இரட்டை இலை சின்னம் யாருக்கு? சட்டம் என்ன சொல்கிறது?

பொதுச் செயலாளர் சசிகலாவின் தேர்வு செல்லாது என்று பன்னீர்செல்வம்
இரட்டை இலை சின்னம் யாருக்கு? சட்டம் என்ன சொல்கிறது?

அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ம் தேதி இறந்தார். இதையடுத்து, அவர் வெற்றிபெற்ற ஆர்.கே. நகர் தொகுதியில், ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரே, வி.கே.சசிகலா பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் முதல் ஆளாக புகார் மனு கொடுத்தவர் சசிகலா புஷ்பா. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல் காரணமாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணிகள் உருவாகி உள்ளன.

பொதுச் செயலாளர் சசிகலாவின் தேர்வு செல்லாது என்று பன்னீர்செல்வம் அணியினரும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர். இதற்கு பதில் அளிக்க, வி.கே. சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தேர்தல் ஆணையத்துக்கு பதில் அளித்திருந்தார். அதை நிராகரித்த தேர்தல் ஆணையம், மார்ச் 10-ம் தேதிக்குள் சசிகலா, பதில் அளிக்கும்படி தெரிவித்திருந்தது.

சசிகலா பதில்

அதிமுக பொதுச் செயலாளர் நியமன விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில் கடிதம் அனுப்பியுள்ளார். 70 பக்கங்கள் கொண்ட பதில் கடிதத்தை சசிகலாவின் வழக்குரைஞர்கள் ராகேஷ் சர்மா, பரணி குமார் ஆகிய இருவரும் டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினர்.
 

தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட பதில் கடிதத்தில், கட்சியின் பொதுக்குழுதான் என்னை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது. அதிமுக தேர்தல் விதிகளுக்கு உட்பட்டே அனைத்து நியமனங்களும் நடைபெற்றுள்ளன.

அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் ஒப்புதலும் பெறப்பட்டது. புகார் தெரிவித்தோர் எல்லாம் என்னை தேர்வு செய்ய முன்மொழிந்தவர்கள். எனவே அதிமுக பொதுச் செயலாளர் நியமனத்தில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என்று சசிகலா பதில் அளித்துள்ளார்.

சசிகலாவின் விளக்க கடிதத்தின் நகல்களை புகார்தாரர்களான ஓபிஎஸ் அணிக்கு அனுப்பிய தேர்தல் ஆணையம் அவர்கள் தரப்பு விளக்கத்தை கேட்டது.

அவர்களும் பதிலை கொடுத்து தற்பொழுது வரும் 20-ம் தேதி தேர்தல் ஆணையம் முடிவை வெளியிட உள்ளது.

இடைத்தேர்தல்

இந்தச் சூழ்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வில் சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தி.மு.க. மற்றும் இதர கட்சிகளும் களமிறங்கத் தயாராகி வருகின்றன.

 

அ.தி.மு.க-வில் சசிகலா அணியிடம் இரட்டை இலை சின்னம் இருந்து வருகிறது. அதைக் கைப்பற்றும் நோக்கத்தில், பன்னீர்செல்வம் அணியினர் காயை நகர்த்திவருகின்றனர். அதற்கு அடித்தளமாக இந்தத் தேர்தலைப் பயன்படுத்தலாம் என்ற திட்டமும் அந்த அணிக்கு உள்ளது.

எந்த அதிகாரத்தின் கீழ், கட்சி சின்னம் குறித்த சர்ச்சையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கிறது?

* அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து.324-இல் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் தேர்தலுக்கான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

* மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பகுதி-VI A, பிரிவு 29A. அரசியல் கட்சிகள் பதிவு செய்தல் என்ற பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம் மற்றும் தேர்தல் நடத்தை விதிகள், 1968 விதிகள் 5, 10-இல் கொடுக்கப்பட்ட அதிகாரங்களின் படி 1968-ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு மற்றும் வழங்கல் ஆணை (THE ELECTION SYMBOLS (RESERVATION AND ALLOTMENT) ORDER, 1968) சின்னங்கள் ஒதுக்கீடு பற்றி கூறுகிறது.

* 1968-ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு மற்றும் வழங்கல் ஆணையின் 15-ம் ஷரத்துபத்தியின் கீழ் தகராறுகள் ஏற்படும் போது தேர்தல் ஆணையமே யாருக்கு கட்சியின் சின்னம் செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கும் என சொல்கிறது.

* கட்சியினுள்ளோ, இரு கட்சிகளோ இணைவது மற்றும் பிரிவதன் அடிப்படையில் கட்சி சின்னம் பற்றிய முடிவை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. 1971-ம் ஆண்டு சாதிக் அலி மற்றும் இன்னொருவருக்கு எதிரான இந்தியத் தேர்தல் ஆணைய வழக்கில் தேர்தல் ஆணையத்தின் முடிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

* ஒரு குழுவை அதிகாரப்பூர்வ கட்சியாக அங்கீகரிக்கும் முன் சின்னத்துக்கு உரிமை கோரும் குழுவுக்கு கட்சியில் ஆதரவு எப்படி உள்ளது என்பதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளும். அதாவது கட்சி எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் ஆதரவு மற்றும் கட்சி உறுப்பினர்கள், நிர்வாகக்குழு ஆதரவு என்று இருதரப்பு ஆதரவையும் தேர்தல் ஆணையம் கணக்கில் கொள்ளும்.

* மேலும், குறிப்பிட்ட கட்சி உடைவதற்கு முன் சேர்ந்திருந்தபோது, கட்சியின் விதிமுறைகளையும், நிர்வாகிகள் பட்டியலையும் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யும். கட்சியின் உயர்நிலை குழுக்களை தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டு, இதில் எத்தனை நிர்வாகிகள், உறுப்பினர்கள் எதிர்கோஷ்டியினரை ஆதரிக்கின்றனர் என்பதை ஆய்வு செய்யும்.

ஆட்சியமைப்புப் பிரிவில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவை வாக்குமூலப் பதிவுகளுடன் அளிப்பதை பரிசீலனைக்கு ஏற்று இவர்கள் எந்தப் பிரிவை ஆதரிக்கிறார்கள் என்பது முடிவு செய்யப்படும்.

* அதாவது ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கு கட்சியின் அமைப்பாகப் பிரிவு மற்றும் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் ஆதரவு பெரும்பான்மையாக இருந்தால் அந்தப் பிரிவுக்கே கட்சியின் பெயர் மற்றும் சின்னம் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும். மற்றொரு பிரிவு தனிக் கட்சியாக பதிவு செய்ய அனுமதி வழங்கும்.

* இரு தரப்பினருக்கும் உள்ள ஆதரவில் இழுபறி நிலை ஏற்படும் நிலையில் கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கும். இரு பிரிவினரும் புதிய பெயர்களில் அதாவது மூலக் கட்சியின் பெயரில் முன் ஒட்டு அல்லது பின் ஒட்டு சேர்த்து புதிதாக பதிவு செய்ய அனுமதி வழங்கும்.

* தேர்தல் ஆணையம் பல்வேறு ஆதாரங்களையும் பரிசீலிக்க அவகாசம் எடுத்துக்கொள்ளும். உடனடியாக தேர்தல் என்றால் கட்சியின் சின்னத்தை முடக்கி இரு பிரிவினரையும் வெவ்வேறு பெயர்களில், தற்காலிக சின்னங்களில் போட்டியிட அனுமதிக்கும். தேர்தல் காலங்களில் கட்சி சின்னம் பற்றிய தகராறுகள் உடனடியாக தீர்க்கப்படுமா என்பது சந்தேகமே?

* ஷரத்து 16-இன் படி, இருதரப்பினரும் தங்கள் வேறுபாடுகளைக் களைந்து ஒன்று சேர்ந்து விட்டால்..

* மறுபடியும் கட்சி இணைந்து ஒன்றாகிவிட்டால், மறுபடியும் தேர்தல் ஆணையத்தை அணுகி ஒருங்கிணைந்த கட்சி என்று அங்கீகரிக்கக் கோர வேண்டும். இவ்வாறு இணைவதை அங்கீகரிக்கும் அதிகாரமும் தேர்தல் ஆணை யத்திடமே உள்ளது. அப்போது கட்சியின் மூலப்பெயர் மற்றும் சின்னத்தை தொடர அனுமதிக்கும்.

அ.இ.அ.தி.மு.க கட்சி விதிகள், மற்றும் ஒழுங்குமுறைகள் சொல்லும் சில விதிகள்

* அ.இ.அ.தி.மு.க கட்சியின் விதிகள் கடைசியாக 5.2.2007-இல் திருத்தப்பட்டுள்ளது

* சசிகலா புஷ்பா சொல்வது போல் சட்டத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஒருவர், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினராக நீடிக்கவே தகுதியற்றவர் ஆகிவிடுகிறார் என்ற விதிகள் ஏதும் இல்லை.

*· விதி.20(ii)-இன் படி தமிழ்நாடு, கர்நாடக, கேரள, பாண்டிச்சேடி, ஆந்திரம் மற்றும் அந்தமானைச் சேர்ந்த கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்று வாக்களித்து முடிவெடுக்க வேண்டும்.

* விதி.29(v)-இன் படி கட்சியின் அலுவலக பொறுப்புக்கு போட்டியிடும் ஒரு உறுப்பினர் ஒருவர் இடைவெளியின்றி 5 வருட கால கட்சி உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.

* இதில் எம்.ஜி.ஆர். அவர்கள் சேர்த்துள்ள விதி 5(vii)-இன் படி கட்சி நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் செல்லும் உறுப்பினர், தானாகவே உறுப்பினர் பதவியை இழப்பார் என்பது மிக கவனிக்க வேண்டிய ஒன்று.

ஆக நடைமுறைகளையும் கட்சி விதிகளையும் வைத்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு வெளியிடும்.

- C.P. சரவணன், வழக்கறிஞர் - 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com