால், அந்த வாகனத்தின் இயந்திரத்தின் சக்தி நிறுத்தப்பட்டு இருப்பதுடன், வேறு எவரும் அந்த வாகனத்தை இயக்க முடியாத வகையில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஓட்டுநர் இல்லாதபோது அந்த வாகனம் தற்செயலாக நகருமாறு செய்ய முடியாத வகையில் உறுதியான நடவடிக்கைகள் எடுத்திருந்தாலன்றி, அந்த வாகனத்தை பொது இடத்தில் நிறுத்தவோ, நிறுத்தச் செய்யவோ அல்லது நிறுத்த அனுமதிக்கவோ கூடாது.

வேகமாக ஓட்டுதல் (பிரிவு 132)

வாகனத்தை வேகமாக, பொதுமக்களுக்கு அபாயம் ஏற்படும் விதத்தில் ஓட்டினால், முதன்முறையாக செய்த குற்றத்துக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம். 3 வருடத்துக்குள் மீண்டும் அதே குற்றத்தைச் செய்தால், 2 ஆண்டுகள் சிறை அல்லது 2,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

கடமை (பிரிவு 132)

ஓட்டுநர் கீழ்க்காணும் சந்தர்ப்பங்களில் வாகனத்தை நியாயமான, அவசியமான காரணத்தால் நிறுத்த வேண்டும்.
சீருடை அணிந்த காவல்துறை, போக்குவரத்துத் துறை அதிகாரி நிறுத்த வேண்டுமெனக் கேட்கும்போது...
விலங்கைத் தம் பொறுப்பில் வைத்துள்ள நபர், அந்த விலங்கு பீதியடையக் கூடுமென அஞ்சி, வாகனம் நிறுத்தப்பட வேண்டுமென்று கேட்கும்போது...
நபர், விலங்கு, வேறு வாகனம், சொத்துக்கள் ஆகிய ஏதாவது ஒன்றுக்கு சேதம் ஏற்படுத்தி, எதிர்பாராத விபத்தில் அகப்பட்டு இருக்கும்போது, அந்த வாகனத்தை ஓட்டியது அல்லது அந்த வாகனத்தை நிர்வாகம் செய்தது, எதிர்பாராத அந்த விபத்துக்கு அல்லது சேதத்துக்குக் காரணமாக இருந்தது என்றால், அந்த வாகனத்தை நிறுத்திவைக்க வேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவர் கேட்டால் உங்களுடைய பெயர், முகவரியையும் அந்த வாகனத்தின் உரிமையாளர் பெயர், முகவரியையும் கொடுக்க வேண்டும். அதேபோல், அவருடைய பெயர், முகவரி பிற விபரங்களைப் பாதிக்கப்பட்ட நபர் தர வேண்டும்.

பொறுப்பு (பிரிவு 134)
எதிர்பாராத விபத்து காரணமாக ஒரு நபருக்குக் காயம் ஏற்பட்ட நிலையில் ஓட்டுநரின் கடமை. விபத்தின் காரணமாக எந்த நபருக்காவது காயம் ஏற்பட்டால் வாகனத்தின் பொறுப்பிலுள்ள நபர், பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவ உதவி பெறுவதற்கான நியாயமான எல்லா நடவடிக்கைகளும் எடுப்பதுடன், அவர் சிறுவராக இருந்தால், அவருடைய பாதுகாவலர் விரும்பினால் பாதிக்கப்பட்டவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
சம்பவ இடத்தில் உள்ள காவல்துறை அதிகாரி கேட்கும்போது உரிய தகவல் தர வேண்டும். போலீஸ் அதிகாரி எவரும் இல்லாவிட்டால், இயன்ற வரையில் விரைவாக, எந்தச் சந்தர்ப்பத்திலும் சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் விபத்து நடந்த சூழ்நிலையைப் பற்றிய செய்தியை தெரிவிக்க வேண்டும்.

போதை (பிரிவு 185)

வாகனம் ஓட்டுபவர் அல்லது வாகனத்தை ஓட்ட முயற்சி செய்பவர் குடிபோதையிலோ அல்லது உடல்நிலையில் மாறுதல் உண்டாக்கும் மருந்துகள் உண்ட பிறகோ வாகனத்தை கட்டுப்படுத்தும் திறமையற்றுப் போகிறது.
குடிபோதையிலும், மருந்துகள் உண்ட பின் மயக்கத்திலும் வாகனத்தை ஓட்டினால், முதன்முறையாகச் செய்த குற்றத்துக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.2,000 அபராதம். இவை இரண்டுமே விதிக்கப்படலாம். மீண்டும் அதே குற்றத்தை 3 ஆண்டுகளுக்குள் செய்தால், 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.3,000 அபராதம். இவை இரண்டும் சேர்த்தும் விதிக்கப்படலாம்.

மன நிலையும் உடல் நிலையும் (பிரிவு 186)
பொது இடங்களில் வாகனம் ஓட்டுபவர் வியாதியினாலும், இயலாமையினாலும் (ஓட்டுவதற்கு தகுதி இல்லாதவர்கள்) வாகனம் ஓட்டுவது பொதுமக்களுக்கு ஆபத்து என கணிக்கப்பட்டால் குற்றமாகும். முதல் தடவை செய்த குற்றத்துக்கு ரூ.200 அபராதம். தண்டனை பெற்றபின் மீண்டும் அதே குற்றத்தைச் செய்தால், ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

அதிக பாரம் (பிரிவு 194)

வாகனம் ஓட்டுபவர், குறிப்பிட்ட பாரத்துக்கு அதிகமாக ஏற்றி, விதியை மீறி நடந்தால், குறைந்தபட்ச தண்டனையாக ரூ.2,000 அபராதமும், அதிகமாக உள்ள பாரத்தில் ஒரு டன்னுக்கு ரூ.1,000 கூடுதலாகவும் அபராதம் செலுத்த வேண்டியதுடன் அதிக பாரத்தை இறக்கிவிட வேண்டும்.
அரசு அதிகாரி, வாகனத்தை நிறுத்தி எடை போட விரும்பும்போது, ஓட்டுநர் கீழ்படிய மறுத்தால், எடை போடப்பட்ட முந்தைய சுமையை நீக்கிவிட்டால் குற்றம்.

பிரிவு 207
காவல்துறை அதிகாரி அல்லது மாநில அரசு அதிகாரத்துக்கு உட்பட்டவர், சட்டக் கட்டுப்பாடுகளை மீறி, அனுமதி சீட்டு இல்லாமல் ஒருவர் வாகனத்தை உபயோகிக்கிறார் என உரிய ஆதாரத்துடன் நம்பினால், நிபந்தனையுடன் வழங்கப்பட்ட அனுமதி சீட்டில் எந்த தடம் அல்லது பரப்பளவு சம்மந்தப்பட்டுள்ளதோ அதை மீறி வாகனம் பயன்படுகிறது என கருத்தில் கொள்ளும்போது, அந்த வாகனத்தை சட்டப்படி உடமையாக்கவும், நிறுத்தி வைக்கவும் உரிமை உண்டு.

மலைச் சாலையில் கட்டுப்பாடு (விதி 388)
மலைச் சாலை என்று அடையாளம் உள்ள போக்குவரத்துச் சின்னத்தைக் கண்டால், ஓட்டுநர் அந்த வாகனத்தை கீழ் நோக்கி இறக்கும்போது, இயந்திரக் கட்டுப்பாடு இல்லாத நிலையில் இறங்குதல் கூடாது. அதாவது, நியூட்ரலில் ஓட்டி வரக் கூடாது. மேலும், கொண்டை ஊசி வளைவில் பயணிகளை வைத்துக்கொண்டு பேருந்தை பின்னோக்கிச் செலுத்தக் கூடாது. பின்னோக்கி வர வேண்டிய அவசியம் ஏற்பட்டால், வாகனத்தில் உள்ள பயணிகள் அனைவரையும் இறக்கிவிட்ட பின்பே பின்னோக்கி வர வேண்டும்.

லெவல் கிராஸ் (விதி 389)

ஆளில்லாத அல்லது ஆள் உள்ள இருப்புப் பாதையை நெருங்கியதும், ஓட்டுநர் வாகனத்தை நிறுத்த வேண்டும். வாகனத்தில் இருந்து நடத்துநர் இறங்கி, இருப்புப் பாதை இரு பக்கங்களிலும் ரயில் வரவில்லை என்பதை உறுதி செய்த பிறகு, இருப்புப் பாதையைத் தாண்ட ஓட்டுநருக்கு அனுமதி அடையாளம் கொடுக்க வேண்டும்.

கண் கூசும் விளக்கு (விதி 405)
வாகனத்தில் உள்ள முகப்பு விளக்குகளால் யாருக்கும் கண் கூசும் அபாயமோ, இடைஞ்சலோ ஏற்படுத்தக் கூடாது. கண்கள் கூசாத வகையில் விளக்குகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.

கண்ணாடி (விதி 409)

வாகன ஓட்டுநரின் முன் பார்வை மற்றும் பின் பக்கம் பார்க்கும் கண்ணாடியை மங்கலாக்கும் விதத்தில் எவரையும் நிற்கவோ, உட்காரவோ அனுமதிக்கக் கூடாது. அதேபோல், பொருட்கள் வைக்க அனுமதிக்கக் கூடாது.

போக்குவரத்து அடையாளம் (விதி 411)

சாலையில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து அடையாளங்களின் குறிப்புகளுக்கு இணங்க, ஒவ்வொருவரும் வாகனங்களை ஓட்ட வேண்டும்.
இருவழிச் சாலையின் மையத்தில் விட்டு விட்டு போடப்பட்டுள்ள வெள்ளைக்கோடு, சாலையை இரு போக்குவரத்துக்காக சரிசமமாகப் பிரிக்கப்படுவதைக் குறிக்கும். வலதுபக்கம் எதிர்சாலையை வாகனங்களைக் கடக்கப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு.
இருவழிச் சாலையின் மையத்தில் தொடர்ச்சியாக வெள்ளை (அ) மஞ்சள் கோடு வரையப்பட்டு இருந்தால், வலது பக்கம் கடந்து செல்லக் கூடாது.
இரட்டை மஞ்சள் (அ) வெள்ளைக் கோடுகள் போடப்பட்டு இருந்தால், எக்காரணம் கொண்டும் கண்டிப்பாக கடப்பதற்காகச் செல்லக் கூடாது.

நான்கு தடச் சாலை (நகரம்)

நகரச் சாலை லேன்களில் விட்டு விட்டு வரையப்பட்டு, 12 அடிக்கு ஒரு 'கேரேஜ் வே' அமைக்கப்பட்டு இருக்கும். நாம் செல்லும்போது, நமக்கு முன் தடை ஏற்படும்போது வலது, இடது பக்கங்களில் உள்ள லேன்களில் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. நான்கு லேன் சாலையில் மையக் கோடு உள்ள இடம் (அல்லது) மீடியன் ஓட்டியுள்ள லேன் முதல் லேன் என்றும், அடுத்தது இரண்டாவது லேன் என்றும் பிரிக்கப்பட்டிருக்கும். நேராக (அ) இடதுபக்கம் செல்பவர்கள் இடது பக்க லேன்களில் ஓட்ட வேண்டும். லேனில் தடை ஏற்படும்போது வலதுபக்க லேனில் ஓவர்டேக் செய்ய வைத்துக்கொள்ள வேண்டும். கடந்து முடிந்த பிறகு மீண்டும் இடது பக்க லேனுக்கு வந்துவிட வேண்டும்.
ஆறு தடச் சாலை

இந்தச் சாலைகளில் மையக்கோடு தொடர்ச்சியாக வரையப்பட்டு, சாலையின் இடது பகுதி மூன்று தடங்களாகவும் விட்டு விட்டு வரையப்பட்ட வெள்ளைக் கோடுகளால் பிரிக்கப்பட்டு இருக்கும்.
மையக் கோட்டை ஒட்டியது முதல் தடம் என்றும், அதற்கு அடுத்தது இரண்டாவது தடம் என்றும், கடைசியாக உள்ளது மூன்றாவது தடம் என்றும் கூறப்படும்.
இதுபோன்ற சாலைகளில் வலதுபுறம் திரும்பும் வாகனங்கள் முதலாவது தடத்தில் செல்லலாம். நேராக, வேகமாகச் செல்லும் வாகனங்கள் இரண்டாவது தடத்தில் செல்லலாம். இடதுபுறம் திரும்பிச் செல்லும் வாகனங்கள் அல்லது மெதுவாகச் செல்லும் வாகனங்கள் மூன்றாவது தடத்தில் செலுத்தலாம்.

பாதசாரிகள் கடக்க (ஜீப்ரா கிராசிங்)
நம்மை போகச் சொல்லி போலீஸ் சைகை செய்தாலும் (அ) ஆட்டோமேட்டிக் லைட் சிக்னலில் பச்சை விளக்கு தெரிந்தாலோ, பாதசாரிகளுக்கான சிக்னல் சிகப்பு எரியும்போது, நமக்கு முன் பாதசாரிகள் கடக்கும் கோட்டினுள் யாராவது நடந்தால், அவர்கள் சாலையைக் கடந்த பிறகுதான் வாகனத்தை நகர்த்த வேண்டும். பாதசாரிகளுக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு. காரணம், கிராம மக்கள், குழந்தைகள் சிக்னல் அல்லது போலீஸ் சைகை தெரியாதவர்கள் சாலையைக் கடந்துவிடுவார்கள். பொறுமையைக் கடைப்பிடித்து, கவனமாகச் செல்ல வேண்டும்.

வாகனத்தை இடதுபுறமாகக் கடப்பதைத் தவிர்க்கவும்.
கட்டுப்படுத்தப்படாத சாலை சந்திப்புகளிலும், ரவுண்டானா உள்ள இடத்திலும், வலதுபக்கம் உள்ள வாகனத்துக்கு முதலிடம் கொடுங்கள்.
பிரதான சாலையிலிருந்து வலதுபக்கம் கிளைச் சாலைக்குச் செல்ல வேண்டும் என்றால், எதிர்சாலையில் நேராகச் செல்லும் வாகனத்துக்கு வழிவிட்டு, வலதுபக்கம் திரும்ப வேண்டும்.
சாலைச் சந்திப்பு, பாதசாரிகள் கடக்கும் இடம், பள்ளிக்கூடம், போக்குவரத்து நெருக்கடியான இடங்களில் குறைந்த வேகத்தில் செல்லவும்.
நகரச் சாலையிலும் வேகக்கட்டுப்பாடு குறிக்கப்பட்ட போக்குவரத்து நெருக்கடியான சாலையிலும், புறநகர் சாலையிலும் குறிக்கப்பட்ட வேகத்துக்குக் குறைவாகச் செல்வதுதான் பாதுகாப்பு.
பாதசாரிகள் கடக்க குறிப்பிடாத இடங்களாயினும் பாதசாரிகள் கடப்பதற்கு முன்னுரிமை உண்டு.
நேராக வரையப்பட்ட வெள்ளை அல்லது மஞ்சள் கோடுகளை எக்காரணம் கொண்டும் கடக்காதீர்.
வேறொரு வாகனத்தைப் பின்தொடரும்போது, மிகவும் நெருக்கமாகப் பின்தொடரக் கூடாது.
பச்சை விளக்கு சிக்னல் வந்த பிறகே வாகனத்தை நகர்த்த வேண்டும். மஞ்சள் விளக்கு சிக்னல் ஒளிர்ந்தால், சந்திப்பைக் கடக்க முயற்சி செய்ய வேண்டாம்.
பிரேக் பிடித்தால் நிற்கும் தூரம் அறிந்து வாகனம் ஓட்ட வேண்டும். ஓடும் வாகனம் பிரேக் போட்டவுடன் நின்றுவிடாது. 30 கி.மீ&க்கும் குறைந்த வேகத்தில் செல்லும் வாகனத்தை, உடனே பிரேக் அழுத்தினால், சக்கரம் சுழல்வது நிற்கும். ஆனால், வேகத்தின் உந்து சக்தி வாகனத்தை சுமார் 6 மீட்டர் வரை இழுத்துச் செல்லும். இதுவே ஈரமான சாலை, பாரம் ஏற்றிய வாகனம் என்றால், நிற்கும் தூரம் இருமடங்கு தேவைப்படும்.
இரண்டு முதன்மைச் சாலைகள் இணையும் சந்திப்பில், வலதுபக்க சாலையில் உள்ள வாகனங்களுக்கு முன்னுரிமை உண்டு. அதற்கு வழிவிட்ட பிறகே செல்ல வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் பெறும்போது கடைபிடிக்க...

ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்ததும் பின் பக்க கண்ணாடியைச் சரிப்படுத்துதல்.
இன்ஜினை இயக்கும் முன் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தல்.
வாகனத்தைப் பாதுகாப்பாக நகர்த்தி, சுலபமாக மேல் கியர் மாற்றங்கள் செய்து, டாப் கியரை அடைதல்.
போக்குவரத்துக்குத் தேவைக்கேற்றாற்போல் கீழ் கியருக்கு மாற்றம் செய்தல்.
சரிவில் கீழ்நோக்கிச் செல்லும்போது எளிதாகக் கீழ் கியர் மாற்றம் செய்தல்.
சரிவில் வாகனத்தை மேல் நோக்கி நிறுத்தி, மறுபடியும் இன்ஜினை ஸ்டார்ட் செய்து, ஹேண்ட் பிரேக் லீவர், பிரேக் பெடல் அல்லது ஆக்ஸிலரேட்டர் பெடல் ஆகிய கன்ட்ரோல்களை உரிய முறையில் உபயோகித்து, வாகனம் பின்னால் உருளாமல் முன்னோக்கி வாகனத்தைச் செலுத்துதல். அவ்வாறு செலுத்தும்போது வலது, இடது திருப்பங்களில் பின்பக்கம் பார்க்கும் கண்ணாடியைப் பார்த்து உரிய சைகை செய்து திருப்புதல்.

ஒரு வாகனத்தை முந்தும்போதும், மற்ற வாகனத்தை முந்த அனுமதிக்கும்போதும் உரிய எச்சரிக்கையுடன் தேவையான சைகை செய்து பாதுகாப்புடன் வாகனத்தை ஓட்டுதல்.

வாகனம் ஓட்டும்போது தேவையான இடங்களில் கை சைகை அல்லது இண்டிகேட்டர் விளக்கு சிக்னலை உரிய முறையில் காட்டுதல்.

தடம் மாறும்போது உரிய எச்சரிக்கையுடன் தேவையான சைகை செய்தல்.
அவசரக் காலங்களில் வாகனத்தைப் பாதுகாப்புடன் நிறுத்துவதற்குரிய முன்னெச்சரிக்கையுடன், தேவையான சைகை காட்டி நிறுத்துதல்.

முன் பின் செலுத்தும் கியர்களை உபயோகித்து, வாகனம் செல்லும் திசைக்கு எதிர்திசையில் வாகனத்தைத் திருப்புதல்.

போக்குவரத்துச் சின்னங்கள், சிக்னல்கள், காவல்துறையினர் தரும் சிக்னல்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்தல்.
கட்டுப்படாத பாதசாரிகள் கடக்கும் இடங்களில் பாதசாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்தல்.

சாலையின் இடது புறமாக வாகனத்தை செலுத்துதல்.

  • போக்குவரத்துக்கு ஏற்றாற்போல் தன்னுடைய வாகனத்தின் வேகத்தை நிர்ணயம் செய்தல்.
  • வாகனத்தைச் சீராகச் செலுத்தி ஸ்டீயரிங் வீலைக் கையாளுதல், கியர் மாற்றம் செய்தல், பிரேக் உபயோகித்தல் ஆகியவற்றில் தன்னுடைய திறமையை நிரூபித்தல்.
  • வாகனத்தை நகர்த்தும்போதும். நிறுத்தும்போதும், முந்தும்போதும், திரும்பும்போதும் சைகை காட்டுவதற்கு முன்பு பின்பக்கம் பார்க்கும் கண்ணாடியைப் பார்த்தல்.
  • சந்திப்புகளில் நேராகச் செல்லும்போது இடது வலதுபுறம் திரும்பும்போதும், சரியான தடத்தைச் தேர்ந்தெடுத்தல்.
  • ஆக்ஸிலரேட்டர் பெடல், கிளட்ச் பெடல், கியர் ஷிஃப்ட் லீவர், பிரேக் பெடல், கை பிரேக் லீவர், ஸ்டீயரிங் வீல், ஹாரன் அகிய கன்ட்ரோல்களை உரிய முறையில் கையாளுதல்.
  • பாதசாரிகள், மற்ற சாலை உபயோகிப்பவர்களின் செயலை அனுசரித்துத் தற்காப்புடன் வாகனம் ஓட்டுதல்.

சாலைச் சந்திப்பில் பாதுகாப்பு நடவடிக்கை

  • சந்திப்பை நெருங்கும்போது வாகனத்தின் வேகத்தைச் சரிப்படுத்திக்கொள்ளுதல்.
  • வலது, இடதுபுறம் திரும்பும்போது வாகனத்தின் நிலையைச் சரிபடுத்திக்கொள்ளுதல்
  • வலது இடதுபக்கத் திருப்பங்களில் சந்திப்பின் வலது முனையை ஒட்டி வாகனம் செல்வதை தவிர்த்தல்.
  • வாகனம் செலுத்தும்போது கவனம் சிதறாமல் வாகனத்தைச் செலுத்துதல்.
  • பாதசாரிகள், மற்ற சாலை உபயோகிப்பவர்கள் சௌகரியங்களைக் கருத்தில் கொள்பவர்களாகவும், மற்றும் அவர்களிடம் மரியாதை, அன்பு கொண்டவர்களாகவும் செயல்படுதல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com