இன்றைய அரசியல் தலைகளுக்கு கல்கியின் ‘பொன்னியின் செல்வனில்’ என்னென்ன ரோல்? என்னே ஒரு வித்யாசமான கற்பனை!

உடனே குந்தவை ஜெயலலிதாவாகவும் வந்தியதேவன் எம்.ஜியாராகயும் சின்ன பழுவேட்டரையர் மதுசூதனனாகவும், நந்தினி சசிகலாவாகவும் மந்திரவாதி ரவிதாசன் நடராஜனாகவும்
இன்றைய அரசியல் தலைகளுக்கு கல்கியின் ‘பொன்னியின் செல்வனில்’ என்னென்ன ரோல்? என்னே ஒரு வித்யாசமான கற்பனை!

மதுரை காந்தி அருங்காட்சியகத்தின் திறந்த வெளி அரங்கில் நடக்கும் காலத்தால் அழிக்க முடியாத அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாடகத்தை பார்க்க நண்பர் பரமேஸ்வரன் கையில் டிக்கெட்டுடன் அழைத்தபோது கரும்பு தின்ன கூலியா என கிளம்பினேன்.

1967-இல் நான் பள்ளி இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றபோது 500-க்கு 400 மார்க் வாங்கினாலே படிப்பாளி என்ற நிலை. நான் 400 என்ற கோட்டை மயிரிழையில் தவற விட்டாலும் வரலாற்று பாடத்தில் உச்சமாக 88/100 வாங்கினேன்.

அன்று பத்திரிகைகள் ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்கள் பட்டியலை வெளியிடாததால் மாநிலத்தில் வரலாற்றில் நான் முதல் மாணவனாக வந்தேனா இல்லையா என்பது வெளியில் தெரியாமல் போனது என் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு மாபெரும் சோகம். இந்த கண்ணோட்டத்துடன் நாடகத்தை பார்க்க ஆரம்பித்தேன்.

ஏற்கெனவே சென்னை நாடகக் குழு ஒன்று லட்சுமி சுந்தரம் ஹாலில் நடத்திய இரு நாடகத்தில் இருந்து இந்த நாடகம் முற்றிலும் வேறுபட்டிருந்தது. ஆடுதுறை ஸ்ரீ சங்கர நாராயண சபாவினர் சாம்புவின் நாடகக் கதை மற்றும் இயக்கத்தில் அரங்கேறிய பொன்னியின் செல்வன் ஒரு வித்தியாசமான அனுபவம்.

குதிரை பூட்டிய சாரட் வண்டியில் வந்த பெரிய பழுவேட்டரையர், பல்லக்கில் வந்த மர்ம பயணி, மாறுவேடம் அணிந்து யானையில் வந்த பொன்னியின் செல்வன் என வித்தியாசங்கள் காட்டியது நாடகம். பல பாகங்களாக ஆயிரக்கணக்கான பக்கங்களில் எழுதப்பட்ட ஒரு கதையை 10 நிமிட இடைவெளியுடன் 3 மணி நேரத்திற்கு குறுகத் தறித்த குறளாகச் சுருக்கியதற்கு ஒரு சபாஷ்.

துவக்கத்தில் கட்டியக்காரனாக, அறிவிப்பாளர் தஞ்சை தரணியில் நடக்கும் சூதும், நம்பிக்கை துரோகமும் ஏமாற்றமும் நிறைந்த சரித்திர கதைக்கு நேயர்களை அழைத்தார். தஞ்சை என்ற வார்ததையைக் கேட்டவுடன் என் மனது சமகால அரசியல் நிகழ்வுகளில் மூழ்கியது.

சரித்திரத்திற்கு உள்ள குணம் திரும்பத் திரும்ப வருவது (history repeats itself)   ஆட்களும், காலமும் இடமும் மாறலாம் ஆனால் எண்ணங்களும் செயல்பாடுகளும் மாறுவதில்லை. காரணம் மனிதன் ஒருவன் தானே.

நோயுற்று படுத்த படுக்கையாக இருக்கும் சுந்தர சோழனுடன் நாடகம் துவங்கியது. காதல் தோல்வியால் மனம் உடைந்த பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் தஞ்சை வர மறுக்கிறான். சகோதர யுத்தங்கள் நிறைந்த இலங்கையில் அமைதியை நிலைநாட்ட அருண்மொழி வர்மனான பொன்னியின் செல்வன் போர்க்களத்தில் இருக்கிறான்.

தன் ஆளை பினாமி ஆக்கி ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் பெரிய பழுவேட்டரையர் அவருக்கு உதவும் சிறிய பழுவேட்டைரையர், சூதுக்குத் துணை போகும் குட்டி மன்னர்கள், இளவரசனைக் கொல்ல நினைக்கும் சூழ்ச்சி, பழிவாங்கத் துடிக்கும் வீரபாண்டியனின் மனைவி நந்தினி, அவளை இயக்கும் மந்திரவாதி, ரவிதாசன், இளவரசர்களைக் காப்பாற்ற துடிக்கும் வந்தியதேவன், அவனை கண்டதும் காதல் கொள்ளும் குந்தவை, ஆட்சி தன் மகனுக்கு வேண்டாம் என நினைக்கும் மகாராணி செம்பியன் மாதேவி, பூக்காரனாக ஒளிந்து வளரும் மகன் சேந்தன் அமுதன், அவன் காதலி பூங்குழலி என மனதை ஆக்கிரமிக்கும் பல பல கதாபாத்திரங்களுடன் ஒற்றன் ஆழ்வார்கடியானும் மகாமந்திரி அனிருத்தர பிரம்மதேவராயர் எல்லோரும் சேர்ந்து சதிகளை முறியடிக்க ஆதித்த கரிகாலன் மர்ம மரணம் அடைய பொன்னியின் செல்வனைத் தேடி வருகிறது மணிமுடி.

நீண்ட வசனம் பேசி பொன்னியின் செல்வன் மகுடத்தை மறுத்து உண்மை வாரிசு சேந்தன் அமுதனுக்கு மணி முடியை தியாகம் செய்ய எல்லாம் சுபம். அப்படா, மூச்சு வாங்குகிறது. கதை அப்படிப்பட்டது. கதாபாத்திரங்கள் அத்தனை பேர்.

ஸ்ரீரங்கத்தைப் பூர்விகமாகக் கொண்ட அதாவது சோறுடைத்த சோழநாட்டை பூர்வீகமாக கொண்ட பெண்மணி ஜெயலலிதா மட்டுமல்ல அவருடைய உடன்பிறவா சகோதரி சசிகலாவும், சசிகலாவின் சொந்த பந்தங்களும் கூடத் தஞ்சையைச் சுற்றி உள்ள கதாபாத்திரங்கள்தானே.

சசிகலாவுக்கு எதிராக திரும்பியுள்ள பன்னீர்செல்வம் பாண்டியநாட்டை சேர்ந்தவர். பெரிய பழுவேட்டரையர் சாரட் வண்டியில் நாடக தளத்துக்கு வந்த போது தான் திடீரென என் மனதில் பன்னீர் செல்வம் பெயர் ஞாபகத்துக்கு வந்தது. அப்பொழுது தான் புதிய பார்வையுடன் நாடகத்தைப் பார்க்க துவங்கினேன்.

உடனே குந்தவை ஜெயலலிதாவாகவும் வந்தியதேவன் எம்.ஜியாராகயும் சின்ன பழுவேட்டரையர் மதுசூதனனாகவும், நந்தினி சசிகலாவாகவும் மந்திரவாதி ரவிதாசன் நடராஜனாகவும் கொலையுண்ட ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்ட எம்ஜியாரின் உறவினராகவும் சதி ஆலோசனை நடத்தும் குறுநில மன்னன் சம்புவராயரின் கடம்பூர் கோட்டை கூவத்தூர் தங்கும் விடுதி வளாகமாகவும், வாரிசு உரிமை கோரும் மன்னன் மதுராந்தக சோழன் டி.டி.வி. தினகரனாகவும் ஆழ்வார்க்கடியன் சுப்பிரமணிய சுவாமியாகவும் சேர்தன் அமுதன் எடப்பாடி பழனிசாமியாகவும் என் மனதில் மின்னலெனத் தோன்றி மறைந்தனர்.

ஆஹா என்ன பொருத்தம்! நான் காண்பது கனவா அல்லது நனைவா என நான் யோசிக்கும்போது மேடையில் நாடகம் முடிந்து விட்டது. உலகமே நாடக மேடை அதில் ஒவ்வொருவரும் கதாபாத்திரங்கள் என்பது ஷேக்ஸ்பியர் வாக்கு.
இது நாடகம் நிஜமாகும் காலம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களை அமரர் கல்கி கற்பனையில் மாபெரும் காவியமாக படைத்தார்.

கற்பனையை மிஞ்சும் நிகழ்வுகள் இன்று ஜெயலலிதாவின் மரணத்தில் தொடங்கி சென்னையில் அதிகாரப் போட்டியாக நடந்து கொண்டிருக்கிறது. இதைத்தான் சரித்திரம் திரும்புகிறது என்று சொல்லுகிறார்களோ?

கற்பனைக்கு இல்லையே எல்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com