நாளைக்குப் பரீட்சைன்னா, இன்னைக்கு நல்லா தூங்குங்க பசங்களா?! 

பரீட்சையை விட பரீட்சையை எதிர்கொள்வதற்கான முன் தயாரிப்புகள் தான் மிகவும் முக்கியமானவை.
நாளைக்குப் பரீட்சைன்னா, இன்னைக்கு நல்லா தூங்குங்க பசங்களா?! 

இந்த வருடம் முழுவதும் ஆரம்பம் முதலே உங்களை மிகுந்த எதிர்பார்ப்பில் வைத்திருந்த பிளஸ் டூ பொதுத் தேர்வு இதோ வந்தே விட்டது. நாளை விடிந்தால் பரீட்சை!

மாணவர்களே நீங்கள் எதுவாக வேண்டுமானாலும் ஆசைப் படலாம். அத்தனைக்கும் உங்களுக்கு உரிமை உண்டு, ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. எந்தச் சூழலிலும் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள அதற்கான கடின உழைப்பை கொடுத்து விட்டுத் தான் ஆசைப்பட வேண்டும். ஏனெனில் உழைப்பு என்றுமே வீணாவது இல்லை. நம் பெற்றோரைக் காட்டிலும் நமது கடின உழைப்பு ஒன்றே நம்மை நாம் ஆசைப்படும் இடங்களிலும், பதவிகளிலும் அமர வைத்து அழகு பார்க்கும் திறன் கொண்டது. அந்த வகையில் பிளஸ் டூ மாணவர்களுக்கு இது பள்ளி இறுதி ஆண்டு. பிரீ. கே.ஜி முதல் கணக்கிலெடுத்துக் கொண்டால் கடந்த 13 ஆண்டுகளாக நீடித்த பள்ளிக் கல்விப் பயணத்தின் இறுதிக் கட்டம் இது. இதை நல்லபடியாக கடந்து விட்டாலே போதும் அதற்குப் பின் நீங்கள் சிறகு முளைத்த வானம்பாடிகள். குறைவில்லாமல் மதிப்பெண்களை அள்ளி விட்டால் பிறகு விரும்பிய பாடத்தை தேர்வு செய்து கொண்டு கல்வியை ஒரு சுமையாக கருதாமல் சுவாரஸ்யமாகக் கடக்கலாம்.

சில மாணவ, மாணவிகள் தேர்வு ஜூரத்தில் இரவு பகல் பாராது விடாமல் கண் விழித்துப் படித்து விட்டு பரீட்சை ஹாலில் ஒட்டுமொத்த சோர்வும் உந்தித் தள்ள நேரத்தைக் கையாளத் தெரியாமல் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விடைகளை எழுத முடியாமல் குழம்பிப் போவார்கள். அத்தகைய சிக்கல்கள் எதுவும் நேராமலிருக்கத் தான் பள்ளிகளில் முன்கூட்டியே 3 க்கும் மேற்பட்ட மாடல் தேர்வுகள் வைக்கப் படுகின்றன. அவற்றில் எழுதிப் பழக்கப் பட்டும் கூட சில மாணவர்களுக்கு இப்படி நிகழ்ந்து விடுவதுண்டு.

நானறிந்த மாணவி ஒருத்தி வெகு அருமையாகப் படிப்பாள். 10 ஆம் வகுப்பில் 485 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியின் முதல் மாணவியாக வந்தவள். ஆனால் அவள் படிப்பிற்கு தந்த முக்கியத்துவத்தை தனது உடல் நலனுக்குத் தரவில்லை. அவளது அம்மாவுக்கோ மகள் சாப்பாட்டைக் கூட ஸ்னாக்ஸ் போல கொறித்து விட்டு பாடப் புத்தகங்களும், மாடல் பரீட்சைகளுமே கதி என்று இருந்ததில் உள்ளூரப் பெருமை. இந்தப் பெருமையில் அந்தம்மாள் அவளது உடல் நலன் விசயத்தை கோட்டை விட கடைசியில் அந்தப் பெண் பிளஸ் டூ தேர்வுக்காக சரியாகச் சாப்பிடாமல், கொள்ளாமல் பல இரவுகள் கண் விழித்துப் படித்து விட்டு கடைசியில் தேர்வு நாளன்று பரீட்சை ஹாலில் போய் தூங்கி விட்டாள். அவளால் அந்த ஆண்டு தேர்வில் நினைத்த படி உயர் மதிப்பெண்கள் பெற முடியவில்லை. மருத்துவர்களிடம் ஆலோசித்ததில் இது உடல்நலக் கோளாறு மட்டுமல்ல. மனநலக் கோளாறும் கூட என்று கூறி அவளுக்கும், அவளது அம்மாவுக்கும் சேர்த்தே சிகிச்சை அளித்தார்கள்.

இதற்குள் முழுதாக 6 மாதங்கள் காணாமல் போயின. பின்னர் அந்த மாணவி அக்டோபரில் தேர்வு எழுதி அவள் நினைத்த அளவுக்கு உயர் மதிப்பெண்களைப் பெற்றால் என்றாலும் அவளுக்கும், அவளது குடும்பத்தினருக்கும் பரீட்சைக்குப் படித்தல் குறித்து போதிய ஞானமும், கவனமும் இருந்திருந்தால் இந்தக் கால விரயம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் இல்லையா?

நாங்கள் பிளஸ் டூ படிக்கும் போது எங்களது உயிரியல் ஆசிரியை கூறுவார். “பரீட்சை நெருங்க, நெருங்க மாணவர்கள் புரதமும், நார்ச்சத்தும் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு இரவில் கண் விழித்துப் படிக்க உடலில் தெம்பு வேண்டுமல்லவா? அதற்கு நீங்கள் அசைவம் சாப்பிடுபவர்கள் என்றால் சிக்கன், மட்டன், மீன் என்று நன்றாகச் சாப்பிடுங்கள். வேண்டாம் நீங்கள் சைவம் என்றால் உணவில் நெய் சேர்த்துக் கொள்ளுங்கள், சுண்டல், முளை கட்டிய பயறு வகைகள், நாட்டுக்காய்கறிகள், கேரட், பீட்ரூட் எல்லாம் ஒரு கை பாருங்கள், தினமும் ஏதாவது ஒரு கீரை வகையை குறைந்த பட்சம் சூப் வைத்தாவது குடித்து விடுங்கள்” என்று தெள்ளு தமிழில் கூறி விட்டு கடைசியில் முத்தாய்ப்பாக எல்லாத்தையும் விட முக்கியம் ‘நாளைக்குப் பரீட்சைன்னா, இன்னைக்கு நல்லா தூங்குங்க பசங்களா” என்று முடிப்பார். ஏனெனில் பரீட்சையை விட பரீட்சையை எதிர்கொள்வதற்கான முன் தயாரிப்புகள் தான் மிகவும் முக்கியமானவை.

தேர்வுக்கு முன் மாணவ, மாணவிகள் கவனித்தில் கொள்ள வேண்டியவை:

  • தேர்வுக்குத் தேவையான உபகரணங்களை முதல் நாளே சரி பார்த்து எடுத்து வைத்து விடுங்கள். பேனாவுக்கு இங்க் ஊற்றுவது, பென்சிலை கூர் செய்வது, இங்க் அழிப்பான்கள், ஸ்கெட்ச் பேனா செட், சமூக அறிவியல் தேர்வுகளுக்குத் தேவையான கலர் பென்ஸில்கள், கணிதத் தேர்வுக்கு ஜாமெண்டரி பாக்ஸ் உள்ளிட்டவற்றை கடைசி நேரத்தில் தேடிக் கொண்டிருக்க கூடாது, அது அனாவசிய பதட்டத்தைத் தரும்.
  • தேர்வு நாளன்று விடிவதற்கு முன் எழுந்து உட்கார்ந்து கொண்டு எப்போதடா விடியும் என்று பரபரப்பாக காத்திருக்கக் கூடாது. போதுமான உறக்கம் இல்லா விட்டால் விழுந்து, விழுந்து படித்த பாடங்கள் கூட நினைவில் நிற்காமல் போகும் அபாயம் உண்டு. எனவே சரியான நேரத்துக்கு அலார்ம் வைத்துக் கொண்டு படித்து, அலார்ம் வைத்து எழுந்து தூக்கத்துக்கும், உழைப்புக்கும் இடையில் விகிதாச்சார குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • இப்போதெல்லாம் பெரும்பாலான பள்ளிகள் தொடக்க நாட்களில் இருந்தே நோட்ஸ்களை விட பாடப் புத்தகத்தின் பாடங்களை அப்படியே முழுமையாக உள்வாங்கிப் படியுங்கள். படிக்கும் போதே குறிப்புகள் எடுத்து வைத்துக் கொண்டு நண்பர்களிடையிலும், ஆசிரியர்களிடத்திலும் சந்தேக நிவர்த்தி செய்து கொள்ளுங்கள் என்று தான் மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன. எனவே எதைப் படித்தாலும் சரி புரிந்து படியுங்கள். படித்தவற்றை நேரம் ஒதுக்கி ஒன்றுக்குப் பலமுறை மறுவாசிப்பு செய்து நினைவில் பதியுங்கள்.
  • சிக்கலான பாடங்களையும், எளிதில் புரிந்து கொள்ள முடியாத சமன்பாடுகளையும் நமது வாழ்வியல் சம்பவங்களுடன் தொடர்பு படுத்தி எளிதில் மனதில் பதிய வைக்க முயற்சியுங்கள். உதாரணத்துக்கு ‘அம்மா கணக்கு’ திரைப்படத்தில் அமலா பால் தன் மகளுக்காக பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்து காஸ் தீட்டா, சைன் தீட்டாவை மனப்பாடம் செய்யும் காட்சிகளை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
  • ஒரு மதிப்பெண்களுக்கான வினா- விடை வங்கிகள் சேமிப்பில் இருந்தால் தேர்வு தொடங்குவதற்கு முன்னான இறுதிக் கணங்களில் அவற்றை மட்டும் ஒரு முறை சரி பாருங்கள்.
  • தேர்வுக்கு கடைசி மணி ஒலிக்கும் வரை புத்தகத்தை விடாமல் கைகளில் பற்றிக் கொண்டு பதட்டத்திலும், அவஸ்தையிலும் உழலாமல், தேர்வு மணி ஒலிப்பதற்கு பத்து நிமிடங்கள் இருக்கையில் மனதை ஒரு நிலைப்படுத்தி தேர்வில் கேட்கப் படும் அனைத்துக் கேள்விகளையும் பொறுமையாகப் படித்து பொருத்தமான பதில்களை அளிக்கப் போவதாக உங்களுக்குள் நீங்களாக உறுதி அளித்துக் கொள்ளுங்கள்.
  • பரீட்சை ஹாலில் வினாத்தாள் அளிக்கப்பட்டதும், முதலில் அவற்றில் பட்டியிலிடப்பட்டிருக்கும் தேர்வு நேர நிபந்தனைகள், விடையளிக்கும் முறைகள், முதலியவற்றை ஒரு முறை தெளிவாக வாசியுங்கள்.
  • எந்தெந்த வினாக்களுக்கு எத்தனை நேரம் செலவிடுவது என்று முன்கூட்டியே திட்டமிடுங்கள். 2 மார்க் வினாவுக்கு 10 மார்க்குகளுக்கான விடையை எழுதி விட்டு பெரிய வினாக்களுக்கு விடையளிக்க முடியாமல் திணறி மதிப்பெண்களை இழக்கக் கூடாது.

இவை தவிர; தேர்வுத் துறையின் சமீபத்திய அறிவிப்பை மறந்து விடாதீர்கள். 

தமிழகத்தில் பிளஸ் டூ, எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், தங்களது விடைத்தாளில் எழுதிய விடை முழுவதையும் அடித்தால் ஓராண்டுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்வு துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் வருகிற மார்ச் 4 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதேபோல எஸ்எஸ்எல்சி தேர்வுகள் மார்ச் 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவிகளுக்கு கல்வித் துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.தேர்வுகளின் போது மாணவர்கள் சிலர் தாங்கள் எழுதிய விடைத்தாளின் முழு விடையையும் அடித்து விடுகின்றனர். அவ்வாறு செய்யும் மாணவர்கள் அடுத்த இரு பருவங்களுக்கு (ஓராண்டு) தேர்வுகளை எழுதுவதற்கு தடை விதிக்கப்படும்.மேலும், விடைத்தாள் வழங்கப்படும் போது மாணவர்கள் பக்க எண்ணிக்கையை சரிபார்த்து உறுதிசெய்துகொள்ள வேண்டும். தனது முகப்புச்சீட்டில் உள்ள புகைப்படம், பெயர், பாடம், பயிற்று மொழி ஆகிய விவரங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். விடைத்தாளின் எந்தப் பகுதியிலும் தனது தேர்வு எண்ணையோ அல்லது பெயரையோ குறிப்பிடக் கூடாது.சில விடைகளை கோடிட்டு அடிக்க நேர்ந்தால், "மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது" என்ற குறிப்பை பேனாவினால் எழுத வேண்டும். ஆனால், கையொப்பம் இடக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

எனவே விடைத்தாளில் கூடுமான வரை அடித்தல், திருத்தல்கள் இன்றி தெளிவான முறையில் விடைகளை எழுதப் பழகுங்கள். தேர்வுத் துறை விதித்திருக்கும் நிபந்தனைகளை மீறாமல் தேர்வு எழுத உறுதி கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட தேர்வுகளை எழுதி முடித்ததும், கடைசியில் 10 நிமிடங்கள் ஒதுக்கி விடைத்தாளை சரி பார்க்க மறக்கக்கூடாது. விடுபட்டவை ஏதேனும் இருந்தாலோ அல்லது தவறான விடைகளோ அப்போது கண்ணில் படலாம். அதனால் ஒவ்வொரு தேர்வு முடிவிலும் விடைத்தாளை சரி பார்க்க மறக்கக் கூடாது.

கடைசியாக ஒரு வார்த்தை; நீட் தேர்வு குறித்து தமிழகத்தில் இன்னமும் ஒரு தெளிவான நிலைப்பாடு எடுக்கப் படவில்லை என்பதால். அதில் குழப்பமான நிலையே நீடிக்கிறது. எனவே பொது  மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிக்கும் விருப்பமுள்ள தகுதி வாய்ந்த மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் அதற்கு விண்ணப்பிக்க மறவாதீர்கள். 

பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் ஆண்டு தோறும் தமிழக மாணவர்கள் சாதனை படைத்து வருகிறார்கள். இந்த ஆண்டும் நமது மாணவர்கள் மதிப்பெண்களில் சாதனை படைப்பார்கள் என்பது உறுதி!

மாணவமணிகள் மீதான மாறாத நம்பிக்கையுடன் நாளை பிளஸ் டூ தேர்வு எழுதப் போகும் அனைத்து மாணவர்களுக்கும் தினமணி.காமின் அன்பான வாழ்த்துகள்!

முயற்சியும், கடின உழைப்பும் என்றும் வெல்க!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com