ஒரு சின்ன ரகசியம், பூச்செடிகள் மட்டுமல்ல, களைச்செடிகளையும் வளர்த்தால் தான் வண்ணத்துப்பூச்சிகள் வருமாம்?

பூச்செடிகளை வளர்க்க பிளாஸ்டிக் தொட்டிகளை நான் எப்போதும் பரிந்துரைக்க மாட்டேன். மாடித் தோட்டத்துக்கு மண் தொட்டிகளே சிறந்தவை
ஒரு சின்ன ரகசியம், பூச்செடிகள் மட்டுமல்ல, களைச்செடிகளையும் வளர்த்தால் தான் வண்ணத்துப்பூச்சிகள் வருமாம்?

சுரபி பாலாஜி, பெங்களூருவில் வசிக்கும் இல்லத்தரசி. அவரிடம் என்ன ஸ்பெஷல் என்றால், அவர் ஒரு அழகான பட்டாம்பூச்சி தோட்டத்துக்குச் சொந்தக்காரர். சின்ன வயதிலிருந்தே அவருக்கு வீட்டுத் தோட்டம் போடுவது பிடித்த விசயமென்றாலும், பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் அவருக்கு அதற்கான வாய்ப்புகளே அமையவில்லை. திருமணத்திற்குப் பிறகு, தற்செயலாகத் தான் அவர் தனது சின்னஞ்சிறு வீட்டுத் தோட்டத்தில் பூச்செடிகள் வைத்து வளர்க்க ஆரம்பித்தார். அதற்கு அவர் நன்றி சொல்ல விரும்புவது தனது அண்டை வீட்டுக்காரருக்குத் தான். வயதான பெண்மணியான அவர் சுரபியின் பள்ளி நாட்களில் அவருக்கு வகுப்பாசிரியராக இருந்தவர். சுரபிக்குத் திருமணமாகி தனிக்குடித்தனம் வரும் போது அந்தம்மாள் இவருக்கு அண்டைவீட்டுக் காரர் ஆகி விட்டார். அவருக்கும் பூச்செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகமிருந்ததால் தனது வீட்டில் அமைத்த சிறு தோட்டத்தில் அழகழகான பூச்செடிகளை வைத்து வளர்த்துக் கொண்டிருந்தார். நாட்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே. சுரபியின் அன்பான அண்டை வீட்டுக்கார அம்மாவுக்கு வயோதிகத்தால் தனி வீட்டைக் கட்டி மேய்க்க வசதிப்படாமல், வீட்டை விற்று விட்டு அவர் அபார்ட்மெண்ட் ஒன்றிற்கு இடம் மாறினார். தோழமை நிறைந்த ஆசிரியை இடம் மாறிச் செல்வதில் சுரபிக்கு வருத்தங்கள் இருந்தாலும், அப்படி ஜாகை மாறும் போது அவர் தனது தோட்டத்திலிருந்து கொடுத்த சில பூச்செடிகளைக் கொண்டு வந்து தன் வீட்டு மாடியில் சிறு பூந்தோட்டம் ஒன்றை அமைத்தார் சுரபி. 

இது தான் தொடக்கம், வீட்டுத் தோட்டம் போட சுரபிக்கு யாரும் வகுப்பெடுக்கவில்லை. அவரும் யாரிடமும் போய் கற்றுக் கொண்டு வரவில்லை. பூக்களின் மேலும், அவற்றைத் தேடி தேனருந்த வரும் வண்ணத்துப் பூச்சிகளாலும் ஈர்க்கப் பட்டு தானாகவே சுரபி தோட்டம் போடக் கற்றுக் கொண்டார். இன்னொரு முக்கியமான விசயம் சுரபியின் மாடித் தோட்டத்தில் இருப்பவை அனைத்துமே தேன் நிறைந்து வண்ணத்துப் பூச்சிகளை ஈர்க்கும் வகையில் அமர்ந்த மலர்கள் மட்டும் தான். வெறும் அலங்காரத்துக்காக மட்டும் வளர்க்கப் படும் பூச்செடிகளில் சுரபிக்கு ஆர்வம் இல்லை. அவை தேவையற்ற நேர விரயம் என்கிறார் சுரபி. வண்ணத்துப் பூச்சிகளை கவர்ந்திழுப்பதற்காக சுரபி தனது தோட்டத்தில் சிறிய புதர் ஒன்றைக் கூட வளர்த்து வருகிறார். ஏனெனில் வண்ணத்துப் பூச்சிகள் இனப்பெருக்கம் செய்ய இம்மாதிரியான புதர்களைத் தான் விரும்புகின்றனவாம்.

சுரபியின் பூந்தோட்டத்தில் அழகழகான பல வண்ண மலர்கள் இருந்தாலும் சுரபிக்குப் பிடித்தவை லந்தனா, ஜத்ரோபா மற்றும் பெண்டாஸ் உள்ளிட்ட பூச்செடி வகைகளே. ஏனெனில் இவை வருடத்திற்கு ஒரு முறை பல நிறங்களில் பூக்கக் கூடியவை என்பதோடு, இவற்றை வளர்ப்பதால் அதிகமாக பூச்சிகளும் வருவதில்லை. மேலும் அவை வலுவான செடிகள் என்கிறார் சுரபி. இந்த மூன்றிலும் லந்தனா என்றால் சுரபிக்கு கொள்ளைப் பிரியம். நான் பூவாக மாற விரும்பினால் லந்தனாவாகத் தான் மாற விரும்புகிறேன். என்று புன்னகைக்கிறார். ஏனெனில் லந்தனா பல நிறங்களில் பூக்கக் கூடிய மலர் என்பதோடு மற்றெல்லா பூக்களையும் விட வண்ணத்துப் பூச்சிகளை அதிகம் ஈர்க்கும் திறனும் கொண்டது. லந்தனா பூத்திருந்தால் அவற்றைச் சுற்றி சற்றே பெரிய பறக்கும் பூக்களாக அவற்றைச் சுற்றி பல நிற வண்ணத்துப் பூச்சிகளை நாம் காணலாம். அத்தனை அழகாக இருக்கும் அக்காட்சி என்கிறார் சுரபி.

இத்தனைக்கும் சுரபி பூந்தோட்டம் அமைப்பதற்காக எங்கேயும் போய் கற்றுக் கோண்டு வரவில்லை. பூந்தோட்டம் போடுவது என்று முடிவெடுத்த பின், அவர் ஒவ்வொருமுறையும் தோட்டம் அமைப்பதில் தனக்கு கிடைக்கும் சின்னச் சின்ன தோல்விகளில் இருந்தே பாடம் கற்றுக் கொள்கிறார். உதாரணத்துக்கு களைச் செடி என்று பல முறை சுரபி வெட்டிக் களைந்த செடி ஒன்று பின்னாட்களில் மிகப் பயனுள்ள செடியாக சுரபியால் அடையாளம் காணப் பட்டதைச் சொல்லலாம். முதல் சில வாரங்களுக்கு வெறும் களை என்று எண்ணி சுரபி அவற்றை பிடுங்கி அப்புறப்படுத்தி இருக்கிறார். ஆனால் அந்தச் செடியில் தான் வழக்கமாக வண்ணத்துப் பூச்சிகள் முட்டை இடுகின்றன என்று அவர் தாமதமாகத் தான் புரிந்து கொண்டார். இப்போது சுரபியின் பூந்தோட்டத்தில் அந்தக் களைச் செடியும் மிகக் கவனமாக பாதுகாப்புடன் வளர்க்கப் படுகிறது. எல்லாம் வண்ணத்துக் பூச்சிகளுக்காகத் தான்.

அலங்காரச் செடிகளை சுரபி ஏன் விரும்புவதில்லை என்றால், அவற்றில் பெரும்பாலானவை விசத்தன்மை கொண்டவை என்பதோடு, வண்ணத்துப் பூச்சிகள், வண்டுகள், பறவைகளுக்கு அவை ஆபத்தை விளைவிக்கக் கூடும் எனவே தான் நான் எனது பூந்தோட்டத்தில் அவற்றை வளர்க்க விரும்புவதில்லை என்கிறார் சுரபி.

சுரபியைப் போல வண்ணத்துப்பூச்சித் தோட்டம் போட விரும்புபவர்கள், தோட்டம் அமைப்பதில், அவர் சொல்லும் டிப்ஸ்களையும் பின்பற்றலாம்;

  • பூச்செடிகளுக்கு எப்போதும் ஆர்கானிக் உரங்களே சிறந்தவை.
  • பூக்களில் இருந்து கிடைக்கும் விதைகளை தூரப் போட்டு விடாதீர்கள், எப்போதும் பத்திரப் படுத்துங்கள், உங்களைப் போலவே தோட்டம் அமைக்க ஆர்வமுள்ள நண்பர்களுக்கு அவை பயன்படும்.
  • பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தாதீர்கள், அவை வண்ணத்துப்பூச்சிகள், வண்டுகள், தேனீக்கள் உள்ளிட்ட பூந்தோட்ட ஸ்பெஷல் உயிரிகளை உங்களது அருமையான பூந்தோட்டத்திலிருந்து விரட்டி விடும்.
  • வண்ணத்துப்பூச்சிகள் வளர்க்க பூச்செடிகள் மட்டுமல்ல அவை முட்டையிடத் தேவையான பல களைச் செடிகளும் உள்ளன. அவற்றை அடையாளம் கண்டு வளர்க்க வேண்டும்.
  • பூச்செடிகளை வளர்க்க பிளாஸ்டிக் தொட்டிகளை நான் எப்போதும் பரிந்துரைக்க மாட்டேன். மாடித் தோட்டத்துக்கு மண் தொட்டிகளே சிறந்தவை.

முதலில் வலுவான பூச்செடிகளைத் தேர்ந்தெடுத்து வளர்க்கத் தொடங்குங்கள். அவற்றை பராமரிப்பது எளிதாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com