ரேங்க் இல்லை; ஆனால் மன அழுத்தம் உண்டு: இலவச உதவி மையம் சொல்லும் தகவல்

தமிழகத்தில் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு மனு அழுத்தத்தைக் குறைக்க, பிளஸ் 2 பொதுத் தேர்வில் ரேங்க் முறை அறிவிக்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்தது.
file photo
file photo


சென்னை: தமிழகத்தில் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு மனு அழுத்தத்தைக் குறைக்க, பிளஸ் 2 பொதுத் தேர்வில் ரேங்க் முறை அறிவிக்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்தது.

ஆனால், தமிழக அரசால் அமைக்கப்பட்ட 104 இலவச அழைப்பு மையம் கூறும் தகவல் வேறு விதமாக இருக்கிறது.

தமிழகத்தில் நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதே சமயம், ஏராளமான மாணவர்கள், பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து 104 இலவச அழைப்பு மையத்துக்கு சுமார் 10,600 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.

அனைத்து அழைப்புகளும், எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்பதால் மனமுடைந்துவிட்டதாகவும், தேர்வில் தோல்வி அடைந்துவிட்டதால் தற்கொலை செய்யும் எண்ணம் மேலோங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த அழைப்புகளில் ஏராளமானவை, தான் எடுத்த மதிப்பெண் மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க போதுமானதாக இல்லையே என்றும், நீட் தேர்வை சரியாக எழுதாததால், பிளஸ் 2 மதிப்பெண்ணும் குறைந்துவிட்டதே என்று வருந்துவதாகவும் இருந்ததாக, 104 உதவி எண்ணில் பணியாற்றும் மனோதத்துவ நிபுணர் பி. இளையராஜா கூறினார்.

அவர் கூறுகையில், வேலூரைச் சேர்ந்த ஒரு மாணவி, குறைவான மதிப்பெண் எடுத்ததால், வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டாள், உடனடியாக அவரது பெற்றோர் 104க்கு தொடர்பு கொண்டு, ஸ்பீக்கரில் நாங்கள் பேசுவதைப் போட்டனர். நாங்கள் பேசிய பிறகு, அப்பெண் வெளியே வந்துவிட்டார்.

இதைவிட, 1000க்கும் மேல் மதிப்பெண் எடுத்த பல மாணவர்கள், தங்களது மதிப்பெண் குறைந்துவிட்டதாக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவி 1050 மதிப்பெண் எடுத்தார். ஆனால், குறைவான மதிப்பெண் என்று சொல்லி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மேலும், ஒரு பெற்றோர் எங்களுக்கு தொடர்பு கொண்டு, தேர்வு முடிவை பார்த்துவிட்டு வெளியே சென்ற மகன் வீடு திரும்பவில்லை. செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டான் என்ன செய்வது என்று கேட்டனர்.உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினோம் என்றார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்த இளைஞர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். எங்களிடம் ஆலோசனை பெற்ற பிறகு சற்று புத்துணர்வு பெறுகிறார்கள். ஒட்டுமொத்தமாக ஒப்பிட்டுப் பார்த்தால், கடந்த பல ஆண்டுகளை விட இந்த ஆண்டு மன உளைச்சலுக்கு ஆளான மாணவர்களின் அழைப்பு குறைவுதான் என்கிறார் மற்றொரு ஆலோசகர்.

தேர்வு முடிவி வெளியாகும் முன்பே தற்கொலை
நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே சென்னை ராமாமபுரத்தைச் சேர்ந்த மாணவி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை, தேர்வு முடிவு குறித்த பதற்றத்தில் இருந்த மாணவி, சமையலறையில் இருந்த மண்ணெண்னையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தும், அவர் உயிரிழந்துவிட்டார்.

என்னதான் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டாலும், முடிவுகளால் மாணவர்களின் மன அழுத்தம் குறையவில்லை. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்தான் ஒரு மாணவரின் அடுத்த கல்வி நிலையை முடிவு செய்யப் போகிறது என்பதால், இது பெரிய விஷயமாக கவனிக்கப்படுகிறது.

மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து அனைத்து மாணவ சேர்க்கையும் நடக்கும் போது, ரேங்க் பட்டியல் வெளியிடாதது மட்டுமே எப்படி ஒரு தீர்வாகும். சொல்லப்போனால், நல்ல மதிப்பெண் எடுத்த ஒருசில மதிப்பெண்களில் மாநில அளவில் முதலிடத்தைத் தவர விடும் மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் மன அழுத்தம் மட்டுமே இதன் மூலம் தவிர்க்கப்படும். அதுவும், 1190க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகள், தாங்கள் சாதனையாளர்களாக அறியப்படாமலேயே போய்விட்டோமே என்று மன அழுத்தத்துக்கு ஆளாகும் நிலையும் ஏற்படத்தான் செய்யும்.

மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்தவர்களின் பட்டியலை வெளியிடுவதால், சில வணிக நோக்கங்கள் தடுக்கப்பட்டிருப்பது நிச்சயம் புறந்தள்ள முடியாத உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com