கேள்விக்குறியாகும் வருங்காலம் !?!

கடந்த டிசம்பரில் கூடிய மத்திய அமைச்சரவை வ.வை.நிதியில் ரூ.15,000 க்கு கீழ் ஊதியம்
கேள்விக்குறியாகும் வருங்காலம் !?!

கடந்த டிசம்பரில் கூடிய மத்திய அமைச்சரவை வ.வை.நிதியில் ரூ.15,000 க்கு கீழ் ஊதியம் பெறுபவர்களுக்கு வைப்பு நிதி பிடித்தம் சட்டக் கட்டாயமல்ல, தொழிலாளி விருப்பம் சார்ந்தது என்றொரு முடிவை மேற்கொண்டது. ஆனால் செல்லாத நோட்டு நடவடிக்கையால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி போயிருந்த நேரம், என்பதுடன் 5 மாநில தேர்தல்களை எதிர்நோக்கியிருந்த நேரம் என்பதால் தற்காலிகமாக அந்த முடிவு வைப்பு நிதி ஆணையத்தின் செயல்பாட்டிற்கு வராமலிருந்தது.

தற்போது ஆயத்த ஆடை மற்றும் புதிய உற்பத்தி (apparel & startup company workers) நிறுவனங்களுக்கு வ.வை.நிதி பிடித்தம் என்பது விருப்புரிமை சார்ந்தது என்றொரு முடிவையும் சமீபத்தில் பரிசீலனையில் வைத்துள்ளது.

இது ஏறக்குறைய வைப்பு நிதி என்கிற ஆலமரத்தின் வேரில் வெந்நீர் ஊற்றும் செயலாகும்.  சாதாரணமாக இது போன்ற முடிவுகள் தொழிலாளர் நலத்துறையின்  மூலமாகத்தான் வெளியிடப்படும்.  ஆனால் தற்போது ஜவுளித்துறை பிரிவின் மூலமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வைப்பு நிதியும் - முதலாளிகளும்

மேற்குறிப்பிட்டுள்ள மாற்றங்களின் பாதகங்களை அலசுவதற்கு முன்பாக வ.வை.நிதியைப் பற்றி சிறிது பார்த்துவிடுவோம்.  இந்திய விடுதலையடைந்த பிறகு இயற்றப்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்களில் முக்கயிமானது ‘தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர வகையங்கள் சட்டம் 1952’. தொழிலாளர்கள் ஏறக்குறைய 20 முதல் 30 ஆண்டுகள் வரை பணியாற்றி ஓய்வு பெறும் போது அவர்களின் ஓய்வு காலத்திற்கென்று ஒரு சேமிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது இந்த சட்டம். 

பின்னர் இதிலிருந்து ஒரு பகுதியை ஒதுக்கி ஓய்வூதியத் திட்டமும் செயல்படுத்தப்பட்டது.  வைப்பு நிதி ஆணையத்தின் இணையத்தில் உள்ள 2014-15 ஆண்டறிக்கையின்படி 8.61 லட்சம் நிறுவனங்கள் வ.வை.நிதி சட்ட வளையத்திற்குள் இரு்கிறது.  ஒரு ஆண்டிற்கு சராசரியாக 1.14 லட்சம் கோடி சந்தாவாக தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படுகிறது.  வ.வை.நிதி ஆணையம் இந்தியா முழுவதும் பரவி பல்வேறு மண்டல ஆணையர்களால் கண்காணிக்கப்பட்டு வந்த போதிலும், வருடந்தோறும் தவறிழைக்கும் முதலாளிகள் / நிர்வாகிகள் என்ற வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றில் பல கடந்த 60 ஆண்டுகளில் உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற வழக்குகளின் மூலமே முடிவிற்கு வந்துள்ளது.  அந்த அளவிற்கு ஏற்கனவே முதலாளிகள் மிக நல்லவர்கள்.

பங்குத் தொகையின் அளவு

சட்டம் இயற்றிய நவம்பர் 1952ல் ஒரு ரூபாய்க்கு ஒரு அணா என்று தொடங்கிய பங்குத் தொகையின் அளவு படிப்படியாக காலத்திற்கேற்ப 6.25, 8.33 சதம் என மாற்றங்கள் கண்டு தற்போது 12 ஆக உள்ளது.  இதற்கு இணையான நிர்வாகப் பங்கில் 8.33 தொழிலாளி கணக்கிலும், 3.67 ஓய்வூதிய நிதிக்கும் செலுத்தப்படுகிறது.  வ.வை.நிதி பிடித்தத்திற்கான சம்பளத்தின் அளவு என்பது சட்டம் இயற்றியபோது ரூ.300 என தொடங்கி 500, 1000 என வளர்ந்து கடந்த 10/06/2001 முதல் ரூ.6500 என்றிருந்தது.  பின்னர் செப் 2014 முதல் அந்த அளவு ரூ.15,000 என உயர்த்தப்பட்டது.  ரூ.15,000ற்கு மேற்பட்ட சம்பளத்திற்கு (அடிப்படை, தர ஊதியம், அகவிலைப்படி சேர்த்து) 12 சதம் தொழிலாளி விரும்பி பங்குத் தொகை அளிக்க முன்வந்தாலும், நிர்வாகப் பங்கு என்பது நிர்வாகியால் 15,000 சம்பளத்திற்குண்டான சதவீதம் மட்டுமே செலுத்தப்படும்.

அரசின் இரட்டை நிலைப்பாடு

சமீபத்தில் பிப்ரவரி 2016ல் மத்திய அரசு 20 மற்றும் அதற்கு மேல் தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் வ.வை.நிதி சட்ட வரம்பிற்குட்பட வேண்டும் என்பது 10 தொழிலாளர்கள் என மாற்றியமைத்தது.  ஆனால் தற்போது ரூ.15,000 வரை சம்பளம் பெறுபவர்கள் தாங்கள் விரும்பினால் வ.வை.நிதி பிடித்தம் செய்தால் போதுமானது.  மற்றபடி சட்டக்கட்டாயமல்ல என்றிருப்பது முரண்பட்ட நிலைப்பாடாக உள்ளது.

ஈட்டுறுதி மருத்துவ பங்கு உயர்வு

தவிர ஒருபுறம் வைப்பு நிதியை சட்டக் கட்டாயமல்ல என்று தெரிவிக்கும் அரசு இஎஸ்ஐ என்று சொல்லப்படும் ஈட்டுறுதி மருத்துவத் திட்ட பங்குத் தொகைக்கான ஊதிய வரம்பை 15,000 லிருந்து 21,000 என உயர்த்தியுள்ளது.  இதன் மூலம் அரசிற்கான வருவாய் உயரும்.  ஆனால் மருத்துவ சலுகை என்பதைப் பொறுத்தமட்டில், உள் நோயாளி என்று வரும்போது அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பிவிடுகின்றன ஈட்டுறுதி மருத்துவமனைகள்.

பங்களிப்பு ஓய்வூதியம்

ஒரு புறம் அரசுத் துறைகள், நிறுவனங்கள், முறை சார்ந்த பணிகள் போன்றவற்றில் ஏப்ரல் 2003-க்குப் பின்னர் பணியில் சேருபவர்கள் வ.வை.நிதி என்ற வரம்பிலிருந்து நீக்கப்பட்டு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்பதன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.  ஆனால் 13 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அதற்கான ஓய்வூதியத் திட்டம் இன்னும் உருவாக்கப்படவில்லை.  இன்னமும் ஒருவரும் அந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் துவங்கவில்லை.  மாறாக ஓய்வு, தன்விருப்ப ஓய்வு, இறப்பு, பணி நீக்கம், ராஜினாமா இப்படி எந்த வகையில் பணி முடிவுற்றிருந்தாலும் அவர்களிடம் பிடித்தம் செய்த தொகையை அரசின் பங்குத் தொகையுடன் வட்டி சேர்த்து தீர்வு செய்யச் சொல்லி (தொடர் பலனாக கிடைக்கக் கூடிய ஓய்வூதியம் என்றில்லாமல்) சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 

இந்நிலையில் முறைசாரா பணிகளில் உள்ள தனியார் நிறுவன தொழிலாளர்களைப் பொறுத்த மட்டில் வ.வை.நிதி திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் என்பது கானல் நீராகவே உள்ளது.  ஒரு நிறுவனத்திலிருந்து வெளியேறினால் தொழிலாளி பங்குத் தொகையை மட்டும் தீர்வு செய்து பெற்றுக் கொள்ளலாம்.  ஓய்வூதிய பங்கு என்பதற்கு சான்று பெற்று வைத்துக் கொள்ள வேண்டும்.  பின்னர் 58 வயது நிறைவடைந்தவுடன் ஓய்வூதியத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட சான்றுகளை இணைத்து மனுச் செய்ய வேண்டும்.  இந்த நிலையில் வைப்பு நிதியில் உரிமை கோராத தொகை என்ற வகையில் ரூ.27,000 கோடி அளவிற்கு உள்ளதாக சமீபத்திய புள்ளி விபரங்கள் கூறுவதும் முக்கியத்துவம் பெறுகிறது.

கேள்விக்குறியாகும் வருங்காலம்

ஒரு புறம் பல தொடர் பணிகள் ஒப்பந்தப் பணிகளாக மாறி நிரந்தரப்பணி என்பது கேள்விக்குறியாகியுள்ளது.  இந்நிலையில் 15,000 ற்கு கீழ் ஊதியம் பெறுபவர்களுக்கு வைப்பு நிதிப் பிடித்தம் சட்டக்கட்டாயமல்ல என்பதால் உடனடியாக லாபமடையப் போவது முதலாளிகள்தான்.  அவர்கள் நிர்வாகப் பங்கு செலுத்த வேண்டிய பொறுப்பிலிருந்து தப்பிக்கின்றனர்.

நடப்பிற்கே வராத புதிய ஓய்வூதியத்திட்டம் மற்றும் தற்போது வைப்பு நிதிப் பிடித்தம் சட்டக் கட்டாயமல்ல என்பதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு ஓய்வூதியம் என்பதே இல்லை என்றாகப் போவதுடன், ஓய்விற்கு பின் சேமிப்பு என்பதும் கானல் நீராகப் போகிறது.  வ.வை.நிதி ஆணைய இயக்குனர் குழுமத்தில் அங்கம் வகிக்கும் அகில  இந்திய தொழிற்சங்க சம்மேளனங்கள் இந்த பிரச்சனையை முனைப்பாக கையிலெடுக்க வேண்டிய அவசியமிருக்கிறது.

- எஸ்.சம்பத் (அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளன மாநில நிர்வாகி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com