ஒருங்கிணைந்த தீவு மேலாண்மை: ஒருபார்வை!

நமதுநாட்டின் பூகோள அமைப்பின்படி, கடலோரப்பகுதிகளை, கிழக்கு கடற்கரைப் பகுதிகள் (Bay of Bengal) மற்றும் மேற்குகடற்கரை (Arabian Sea) பகுதிகள் என்றும் இரு பெரும்பகுதிகளாக பிரிக்கலாம். கிழக்கு கடற்கரையானது,
ஒருங்கிணைந்த தீவு மேலாண்மை: ஒருபார்வை!

இந்தியா, உலகில் மிக அதிக மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாடு. மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2011ன் படி, இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 1.21 பில்லியன் ஆகும்.கடலோர இந்தியாவின் மொத்த நீளம் 7,517 கிலோமீட்டர். இதில் 5,423 கி.மீ. நீளம் தீபகற்ப இந்தியாவிலும் மற்றும் 2,094 கி.மீ. அந்தமான், நிக்கோபார் மற்றும் இலட்சத்தீவு ஆகிய தீவுகளிலும் அடங்கி உள்ளது.

நமதுநாட்டின் பூகோள அமைப்பின்படி, கடலோரப் பகுதிகளை, கிழக்கு கடற்கரைப் பகுதிகள் (Bay of Bengal) மற்றும் மேற்குகடற்கரை (Arabian Sea) பகுதிகள் என்றும் இரு பெரும்பகுதிகளாக பிரிக்கலாம். கிழக்குகடற்கரையானது, தொடர்ச்சியான டெல்டா நிலங்களை உள்ளடக்கியது. அதேநேரத்தில், மேற்கு கடற்கரையானது பாறைகள், குன்றுகள், கழிமுகங்கள் மற்றும் மணல் கடற்கரைகள் கொண்ட பகுதிகளாகக் காணப்படுகிறது. தவிர, வளைகுடா பகுதிகளான, தமிழ்நாட்டின் மன்னார்வளைகுடா, குஜராத்தின் 'Gulf of Kutch' and 'Gulf of Khambhat' பகுதிகள் முக்கியமான அமைப்பைக் கொண்டுள்ளன. ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள 1,100 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சில்கா உவர்நீர் ஏரி, உலகின் உவர்நீர் ஏரிகளில்இரண்டாவது பெரிய ஏரியாகும். அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு சில்காஏரி புகழிடமாக உள்ளது. சில்கா ஏரியின் சூழலியல் மீன்வளத்திற்கு பெரிதும் ஆதாரமாக விளங்குகிறது. சில்கா ஏரியின் கரையிலும், தீவுகளிலும் மீன்பிடித்தொழிலை நம்பி, 132 கிராமங்களைச் சேர்ந்த 1,50,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்கிறார்கள்.

மேலும், அதிக இயற்கைவளங்கள் கொண்ட அந்தமான் மற்றும் இலட்சத்தீவுகள் இந்தியாவின் சுற்றுச்சூழல் பன்முகத்தன்மைக்கு வலு சேர்கின்றன. இந்ததீவுகளில், பவளப்பாறைகள், கடல்புற்கள், அரியவகை ஆமைஇனங்கள், மீன்வளம், அலையாத்திகாடுகள் மற்றும் இந்ததீவுகளில்மட்டும், வேறு எந்தநாடுகளிலும் காணப்படாத, எண்ணற்ற தாவர, விலங்கு மற்றும் பறவைகள் வாழ்கின்றன. அந்தமானில் உள்ள மகாத்மாகாந்தி தேசிய கடல்பூங்கா மற்றும் ராணிஜான்சி தேசிய கடல்பூங்கா ஆகியன பாதுகாக்கப்பட்ட (Marine Protected Area) இடங்களாகஅறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் கடலோரத் தீவுகள்

இதுவரை இந்தியாவில் உள்ள கடலோர மற்றும் கடல்சார்ந்த தீவுகளின் எண்ணிக்கை 1382 ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தஎண்ணிக்கையானது, பெரிய மற்றும் சிறிய தீவுகள், மணல்மேடுகள் மற்றும் பாறைகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.

நமது கடலோரப் பகுதிகள் மற்றும் தீவுகள், சூறாவளிகள், புயல்அலைகள் மற்றும் சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளை எதிர்நோக்கி உள்ளன. 2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி பேரலையின் தாக்கம் இன்னும் நம்மைவிட்டு விலகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

World MeteorologicalOrganization (WMO) and United Nations Environment Programme (UNEP) போன்றஅமைப்புகளால், நிறுவப்பெற்ற, Intergovernmental Panel on Climate Change (IPCC), கடலோர தாழ்வான பகுதிகள் மற்றும் சிறியதீவுகள், கடல்மட்ட உயர்வினால் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன என்று கணித்துள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் கடலோரப் பாதுகாப்பை பொறுத்தவரை, இந்தியாசுதந்திரம்அடைந்தபிறகு, இந்திய அரசியல் அமைப்பு மற்றும் எண்ணற்ற பிரிட்டிஷ் அரசால் இயற்றப்பட்ட சட்டங்கள் ஒரு குறிப்பிட்ட அரசியலமைப்பின் சட்டப்பிரிவு இல்லாமல் நடைமுறையில் இருந்தன. 1976 ஆம்ஆண்டு, இந்திய அரசியல் அமைப்பு திருத்தும் செய்யப்பட்டது. திருத்தப்பட்ட இந்திய அரசியல் அமைப்புசட்டம், விதி 48,  பகுதி IV ன்படி,  மாநிலங்கள் சுற்றுசூழலைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மற்றும் காடுகள் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்க முயற்சி எடுக்க வேண்டும். 

கடலோர ஒழுங்குமுறை மண்டலம் மற்றும் தீவுப் பாதுகாப்பு மண்டல விதிகள்

இந்தியாவில் கிட்டதட்ட1980 களில் தான், கடலாரோரப் பகுதிகளைச் சுற்றுசூழல் பாதிப்பில் இருந்தும், திட மற்றும் திரவ கழிவுகளால் மாசுபடுவதில் இருந்தும், பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒரு அழுத்தம் தொடங்கியது. நமது மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர், திருமதி இந்திராகாந்தி அவர்கள், முதன்முதலில், கடலோர மாநிலங்கள் தங்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கும் போது, கடலோரப் பகுதிகள் மாசு படாதவாறு பாதுகாக்க, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும், என்று மாநிலங்களைச் சுற்றறிக்கை மூலம் அறிவுத்தினார்.

தற்பொழுது, பல மத்திய மற்றும் மாநிலத் துறைகள் மற்றும் அமைச்சகங்கள், இந்தக் கடலோர மேலாண்மையில் நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாவோ சம்பந்தப்பட்டுள்ளன. இதில், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மத்திய அமைச்சகம், பெரும்பங்கு வகிக்கிறது. Government of India (Allocation of Business) Rules, 1961 (As amended) ன்படி,   “கடலோரசுற்றுச்சூழல்”, “கடலோரசதுப்புநிலக்காடுகள்”,  “பவளப்பாறைகள்”, “சுற்றுச்சூழல் ஆராய்ச்சி & மேம்பாடு” சம்பந்தமான விஷயங்கள் இந்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரத்தின் கீழ் வருகின்றன.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், 1991 ல் கடலோர ஒழுங்குமுறை மண்டல – Coastal Regulation Zone (CRZ) விதிகளைக் கொண்டு வந்தது. பிறகு சுமார் இருபது வருடங்கள் கழித்து, இந்த விதிகளில் பல மாறுதல்கள் மேற்கொண்டு, 2011 ல் புதிய கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை அமுல்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறது. அதே நேரத்தில், அந்தமான், நிக்கோபார் மற்றும் இலட்சதீவுகளில் உள்ள கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்க, அதற்கென தனியாகத் “தீவுப் பாதுகாப்பு  மண்டல (Island Protection Zone) விதிகள், 2011” ஐ அமுல்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த CRZ  மற்றும் IPZ  விதிகள், 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற புவி உச்ச மாநாட்டில் கொண்டு வந்த கொள்கையின் அடிப்படையில் அமைந்தது இவைகளின் சிறப்பு ஆகும். ஐக்கியநாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான சபை 1992 ஆம் ஆண்டு சுற்றுச்சூழலுக்காக உலகநாடுகளின் தலைவர்களை அழைத்து நடத்திய உச்சிமாநாடு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. உலகத்தைச் சுற்றுச்சூழல் சீரழிவிலிருந்து பாதுகாக்க இதுவே கடைசிவாய்ப்பு என்று உலகநாடுகள் ஆவலுடன், எதிர்பார்ப்புகளுடன் கலந்து கொண்டன. புவி உச்ச மாநாட்டின் பரவலான கொள்கையின் அடிப்படையிலேயே, எண்ணற்ற சுற்றுச் சூழல் பாதுகாப்புவிதிகள் மற்றும் சட்டங்கள் நடைமுறைப்படுத்தபட்டு வருகின்றன.

“சமுத்திரங்கள், கடல் மற்றும் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு” மற்றும் “இயற்கை உயிர்வளங்களின் அறிவார்ந்த பயன்பாடு மற்றும் அதன்பெருக்கம்” ஆகியன புவி உச்சமாநாட்டில் கொண்டு வந்த முக்கியமான ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் (Agenda-21, Chapter-17 of the Earth Summit, 1992).

தீவு மேலாண்மை

இந்தியாவின் தீவு பாதுகாப்பு மண்டல விதிகள் -

(i) மீன்பிடி சமூகங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு 
(ii) கடல்வளங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு 
(iii) அறிவியல்பூர்வமானநிலையானவளர்ச்சி

போன்ற மூன்று பெரிய நோக்கங்களைக் கொண்டது. இந்த விதிகள் அந்தமான் & நிக்கோபார் மற்றும் இலட்சத்தீவு ஆகிய தீவுகளுக்கு மட்டும் பொருந்தும்.

தீவு பாதுகாப்பு மண்டலவிதிகளின் படி, அந்தமான் & நிக்கோபார் மற்றும் இலட்சத்தீவு யூனியன் பிரதேச அரசுகள், தாமாகவோ அல்லது சென்னையில் அமைத்துள்ள மத்தியஅரசின் கடலோர மேலாண்மைக்கான தேசியமையம் மூலமாகவோ, கடலோரப் பகுதிகளை ICRZ-I, ICRZ-II, ICRZ-III, மற்றும் ICRZ-IV என வகைப்படுத்தி, இயற்கைவளங்கள் பாதுகாத்தல் மற்றும் தீவுகளின் வளர்ச்சிஆகியவற்றை மேலாண்மைப் படுத்தவேண்டும். மேலும் சிறிய தீவுகளை, ஒருங்கிணைந்த தீவுமேலாண்மை (Integrated Island Management Plan) என முறைப்படுத்தி, அதன் இயற்கைவளங்களையும், அந்தந்த தீவுகளில் திட்டமிடப்பட்டிருக்கும் பல துறைகளின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களையும் குறிப்பிட்டு, மாநில மற்றும் மத்திய கடலோர மேலாண்மைக்கான ஆணையத்திடம் அனுமதி பெற்று இறுதியாக, மத்திய சுற்றுச்சூழல்துறையிடம் அனுமதிபெற்று, நடைமுறைபடுத்தவேண்டும்.

தீவு மேலாண்மை: பொருளாதார - சமூக - சட்ட - சுற்றுச்சூழல் - தொழில்நுட்ப - அரசியல் பார்வை

இந்தியாவின் ஒருங்கிணைந்த தீவு மேலாண்மை தத்துவமானது, ஒரு பொருளாதார- சமூக- சட்ட- சுற்றுச்சூழல்- தொழில்நுட்பமற்றும், அரசியல் அடிப்படையில் ஆராய்ந்து பார்க்கும்பொழுது அதன் சாதக பாதகங்களை நாம் அறியமுடியும்.


 
இந்தியா, தனது இந்திய அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்ட, Article 246- Union, State and Concurrent Subjects இல் சொல்லப்பட்ட கடமைகள் அல்லாது, சர்வதேச அளவில் எண்ணற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தமான ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளது. நமது கடலோர இயற்கை வளங்களான, பவளப்பாறைகள், அலையாத்திக்காடுகள், கடல்புற்கள், கடல்தாவரங்கள், அரிய வகை ஆமைமுட்டை இடும் கடற்கரைகள் (Turtle Nesting Sites), மணல்மேடுகள் (Sand dunes), ஆகியனவற்றைப் பாதுகாக்க இந்தியஅரசு உறுதி பூண்ட அதேநேரத்தில், குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றங்கள் மத்திய மற்றும் மாநில அளவில் வரும் போது, அந்தஉறுதி தொய்வடைகிறது. இதனோடுசேர்ந்து,வரவு செலவு திட்ட பற்றாக்குறை நிகழும்போது, கடலோர மேலாண்மைக்கான முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உண்டு.

தீவு பாதுகாப்பு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடங்கள்/ திட்டங்கள் தயாரிக்க, போதுமான நிதிஒதுக்கீடு, என்பது ஒரு முக்கியமான காரணியாகக் கருதப்படுகிறது. ஒரு நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு மிகவும் முக்கியம். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சராசரி ஆண்டு நிதி ஒதுக்கீடு 1992-1993 (ரூ. 280கோடி) ஆம்ஆண்டு இருந்ததை விட 2010-11 (ரூ.2200 கோடி) ஆம் ஆண்டு பல மடங்கு அதிகரித்துள்ளது. மத்திய அரசின் பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (2002-2007), மத்திய சுற்றுச் சூழல்அமைச்சகத்திற்கான நிதிஒதுக்கீடு ரூ.5600 கோடி.அதே நேரத்தில், நடப்பு பன்னிரெண்டாவது ஐந்தாண்டுதிட்டத்தில் (2012-2017), அதன் நிதிஒதுக்கீடுரூ 17874 கோடி. மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு தவிர, அந்தந்த, மாநில /யூனியன் பிரதேசங்கள் கடலோரமேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான கூடுதல் நிதியை ஒதுக்குகின்றன. 

சுற்றுச்சூழல் ஆளுமையில் பொதுமக்களின் பங்களிப்பு என்பது ஒரு முக்கியமான அம்சமாகும். இந்தியாவின், தேசிய சுற்றுச்சூழல் கொள்கை, 2006 மற்றும் Environment Impact Assessment (EIA) Notification, 2006, ஆகியன, சுற்றுச்சூழல் ஆளுமையில்,பொதுமக்களின் பங்களிப்பை, ஒரு நோக்கமாக கொண்டுள்ளன. 

எண்ணற்ற தொழில்நுட்பங்கள் கடலோர மேலாண்மையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வான்வழி மற்றும் செயற்கைக்கோள் புகைப்படங்களைப் பயன்படுத்துவதின் மூலம், கடலோரப் பகுதிகளின் துல்லியமான விவரங்களைச் சேகரிக்க முடியும், அதன் மூலம், கடலோர மேலாண்மையை திறம்பட செயல்படுத்த முடியும். 

சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 ன் கீழ் அதிகாரம் பெற்ற மாநில மற்றும் தேசிய கடலோர மேலாண்மை ஆணையம் மற்றும் கடலோர மாவட்ட அளவிலான குழுக்கள் அமைய பெற்றிருப்பது, நமது கடலோர மேலாண்மையின் சட்ட வடிவமைப்புகளுக்கு, ஒரு பெரிய பலமாக உள்ளது.

இந்தியாவின் கடலோர ஒழுங்கிணைந்த தீவு மேலாண்மையானது கீழ்க்கண்ட உறுதியையும் சவால்களையும் கொண்டது. அவை -

1. தீவு மேலாண்மை விதிகளின் பலன், அதன் முழுமையான மற்றும் உறுதியான நடைமுறைப்படுத்துதலில் தான் உள்ளது.  இதற்கு யூனியன் பிரதேசங்களான அந்தமான் நிக்கோபார் மற்றும் இலட்சத்தீவுகளின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்.

2. கடலோரப்பகுதிகள் மற்றும் அதன் இயற்கைவளங்களின் நிலையான வளர்ச்சி இந்த விதிகளினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

3. விதிகளை நடைமுறைப் படுத்தும் போது, கடலோர நிலங்கள் மற்றும் வளங்களை வகைப்படுத்தல், Hazard Line வரையறுத்தல், ஆகியன, ஒரு சில சவால்களை மீனவ மற்றும் கிராம மக்களின் மத்தியில் சந்திக்க வாய்ப்புள்ளது.

4. கடலோரப் பகுதிகள், தாவர மற்றும் விலங்குகளின் வாழ்விடங்கள், பாதுகாக்கப்பட்ட இடங்கள் மற்றும் மீன்பிடி கிராமங்கள் ஆகியனவற்றின், துல்லியமான அனைத்து விவரங்களைச் சேகரித்து வைப்பது, தீவு மேலாண்மை விதிகளை நடைமுறைப் படுத்துவதற்கு உதவியாக இருக்கும். 

5. சென்னை அண்ணா பல்கலையில் தேசிய கடலோர மேலாண்மை மையம்: கடலோர மற்றும் தீவு மேலாண்மை பற்றி ஆய்வுகள் மேற்கொள்ள, மத்திய அரசானது, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை 2011-2012 ஆம் ஆண்டு தேர்தெடுத்து, பின்னர் அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைந்து, நிலையான கடலோர மேலாண்மைக்கான தேசிய மையத்தை (National Centre for Sustainable Coastal Management), 2012 ஆம்ஆண்டு, உலக வங்கியின் நிதியுடன் நிறுவியுள்ளது. உயர்நிலை ஆய்வுகளுக்காக, அண்ணா பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு, அதன் அடிப்படையில், இந்த தேசியமையம் கடலோரப் பகுதிகள் மற்றும் கடல்வளங்களின் அனைத்து விவரங்களைச் சேகரிப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.

6. கடலோர சுற்றுப்புறச் சூழலில், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள், கடல் அரிப்புகள் மற்றும் கடலோரமாசுக்கள் ஆகியன பற்றி அத்தியாவசமான அறிவியல் தகவல்களை தொடர்ந்து சேகரிப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்.

7. பொதுவாக கடலோர மேலாண்மையில், பெரும்பாலும் சட்டவிதி மீறல்கள் என்பது CRZ எனப்படும் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டடங்கள் சம்பதமாகவோ அல்லது முறையாக Environmental / CRZClearance அனுமதி பெறாத கட்டமைப்புகள் சம்பந்தமாகவோ தான் கண்டறியப்பட்டுள்ளன. 

8. CRZ, ICRZ and IIM Plan எனப்படும் கடலோர ஒழுங்குமுறை மண்டல மற்றும் தீவு பாதுகாப்பது மண்டல வரைபடங்கள் இல்லாதிருத்தலே, விதிகளை வலுவாக அமுல் படுத்தாமைக்கு காரணங்களாகும்.

9. கடலோர மேலாண்மையில், ஒரு முக்கியமான சாதனை என்பது, ஒருங்கிணைந்த கடலோர மண்டல மேலாண்மை (Integrated Coastal Zone Management)  திட்டம் வெற்றிகரமாக மூன்று மாநிலங்களில் (ஒரிசா, மேற்குவங்காளம் & குஜராத்) செயல்படுத்தப்பட்டு வருவது தான். இந்தத் திட்டம், மற்ற மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். 

10. கடலோர தீவு மேலாண்மையில், ICRZ & IIM வரைபடங்கள் வரையறுக்கும் போது, மீனவ மக்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு என்பது கட்டாயம்.  இது தீவு பாதுகாப்பு விதிகளின் ஒரு வலுவான அங்கமாகும்.

11. சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம்,1986 ன் கீழ் அதிகாரம் பெற்றுள்ள தேசிய மற்றும் மாநில கடலோர மேலாண்மை ஆணையம்,  தீவு பாதுகாப்பு விதிகளின், ஒரு சிறந்த ஆதரவு அம்சமாக உள்ளது.

12. மத்திய அரசின், Planning Commission எனப்படும் நிதி ஆயோக் (NITI AAYOG), நமது நாட்டில் உள்ள தீவுகளைத் தேர்ந்தெடுத்து, அதன் முழுமையான வளர்ச்சிகளை மேற்கொள்ளவிருக்கின்றன. உலகத்தரமான சுற்றுலா தலமாக, அந்தமான் தீவுகளில் உள்ள Ross, Smith, Aves, Long, Little Andaman போன்ற தீவுகளை மேம்படுத்த ஆய்வுகள் மற்றும் விரிவான திட்டஅறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. அவ்வாறு வளர்ச்சிகள் கொண்டு வரும் போது, தீவு பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பது சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் விருப்பமாக உள்ளது.

கட்டுரை ஆசிரியர்கள்

1. முனைவர் ஆர். ஸ்ரீதர்,  தேசிய நிலையான கடலோர மேலாண்மை மையம், 
அண்ணா பல்கலைக் கழகம், சென்னை.

2. முனைவர் இரா. பூர்வஜா, தேசிய நிலையான கடலோர மேலாண்மை மையம்,    அண்ணா பல்கலைக் கழகம், சென்னை.

3. பேராசிரியர் ரமேஷ் இராமச்சந்திரன், தேசிய நிலையான கடலோர மேலாண்மை மையம், அண்ணா பல்கலைக் கழகம், சென்னை.

4. முனைவர் அ. செந்தில்வேல், மத்திய சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்ற அமைச்சகம்,  புதுதில்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com