சாலை விபத்தில் தமிழகம்தான் நம்பர் ஒன்: தடுப்பது எப்படி? 

இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகவும், மிகப்பெரிய மாநிலமாகவும் உத்தரபிரதேசம் திகழ்ந்து வருகின்றது.
சாலை விபத்தில் தமிழகம்தான் நம்பர் ஒன்: தடுப்பது எப்படி? 

இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகவும், மிகப்பெரிய மாநிலமாகவும் உத்தரபிரதேசம் திகழ்ந்து வருகின்றது. ஆனால் சாலை விபத்தில் தமிழகம்தான் முதல் மாநிலமாக உள்ளதாகவும், அதிகம் பேர் உயிரிழப்பதாகவும் மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் கமல் சோய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கமல் சோய் நிருபர்களுக்கு  அளித்த பேட்டி: இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமாக உத்தரபிரதேசம் திகழ்ந்தாலும், தமிழகத்தை ஒப்பிடும் போது சாலை விபத்துக்கள் அங்கு குறைவுதான். காரணம், தரமான கம்பெனிகளுக்கு அங்கீகாரம், வேகத்தடை, சாலை விதிகளை பின்பற்றுவது, அவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களில் மாநில அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் சாலை விபத்து எண்ணிக்கை

இந்திய அளவில் கடந்தாண்டில் நிகழ்ந்த நான்கு லட்சத்து 50 ஆயிரத்து 898 சாலை விபத்துகளில், 4 லட்சத்து 77 ஆயிரத்து 731 பேர் காயமடைந்தனர்; ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 107 பேர் பலியாகியுள்ளனர். அதாவது, சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்திலும் 51 விபத்துகள் வீதம் நடந்து, 16 பேர் இறந்துள்ளனர்.

கடந்த 2013ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் (ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 423 பேர் பலி), 2014ல், உயிர்ப்பலி 2.9 சதவீதம் அதிகரித்துள்ளது.அபாயகரமாகவும், அலட்சியமாகவும், கண் மண் தெரியாமல் சென்று 'ஓவர் டேக்' செய்வதால் 41.5 சதவீத விபத்துகளும், அதிவேகத்தால் 47.9 சதவீத விபத்துகளும், தொழில்நுட்ப கோளாறால் வாகனங்கள் இயக்கமிழந்து 2.8 சதவீத விபத்துகளும், மோசமான வானிலையால் 5.3 சதவீத விபத்துகளும், போதையில் ஓட்டியதால் 2.6 சதவீத விபத்துகளும் நிகழ்ந்துள்ளன.

இந்திய அளவில் நேரிட்ட மொத்த சாலை விபத்துகளில், 67 ஆயிரத்து 250 வழக்குகள் பதிவாகி, தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக 44 ஆயிரத்து 382 வழக்குகளுடன் மகாராஷ்டிரா இரண்டாமிடத்திலும், 43 ஆயிரத்து 694 வழக்குகளுடன் கர்நாடகா மாநிலம் மூன்றாமிடத்திலும் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில், 39 ஆயிரத்து 698 வழக்குகளுடன் மத்திய பிரதேசமும், 35 ஆயிரத்து 872 வழக்குகளுடன் கேரளாவும் உள்ளன.

தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி, கடந்த 2015-ம்  ஆண்டில் தமிழகத்தில் 69 ஆயிரத்து 59 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில்  79 ஆயிரத்து 746 பேர் காயம் அடைந்துள்ளனர். 15 ஆயிரத்து 642 பேர்  பலியாகியுள்ளனர். இதுவே 2014ல் 67 ஆயிரத்து 250 விபத்துகளில், 77 ஆயிரத்து  725 பேர் காயமடைந்துள்ளனர். 15 ஆயிரத்து 190 பேர் இறந்துள்ளனர். ஆக ஆண்டுக்கு ஆண்டு பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. தமிழகத்தில் 2.25 கோடி வாகனங்கள் இயங்குகின்றன. இதில் 25 லட்சம் வாகனங்கள் வணிக ரீதியாக இயங்குகின்றன. போக்குவரத்து வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவியை கண்டிப்பாக பொருத்த வேண்டும் என கடந்த 15.4.2015 அன்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சாலை விபத்துக்கு முக்கிய காரணமே வாகனத்தை வேகமாக இயக்குவது, மது  அருந்திவிட்டு ஓட்டுவதுதான். இதில், 28 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர்.   தமிழகத்தில் எக்கோ கேஸ் இம்பெக்ஸ், கிஹாய்சால் டெக்னாலஜிஸ், ஹோவல் ஸ்கேல்ஸ் அண்ட் சிஸ்டம், மைக்ரோ ஆட்டோடெக், டிஜிலா டிவைசஸ்  போன்ற நிறுவனங்கள் மீது தரமற்ற வேக கட்டுப்பாட்டு கருவிகளை விநியோகம் செய்வதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. மேலும்அங்கீகாரம் இல்லாத தயாரிப்பாளர்களின் வேகக் கட்டுப்பாட்டு சாதனங்களை  பொருத்துவதும் வெளிப்படையாக அதிகரித்து வருகிறது. சரியான முறையில் சட்டங்களை  அமல்படுத்தாததும் இதற்கு காரணமாகும்.

தமிழக சாலைகள்

2010 ஆண்டில் தமிழகத்தில்  தேசிய நெடுஞ்சாலைகள்      4,873 கிமீ, மாநில நெடுஞ்சாலைகள் 10,549 மாவட்ட முதன்மைச் சாலைகள், 11,315 கிமீ,மாவட்ட இதரச் சாலைகள் மற்றும் கரும்பு அபிவிருத்தி திட்ட சாலைகள்   34,937 கிமீ,உள்ளாட்சி சாலைகள் மற்றும் இதர சாலைகள்   90,509 என  மொத்தம் 1,52,183 கிலோமீட்டர்கள் நீளம் சாலைகள் உள்ளன.

2017-18ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் சாலை கட்டமைப்பு பராமரிப்பு திட்டத்திற்கு ரூ.3156 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார்அறிவித்தார். அதோடு, நெடுஞ்சாலை பாதுகாப்பு திட்டத்திற்கும் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காலாவதியான பேருந்துகளை இயக்குவதில் தமிழக அரசு 2-வது இடத்தில்

* காலாவதியான பிறகும் இயக்கப்படும் மாநில அரசு பேருந்துகள் பட்டியலில் பீஹார் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது..

* மற்ற மாநகரங்களை காட்டிலும் சென்னையில் தான் அதிகபட்சமாக 56.9 சதவீதம் காலாவதியான பேருந்துகள் இயக்கப்படுவதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..

* பொதுவாக ஒரு பேருந்தை 6 லட்சம் கிலோமீட்டர் வரை ஓட்டலாம் அல்லது 7 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் எனவும் அதற்கு மேல் பயன்படுத்தினால் அது காலாவதியான பேருந்து ஆகிவிடுகிறது என்றும், இதனால் பேருந்துகளில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

வேகக் கட்டுப்பாட்டு  கருவிகளை கண்டிப்பாகப் பொருத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி,  அவை முறையாக பொருத்தப்படுகின்றனவா என்பதை மாநில போக்குவரத்து துறை கடுமையான  முறையில் கண்காணிக்க வேண்டும். தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில்  சில சட்டவிரோதமான, அங்கீகாரம் பெறாத தயாரிப்பாளர்கள் சட்டம் மற்றும்  விதிமுறைகளுக்கு புறம்பாக குறைபாடுகள் உள்ள வேகக் கட்டுப்பாட்டு  சாதனங்களைப் பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது  சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கமல் சோய் கூறினார்.

மோட்டர் வாகனச் சட்டம், 1988 மற்றும் மத்திய மோட்டார் வாகன விதிகள்,1989-இன் படி குற்றங்களும் தண்டனையும்

1.     உரிமம் இல்லாதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது பிரிவு.181 இன் படி. ரூ.50 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டணை

2.     தன் உரிமத்தை மற்றவர் உபயோகிக்க கொடுப்பது பிரிவு.177 இன் படி ரூ.100 முதல் முறையும் அடுத்தடுத்த முறைகளில் ரூ.300-ம் அபராதம்.

3.     ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் பிரிவு 181. ரூ.500 அபராதம்

4.     உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழந்தவர்கள் வண்டி ஓட்டுதல் பிரிவு 182(1). ரூ.500 அபராதம்

5.     அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் பிரிவு 183(1) ரூ.400 அபராதம்

6.     மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) பிரிவு 183(2).ரூ.300 அபராதம்

7.     அபாயகரமாக ஓட்டுதல் பிரிவு 184. ரூ.1000 அபராதம்

8.     செல்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) பிரிவு 177.ரூ.100 அபராதம்

9.     குடிப் போதையில் வண்டி ஓட்டுதல் பிரிவு.185 .இன்படி நீதிமன்றம் முடிவு செய்யும்

10.    மன நிலை,உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் .பிரிவு 186. ரூ.200 அபராதம்

11.    போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் பிரிவு 189. ரூ 500 அபராதம்

12.    அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது பிரிவு 190(2) .ரூ.50 அபராதம்

13.    இன்சூரன்ஸ் இல்லாத வண்டியை ஓட்டுதல் பிரிவு.196-இன் படி அபராதம் ரூ.1000/=

14.    அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் பிரிவு 190(2).ரூ.50 அபராதம் .

15.    காற்று ஓலிப்பான் .பல்லிசை ஓலிப்பான் பிரிவு 190 (2) .ரூ.50 அபராதம்

16.    பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் பிரிவு 192. ரூ.500 அபராதம்

17.    அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடையுடன் ஓட்டுதல் பிரிவு 194.ரூ.100 அபராதம்

18.    காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் (uninsured) பிரிவு 196 .ரூ.1000 அபராதம்

19.    வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் பிரிவு 198 .ரூ.100 அபராதம்

20.    போக்குவரத்திற்க்கு இடையூறு செய்தல் பிரிவு 201 .ரூ.50 அபராதம்.

21.    இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்தால் பிரிவு.177 இன் படி ரூ.100 முதல் முறையும் அடுத்தடுத்த முறைகளில் ரூ.300-ம் அபராதம்.

22.    ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்தால் பிரிவு.129 ஆனது பிரிவு.177-இன் வகையில் ரூ.100 முதல் முறையும் அடுத்தடுத்த முறைகளில் ரூ.300-ம் அபராதம்.

23.    வண்டியை நிறுத்தக் கூடாத இடத்தில் நிறுத்தினால் பிரிவு.122, 127 ஆனது பிரிவு.177-இன் வகையில் ரூ.100 முதல் முறையும் அடுத்தடுத்த முறைகளில் ரூ.300-ம் அபராதம்.

வாகன உரிமையாளர்கள் செலுத்தும் வரிகள்

1.     மாநிலங்கள் வாரியாக வண்டியை வாங்கும் பொழுது செலுத்தும் வரி  12.5% முதல் 14.5 வரை (State-wise Tax on Purchase of Motor Vehicle)

2.     உரிமையாளர் வரி (Taxes on Ownership of Vehicles)

3.     சாலை வரி (Motor Vehicle Tax (MVT) / Road Tax)

4.     வாகன பதிவு கட்டணம் (Registration Fee)

5.     ஓட்டுனர் உரிம கட்டணம் (Driving License Fee)

6.     சுங்க வரி (Toll Charges for Financing of HighwaysUser Fee)

7.     சுற்றுச் சூழல் வரி (Eco-taxes)

8.     எரி பொருள் வரி (Petrol cess 1%-4% (1 per cent on small petrol, LPG, CNG cars, 2.5 per cent on diesel cars of certain capacity and 4 per cent)

சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக இருப்பது சாலை விதிகள் மீறப்படுவது தான்!

பல்வேறு கட்ட சோதனைகளுககு பின்னரே, ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட வேண்டும் என்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. சாலை விபத்துக்களை கணிசமாக குறைத்ததில் உலகிலேயே முதலிடம் பிடித்துள்ளது ஆஸ்திரேலியா. அந்த நாட்டில் பின்பற்றப்படும் விதிமுறைகளை நம் நாட்டில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் விபத்துக்களை பெருமளவில் தவிர்க்க முடியும். காவல்துறை சுலபமாக ஹெல்மெட் வழக்குகளை பதிவுசெய்வதை, போல மற்ற வாகன குற்றங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

அரசின் கடமை என்ன?

o     சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துவதோடு போக்குவரத்து துறை நிறுத்திக் கொள்வது வேதனை.

o     விபத்துகளுக்கு காரணமான குண்டும் குழியுமான சாலைகள், சிறுபாலங்கள், வேகத்தடைகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

o     மாவட்ட போக்குவரத்து குழுவை தவறாது அமைத்தல் வெண்டும்.

o     பொதுப் போக்குவரத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்ற வேண்டும். பணிமனைக்கு தேவையான உதிரிபாகங்களை உடனடி வழங்க வேண்டும்

o     போதுமான மின்விளக்கு வசதிகளை அமைத்தல், சாலை சந்திப்புகளில் அடையாள குறியீடுகளை காட்டும் பலகைகளை ஏற்படுத்துதல், சாலை வளைவுகளை நேர்செய்தல் போன்றவையே

பல்வேறு இனங்களில் வரி கட்டும் பொதுமக்களுக்கு இதுவே சேவையாகும்

Sources:-Road User Taxes in India_Mahesh C Purohit &Vishnu Kanta Purohit, 2010

C.P.சரவணன், வழக்கறிஞர் 98400 52475.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com