தமிழ்நாட்டு நூலகங்களில் இனி இரண்டு செய்தித்தாள்கள் மட்டுமே வாங்கப்படும்!

நூலகங்களுக்குச் சென்று செய்தித்தாள்களைப் படிப்பது பெரும்பாலோரின் பழக்கம்
தமிழ்நாட்டு நூலகங்களில் இனி இரண்டு செய்தித்தாள்கள் மட்டுமே வாங்கப்படும்!

நூலகங்களுக்குச் சென்று செய்தித்தாள்களைப் படிப்பது பெரும்பாலோரின் அன்றாட பழக்கம் எனலாம். தமிழ்நாட்டில் அச்சிடப்படும் பல்வகையான  செய்தித்தாள்களை நூலகங்களில் இலவசமாகப் படித்துவிட முடியும். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட அரசாங்க வேலைகளுக்கும், பல போட்டித் தேர்வுகளுக்கும் விண்ணப்பித்திருக்கும் ஏழை மாணவர்கள் நம்பியிருப்பது நூலகங்களை மட்டும்தான். எல்லா செய்தித்தாள்களையும் பத்திரிகைகளையும் அதிக விலை கொடுத்து வாங்க முடியாத சூழலில் தினமும் குறிப்பிட்ட நேரம் செலவு செய்து நூலகங்களில் படித்தும் குறிப்பெடுத்தும் தங்கள் எதிர்காலக் கனவுகளை உருவாக்கும் ஒரு இடமாக நூலகங்களை நம்புகின்றனர் இம்மாணவர்கள். இவர்களுக்கு இடியாக ஒரு செய்தி என்னவெனில் இனி நூலகங்களில் இரண்டு செய்தித்தாள்கள் மட்டுமே வாங்கப்படும் என்பதுதான்.

ஏப்ரல் 1 முதல் நூலகங்களில் ஆங்கிலத்தில் ஒன்று தமிழில் ஒன்று என இரண்டு செய்தித்தாள்களும், தமிழில் இரண்டு ஆங்கிலத்தில் ஒன்று என மூன்று வார இதழ்களும், ஆங்கிலத்திலும் தமிழிலும் தலா ஒவ்வொன்று என இரண்டு மாத இதழ்கள் மட்டுமே இனி வாங்கப் போவதாக தெரிவித்துள்ளது. இதுவரை ஆங்கிலத்திலும் தமிழிலும் ஐந்து செய்தித்தாள்கள், 23 வார இதழ்கள் மற்றும் ஐந்து மாத இதழ்கள் வாசகர்களுக்குப் படிக்கக் கிடைத்தன.

மாவட்ட நூலகங்களில் சமீபத்தில் வெளியான அரசு ஆணையின்படி அந்தந்த நூலகங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தினமும் தம்மிடமுள்ள பட்டியலில் உள்ள மூன்று தமிழ் செய்தித்தாள்களில் ஒன்றையும், இரண்டு ஆங்கில செய்தித் தாள்களிலிருந்து ஒன்றை மட்டுமே வாங்க வேண்டும் என்று வரையறைத்துள்ளது. இது தவிர இரண்டு தமிழ் வார இதழ்கள், ஒரு ஆங்கில வார இதழ் மற்றும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மாத இதழ்கள் ஒவ்வொன்றும் வாங்கிக் கொள்ளலாம் என்கிறது அந்த ஆணை.

இதுவரை நூலகங்களின் தேவைக்கேற்ப வார, மாத இதழ்களை அந்தப் பகுதியைச் சேர்ந்த பத்திரிகை முகவர்களிடம் அந்தந்த நூலக அலுவலர்களே நேரடியாக வாங்கிக் கொள்வார்கள். இதற்கென அவர்களுக்கு போஸ்டல் ஆர்டர் மூலமாக நிதி வசதியும் செய்து தரப்பட்டது. இந்தச் செலவினங்களைக் குறைக்கவே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது என்றார் கோயம்புத்தூரைச் சேர்ந்த நூலகப் பணியாளர் ஒருவர். அதிகளவு பத்திரிகைகள் இல்லை என்றால் வாசகர்களின் கோபத்துக்கு வேறு நாங்கள் ஆளாக நேரிடும் என்றும் கூறினார்.

கோயம்புத்தூர் மாவட்ட நூலக அதிகாரி ஜெ.கார்த்திகேயன் கூறுகையில், ‘இந்த ஆணை தற்காலிகமானதுதான். சில நிர்வாகக் காரணங்களுக்காக இதை பிறப்பித்துள்ளோம். நிச்சயம் மறுபரிசீலினை செய்ய முடிவெடுத்துள்ளோம். மீண்டும் பழையபடி அதிக எண்ணிக்கையில் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளை வாசகர்களுக்கு தருவோம்’ என்று உறுதியாகக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com