நீட் தேர்வு: நிலைகுலையச் செய்த கெடுபிடிகள்; 'டெய்லர்' கடையான தேர்வு மையங்கள்

ஆடைக் கட்டுப்பாடு என்று சொல்லி, மாணவ, மாணவிகள் மீது தொடுக்கப்பட்ட கெடுபிடியால், தேர்வு மைய வளாகங்கள் திடீர் 'டெய்லர்' கடைகளாக மாறின.
மாணவியின் சுடிதாரை முழங்கைக்கு கீழே துண்டிக்கும் தேர்வு அலுவலர்
மாணவியின் சுடிதாரை முழங்கைக்கு கீழே துண்டிக்கும் தேர்வு அலுவலர்


திருவனந்தபுரம்: ஆடைக் கட்டுப்பாடு என்று சொல்லி, மாணவ, மாணவிகள் மீது தொடுக்கப்பட்ட கெடுபிடியால், தேர்வு மைய வளாகங்கள் திடீர் 'டெய்லர்' கடைகளாக மாறின.

மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடைபெற்ற இந்த நுழைவுத் தேர்வை 11 லட்சம் மாணாக்கர்கள்  எழுதினர்.

10 மொழிகளில், இந்தியா முழுவதும் 103 நகரங்களில் அமைக்கப்பட்ட 1921 தேர்வு மையங்களில், 11,38,890 மாணாக்கர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் 8ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இத்தேர்வு காலை 10 மணிக்குத் தொடங்கி, பகல் 1 மணிக்கு  நிறைவடைந்தது. என்றாலும்,தேர்வு மையங்களில் காலை 7 மணி முதலே மாணவர்களும், பெற்றோரும் அலைமோதத் தொடங்கினர். தேர்வு அறைகளுக்குள் மாணவர்கள் காலை 9.45 மணிக்கு அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக தேர்வு மைய நுழைவு வாயில், தேர்வறைக்கு வெளியே, தேர்வு அறை என மூன்று இடங்களில் மாணவர்கள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டனர்.

வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு மாணவர்கள் சோதனை செய்யப்பட்டனர். முழுக்கை சட்டை அணிந்த மாணவர்கள், ஜீன்ஸ் பேண்ட் அணிந்தவர்கள் தேர்வு மையங்களில் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், துப்பட்டா அணிந்த மாணவியர், சேலை கட்டிய மாணவியருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதேபோல், கை, கால், கழுத்து, காதுகளில் அணிகலன்கள் அணியவும், தலைமுடிக்காக கிளிப் அணியவும் தடை விதிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களின் காதுகளிலும் டார்ச் லைட் மூலமாக தொலைத்தொடர்பு கருவிகள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளனவா என்று சோதனை நடத்தப்பட்டது.

பல மாணவர்கள், மாணவியர் முழுக்கை மேலாடை அணிந்து வந்ததால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் பெரும்பாலனவர்கள் அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று புதிய ஆடைகளை வாங்கி அணிந்து கொண்டும், சிலர் முழுக்கை ஆடையை அரைக்கையாக கத்தரிக்கோல் மூலம் நறுக்கி அணிந்து கொண்டும் தேர்வுக்குச் சென்றனர்.

ஆடைக் கட்டுப்பாடுகள் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது குறித்து மாணவ மாணவிகள் போதிய அளவுக்கு விழிப்புணர்வு பெறாததால் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

ஆடைக் கட்டுப்பாடு குறித்து ஏராளமானோர் அறிந்திருக்காததும், சிலர் அறிந்தும் இந்த அளவுக்கு கட்டுப்பாடு காட்டப்படும் என்று எதிர்பார்க்காததும் மேற்கண்ட சம்பவங்களுக்குக் காரணமாக அமைந்தன.

இதற்கெல்லாம் மேலாக, கேரள மாநிலம் கன்னூரில் ஒரு தேர்வு மையத்தில், மாணவி ஒருவரின் உள்ளாடையை அகற்றுமாறு தேர்வை மைய அதிகாரிகள் கூறியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, நீட் தேர்வுக்கான இணையதளத்தில், ஆடைக் கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதிக்கப் படாதவை குறித்த பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,

கன்னூர் மாவட்டம் பரியராம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதச் சென்ற 19 வயது மாணவியை, சிபிஎஸ்இ ஆடைக் கட்டுப்பாடு என்று சொல்லி, உள்ளாடையை அகற்றுமாறு கூறியுள்ளனர். இது குறித்து அவரது தாய் கூறுகையில், தேர்வு மையத்துக்குள் சென்ற எனது மகள் சிறிது நேரத்தில் திரும்பி வந்து, என்னிடம் அவளரு உள்ளாடையை கொடுத்து விட்டுச் சென்றாள். ஏன் என்று கேட்டதற்கு, சிபிஎஸ்இ ஆடைக் கட்டுப்பாட்டின் படி, உள்ளாடையை அகற்றுமாறு அதிகாரிகள் கூறியதாகக் கூறியதாக தெரிவித்தார்.

மேலும், மெட்டல் டிடெக்கரில் மாணவியை சோதித்த போது, உள்ளாடையில் இருந்த இரும்புக் கொக்கியால் பீப் சத்தம் எழுந்ததால், அதை அகற்றுமாறு கூறியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டால் நிச்சயம் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்போம் என்று கன்னூர் மாவட்ட காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

இது குறித்து சம்பவம் நடந்த பள்ளியின் நிர்வாகி கூறுகையில், மெட்டல் டிடெக்டரில் பீப் சத்தம் வந்தால், எந்த ஒரு மாணவரும் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தோம். பீப் சத்தம் வரக் காரணமானது எதுவோ அதை அகற்றுமாறு கூறியிருந்தோம் என்கிறார்.

இது ஒரு புறமிருக்க, ஜீன்ஸ் பேண்ட் அணிந்த வந்த மற்றொரு மாணவியும் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஜீன்ஸ் பேன்டில் இருந்த மெட்டல் பட்டன்தான காரணம். இது குறித்து அவரது தந்தை ராஜேஷ் நம்பியார் கூறுகையில், தேர்வு மையத்தின் சோதனைக்குச் சென்ற என் மகள் திரும்பி வந்தாள். அவளது ஜீன்ஸ் பேன்ட்டில் இருந்த பட்டனை பிளேட் வைத்து அறுத்து எடுத்த பிறகு அவளை மீண்டும் அனுப்பி வைத்தேன். பிறகு, தேர்வு மையத்தில் இருந்த 3 கி.மீ.தொலைவில் உள்ள கடைக்குச் சென்று, கடை திறக்கும் வரை காத்திருந்து, மாற்று உடை வாங்கி வந்தேன் என்கிறார் கவலை தோய்ந்த குரலில்.

ஒரு மாணவியின் கைக் கடிகாரத்தை அகற்றுமாறு அதிகாரிகள் கூறியதால், அதிருப்தியில் இருந்த இவர், இருந்த இடத்தில் இருந்தே கைக்கடிகாரத்தை கழற்றி வீசி எறிந்த சம்பவமும் நடந்துள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக சில மாணவர்கள் தேர்வறைகளில் இருந்து வெளியேறிய நிகழ்வுகளும் நடைபெற்றதாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

ஆடைக் கட்டுப்பாடுகள் என்றால், முழுக் கைச் சட்டை அணியக் கூடாது, காலர் வைத்த சட்டை அணியக் கூடாது என்பதாகத்தான் இருக்கும் என அனைவரும் அறிவர். ஆனால், பீப் சத்தம் வந்தாலே அனுமதிக்க முடியாது என்றால் அது மாணவ, மாணவிகளை எப்படி எல்லாம் பாதிக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது.

பெண்களின் உள்ளாடைகளில் நிச்சயம் மெட்டல் கொக்கிகள்தான் இருக்கும். எந்த மாணவிக்கும் நம் உள்ளாடைகளில் இருக்கும் மெட்டல் கொக்கிகளால் நாம் தேர்வு மையத்தில் இருந்து வெளியேற்றப்படுவோம் என்ற விழிப்புணர்வு நிச்சயம் இருக்காது. அதே போல, மூக்குத்திகள் கூட பீப் சத்தத்தை உருவாக்கும் என்று அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆடைக் கட்டுப்பாட்டில் மூக்குத்திகளும், ஹெர் க்ளிம்புகளும் இருக்கும் என்பது ஒரு சாமானியனுக்குத் தெரியாத விஷயம்தான். அதனால்தான், தேர்வு மையக் கூடத்தில் அத்தனை மாணவ, மாணவிகள் தலைவிரிக் கோலமாகவும், கிழிந்த, கிழிக்கப்பட்ட ஆடையுடனும் தேர்வெழுதச் செல்ல நேர்ந்தது.

அதே போல, மாணவர்களின் பேன்டுகளில் மெட்டல் பட்டன்களும், கொக்கிகளும் இருக்கும். இது இல்லாத பேன்ட், சர்ட்டுகளை அணிந்து வர வேண்டும் என்பதும் அவர்களுக்கு உணர்த்தப்படாததாகவே இருக்க வேண்டும்.

பல மாணவர்கள், தங்களது முழுக்கைச் சட்டையை கத்திரிக்கோல், பிளேடு வைத்துக் கிழித்து அரைக்கைச் சட்டையாக மாற்றிக் கொண்டு தேர்வெழுதச் சென்றனர். பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஆடைகளை கத்திரிக்கோல் வைத்து கிழிக்கும் காட்சிகளையும் பார்க்க முடிந்தது.
 

இதற்கெல்லாம் மேலாக, இந்த ஆடைக்கட்டுப்பாடு கெடுபிடிகள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மையங்களுக்கும் பொருந்தியதா அல்லது, தென்னிந்திய மாணவ, மாணவிகள் மீது, அவர்களது மன வலிமையை லேசாக ஆட்டிப்பார்க்க நடத்தப்பட்ட மறைமுகத் தாக்குதலா என்றெல்லாம் சந்தேகங்களும் எழத்தான் செய்கின்றன.

இவற்றுக்கு எல்லாம் மேலாக, ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் வினாத்தாளே கசிந்துள்ளது சர்ச்சைக்கு எல்லாம் சர்ச்சை சேர்க்கிறது. நீட் வினாத்தாளை வழங்க ஒவ்வொரு மாணவ, மாணவியிடம் இருந்தும் ரூ.5 லட்சம் பெற்றதாக 5 பேரை பயங்கரவாதத் தடுப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

ஆடையில் இவ்வளவுக் கட்டுப்பாடுகளை விதித்த சிபிஎஸ்இ நிர்வாகம், வினாத்தாளை பாதுகாப்பதிலும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாமோ என்றும் கேட்கத் தோன்றுகிறது.

வினாத்தாளையே விலை பேசி விற்றுவிட்டு, ஒரு மூக்குத்திக்கும், ஹேர் பின்னுக்கும், உள்ளாடைக்கும் கேள்வி கேட்ட சிபிஎஸ்இ நிர்வாகம், இந்த குற்றச்சாட்டுகளுக்கு முன் வந்து பதில் சொல்லவா போகிறது. வெறும் மெட்டல் டிடெக்கர் பீப் சத்தம் மட்டுமா? அல்லது வேறு எந்த அறிவியல் தொழில்நுட்பம் இதற்கெல்லாம் தடை விதித்ததது என்ற விளக்கமாவது கிடைக்கப் பெற்றால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் சற்று நிம்மதி பெறுவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com