வங்கிகள் யாருக்காக ?

கடந்த நவ 8 நள்ளிரவு முதல் 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர்
வங்கிகள் யாருக்காக ?

கடந்த நவ 8 நள்ளிரவு முதல் 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் அறிவித்த தினத்திலிருந்து ஏறக்குறைய 3 மாதங்கள் சாமானிய மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளானார்கள்.  முதலில் கருப்புப் பணத்தை வெளிக் கொணர என தெரிவிக்கப்பட்டது.  தினம் ஒரு நிபந்தனைகளாக மாறிக் கொண்டே வந்து இறுதியில் ‘பணமில்லா பரிவர்த்தனை’ பழகிக் கொள்ளுங்கள் என ‘கருப்பு’ வெளிவந்ததா இல்லையா என தெரியாமலேயே நிகழ்வு முடிவிற்கு வந்தது.

அடுத்த அதிரடி

சாமானிய மக்களிடம் இருந்த பணங்களையெல்லாம் ஏறக்குறைய பறிமுதல் செய்வது போல் வங்கியில் செலுத்த வைத்துவிட்டு, தற்போது பாரத ஸ்டேட் வங்கி

குறைந்த பட்ச தொகை 5000 இருப்பு பராமரிக்கவில்லையென்றால் அபராதம் பிறவங்கி ஏடிஎம்-மில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் எஸ்பிஐ ஏடிஎம்-ல் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்தால் கட்டணம் டெபிட் கார்டிற்கு ஆண்டு கட்டணம் காசோலை, வரைவோலைகளுக்கான வசூலுக்கு அதிக கட்டணம் அபராதங்களுடன் சேவை வரியும் செலுத்த வேண்டும் என நேர்முக, மறைமுக கட்டணங்கள் பலவற்றை ஏப்ரல் 1 முதல் வசூலிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

தேசியமயமும், வளர்ச்சியும்

மேற்சொன்னவைகளின் மீதான விமர்சன பார்வைக்கு முன்பாக வங்கிகளைப் பற்றி சில விபரங்களை பார்த்துவிடுவோம்.  இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1948ல் இந்தியாவின் மைய வங்கி ஆணையமாக திகழ்ந்த இந்திய ரிசர்வ் வங்கி அரசு நிறுவனமாக நாட்டுடமையாக்கப்பட்டது. அனைத்து வங்கிகளையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை தன்னகத்தே கொண்டிருந்தது.  வங்கி பரிமாற்றங்கள் என்பது இந்திய பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு மிக இன்றியமையாத கருவியாக இருந்து வந்தது.  இருப்பினும் வங்கிகள் பல தனியார் வசமிருந்ததால் அதில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க இயலாமலும், கிளைகள் விஸ்தரிப்பு என்பது மிகக் குறைவாகவும் இருந்தது.  இந்நிலையில் இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஜூலை 19, 1969 நள்ளிரவு முதல் 14 பெரிய வணிக வங்கிகளை நாட்டுடமையாக்க ஒரு அவசர சட்டத்தை கொண்டுவந்து அமுல்படுத்தியது.  ஒரு அரசியல் விவேகத்துடன் துணிச்சலான நடவடிக்கை என பலராலும் பாராட்டப்பட்டது.  அவசர சட்டம் வெளியிட்ட 2 வார காலத்திற்குள் பாராளுமன்றம் வங்கித் தொழில் நிறுவனங்கள் (கைப்பற்றுதல் மற்றும் பொறுப்பு மாற்றுதல்) மசோதாவை நிறைவேற்றி 9 ஆகஸ்ட் 1969 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது.  அதன் பிறகு கிராமங்கள் தோறும் கிளைகள் என்ற அளவில் பொதுத் துறை வங்கிகள் இந்தியா முழுவதிலும் பல கிளைகள் திறந்து மளமளவென்று வளர்ச்சி கண்டது.

1980ம் ஆண்டு மேலும் 6 வணிக வங்கிகள் தேசியமயம் ஆக்கப்பட்டது.  பின்னர் 1993ம் ஆண்டில் அரசு நியு பேங்க் ஆப் இந்தியா வங்கியை பஞ்சாப் நேஷ‌னல் வங்கியுடன் இணைத்தது.  தேசிய மயத்திற்கு பிறகு நடைபெற்ற ஒரே இணைப்பு அது மட்டுமே.

1990களில் நரசிம்மராவ் தலைமையிலான அரசு இருந்த போது புதிய பொருளாதார கொள்கையின் தாக்கத்தினால் குளோபல் டிரஸ்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி போன்ற தனியார் புதிய தலைமுறை வங்கிகள் தோன்றின.  2007-2009ம் ஆண்டுகளில் நிலவிய உலகளாவிய நிதி நெருக்கடியின் போது இந்திய பொருளாதாரம் தாக்குப் பிடிப்பதற்கு இந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், அவற்றில் இருந்த மக்களின் சேமிப்பும் பெரும் பங்காற்றின.

கார்ப்பரேட் கடன்கள்

ஒருபுறம் நகைக்கடன், விவசாயக் கடன், கல்விக் கடன் போன்றவை சாமானிய மக்களுக்கு கிடைக்கத் துவங்கிய அதே நேரத்தில் அரசியல் தலையீடுகளால் கார்ப்பரேட் பெருமுதலாளிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெருமளவில் கடன்கள் எளிதாக பெற்றதோடு அவற்றை திரும்பச் செலுத்தாமலும் இருந்தனர்.

செயல்படாத மூலதனம்

மார்ச் 2016ல் முடிந்த நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் செயல்படாத மூலதனம் என்பது 5.39 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டது.  அதற்கு முந்தைய ஆண்டு இருந்த 2.78 லட்சம் கோடியிலிருந்து ஏறக்குறைய இரட்டிப்பாகியிருந்தது.

திருப்பிச் செலுத்தாக் கடன்கள்

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 3192 கணக்குகளின் வாயிலாக திருப்பிச் செலுத்தாக் கடன்கள் ரூ.28,775 கோடி.  பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகளில் 1546 கணக்குகள் வாயிலாக ரூ.18,576 கோடி கடன் நிலுவை எனவும், தனியார் வங்கிகளில் 792 கணக்குகள் வாயிலாக ரூ.10,250 கோடி கடன் நிலுவை எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கடன் நிலுவை சில முக்கியஸ்தர்கள்

  1. கிங்பிஷ‌ர் ஏர்லயன்ஸ் (மல்லையா) ரூ.2,673 கோடி
  2. வின்சம் டயமண்ட் & ஜுவல்லரி அன் கோ ரூ.2,660 கோடி
  3. எலக்ட்ரோ தெர்ம் இந்தியா ரூ.2,211 கோடி
  4. ஜூம் டெவலப்பர்ஸ் ரூ.1,810 கோடி
  5. ஸ்டெர்லிங் பயோடெக் ரூ.1,732 கோடி
  6. எஸ்.குமார்ஸ் ரூ.1,692 கோடி
  7. சூரிய வினாயக் இண்டஸ்டிரீஸ் ரூ.1,446 கோடி
  8. இஸ்பாட் அல்லாய்ஸ ரூ.1,360 கோடி
  9. ஸ்டெர்லிங் ஆயில் ரிசோர்சஸ் ரூ.1,197 கோடி

பணமதிப்பிழப்பின் தாக்கம்

பணமதிப்பிழப்பி்ன் வாயிலாக ஏறக்குறைய 3 மாதங்கள் வங்கிகளில் பெரும்பாலான வழக்கமான நடைமுறை வர்த்தகம் முடங்கிப் போனது என்றே சொல்ல வேண்டும்.  பழைய நோட்டுக்களை மக்களிடம் பெற்று ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிவிட்ட அதே வேளையில் அந்த மதிப்பிற்கு நிகரான புதிய நோட்டுக்கள் வங்கிகளுக்கு தரப்படவில்லை.  விளைவு வங்கிகளின் சுழற்சி இருப்பு வெகுவாக குறைந்து போனது.

பொதுமக்கள் தலையில் பேரிடியா

ஒருபுறம் கணணிமயமாக்கல், இயந்திரமயமாக்கல் என்ற வகையில் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைத்துவிட்டு, ஏடிஎம், காசோலை என்ற பரிவர்த்தனை முறைகளை பழக்கிவிட்டுவிட்டு தற்போது பணம் போட்டால் கட்டணம், எடுத்தால் கட்டணம் என்றெல்லாம் வசூலிக்கப்படுமானால் அது அப்பாவி மக்களை சுரண்டுவதாகவே அமையும்.  மேலும் அனைத்து நிறுவனங்களும் சம்பள பட்டுவாடாவை வங்கி கணக்குகள் வழியாகவே வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துவிட்டு சொற்ப சம்பளத்தையும் எடுக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிப்பது எந்த வகையில் நியாயம்.

இந்திய அரசமைப்பின்படி உருவாக்கப்பட்டுள்ள இந்திய பொதுத்துறை வங்கிகள் மக்களுக்கான சேவையை அதிக லாப நோக்கின்றி வழங்க வேண்டும்.  அதே நேரத்தில் இந்திய பொருளாதாரத்தை நிலைப்படுத்த அவை சேவையாற்ற வேண்டும் என்பது அடிப்படையான கொள்கை.  ஆனால் இந்த சேவைக் கொள்கையை எஸ்பிஐ காற்றில் பறக்க விட்டுள்ளது.  பண நீக்க நடவடிக்கையினால் வங்கிகளின் நிதி கட்டமைப்பு வலுவாவதற்கு பதில் பெருமளவில் குறைந்து செல்லாப் பணமாக வெளியேறிவிட்டது.  உலகின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ அதன் துணை வங்கிகளை தன்னுடன் இணைத்து மேலும் தனிப்பெரும் வங்கியாக மாறவுள்ளது.  ஏற்கனவே கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கிய கடன்கைள திரும்ப பெற முடியாமல் திணறும் எஸ்பிஐ ஒருங்கிணைக்கப்பட்டபின் அந்த வங்கிகளின் கடன் நிலுவைகளையும் சேர்த்து சுமக்க வேண்டும்.

இந்நிலையில் மூலதன திரட்டலுக்கு வழியின்றி, கடன்களை வசூலிப்பதை விடுத்து வங்கியையும், ஏடிஎம் நிலையங்களையும் கடந்து சென்றால் கட்டணம் என தாக்குதல் தொடுப்பது தெருவிற்கு தெரு கட்டப்பஞ்சாயத்து மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் போல் தனியார் வங்கிகளை அதிகரிக்கச் செய்வதுடன், இந்த தேசத்தின் நிதிக் கட்டமைப்பை தகர்ப்பதாகவே அமையும். ஒருபுறம் சிறிய பரிமாற்றங்களுக்கும் கட்டணம் என நிர்ணயித்துவிட்டு, கடந்த வாரம் ஈஷா நிறுவனத்திற்கு சொந்தமான பள்ளிகளுக்கு (கார்ப்பரேட் பணக்காரப் பள்ளிகள்) பேருந்துகள் வாங்க ஒரு கோடியே பதினாறு லட்சத்தை அள்ளி நன்கொடையாக கொடுத்திருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜல்லிக்கட்டு, மீத்தேன் எதிர்ப்பு போன்று பாரத ஸ்டேட் வங்கியின் இத்தகைய தாக்குதலை எதிர்த்து பொதுமக்கள் அணிதிரள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.  மத்திய நிதி அமைச்சகம் தலையிட்டு இந்த மக்கள் விரோத கட்டணங்கள், அபராதங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு

- எஸ்.சம்பத்,

 மாநில நிர்வாகி, தநாஅபோக பணியாளர்கள் சம்மேளனம்                     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com