இதற்குப் பெயர் தான் அஞ்சாமை! தைரியம், மன வலிமை இத்யாதி... இத்யாதி!

மணப்பெண் கதூனை விட மிகச் சிறுமி. அப்போது தான் கதூனுக்கு புரிந்தது; தான் கலந்து கொண்டிருப்பது ஒரு 'குழந்தைத் திருமண' நிகழ்வு என்று. 8 ஆம் வகுப்பு மாணவியான கதூனுக்கு வகுப்பில் சமூக அறிவியல் பாடத்தை
இதற்குப் பெயர் தான் அஞ்சாமை! தைரியம், மன வலிமை இத்யாதி... இத்யாதி!

16 வயதில் நீங்கள் உங்கள் பெற்றோருடன் ஒரு திருமண வரவேற்பு விழாவுக்குப் போகிறீர்கள். உங்களது கடமை அங்கே மணமக்களை வாழ்த்தி பரிசு கொடுத்து விட்டு பந்திக்குச் சென்று உண்டு திரும்புவதோடு முடிந்து விடுகிறது இல்லையா? நாம் எல்லோருமே திருமண விழாவுக்குப் போனால் இப்படித் தான் செய்திருப்போம். அப்படியானால் மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தைச் சார்ந்த இந்தப் பெண் நம்மை விடச் சற்று மாறுபட்டவர் என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

'பியூட்டி கதூன்' எனும் 16 வயதே ஆன இச்சிறுமி தன் பெற்றோருடன் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றார். அங்கே மணமக்களை வாழ்த்தி பரிசளிக்கலாம் என்று அருகே போனதும் கதூன் அதிர்ந்து போனார்.  ஏனெனில் மணப்பெண் கதூனை விட மிகச் சிறுமி. அப்போது தான் கதூனுக்கு புரிந்தது; தான் கலந்து கொண்டிருப்பது ஒரு 'குழந்தைத் திருமண' நிகழ்வு என்று. 8 ஆம் வகுப்பு மாணவியான கதூனுக்கு வகுப்பில் சமூக அறிவியல் பாடத்தை கற்பித்த ஆசிரியர் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். ஏனெனில் குழந்தைத் திருமணம், சதி உள்ளிட்ட சமூகக் கேடுகளை எதிர்த்துப் போராடிய ராஜா ராம் மோகன் ராய் உள்ளிட்ட மேற்கு வங்க ஆளுமைகள் எல்லாம் கதூனின் நினைவில் சிறகடிக்க உடனே கதூன் மதம் கொண்ட வேளம் ஆனார்.

சிறுமி தான்! படிப்பது 8 ஆம் வகுப்பே தான்! ஆனால் அங்கிருந்த பெரியவர்களிடம் எல்லாம் கதூன் பால்ய விவாகம் என்பது சமூகத்திற்கும் சரி அந்த மணமகளுக்கும் சரி மிகவும் கேடான விசயம் என எடுத்துக் கூறி எச்சரித்தார். அவர்கள் கதூனின் எச்சரிக்கைக்கு செவி கொடுப்பதாக இல்லை. மாறாக அவளை மிரட்டத் தொடங்கினர். கதூன் அஞ்சவில்லை. உடனே திருமணத்தை நிறுத்தாவிட்டால் தான் காவல்துறையிடம் புகார் அளிக்கப் போவதாக திருமண வீட்டினரை மிரட்டினார்.

திருமணத்தில் கலந்து கொள்ள வந்தவர்களில் சிலர்; “இது ஒன்றும் இங்கே புதுசில்லையே; பல சிறுமிகளுக்கும் இப்படித் தானே இங்கே திருமணம் நடக்கிறது. என்ன புதுசாக எதிர்ப்பு நாடகம் போடுகிறாய்?!” என்று கதூனை ஏளனம் செய்தனர். அப்போதும் கதூன் விடாமல் போராடி அந்த குழந்தைத் திருமணத்தை எப்படியும் தடுத்து நிறுத்தி மணப்பெண்ணான சிறுமியைக் காப்பாற்றியே தீருவது எனப் போராடுவதை கை விடாமல் இருந்தார். இதனால் கதூனுக்கும் திருமண வீட்டாரின் உறவினர்களுக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டு கதூனை அவர்கள் தாக்கத் தொடங்கினர்.

மூர்க்கத் தனமான அவர்களது தாக்குதல் கதூனை திருமண மண்டபத்தை விட்டு வெளியேற்றி அவளது வீட்டுக்குத் துரத்தி வலுக்கட்டாயமாக கதூனை உள்ளே அடைத்து வைப்பது வரை நிற்கவில்லை. கதூன் சிறுமி தானே! தாக்குதலில் அதிர்ந்து காயங்களுடன் அவள் மூர்ச்சையானாள். இந்தக் களேபரத்தில் கதூன் இத்தனை தூரம் எதிர்த்துப் போராடிய அந்த குழந்தைத் திருமணம் நின்றது. ஆனால் மகளது நிலையைக் கண்டு பயந்து போன கதூனின் பெற்றோர் அவளை மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஒரு வார சிகிக்சைக்குப் பின் வீடு திரும்பிய கதூன்;

என்னால் குழந்தைத் திருமணத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை, அவள் என்னை விடவும் சிறுமி. அவளுக்கு இப்போது திருமணம் முக்கியமில்லை. அவள் படிக்க வேண்டும். மால்டாவில் குழந்தை திருமணங்கள் வழக்கம் தான் என்றாலும் அதனால் ஏற்படும் அவலங்களும் அதிகம். எனவே இதைப் பற்றி அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக  பள்ளி அளவில் அடிக்கடி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். அவர்களால் தான் குழந்தை திருமணத்தை எப்படியும் எதிர்த்தே தீருவது எனும் உத்வேகம் என்னுள் எழுந்தது.  என்றார்.

கதூனின் அப்பா மக்பூல் ஒரு காய்கறி வியாபாரி, தனது பெற்றோரின் ஏழு குழந்தைகளில் 5 வது பெண் குழந்தை கதூன். மேற்கு வங்கத்தில் சட்டத்துக்குப் புறம்பாகப் பெருகி வரும் குழந்தைத் திருமணங்களால் அம்மாநிலத்தில் பெண்குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதோடு இளம் தாய்மார்களின் பிரசவ கால மரணங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதைத் தடுக்க மாநில அரசு என்ன தான் முயற்சிகள் எடுத்தாலும் கதூன் போன்ற இளைய சமுதாயத்தினர் அநீதியக் கண்டு அஞ்சாது அதற்கு எதிராக குரல் கொடுப்பது வரவேற்கத் தக்கது. என்று மால்டா மாவட்ட நீதிபதி சரத் திவேதி கதூனைப் புகழ்கிறார்.

வருங்காலத்தில் நாடே போற்றும் சிறந்த சமூகப் போராளியாக கதூனை வாழ்த்துவோம்!

Image courtsy: google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com