சின்னம் முடக்கம் யாருக்கும் பின்னடைவு அல்ல; இருவருக்கும் கிடைத்த சம வாய்ப்பு

தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் வரும் ஏப்ரல் 12ம் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
சின்னம் முடக்கம் யாருக்கும் பின்னடைவு அல்ல; இருவருக்கும் கிடைத்த சம வாய்ப்பு


சென்னை: தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் வரும் ஏப்ரல் 12ம் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற பன்னீர்செல்வம் அணியும், சசிகலா தரப்பும் இரட்டை இலைச் சின்னம் தங்களுக்கே சொந்தம் என்று போட்டி போட்டதால், இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் விசாரணை செய்து, இரட்டை இலைச் சின்னத்தையும், அதிமுக என்ற கட்சிப் பெயரையும் இரு தரப்பினரும் பயன்படுத்தக் கூடாது என்று முடக்கியது.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், தேர்தல் ஆணையம் இந்த தாற்காலிக உத்தரவை பிறப்பித்தது.

அதே சமயம், சசிகலா தரப்பினர் தொப்பி சின்னத்தில் 'அதிமுக அம்மா அணி' என்ற பெயரிலும், பன்னீர்செல்வம் தரப்பினர் இரட்டை மின் விளக்கு சின்னத்தில் 'புரட்சித் தலைவி அம்மா அதிமுக' என்ற பெயரிலும் போட்டியிடுமாறு தேர்தல் ஆணையம் அறிவித்தது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் களைகட்ட வேண்டிய சமயத்தில், அவர் உருவாக்கிய கட்சியும், சின்னமும் முடக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானதே.

இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதால் அதிமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இது இரு தரப்புக்குமே இழப்பு தான். தங்களுக்கே சொந்தம் என்று கூறி வந்த டிடிவி தினகரனுக்கு இந்த தீர்ப்பு சற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ஏராளமான எம்எல்ஏ, எம்.பி.க்களின் ஆதரவை வைத்திருந்த தமக்கு, கட்சிப் பெயரையும், சின்னத்தையும் ஒதுக்காதது, அவர் எதிர்பாராத தீர்ப்பாகவே அமைந்தது.

தங்களால் பயன்படுத்த முடியாமல் போகும் நிலையில், அது எதிர் தரப்புக்கு ஒரு பலமாக அமைந்துவிடாமல் தடுத்ததில், சின்னம் முடக்கப்பட்டது பன்னீர்செல்வம் அணிக்குக் கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.

ஆனால், எப்படி சின்னம் முடக்கம் தாற்காலிகமானதோ அதுபோலவே, இவர்களது பின்னடைவும், வெற்றியும் கூட தாற்காலிகமானதுதான்.

பொதுவாக எடுத்துக் கொண்டால், எம்எல்ஏ, எம்பிக்களின் பலம் என்பதையும் தாண்டி, மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை தேர்வு செய்யும் இந்த நேரத்தில் இரு தரப்பினரும் நிராயுதபாணிகளாக மக்களை சந்திப்பது இரு தரப்புக்கும் கிடைத்த ஒரு சம வாய்ப்பாகத்தான் பார்க்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து, காலியான ஆர்.கே.நகர் தொகுதியில், சசிகலா சிறைக்குச் சென்றதால் துணைப் பொதுச் செயலரான டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். ஆனால், அரசியலில் மிகப்பெரிய சொத்தாகக் கருதப்படும் இரட்டை இலைச் சின்னமும், அதிமுக என்ற பெயரும் இல்லாமல்.

பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மதுசூதனன், அதிமுகவின் மூத்த தலைவராக இருந்தாலும், அவர் இரட்டை விளக்குச் சின்னத்தில் தான் போட்டியிடுகிறார். எனவே, அவரும் தனது தனித்துவம் என்ன என்பதைத் தான் மக்கள் முன் நிரூபிக்க உள்ளார்.

நான் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே இரட்டை இலைச் சின்னத்துக்குத் தான் வாக்களித்தேன் என்று கூறும் பாமரர்களின் வாக்குகளை எளிதாகப் பெற்று எந்த அணியும் வெற்றிக் கனியை ருசிக்கும் வாய்ப்பு இங்கு இல்லை. அதே சமயம், எங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னம் இருந்திருந்தால் நாங்களே வெற்றி பெற்றிருப்போம் என்று தோல்விக்கு சாக்குக் கூறவும் முடியாது.

மக்கள் முன் இரு அணியும் சம வாய்ப்புகளோடு தேர்தல் களத்தில் குதிக்கின்றனர். இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதால் யாருக்கும் பின்னடைவு ஏற்படவில்லை. ஒரு சம வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்றால், அவர்களும், அவர்கள் அணியும் செய்த நற்செயல்கள் மட்டுமே வெற்றிக்குக் காரணம். தோல்வி அடைந்தால் அதற்கு அவர்களும், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த தவறியது மட்டுமே காரணம் என்பதை இந்த சம வாய்ப்பு வழங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com