அசோகமித்ரன் - காலத்தை பதிவு செய்த எழுத்தாளர்!

பால்யத்தில் என்னுடைய பாட்டி தினமும் கதை சொல்வார்கள். ஒவ்வொரு நாளும்
அசோகமித்ரன் - காலத்தை பதிவு செய்த எழுத்தாளர்!

பால்யத்தில் என்னுடைய பாட்டி தினமும் ஒரு கதை சொல்வார்கள். ஒவ்வொரு நாளும் நிலவைப் பார்த்தபடி பல வினோத கதைகள். என் விழிகள் வானில் மிதந்தபடி கனவுகளில் வீழும் கணங்கள் அவை. மகாபாரதம், ராமாயணம், பிரகலாதன் என புராணக் கதைகள். அவை முடிந்தபின் கிராமத்துக் கதைகள். பீர்பால், அக்பர், தெனாலிராமன், பஞ்சதந்திரக் கதைகள் என்று திரும்ப திரும்ப சொல்லிய கதைகளையே சொல்லி திடீரென ஒரு நாள் பாட்டியிடமிருந்த அத்தனைக் கதைகளும் தீர்ந்துவிட்டன. அதன் பின் தான் புத்தகங்களின் மீது என் பார்வையைத் திருப்பினேன். 

சிறுவர் கதைகள், புதினங்கள் எல்லாவற்றையும் படித்து முடித்து ஒருகட்டத்தில் மாய எதார்த்தவாத எழுத்துக்களைப் படிக்கத் தொடங்கினேன். இப்படியான என் வாசிப்பில் தோய்ந்த வாழ்க்கையில் பதின்வயதில் நான் கண்டடைந்த அற்புத எழுத்தாளர்கள் இருவர். அவர்கள் ஒருவர் சுந்திர ராமசாமி மற்றவர் அசோகமித்ரன். இவர்களின் பெயர்களில் இருக்கும் வசீகரம் எழுத்தில் எனக்கு அந்த வயதில் இருக்கவில்லை. அதே காலகட்டத்தில் தி.ஜானகிராமன், லா. ச. ராமாமிர்தம் எனக்கு அறிமுகமாக, லா.ச.ரா என் மனத்துக்கு மிக நெருக்கமான எழுத்தாளர்களாகிவிட்டார். தொடர்ச்சியாக அவரைப் படித்து பின்பு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு எழுத்தாளர்களைத் தேடிப் பிடித்துப் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நீண்ட வாசிப்பு அனுபவத்துக்குப் பிறகு தான் மீண்டும் அசோகமித்ரனை வந்தடைந்தேன். அவ்வளவு எளிதாக அப்படி ஒரு எழுத்தாளரை என்னால் கடக்க முடிந்தது என்று குற்றவுணர்வுடன் அவரது படைப்புலகத்துக்குள் நுழைந்தேன். எனக்கு மிகவும் பிடித்த அவரது படைப்புக்கள், மானசரோவர், விழா மாலைப் பொழுதில், இருவர், ஒற்றன், கரைந்த நிழல்கள், தண்ணீர், இன்று, புலிக்கலைஞன், இன்னும் பல சிறுகதைகள், பயோஸ்கோப் உள்ளிட்ட அவருடைய திரை அனுபவம் சார்ந்த  பல கட்டுரைகள் என சொல்லிக் கொண்டே போகலாம்.

நம் ஒவ்வொருக்குள்ளும் ஒரு கதை சொல்லி இருக்கிறான். அவனை சிலர் வெளிப்படுத்துகிறோம். சிலர் மறைத்து வைத்திருக்கிறோம். ஓர்மையுடன் எழுதி தன் அனுபவங்களுடன் சேர்த்து அவற்றைப் பதிவு செய்பவன் எழுத்தாளன் ஆகிறான். எழுத்தாளர்களை பரவசப்படுத்தும் எழுத்துக்களைப் படைப்பவன் மேதையாகிறான். அவ்வகையில் நம் அனைவரின் அன்பிற்குப் பாத்திரமான அசோகமித்ரன் நவீன இலக்கியத்தின் தன்னிகற்ற மேதை. அசோகமித்ரன் இலக்கிய தமிழ் இலக்கிய உலகின் மாபெரும் அடையாளமாக திகழ்ந்து, தன்னுடைய பேனாவின் முனையினால் இடையறாது காலத்தை பதிவு செய்வராக இருந்துவந்தார்.

'அப்பாவின் சிநேகிதர்’ தொகுப்புக்காக 1996-ல் சாகித்ய அகாடமி விருது பெற்ற போதும் அதனைத் தொடர்ந்து தேவன் விருது, தமிழக அரசின் திரு.வி.க. விருது, கொல்கத்தாவில் உள்ள பாரதீய பாஷா அறக்கட்டளையின் விருது, அக்‌ஷரா விருது, தால்மியா மத நல்லிணக்க விருது, லில்லி நினைவுப் பரிசு, இலக்கியச் சிந்தனை, சாரல் என பல விருதுகளைப் பெற்ற போதும் அவற்றின் கனங்களையும் பெருமைகளையும் ஒரு போதும் தன் தலைக்குள் ஏற்றிக் கொள்ளாதவர். மெல்லிய புன்னகையுடன் அவற்றைக் கடக்க கற்றுக் கொண்டவர். மலையாளத்தில் பஷீர், வங்காளத்தில் சரத் சந்திரர் எனும் வரிசையில் தமிழுக்கு நிச்சயம் அசோகமித்ரன் என்ற ஒரே பெயரை மிகையற்ற பெருமையுடன் கூற முடியும்.

ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் 1931-ம் ஆண்டு பிறந்தவர் ஜ.தியாகராஜன். அவரது தந்தை ரயில்வே குமாஸ்தா. 1952-ல் தந்தையின் மரணத்துக்குப் பிறகு சென்னைக்கு குடிபெயர்ந்தார். ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் தன்னுடைய பணியை தொடங்கி கிட்டத்தட்ட பதினாறு வருடம் அந்நிறுவனத்தில் இருந்தார்.  1956-களில் அசோகமித்ரன் எனும் புனைப்பெயரில் எழுதத் தொடங்கினார். கணையாழியில் 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 8 நாவல்கள், 250 சிறுகதைகள், நூற்றுக்கணக்கான கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், பத்தி எழுத்து எனக் காத்திரமாக இலக்கிய படைப்புலகில் தொடர்ந்து இயங்கினார். தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் புலமை பெற்ற இவரது படைப்புகள் உலக மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

அசோகமித்ரன் கதைகளில் வெளிப்படும் எள்ளல்தன்மை மிகவும் தனித்துவமானது. மெல்லிய ஊசி முனை எழுத்துக்கள் அவருடையது. நறுக்கென்று எறும்பு கடித்தாற் போல வாழ்க்கையை ஒரு கணம் உள்ளவாறே தரிசிக்கச் செய்துவிடுவது.  ஆழமான  விஷயங்களை போகிற போக்கில் அவ்வளவு எளிமையாகச் சொல்வது இவரது எழுத்தின் தனிச்சிறப்பு. ஒரு கதாபாத்திரத்தின் குணாதிசியத்தை ஒரு சில சம்பவங்கள் அல்லது வார்த்தைகள் வாசகனுக்கு கடத்தி விடுவார். இறுக்கமற்ற எளிமையான மொழி நடையே அசோகமித்திரனுடைய சிறுகதையின் அம்சங்கள். கதையோட்டம் எந்த இடத்திலும் நிற்காமல் அருவி போல வார்த்தைகள் குளிர்ச்சியுடன் நழுவி ஓடும் சுயமான மொழி அவருடையது.  புனைவோ கட்டுரையோ வாசகர்களை அந்தக் கணம் தன் எழுத்தினுள் இழுத்துச் செல்லும் அற்புத ஆற்றலுடன் மானுடத்தின் உயர் உணர்வுகளை தொட்டுச் செல்லும் காலத்தின் கண்ணாடி அவை. காரணம் அதில் ஜாலம் இல்லை, உறுத்திக் கொண்டிருக்கும் விஷயம் எதுவும் இருக்காது. அந்தக் கதைகள் நேரடியாக வாசகருடன் உரையாடுபவை. உண்மைக்கு எப்போதும் ஒரு தீவிரம் இருக்கும். அவருடைய கதையின் எதார்த்தம் அத்தகையது. வாழ்க்கையிலிருந்து நேரடியாக பெறப்பட்ட அனுபவங்களின் நீட்சி அவை. அவரது சொற்களின் மூலமாக இறைந்து கிடக்கும் பொருண்மை வாழ்க்கையில், இறைவன் தெரிகிறான் அன்பான மனிதர்களின் முகங்களாக. மனிதம், கருணை, ஈகை, தயை, மெல்லிய அங்கதம், சமூக அக்கறை, அறம், அரசியல் நிலைப்பாடு உணர்வுகள் என எல்லாமே அவர் கதைகளில் சரியான இடத்தில் சரியான விகிதத்தில் இருக்கும். எழுத்தாளர் ஜெயமோகன் அசோகமித்ரனைப் பற்றி அவரது இணையதளத்தில் எழுதிய அனைத்துக் கட்டுரைகளும் மிகவும் முக்கியமானவை. புதிய வாசகர் ஒருவருக்கு நல்லதொரு அறிமுகம் மற்றும் அசோகமித்ரனை ஆளுமையின் மிகச் சரியான வெளிப்பாடுகள் அவை. அவ்வகையில் அசோகமித்ரன் எழுத்தாளர்கள் கொண்டாடும் எழுத்தாளராகவும், எழுத்தாளர்களுக்காக எனவும் எழுதிய எழுத்தாளராகவும் என்றும் சொல்லலாம்.

முதன் முதலில் அசோகமித்ரனை கிழக்கு பதிப்பகம் நடத்திய எழுத்தாளர்களுக்கான பயிற்சி பட்டறையில் சந்தித்தேன். அன்று அவருடன் அதிகம் பேச முடியவில்லை. தவிர அவருடைய படைப்புக்களை நான் சரியாக அணுகியிருக்கவில்லை என்ற குற்றவுணர்வும் எனக்கிருந்தது. அதன்பின் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தொகுத்த ‘கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது’என்ற தொகுப்புக்காக அவரை தொலைபேசியில் அழைத்தேன். மெல்லிய குரலில் என்னைப் பற்றியும் தொகுப்பைப் பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தவர். அந்தக் கட்டுரைத் தொகுப்பு எழுத்தாளர்களுக்குப் பிடித்த எழுத்துக்கள் எனும் தலைப்பில் அசோகமித்ரனைக் கவர்ந்த கதைகளைப் பற்றிக் கேட்டேன். நிச்சயம் கட்டுரையாக உரிய காலத்தில் ஃபேக்ஸில் அனுப்பிவிடுகிறேன் என்றார். அவர் சொன்ன நேரத்தில் அனுப்பியும் விட்டார். அவருடைய கையெழுத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக தொலைபேசியில் அழைத்து சரி செய்வேன். அவருடனான தொலைபேசி உரையாடலில் பலவற்றை பகிர்ந்து கொள்வேன். அவர் என்னிடம் ஒருபோதும் தன் கதைகளைப் படித்துள்ளேனா என்று கேட்டதில்லை. மிகுந்த மனத்தடைக்குப் பிறகு உங்களின் சில கதைகள் மட்டுமே படித்திருக்கிறேன், முழுத் தொகுப்பை இன்னும் நான் வாசிக்கவில்லை என்றேன். அதனால் என்ன? படிக்க வேண்டியது எத்தனையோ இருக்கு, இது ஒரு குறையே இல்லை என்றார் சிரித்தபடி. எனக்குள் ஒரு விடுபட்ட உணர்வு வந்தது.என்னுடைய எழுத்தாளரைக் கண்டு அடைந்துவிட்டேன் ஆனால் இன்னும் அவர் எழுத்துக்கள் எனக்கு வசமாகவில்லை என்பது இனிய முரணாகவே இருந்துவந்தது.

அசோகமித்ரனிடம் தொலைபேசியில் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்த காலகட்டத்தில் எனக்கு பல் வலி இருந்தது. தினமும் வலி மாத்திரையை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். மிகவும் சிரமப்பட்டுத் தான் பேசுவேன். தன்னுடைய பல் வலி அனுபவங்களை சுவாரஸ்யமாக என்னுடன் பகிர்ந்து கொண்டார். என்னுடைய போதாத நேரம் என்னவெனில் நான்கு ஞானப்பற்களை அகற்றியதால் கிட்டத்தட்ட ஒரு வருடம் முழுவதும் பல் சார்ந்த சிக்கலில் இருந்தேன். உடம்பை பாத்துக்க, அது ரொம்ப முக்கியம் என்பார். அதன் பின் எப்போது அவரிடம் நான் பேசினாலும், பார்வதி பல் வலி எப்படி இருக்கு என்று விசாரிப்பார்.  ஸ்பேஸ் அரங்கில் ஒரு நிகிழ்ச்சிக்காக அவர் வந்திருந்த போது அவர் அருகிலேயே அமர்ந்திருந்தேன். பார்வதி (அவர் என்னை அப்படித்தான் அழைப்பார்)  பல் வலி சரியாடுத்தோ என்றார் அன்பாக. அந்த அன்பும் அக்கறையும் எப்போது பேசினாலும் எனக்கும் அவருக்கும் உண்டான வார்த்தைகளை சரியாக தேர்ந்தெடுத்து அளவாகப் பேசுவார். ஒருவர் இத்தனை விஷயங்களை எப்படி நினைவிடுக்கில் தேக்கி வைத்திருக்கிறார் என்ற பிரமிப்பு அவருடன் பேசும் போதெல்லாம் ஏற்படும். அதன்பின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் அவரைப் பார்க்கச் செல்வேன். ஒரு குழந்தையின் குதூகலத்துடன் வரவேற்பார். 

அசோகமித்ரனின் முக்கியமான கதைகளுள் ஒன்றான புலிக்கலைஞனை ஒரு குறும்படமாக மார்டின் ரெப்கா என்பவர் இயக்கியுள்ளார் என்று  நண்பரும் நல்லாசானுமான அருண்மொழி சொன்னார். உடனடியாக அந்தக் குறும்படத்தைப் பார்த்தேன். நாசரின் அருமையான நடிப்பில் சிறப்பாகவே இருந்தது அது. ஒரு குறுபட அளவில் அது மிகச் சிறந்த படைப்பு எனலாம். ஆனால் புலிக்கலைஞனைப் படித்த போது அது தந்த பிம்பமும் ஆச்சரியமும் பிரமிப்பும் வலியும் ஏதோ ஒரு மன அவசமும் அக்குறும்படத்தில் காணக்கிடைக்கவில்லை. அருண்மொழியிடம் அசோகமித்ரன் இந்தப் படத்தைப் பார்த்தாரா என்று கேட்டபோது இல்லை என்றார். அதன் பின் அருண்மொழியுடன் அசோகமித்ரனை சந்தித்து அந்த குறும்படத்தைப் போட்டுக் காட்டினோம். அசோகமித்ரன் என்ன சொல்லப்போகிறார் என்று அவர் முகத்தைப் பார்க்க அதில் பெரியதாக ஏதும் கண்டுபிடிக்கவில்லை. 'நன்னா தான் பண்ணியிருக்கார்’ என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டார்.

நம் மனத்துக்கு நெருக்கமான அசோகமித்ரன் இன்று நம்மிடையே இல்லை, ஆனால் அவர் நமக்காக விட்டுச் சென்றிருப்பது எண்ணற்ற புனைவுகள், கட்டுரைகள், வாழ்வின் தரிசனங்கள், அற்புதமான படைப்புக்கள் என சொல்ல்லிக் கொண்டே போகலாம். சில மாதங்களுக்கு முன்னால் என்னுடைய தோழியுடனான உரையாடலில் அசோகமித்ரன் ஆரம்பித்து அ.முத்துலிங்கம், பிரபஞ்சன், வண்ணதாசன், வண்ணநிலவன், பால் சக்காரியா என்று நான் நேரடியாகப் பேசிப் பழகிய மிகப் பெரிய ஆளுமைகளைப் பற்றி எழுதப் போகிறேன் என்று சொன்னேன். தோழியும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதன் முதல் கட்டமாக அசோகமித்ரனின் தி.நகர் இல்லத்துக்குச் சென்று அவருடன் உரையாடலைப் பதிவு செய்தேன். மெல்லிய குரலில் அவர் பேசிய விஷயங்களை மீண்டும் அசைப் போட்டுக் கொண்டே இருக்கிறேன். அன்று அதன் பின் அவருடன் ஒரு புகைப்படம் எடுக்க விரும்பினேன். பார்வதி, அந்த பீரோல இருக்கற சட்டையை எடுத்துக் கொடு என்றார். அந்தச் சட்டையை எடுத்து தந்தேன், புன்னகையுடன் பெற்றுக் கொண்டு என்னை பக்கத்தில் அமர்த்தி புகைப்படத்தில் குழந்தையாகச் சிரித்தார்.  இதுவே அவருக்கும் எனக்கும் இடையே நினைவிலிருந்து நீங்காத இறுதி சந்திப்பு.

86 வயதில் நிறைவான வாழ்க்கையும் மங்காத புகழுடன் அவர் இந்த உலகை விட்டுப் பிரிந்துள்ளார்.  அவருடைய வார்த்தைகளில் சொல்வதெனில், ‘இந்த அமைதி என்னவோ பண்ணுது’. நான் இன்னும் அசோகமித்ரனை முழுவதும் படிக்கவில்லை. ஆனால் இப்போது எனக்கு குற்றவுணர்வு துளியும் இல்லை. இந்த வாழ்நாள் முழுவதும் அவருடனான உரையாடலை அவர் படைப்புக்கள் மூலம் கண்டடையும் ஒரு வாய்ப்பாகவே இதைக் கருதுகிறேன். அசோகமித்ரனை அவரது படைப்புக்களின் மூலம் மீண்டும் மீண்டும் உயிர்பித்து அவரைக் கொண்டாடுவேன். அதுவே அது ஒன்று மட்டுமே அந்த மாபெரும் கலைஞனுக்கு நான் செய்யும் நன்றிக் கடன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com