குடியரசுத் தலைவர் தேர்தல்: சசிகலா, பன்னீர்செல்வத்தின் உதவியை நாடுவாரா நரேந்திர மோடி..!

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த அமோக வெற்றியையடுத்து
குடியரசுத் தலைவர் தேர்தல்: சசிகலா, பன்னீர்செல்வத்தின் உதவியை நாடுவாரா நரேந்திர மோடி..!

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த அமோக வெற்றியை அடுத்து, ஜூலையில் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் அந்தக் கட்சியின் வேட்பாளர் வெற்றி வாய்ப்புக்காக அதிமுகவின் இரு அணிகளாகச் செயல்பட்டு வரும் சசிகலா மற்றும் பன்னீர்செல்வத்தின் உதவியை பிரதமர் நரேந்திர மோடி நாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 25-ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. குடியரசுத் துணைத் தலைவர் பதவியை தொடர்ந்து 2-ஆவது முறையாக வகிக்கும் ஹமீது அன்சாரியின் பதவிக்காலமும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து முக்கியத்துவம் வாய்ந்த அந்த 2 பதவிகளுக்கும் புதியவர்களை மத்திய அரசு தேர்வு செய்யவேண்டி உள்ளது.

அதற்கான தேர்தலில் 29 மாநிலங்கள் மற்றும் தில்லி, புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளில் உள்ள 4,120 உறுப்பினர்கள், 543 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 233 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 4,896 உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இதில், ஒவ்வொரு பேரவை உறுப்பினருக்கும், அவர்கள் சார்ந்த மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்கின் மதிப்பு மாறுபடும். ஆனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு 708 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, சட்டீஸ்கர், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், அசாம் மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ஜம்மூ-காஷ்மீர், ஆந்திரப் பிரதேசம் என இரு மாநிலங்களில் ஆளும் கூட்டணியிலும் பாஜக பங்குகொண்டுள்ளது.

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களுக்கு முன்பு வரையிலும், மேற்கண்ட 2 பதவிகளுக்கும் பாஜகவால் தன்னிச்சையாக வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாத நிலை காணப்பட்டது. மொத்த வாக்குகள் 10,98,882, இதில் 5,49,442 வாக்குகள் பெற்று இருந்தால் மட்டுமே, பாஜகவின் வேட்பாளர்கள் வெற்றிபெற முடியும். இதையடுத்து, பாஜகவுக்கு சுமார் 75 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகத் தேவைப்பட்டது. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்லாத பிற கட்சிகளின் ஆதரவும் பாஜகவுக்கு தேவைப்பட்டது.

ஆனால், தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது. அதாவது, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய 2 மாநிலங்களிலும் பாஜகவுக்கு கிடைத்துள்ள அமோக வெற்றியால் பாஜகவுக்கு பேரவை உறுப்பினர்களின் பலம் அதிகரித்ததுடன் மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களிலும் கணிசமான இடங்களும் கிடைத்தன.

இதையடுத்து 5 மாநில பேரவைத் தேர்தலில் கிடைத்த வெற்றியின் மூலம், மாநிலங்களவைக்கு அதிக எண்ணிக்கையில் தனது கட்சியினரை அனுப்ப முடியும் என்று நினைக்கும் பாஜகவுக்கு தேவைப்படும் வாக்குகளின் எண்ணிக்கை 25 ஆயிரமாகக் குறைந்துள்ளது. 5 மாநில பேரவைத் தேர்தல்களின் மூலம் ஏறக்குறைய 50 ஆயிரம் வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதனால், குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜகவால் தனது விருப்பம்போல் வேட்பாளரை தேர்வு செய்ய முடியும். இதையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் எளிதில் வெற்றிபெறுவது நிச்சயமாகி உள்ளது என்றாலும், பாஜகவுக்கு போதிய பலம் கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

அதாவது, மாநிலங்களவைக்கு அதிக எண்ணிக்கையில் தனது கட்சியினரை அனுப்ப முடியும் என்று நினைக்கும் பாஜக, மீதமுள்ள 25 ஆயிரம் வாக்குகளைப் பெற ஒடிசா மாநிலத்தின் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் மற்றும் தமிழகத்தில் அதிமுகவை நம்பியிருந்தது.

அதிமுகவை ராணுவக் கட்டுப்பாட்டுடன் தன் கண் அசைவில் வைத்திருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழகத்தில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஜெயலலிதாவால் முதல்வராக அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி என இரு அணியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. இந்த இரு அணிகளில், சசிகலா தலைமையிலான அதிமுகவில்தான் பெரும்பாலான சட்டப்பேரவை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்.

இந்த நிலையில், பெரும்பான்மை வாக்குகள் கையிருப்பில் இருந்தாலும், எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் தன்னுடைய வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நிலையில்,  அதிமுகவின் இரு அணியிடமும் ஆதரவு கேட்கும் நிலையில் பாஜக உள்ளது. இந்த இரு அணிகளின் உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால், பாஜக நிறுத்தும் வேட்பாளரே குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் எந்தவித சிரமமும் இன்றி வெற்றி பெற்றுவிட முடியும்.
 
அதுமட்டுமல்லாமல், அடுத்த ஆண்டு மொத்தமாக 68 உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறுகின்றனர். உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றியால், இதில் பாதி இடங்களை பாஜக நிரப்பிக்கொள்ள முடியும். மேலும், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆளும் மாநிலங்களில் இருந்தும் எம்.பி.கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதனால், மாநிலங்களவையிலும் அந்தக் கட்சிக்கும் உறுப்பினர்களின் பலம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, மக்களவையில் போதுமான பலத்துடன் இருக்கம் பாஜகவுக்கு மாநிலங்களவையிலும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அந்தக் கட்சி கொண்டுவரும் எந்த மசோதாவையும் எதிர்க்கட்சிகள் இடையூறு தடைகளின்றி நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கிடைத்த வெற்றியின் மூலம், மாநிலங்களவைக்கு அதிக எண்ணிக்கையில் தனது கட்சியினரை அனுப்ப முடியும் என்று நினைக்கும் பாஜக, குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றிபெற அதிமுகவின் இரு அணியின் ஆதரவையும் நாடும் என்பது உறுதியாகத் தெரிகிறது.

குடியரசு தலைவராக அத்வானி, துணை குடியரசுத் தலைவராக முரளி மனோகர் ஜோஷி இருவரும் முன்நிறுத்தப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. அதே சமயம், குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு சுஷ்மா ஸ்வராஜும், குடியரசுத் தலைவர் பதவிக்கு முரளி மனோகர் ஜோஷியும் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

- ஆர்.வெங்கடேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com