உஷாரய்யா உஷாரு! இந்தியாவில் 23 பல்கலைக்கழகங்கள் போலி; சொல்லுது யூ.ஜி.சி!

இந்தியாவில் இயங்கி வரும் பல்கலைக்கழகங்களில் 23 பல்கலைக்கழகங்கள் மற்றும் 279 தொழில்நுட்ப கல்வியகங்கள் போலியானவை என ...
உஷாரய்யா உஷாரு! இந்தியாவில் 23 பல்கலைக்கழகங்கள் போலி; சொல்லுது யூ.ஜி.சி!

புதுதில்லி: இந்தியாவில் இயங்கி வரும் பல்கலைக்கழகங்களில் 23 பல்கலைக்கழகங்கள் மற்றும் 279 தொழில்நுட்ப கல்வியகங்கள் போலியானவை என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

பல்கலைக்கழக மானியக் குழு (யுசிஜி) மற்றும் அகில இந்தியப் பொறியியல் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆகியஇரண்டும் இணைந்து நாடெங்கும் உள்ள கல்வி நிலையங்கள் குறித்து நடத்தும் வருடாந்திர ஆய்வு அறிக்கையானது கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின்  இணையதளங்களிலும் காணக்கிடைக்கிறது.

புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நாடு முழுவதும் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விஷயங்கள் பெரும்பாலும் 'பகீர்' ரகம்.

இந்த அறிக்கையானது இந்தியாவில் இயங்கி வரும் பல்கலைக்கழகங்களில் 23 பல்கலைக்கழகங்கள் மற்றும் 279 தொழில்நுட்ப கல்வியகங்கள் போலியானவை என்று தெரிவித்துள்ளது. அத்துடன் அவை பற்றிய விபரங்களும் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த 'பெருமைமிகு' பட்டியலில் இந்தியாவில் பிற மாநிலங்களைவிட 66 போலி கல்லூரிகளுடன் தலைநகர் புதுதில்லிதான் முதலிடம் பிடித்து உள்ளது.  அத்துடன் அடுத்த அதிச்சியாக என்ஜினியரிங் மற்றும் பிற தொழில்நுட்ப கல்வியை வழங்கும் 23 பல்கலைக்கழகங்கள் மற்றும் 279 தொழில்நுட்ப கல்வியகங்கள் போலியானவை எனவும் இந்த ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

பொதுவாக இது போன்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்வியகங்கள் தங்களிடம் பயிலும் மாணவர்கள் படிப்பு முடித்ததற்கான சான்றிதழை வழங்க தகுதியற்றவை என்று அந்த அறிக்கை அம்பலபடுத்துகிறது. இந்த 23 போலி பல்கலைக்கழகங்ககளின் பட்டியலிலும் 7 பல்கலைக்கழகங்கள் தலைநகர் தில்லியில் உள்ளது என்று யுஜிசி கூறியுள்ளது.இதனால்தான் அது தலைநகரோ என்னவோ? அடுத்த கட்டமாக தெலுங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில்தான் கணிசமான அளவு போலி தொழில்நுட்ப கல்வியகங்கள் உள்ளன.

இந்த ஆய்வறிக்கை குறித்து மத்திய மனிதவளத்துறை அதிகாரி ஒருவர் பேசும்பொழுது, “இவ்வாறான முறையான அனுமதி பெறாத மற்றும் முறைப்படுத்தப்படாத தொழில்நுட்ப கல்வியகங்கள் மீது சரியான நடவடிக்கையை எடுக்க வசதியாக, நாங்கள் மாநில அதிகாரிகளுக்கு இந்த பட்டியலை அனுப்பி உள்ளோம்,” என்று  தெரிவித்தார்

மேலும் மாணவர்கள் இதுபோன்ற போலி கல்லூரிகள்  மற்றும் பல்கலைக்கழகங்களில் சேரக்கூடாது என்பதை உறுதி செய்ய அனுமதி பெறாத கல்வி நிறுவனங்களில் பற்றி எச்சரிக்கும் பொது அறிவிப்பும் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டு உள்ளது என துறை அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் மாநிலங்களவையில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபொழுது மத்திய மனித வள மேம்பாட்டு துறை இணை மந்திரி மகேந்திர நாத் பாண்டே, "போலி கல்வி நிறுவனங்கள் குறித்து விசாரிக்குமாறு மாநில அரசுக்களுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது" என்று தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக விசாரித்து தொடர்புடைய போலி பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வசதியாக போலீசில் புகார் தெரிவிக்கவும் மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

இருந்த போதிலும் மாணவர்களை எச்சரிக்கும் விதமாக போலியான 23 பல்கலைக்கழகங்கள் மற்றும் 279 தொழில்நுட்ப கல்வியகங்கள் தொடர்பான விபரங்கள்,  பல்கலைக்கழக மானியக் குழு மற்றும்  அகில இந்தியப் பொறியியல் கல்வி கவுன்சில் ஆகிய இரு அமைப்புகளின் இணையத்தளங்களான www.ugc.ac.in  மற்றும் www.aicte-india.org ஆகிய இரண்டிலும் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com