அமித் ஷாவுக்கு ஒரு விண்ணப்பம் - வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!

இன்னும் சில நாட்களில் தலைப்பு செய்திகளில் இடம் பிடிக்கப் போகிற ஒரு விஷயம் குடியரசு தலைவர் தேர்தல். பாஜக சார்பில் யார் நிறுத்தப்படுவார்? காங்கிரஸ் சார்பில் யார் நிறுத்தப்படுவார்? என்பதெல்லாம் தெளிவாகத
அமித் ஷாவுக்கு ஒரு விண்ணப்பம் - வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!


இன்னும் சில நாட்களில் தலைப்பு செய்திகளில் இடம் பிடிக்கப் போகிற ஒரு விஷயம் குடியரசு தலைவர் தேர்தல். பாஜக சார்பில் யார் நிறுத்தப்படுவார்? காங்கிரஸ் சார்பில் யார் நிறுத்தப்படுவார்? என்பதெல்லாம் தெளிவாகத் தெரிய இன்னும் சில வாரங்கள் ஆகும்.

‘பாஜகவின் தேர்வு இவர்தான்', என்று பலரின் பெயர்களை ஊடகங்கள் வெளியிடுகிறது. ‘மகாத்மா காந்தியின் ரத்த வாரிசுதான் காங்கிரஸின் தேர்வு', என்றெல்லாம் கூட யூகங்கள் கை, கால் முளைத்து உலவுகிறது. ‘காங்கிரஸுக்கு மெஜாரட்டி இல்லை. அவர்களால் முன்னிறுத்தப்படுபவர்கள் ஜெயிக்க முடியாது. அதனால் காந்தியின் ரத்த சொந்தத்தின் நினைவு காங்கிரஸுக்கு வந்துவிட்டது', என்ற நையாண்டி பேச்சும் நம் காதில் விழுகிறது. ஒரு வேளை, காங்கிரஸ் தரப்பிலிருந்து காந்தியின் ரத்த சொந்தம் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அது ஆத்ம சுத்தியோடு எடுக்கப்பட்ட முடிவாக இருக்காது.

காரணம், இதுவரை பதிமூன்று முறை காங்கிரஸ் ஆதரவுடன் குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அப்போதெல்லம் நினைவுக்கு வராத மகாத்மா காந்தியின் ரத்த சொந்தம் தற்போது மட்டும் காங்கிரஸின் நினைவிற்கு வந்தது எப்படி?' இந்த கேள்விக்கு மக்கள் மன்றத்தில் பதில் சொல்லும் நிலை ஏற்படும்.
குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் இடத்தில் பாஜக இருப்பது தற்போது இரண்டாவது முறை. வாஜ்பாய் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோது, முதல் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, பாஜகவிற்கு வெற்றிக்கு தேவையான ஓட்டுகள் இல்லை. அதனால் எல்லா தரப்பும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அப்துல் கலாம் என்ற மாமனிதரை குடியரசு தலைவராக நிறுத்தியது பாஜக. காங்கிரஸ் வேறுவழியின்றி அவரை ஆதரித்தது. இந்தியாவின் மிகச் சிறந்த குடியரசு தலைவர்களில் முதன்மையானவர் என்ற உயரிய இடத்தையும் அவர் பிடித்தார். அப்துல் கலாமின் செயல்பாடுகள், அவரை முன்னிறுத்திய பாஜகவிற்கு பெருமை தேடித்தந்தது. ஆனால், 2007ம் ஆண்டு குடியரசு தலைவர் தேர்தலின் போது, மீண்டும் அப்துல் கலாமை முன்னிறுத்த ஒரு தரப்பு முயன்ற போது, காங்கிரஸ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பதிலாக பிரதீபா பாடீலை முன்னிறுத்தியது

அப்துல் கலாமின் ஆளுமை, மேலாண்மை ஞானம், நிர்வாகத் திறமை, தேசபக்தி ஆகியவை நம் எல்லோருக்கும் தெரியும். இவை எல்லாவற்றையும் விட அவர் ஒரு நல்ல மனிதர். இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் பதவியில் அமர்த்தி அவரின் சேவையை நாம் பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம். இது நமது தேசத்துக்கு பெரிய இழப்பு. இந்த இழப்பை யாராவது வேண்டுமென்றே ஏற்படுத்தியிருந்தால், அவர்கள் நம் தேசத்துக்கு அநீதி இழைத்தவர்கள்.

அப்துல் கலாமிற்கு பிறகு குடியரசு தலைவராக காங்கிரஸால் முன்னிறுத்தப்பட்டவர் பிரதீபா பாடீல். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்.

குடியரசு தலைவர் தேர்தலுக்கு முன் பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா கட்சி,  பிரதீபா பாடீலை ஆதரிப்பதாக அறிவித்தது. ‘அவர் எங்க ஊர்காரர். அதனால் அவரை ஆதரிக்கிறோம்', என்று சொல்லிய சிவசேனா கட்சி பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு மற்றொரு கூட்டணி முன்னிலைப்படுத்தும் ஒருவரை ஆதரிப்பது சரியா? இதுதான் கூட்டணி தர்மமா?

சிவசேனையின் சொந்த ஊர் பாசம் ‘மிகச் சரி' என்று சொல்வோமேயானால், தமிழகத்தைச் சேர்த்த ஒரு சாரார் பிரதீபா பாட்டீலுக்கு ஆதரவாக ஓட்டளித்தார்களே! பிரதீபா பாடீல் தமிழகத்தை சேர்த்தவரா? தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அவரை யாரென்றே தெரியாதே! ஆனால் அப்துல் கலாம் நம்ம ஊர்காரராச்சே! அப்படிப்பார்த்தால் ‘நம்ம ஊர்காரர்' என்ற தர்க்க சாஸ்திரம் ஏற்றுக் கொள்வதற்கில்லை.

‘அவர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவராயிற்றே!' என்ற வாதமும் எடுபடவில்லை.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், ஒருவரை ஏற்றுக் கொள்வதற்கும், ஒருவரை நிராகரிப்பதற்குமான எந்த நியாயமான காரணங்களும் இவர்களிடம் இல்லை. தன்னிடம் உள்ள காரணத்தை நியாயமானது போன்ற தோற்றத்தை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கிறார்கள். இதுதான் இன்று வரை நடந்துகொண்டிருக்கிறது.

இம்முறை குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வெற்றிக்கு மிக அருகில் நிற்கிறது. அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்ற மொத்த எம்எல்ஏக்கள் 4114, எம்பிக்கள் 784. மொத்த வாக்கு எண்ணிக்கை 1104546.

தேசிய ஜனநாயக கூட்டணி - NDA (பிஜேபி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு) 1691 எம் எல் ஏக்களும், 418 எம்பிக்களும் உள்ளனர். இவர்களின் வாக்கு எண்ணிக்கை 537683. அதாவது மொத்த வாக்கு எண்ணிக்கையில் 48.64 சதவீதம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு- UPA (காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு) 1710 எம் எல் ஏக்களும், 244 எம்பிக்களும் உள்ளனர். இவர்களின் வாக்கு எண்ணிக்கை 391739. மொத்த வாக்கு எண்ணிக்கையில் 35.47 சதவீதம்.

காங்கிரஸ், பிஜேபி ஆகிய இரண்டு கட்சிகளின் நிலைப்பாட்டையும் ஆதரிக்காத பிற கட்சிகளும் உண்டு. அவை அஇஅதிமுக, பிஜேடி, டிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, ஹரியானவைச் சேர்ந்த இந்திய தேசிய லோக்தள் கட்சி. இவையனைத்தும் சேர்த்து 510 எம்எல்ஏக்களும், 109 எம்பிக்களும் உள்ளனர். இவர்களின் வாக்கு எண்ணிக்கை 144302. மொத்த வாக்கு எண்ணிக்கையில் 13.06 சதவீதம்.

அஇஅதிமுகவிற்கு 139 எம் எல் ஏக்களும், 50 எம்பிக்களும் உள்ளனர். இவர்களின் வாக்கு எண்ணிக்கை மொத்த வாக்கு எண்ணிக்கையில் 5.36 சதவீதம். பிஜேடிக்கு மொத்தம் 2.98 சதவீதமும், டிஆர்எஸ்க்கு 1.99 சதவீதமும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு 1.53 சதவீதமும், ஆம் ஆத்மி கட்சிக்கு 0.82 சதவீதமும், இந்திய தேசிய லோக்தள் கட்சிக்கு 0.38 சதவீதமும் ஓட்டுக்கள் இருக்கிறது.

அஇஅதிமுக (புரட்சித் தலைவி அம்மா) அணியைச் (ஓபிஎஸ்) சேர்ந்த எம்பிகளும், எம்எல்ஏக்களும் பாஜகவை ஆதரித்தால், பாஜக அணிக்கு கூடுதலாக 0.82 சதவீதம் கிடைக்கும். இதன் மூலம் பாஜக வேட்பாளருக்கு 49.46 சதவீதம் ஓட்டுக்கள் கிடைக்கும். மீதம் தேவைப்படுகிற ஓட்டுக்கள் மிக சொற்பமானது. அதைப் பெற அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, குடியரசு தலைவர் தேர்தலில் மாற்றி ஓட்டு போட்டாலும் பதவி பறிபோகாது. கட்சி தாவல் தடை சட்டம் செல்லுபடியாகாது.

குடியரசு தலைவர் இந்தியாவின் முதல் குடிமகன். அவர் அதிக அதிகாரம் படைத்தவர். அவர் எத்தகைய அதிகாரத்தை கொண்டிருக்கிறார் என்பது நமக்கு முழுமையாகத் தெரியாது.

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதை உலகிற்கு முதலில் தெரியப்படுத்தியவர் டி.என். சேஷன். அதுவரை தேர்தல் ஆணையம் தன் பலம் அறியாத யானையாகத்தான் இருந்தது. இதே போல் ஜனாதிபதியின் அதிகாரத்தை முழுமையாக வெளிக் கொண்டுவர எண்ணம் கொண்ட ஒருவரே குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

அவர் நாட்டில் நடக்கும் தவறுகளுக்கு எதிராக குரல் கொடுப்பவராக இருக்க வேண்டும்.

தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்களின் மீது உடனடியாக முடிவெடுக்கும் மனவலிமையும், தேசபக்தியும் உடையவராக இருக்க வேண்டும்.

தவறான அரசியல்வாதி பதவி ஏற்பதை தடுக்கும் நேர்மையாளராக இருக்க வேண்டும்.

மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்க விருப்பமுடையவராக இருக்க வேண்டும்.

இந்த தருணத்தில் ஒரு குட்டிக்கதையை படிப்போம்.

ஒரு நாடு. அரண்மனையில் சலவைத் தொழிலாளி பதவி காலியாக இருந்தது. அதற்கு இரண்டு பேர் போட்டியிட்டனர். இருவரில் யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் அரசனுக்கு. ஒருவரை தேர்ந்தெடுப்பது எளிது. ஆனால், மற்றொருவரை நிராகரிப்பதற்கு மிகச்சரியான காரணத்தை சொல்ல வேண்டுமே! அதுதானே நிர்வாக தர்மம்! சாதுவை அணுகினார் அரசர்.

சலவைத் தொழிலாளிகளை அழைத்தார் சாது. ஒரு மூட்டையில் அதிகமாக அழுக்கு துணிகளை அடைத்தார். துணி வெளியே வழிந்தது.

‘முதலாவது சலவைத் தொழிலாளி இந்த மூட்டையை சுமந்து ஆற்றங்கரைக்கு செல்ல வேண்டும். இரண்டாம் சலவைத் தொழிலாளி பின் தொடர்ந்து செல்ல வேண்டும். அதே போல், துணிகளை துவைத்த பின், இரண்டாம் சலவைத் தொழிலாளி மூட்டையை சுமந்து வரவேண்டும். அப்போது, முதலாம் தொழிலாளி பின் தொடர்ந்து வர வேண்டும். மூட்டையிலிருந்து கீழே விழும் துணிகளின் எண்ணிக்கையைப் பற்றி பின்னால் வருபவர் அரசருக்கு தெரிவிக்க வேண்டும். இதுதான் போட்டி', என்றார் சாது.

சலவைத் தொழிலாளிகள் புறப்பட்டனர். மற்றவர்கள் சாதுவின் முடிவு எப்படியிருக்கும் என்று கணக்குப் போடத் தொடங்கினர். சில மணி நேரங்களில் சலவைத் தொழிலாளிகள் இருவரும் அரண்மனை திரும்பினர். துணி மூட்டையை அரசன் முன் வைத்தனர்.

இரண்டாம் தொழிலாளி பேசினான்.

‘அரசே! முதலாம் தொழிலாளி மூட்டையை சுமந்து செல்லும் போது பதினைந்து துணிகள் கீழே விழுந்தது', என்றான்.

பிறகு, முதலாம் தொழிலாளி பேசினான்.

‘அரசே! இரண்டாம் சலவைத் தொழிலாளி மூட்டையை சரியாக சுமக்கவில்லை. வழியில் இருபது துணிகள் விழுந்தன. மூட்டையில் இருக்கும் துணிகளை எண்ணிப் பாருங்கள். உங்களுக்கே புரியும்', என்றான் முதலாம் தொழிலாளி.

முதலாம் தொழிலாளி சொன்னது சரி. இருபது துணிகளை காணவில்லை. அரசர் பேசினார்.

‘சாதுவே! போட்டியின் முடிவுகளின் படி, முதலாம் தொழிலாளியை பணியில் சேர்க்க ஆணையிடட்டுமா?' என்று கேட்டார் அரசர்.

‘வேண்டாம் அரசே! இரண்டாம் சலவைத் தொழிலாளியை பணியில் சேருங்கள். முதலாம் தொழிலாளியை உடனே வெளியேற்றுங்கள்', என்றார் சாது.

அரசனுக்கு எதுவும் புரியவில்லை.

‘அரசே! ஆற்றங்கரைக்கு மூட்டையை முதலாம் தொழிலாளி சுமந்து சென்றான். வழியில் துணிகள் தொடர்ந்து கீழே விழுந்தன. அதை இரண்டாம் தொழிலாளி பொறுக்கி எடுத்து ஆற்றங்கரையில் சேர்த்தான். திரும்ப வரும் போதும் துணிகள் கீழே விழுந்தன. ஆனால் முதல் தொழிலாளி அதை சேகரிக்கவில்லை. கீழே விழும் துணிகளை பற்றிய எண்ணிக்கையை மட்டும் உங்களிடம் தெரிவித்தான். இது போட்டிகளின் விதிகளின் படி சரியான நடவடிக்கையாக கருதப்பட்டாலும், அது பொறுப்பில்லாத செயல். ஆகையால், பொறுப்பில்லாத முதலாம் தொழிலாளி இந்த பணிக்கு தகுதியில்லாதவன்', என்றார் சாது.

கதையில் வரும் முதலாம் சலவைத் தொழிலாளியைப் போலத்தான் எதிர்கட்சிகள் செயல்படுகின்றன. அரசின் எல்லா செயல்களையும் ஆர்எஸ்எஸ், சங்பரிவார் போன்ற அமைப்புகளோடு முடிச்சுபோட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இந்து அமைப்புகளை ஏதோ தீவிரவாதிகளைப் போல சித்தரிக்க முயல்கின்றன. எதிர்கட்சிகளின் இந்த செயல்கள் அவர்களின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது. இவர்களின் கருத்துக்கள் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்பதைத் தான் சமீபத்திய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

மேலே சொன்ன விஷயங்களை பார்க்கும் போது ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. கூட்டணி தர்மம், அறிவாற்றல், திறமை, மேலாண்மை திறன், சிறுபான்மையினர் ஆதரவு நிலை, சொந்த ஊர்காரர் பற்று, மதச்சார்பின்மை ஆகியவற்றை மனத்தில் கொண்டு ஒருவரை தேர்ந்தெடுப்பதோ, நிராகரிப்பதோ நடப்பதில்லை. இவையெல்லாம் மக்களின் கவனத்தை திசை திருப்ப அரசியல்வாதிகளால் கடைபிடிக்கப்படும் யுக்திகள். இந்த அரசியல் தந்திரங்களை மக்கள் முழுமையாக புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

இதையெல்லாம் மனத்தில் கொண்டு பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா அவர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். குடியரசு தலைவர் தேர்தலில் அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும் என்று முயற்சிக்காதீர்கள். அது அவசியமில்லாதது. இன்றைய நிலையில் தங்கள் கூட்டணிக்குத் தேவையான வாக்குகள் மிகச் சிறிய அளவே. அதை மட்டும் கட்டுக்குள் கொண்டு வாருங்கள். தங்கள் சித்தாந்தங்களுக்கு பொறுந்தும் ஒருவரை குடியரசு தலைவராக முன்னிலைப்படுத்துங்கள். ‘அவர் ஒரு ஆர்எஸ்எஸ், சங் பரிவார்', என்று மற்றவர்கள் கூக்குரலிட்டாலும், அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவிற்கு நீங்களே பொறுப்பாகிறீர்கள். ஆர்எஸ்எஸ், சங் பரிவார் போன்ற இந்து மத இயக்கங்களுக்கு பாசிடிவான முகங்கள் இருக்கிறது என்று நீங்கள் கருதினால், அதை நிரூபிக்க இந்த தேர்தல் களத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com