உலகின் பல நாடுகள் தூக்கி எறிந்த பி.ட்டி பயோ தொழில்நுட்பத்தை நாம் ஏன் பயன்படுத்த வேண்டும்?!

 இன்றைய நிலையில் சுமார் 95 சதவீதம் பருத்தி சாகுபடி நிலப்பரப்பு பி.ட்டி விதைக்கு அடிமையாகிவிட்டது. மீதி 5 சதவீதம் தேசி விதைகள்.
உலகின் பல நாடுகள் தூக்கி எறிந்த பி.ட்டி பயோ தொழில்நுட்பத்தை நாம் ஏன் பயன்படுத்த வேண்டும்?!

இந்தியாவில் பி.ட்டி. பருத்தி 2002-இல் அறிமுகமானது. இது நீண்ட இழைப்பருத்தி என்பதால் இந்தியத் தேவையை மட்டுமல்ல உலகத் தேவையையே நிறைவேற்றுமென்று கருதி அறிமுகப்படுத்தப்பட்டது. பி.ட்டி. பருத்தி அறிமுகமான 5, 6 ஆண்டுகளிலேயே மற்ற வீரிய ரகங்களைப் புறந்தள்ளிவிட்டு பி.ட்டி. பருத்தியையே விவசாயிகள் விரும்பிப் பயிர் செய்தார்கள்.
பி.ட்டி. பருத்தி சாகுபடியால் உலகப் பருத்தி உற்பத்தியில் இந்தியா முதலிடம் பிடித்தது. இதற்கு முக்கியமான காரணம், பி.ட்டி. பருத்தியை விவசாயிகள் ஏற்பதற்கு முன் பற்பல இந்தோ - அமெரிக்கன் வீரிய ரக விதைகளைப் பயன்படுத்தி நீண்ட இழைப் பருத்தியை உற்பத்தி செய்தார்கள். அவற்றை வெள்ளை ஈ, காய்ப்புழு தாக்கியதால் அதிக மகசூல் பெற முடியவில்லை.
இந்த சந்தர்ப்பத்தில்தான் பி.ட்டி. பருத்தி நுழைந்தது. இது அமெரிக்க ரகம். பி.ட்டி என்றால் ’பாசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்' என்ற விஷமான பாக்டீரியாவை விதையினுள் செலுத்தி உருவாக்கப்பட்டது. ஜீன் மாற்றப்பட்ட விதை. புதிய பயோ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஏராளமான பணச்செலவு மிக்க ஆராய்ச்சிக்குப் பின் உருவாக்கப்பட்ட இந்த விதைகளைப் பயன்படுத்தும்போது காய்ப்புழு, வெள்ளை ஈ தாக்குதல் வராது என்ற உத்தரவாதம் தரப்பட்டது.
பருத்திக் காய் தோன்றியவுடன் விதைகளில் உள்ள பி.ட்டி. பாக்டீரியா காய்ப்புழுத் தோன்றும்போதே அதை அழித்துவிடும். பி.ட்டி. பருத்தி விதை பேடண்ட் பெற்ற அதாவது காப்புரிமை பெற்ற விதை என்பதால் விவசாயிகளிடமிருந்து ராய்ல்டி பெறப்பட்டது. இதனால் பி.ட்டி. பருத்தி விதை கொள்ளை விலைக்கு விற்கப்பட்டது. காப்புரிமையை மான்செண்டோ விதை நிறுவனம் பெற்றிருந்தது. அதிகவிலை கொடுத்து பி.ட்டி. விதை வாங்கியதற்கு ஏற்ப மகசூலும் கூடியது. விவசாயிகளுக்கு லாபமும் கிடைத்ததால் மற்ற விதைகள் புறக்கணிக்கப்பட்டதால் அவை மாயமாய் மறைந்துவிட்டன.
ஆனால் இந்நிலை நீடிக்கவில்லை. பி.ட்டி. பருத்தி விவசாயிகளில் வசதி இல்லாமல் முழுக்கவும் பருத்தி சாகுபடியையே நம்பி வாழ்ந்தவர்கள் கடனாளியாகி தற்கொலை செய்துகொண்டனர். படிப்படியாக பி.ட்டி. பருத்தி விதையில் உள்ள பி.ட்டி. வீரியம் இழந்து பி.ட்டி. பருத்திப் பயிர்களை வெள்ளை ஈ, காய்ப்புழுக்கள் தாக்கத் தொடங்கியதால் மகசூல் குறைந்தது. ஆனால் சாகுபடிச் செலவு அதிகமானது.
உலகச் சந்தையில் பருத்தி விலை வீழ்ச்சி அறுவடை சமயம் நிகழும். சாகுபடி செலவுகூட திரும்பி வராமல் கடன் ஏறி வட்டிகட்ட முடியாமல் ஏழைப் பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.
2014-15ஐயும் 2015-16ஐயும் ஒப்பிடும்போது பி.ட்டி. பருத்தி அதிகம் விளையும் குஜராத், மகாராஷ்டிரம், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியாணா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 14 லட்சம் ஹெக்டேர் குறைந்துவிட்டது.
பருத்தி விவசாயிகள் மாற்றுப் பயிர்களாக கம்பு, துவரை, கொண்டைக்கடலை, மக்காச் சோளம், வேர்க்கடலை போன்ற பயிர்களை சாகுபடி செய்யத் தொடங்கி மான்சண்டோவின் பிடியிலிருந்து விலகிக் கொண்டனர்.
இந்தியாவில் பருத்தி சாகுபடி நிலப்பரப்பு 2014-15இல் 120 லட்சம் ஹெக்டேர் என்று இருந்தது 2015-16இல் 106 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது. இவ்வாறே உற்பத்தியும் 124 லட்சம் பேல் இருந்தது, 100 லட்சம் பேலாகக் குறைந்துள்ளது (1 பேல் = 170 கிலோ பஞ்சு). 2016-17 நடப்பு ஆண்டில் பருத்தி சாகுபடி நிலப்பரப்பும் உற்பத்தியும் மேலும் குறையும்.
பி.ட்டி. விதையை மான்சண்டோ அறிமுகப்படுத்திய காலகட்டத்திற்கு முன் 1996 காலகட்டத்தில் அரைக்கிலோ பருத்தி விதை பத்து ரூபாய்க்கு விவசாயிகள் வாங்கி சாகுபடி செய்தார்கள். மான்சண்டோ 450 கிராம் பாக்கட் ரூ.500 என்று பி.ட்டி. விதை வியாபாரத்தைத் தொடங்கினர்.
ஆரம்பம் சிறப்பாயிருந்தது. காய்ப்புழு, வெள்ளை ஈ பாதிப்பு இல்லை. விவசாயிகளுக்கு மகசூல் பெருகியது. ரூ.500-இல் தொடங்கிய விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு 2016-இல் ரூ.1,600 என்று விற்கப்பட்டது. பி.ட்டி. விதை அறிமுகமானதால் பழைய விதைகளை விவசாயிகள் கைவிட்டனர்.
எகிப்திய உகாண்டா, பஞ்சாப் அமெரிக்கன், இந்தோ அமெரிக்கன் தேவிராஜ், கம்போடியா, லக்ஷ்மி, வரலக்ஷ்மி, எகிப்திய ஓமர், திக்விஜய், சுஜாதா, சுவின் என்று 50, 60 நீண்ட இழைப்பருத்தி ரகங்கள் வழக்கொழிந்தன. இன்றைய நிலையில் சுமார் 95 சதவீதம் பருத்தி சாகுபடி நிலப்பரப்பு பி.ட்டி விதைக்கு அடிமையாகிவிட்டது. மீதி 5 சதவீதம் தேசி விதைகள்.
தமிழ்நாட்டில் கருங்கண்ணி உட்பட எல்லா தேசி விதைகளும் குட்டை இழைப்பருத்தி. முரட்டுத் துணி, போர்வை, படுக்கை விரிப்பு, ஜமுக்காளம், மெத்தைக்குள் அடைக்கும் பஞ்சு ஆகிய பயனுக்கு மட்டுமே உதவுவதால் நல்ல விலை கிடைக்காது.
2014-15லிருந்து பருத்தி விவசாயிகள் விரும்பியும்கூட பழைய விதைகள் கிடைக்கவில்லை. அன்று சாகுபடியான நீண்ட இழைப்பருத்தி விதைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. வெள்ளை ஈ, காய்ப்புழு தொந்தரவு என்று பி.ட்டி. விதைக்கு மாறினர். காலம் செல்லச் செல்ல பி.ட்டி.யில் உள்ள நோய் எதிர்க்கும் ’பாசிலஸ் துருஞ்சியன்ஸஸ் பாக்டீரியா'வையே காய்ப்புழு உறிஞ்சி எடுத்துவிட்டது.
ஆகவே பி.ட்டி. விதைகளுக்கும் பூச்சி மருந்துச் செலவு அதிகரிக்கவே, மாற்று விதை கிடைக்காமல் பருத்தி சாகுபடியே கேள்விக்குறியாகிவிட்டது. ஆகவே பி.ட்டி. பருத்தி விதை விலையைக் குறைக்க மத்திய அரசு மான்செண்டோவுக்கு நெருக்கடி தருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விதை விலைக்கட்டுப்பாட்டுச் சட்டத்தைப் புதுப்பித்து பி.ட்டி. விதைக்குரிய ராயல்டியை 75 சதவீதம் குறைத்தது. பி.ட்டி. விதையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானதையும், விவசாயிகளின் தற்கொலைகளையும் காரணம் காட்டியது.
இந்த சட்டத்தால் பி.ட்டி. பருத்திவிதையின் அதிகபட்ச விலை 450 கிராம் பாக்கட் ரூ.800 என்று அரசு நிர்ணயித்தது. இந்த விலை நிர்ணய சட்டத்தை வாபஸ் பெறம்படி மான்சண்டோ நெருக்கடி தந்தபோது மத்திய அரசின் வேளாண்மை அமைச்சர் சஞ்சீவ்குமார் பால்யான் மிகவும் துணிச்சலாக, ’அரசு நிர்ணயித்துள்ள பி.ட்டி. பருத்தி விலை கட்டுப்படியாகவில்லை என்றால் அமெரிக்காவுக்கு நடையைக் கட்டலாம்' என்று துணிச்சலாக எச்சரிக்கை விட்டுள்ளார்.
ஜீன் மாற்றம் செய்யப்பட்ட விதை வியாபாரம் உலக அளவிலும் படுத்துவிட்டது. மான்சண்டோவுக்கு 2016 நிதியாண்டில் 10 சதவீத விற்பனை குறைந்துவிட்டது. பருத்தி விலை வீழ்ச்சி, அந்நியச் செலாவணி பரிமாற்ற நஷ்டம் காரணமாக 3,600 பேர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஜெர்மனி நாட்டுப் பூச்சிமருந்து நிறுவனம் பேயர்(Bayer)  செப்டம்பர் 14-ஆம் தேதி 66 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து மான்சண்டோவை வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. பயோ தொழில்நுட்ப பேடண்ட் விதைகளுக்குரிய பிரச்னைகளினால் சின்ஜெண்டா என்ற விதை - பூச்சி மருத்து நிறுவனத்தை சீன அரசின் கூட்டுறவு நிறுவனமான கெம் சீனா வாங்கியுள்ளது.
யு.எஸ். கம்பெனிகளான டெள நிறுவனமும் டூபாண்ட் நிறுவனமும் ஒருங்கிணைந்துவிட்டன. ஜீன் மாற்ற விதை வியாபாரத்தை விரிவு செய்யும் வாய்ப்பு பிரகாசமாயில்லை. இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா, கனடா, அர்ஜென்டினா ஆகிய நாடுகளிலும் ஜீன் மாற்ற விதை சாகுபடி நிலம் குறைந்துவிட்டதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
பி.ட்டி. விதை பயோ தொழில்நுட்ப நெருக்கடியால் பல பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மீண்டும் புதிய பலத்துடன் விதை வியாபார ஏகபோகத்தையும் பூச்சி மருந்து வியாபார ஏகபோகத்தையும் விரிவாக்கம் செய்யும் என்பதை மறந்துவிடக்கூடாது. இதனால் பற்பல சிறிய வீரிய ஒட்டு விதை நிறுவனங்கள் தாக்குபிடிக்க முடியாமல் மேற்படி பகாசூர நிறுவனங்களுடன் ஐக்கியமாகி மறைந்துவிடும் நிலை ஏற்படக்கூடும்.
இந்தியாவில் மட்டுமல்ல, அனைத்துலகத்திலும் பி.ட்டி. பருத்திக்கும், மற்ற சில வீரிய ரகப் பருத்திக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதுடன், பி.ட்டி. பருத்தி விதைப் பயனால் பல்லாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட பின்னணியையும் கவனத்தில் கொண்டு இந்திய அரசு பாடம் பெற்றதாகத் தெரியவில்லை.
பி.ட்டி. பருத்தியால் ஏற்பட்ட நஷ்டத்தை பி.ட்டி. கடுகால் ஈடுசெய்து கொள்ளையடிக்கவே மான்சண்டோவுடன் பேயர் கூட்டு சேர்ந்துள்ளது. மோடியை மயக்க மோடி வேலை செய்ய தில்லி பல்கலைக்கழகம் முனைந்துள்ளது. பருத்திக்கு வந்துள்ள பி.ட்டி. நோய் கடுகுக்கு வந்துள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் தவிர மற்ற வட இந்திய மாநிலங்களில் கடுகு எண்ணெயே முக்கிய சமையல் எண்ணெய். ஏறத்தாழ வேர்க்கடலைக்கு நிகராக இந்தியாவில் கடுகு சாகுபடியாகிறது. பல லட்சம் ஹெக்டேரில் பாரம்பரிய ரகங்களுடன் வீரிய ஒட்டு ரகக் கடுகுகள் சாகுபடியாவது குறிப்பிடத்தக்கது.
மான்சண்டோவை விழுங்கிய பேயர் வழங்கிய பி.ட்டி. பயோ தொழில்நுட்பத்தை சுதேசி என்ற பெயரில் தில்லி பல்கலைக்கழகத்தின் பயோ தொழில்நுட்பத்தை வெளியிட்டுள்ளது. இந்தDMH-III என்ற பி.ட்டி. கடுகு விதைக்கு பிரதமரின் ஒப்புதல் பெற முயற்சி நிகழ்கிறது. உண்மையில் இப்போது சாகுபடியாகும் வீரிய ரகக் கடுகுகள் பி.ட்டி. கடுகைவிட உற்பத்தித்திறன் அதிகம் உள்ளவை.
பேயரின் தூண்டுதலின் பெயரில் இந்தியாவின் ஜெனிட்டிக்கல் இன்ஜினியரிங் அப்ரைசல் கமிட்டி ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த பி.ட்டி. கடுகு சாகுபடியானால் பேயர் கம்பெனி வழங்கும் களைக்கொல்லி, பூச்சி மருந்துகள் விற்பனை உயரும் என்பதால் இப்படிப்பட்ட கடுகு சாகுபடியால் உற்பத்தி உயர்ந்து பாமாயில் இறக்குமதி குறைந்து அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தலாம் என்று பல தவறான தகவல்களை பேயரின் கூலிப்படை பிரதமரின் காதில் ஓதுகின்றன.
உலகத்திலுள்ள பல நாடுகளால் தூக்கி எரியப்பட்ட பி.ட்டி. பயோ தொழில்நுட்பத்தை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்? தேசபக்தியுள்ள வேளாண் - பயோ தொழில்நுட்ப விஞ்ஞானிகளைக் கூட்டி விவாதித்து பி.ட்டி. கடுகு விதை பற்றிய முடிவை எடுப்பது நன்மைதரும்.
பருத்தி விஷயத்தில் 1990-களில் நாம் பயிரிட்ட பல வீரிய ரக நீண்ட இழைப்பருத்தி விதைகளைக் கண்டுபிடித்து பி.ட்டி. பருத்தி விதை சாகுபடிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பி.ட்டி. பருத்தி விவசாயிகள் மாற்றுப் பயிர்களுக்கு மாறிவிட்டதால் பருத்தி ஏற்றுமதியும் குறையும் என்றும், பி.ட்டி. கடுகு மூலம் சமையல் எண்ணெய் பாமாயில் இறக்குமதி குறையும் என்றும் காணும் கனவு நிறைவேறாது.

கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com