திறந்த வெளிகளில் குப்பையை எரித்தால் அபராதம்

சுகாதாரம் என்பது, இந்தியாவில் எப்போதும் பிரச்னையாகவே உள்ளது. குப்பையை சரியான முறையில் அப்புறப்படுத்தாமல், திறந்த வெளிகளில் துாக்கி எறிவது; ...
திறந்த வெளிகளில் குப்பையை எரித்தால் அபராதம்

சுகாதாரம் என்பது, இந்தியாவில் எப்போதும் பிரச்னையாகவே உள்ளது. குப்பையை சரியான முறையில் அப்புறப்படுத்தாமல், திறந்த வெளிகளில் துாக்கி எறிவது; கழிவு நீரை முறையான வழிகளில் கொண்டு செல்லாமல், ஆங்காங்கே தேங்கி நிற்க விடுவது; திறந்த வெளிகளில் மலம் கழிப்பது போன்றவை, நம் அன்றாட வாழ்வில், சாதாரண விஷயங்களாகி விட்டன. குப்பைகளும், கழிவு நீரும், தெருக்கள் மற்றும் சாலைகளில் நிறைந்திருக்கின்றன என்பது மட்டும் இங்கு பிரச்னை அல்ல. மாறாக, அவற்றால் உருவாகும் நோய்கள், நாட்டிற்கே மிகப் பெரிய சவாலாக உள்ளது.

ஒரு நாடு, சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேறும் போது, தொழிற்சாலைகள், நகரங்கள் மற்றும் மக்கள் தொகையும் அதிகமாகும்; அப்போது, குப்பையும் அதிகமாகும். வளர்ந்த நாடுகளில், மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் உருவாகும் குப்பையின் அளவு, நம் நாட்டை விட மிக அதிகம். ஆனால், அங்கு கழிவு மேலாண்மை திறம்பட உள்ளது. அது இந்தியாவில் மிகப்பெரும் சவாலாக உள்ளது. இதற்கான முக்கியக் காரணம், குப்பையை நாம் முறையாக அப்புறப்படுத்துவது கிடையாது. ஓர் ஆண்டிற்கு, நம் நாட்டில், கிட்டத்தட்ட, 3.8 கோடி டன் குப்பை உருவாகிறது. இதில், 80 சதவீதத்திற்கும் மேல், திறந்த வெளிகளில் கொட்டி வைக்கப்படுகிறது. புறநகர் பகுதிகளில், குப்பைக் கிடங்குகள் பெரும்பாலும் எரியூட்டப்பட்டு, புகையை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, அருகில் வசிப்பவர்களின் உடல் நலனும் பாதிப்படைகிறது.

இந்தியாவில் சுகாதார சீர் கேட்டால் தினமும் குறைந்தது, 1,000 குழந்தைகளாவது வயிற்றுப்போக்கு நோயால் இறந்து விடுகின்றன. சுகாதார சீர் கேட்டால் குடற்புழு நோய்கள், கண் நோய்கள், மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்படுகிறது. இவற்றால் அதிகம் பாதிப்படைவது குழந்தைகளே. இதனால், இந்தியாவிற்கு கோடிக்கணக்கில் பணமும், மிக அதிக அளவிலான நேரமும் விரயமாகிறது.'சுதந்திரத்தை விட, சுகாதாரம் மிக முக்கியமானது...' என, காந்திஜி கூறினார். எல்லாருக்குமான முழுமையான சுகாதாரம் என்பதே, அவரின் கனவு.

இந்தியாவை ஒரு முழுமையான, சுத்தமான, இந்தியாவாக மாற்றுவதற்காகவே, பிரதமர் மோடியால், 'சுவச் பாரத்' எனப்படும், துாய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டுள்ளது. காந்திஜியின், 150வது பிறந்த ஆண்டான, 2019க்குள் முழுமையான, சுத்தமான நாடு என்ற இலக்கை அடைய வேண்டும் என்பது, இத்திட்டத்தின் நோக்கம். இதன் மூலம், கழிப்பறை இல்லாத வீடுகள், பள்ளிகளில் கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. 2019-ம் ஆண்டிற்குள், முழு இலக்கை அடைய, 62 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ ரீதியாக, இந்தியா நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ள நிலையில், ஒரு சில நோய்களை நம்மால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை;

நம் வீட்டில் உருவாகும் குப்பையை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையாக பிரித்து அவற்றிற்கான குப்பைத் தொட்டிகளில் அப்புறப்படுத்த வேண்டும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கச் செல்லும் போது, வீட்டில் இருந்தே துணி பைகளை மறவாமல் எடுத்துச் செல்ல வேண்டும். அது, வீட்டில் குப்பை உருவாகும் அளவைக் குறைக்கும். குப்பையை ஆங்காங்கே எரிப்பதும் கூடாது.பெரும்பாலான நோய்கள், குடி நீர் மூலமாகவே பரவுகின்றன.

நாடு முழுவதும் திறந்தவெளிகளில் குப்பையை எரித்தால் ரூ.25,000 அபராதம் என கடந்த: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

குப்பைகளை திறந்த வெளிகளில் எரிப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்று கூறி, இதற்கு தடை கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வர்தமான் கௌசிக், சஞ்சய் குல்ஸ்ரேத்ரா மற்றும் உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக தொடந்த O.A.21/2014, O.A.95/2014 மற்றும் O.A.303/2015  வழக்கை விசாரித்த தீர்ப்பாய தலைவர் நீதிபதி சுவதந்தர் குமார் 22, டிசம்பர்,2016-இல் பிறப்பித்த உத்தரவின் படி நாடு முழுவதும் திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. அதிக குப்பைகளை எரித்தால் அபராதம் விதிக்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதில் தனிநபரோ அல்லது உள்ளாட்சி உள்பட பிற அமைப்புகளோ, திறந்த வெளியில் குப்பையை எரிக்கும் போது, சுற்றுச்சூழல் இழப்பீடாக அபராதம் செலுத்தியாக வேண்டும்.

சிறிய அளவிலான குப்பையை எரித்தால் ஒரு முறைக்கு ரூ.5 ஆயிரமும், குப்பைக் கிடங்கு போல் மொத்தமாக எரித்தால் ஒரு முறைக்கு ரூ.25 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட வேண்டும். இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவது குறித்து அனைத்து மாநில அரசுகளும் 4 வாரங்களுக்குள் ஒரு செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும். மேலும், மெல்லிய பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிப்பது குறித்து மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகமும், அனைத்து மாநில அரசுகளும் 6 மாதங்களுக்குள் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். இதுதவிர, 2016ம் ஆண்டின் திடக்கழிவு மேலாண்மைச் சட்ட விதிகளை அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com